தமிழில் உறவுகளுக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, கணவன், மனைவி, சக்களத்தி, ஓப்பிடியா, ஓரகத்தி, பொறந்தவன், பொறந்தவள் ...... உறவின் பெயரைக்கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கிறவங்க எவ்வளவு பேர் இந்த உறவுமுறைப்பெயர்களை தெரிஞ்சவங்க என்று பார்த்தா குறைவா தான் இருப்பாங்க. கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் வசித்தவர்களுக்கு இந்த உறவு முறை பெயர்கள் தெரிந்திருக்கும் மற்றும் புழங்கியிருப்பார்கள் ஆனால் பெரு நகரத்தில் வசித்தவர்களுக்கு இப்பெயர்கள் தெரிந்திருப்பது கடினம்.
              இப்ப நகரமயமாதல் அதிகரித்து கிராமங்களில் வசிப்போரின் என்ணிக்கை குறைந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படி நகரங்களுக்கு குடியேரும் கிராமத்தினரின் வாரிசுகள் தமிழ் உறவுமுறை பெயர்களை புழங்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இப்படி தமிழ் உறவுமுறை சொற்கள் என்பது வயசானவர்கள் புழங்கும் சொற்களாக மாறி இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
              இந்த பதிவு போட காரணம் சிறு வயதில் என்கூட ஒன்னா ஊர்சுத்துன என் நண்பன் என்கிட்ட அவனோட மாமா அத்தையை அங்கிள் ஆன்ட்டின்னான் பாருங்க அது தான். அவனை ரெண்டு வாங்கு வாங்கிட்டேன் அப்புறம் தான் மனசு ஆறுதல் அடைந்தது.
              அப்புறம் கவனிச்சா தமிழ்கூறும் நல்லுலகின் பெரும்பான்மையான மக்கள் மம்மி டாடியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அங்கிள் ஆன்ட்டி யின் ஆதிக்கத்துக்குள் இருப்பது தெரிய வந்தது. இதுல கொடுமை என்னன்னா சில தமிழ் ஆர்வலர்களும் ( அம்மாவை மம்மின்னும் அப்பாவை டாடின்னும் கூப்பிடாதவர்கள் ) "சொல்லுங்க ஆன்ட்டி", "சரிங்க அங்கிள்" என்பது தான்.
              என் நண்பரோட மனைவிடம் யாருங்க இவரு என்று அவங்ககூட வந்தவரை பற்றி கேட்டேன், என்னோட "கசின்" அப்படின்னாங்க. நானும் கசின்னு மொட்டையா சொன்னா எப்படிங்க எந்த முறையில் கசின் அப்படின்னு கேட்டேன் அவங்க விட்டாங்களா என் "அன்கிளோட சன்" அப்படின்னாங்க, நான் அன்கிள்ன்னா? மாமாவா? சித்தப்பாவா?, பெரியப்பாவா? என்று கேட்டேன், என் பெரியப்பாவோட பையன் அப்படின்னாங்க. எனக்கு அப்பாடான்னு இருந்தது. ( அவங்களுக்கும் தான் என்று சொல்லத்தேவையிலை :-) ) .
              அவங்க "என் பெரியப்பாவின் பையன்" அப்படின்னு சொல்லி இருந்தா பளிச்சுன்னு புரிந்து இருக்கும் "அன்கிள்ன்னு" சொன்னதால எனக்கு சரியான உறவுமுறை தெரியாம போக ஏகப்பட்ட கேள்வி கேட்டும்படி ஆயிடுச்சு. இந்த மாதிரி கேட்டாதான் குறைந்தபச்சம் என்னிடமாவது அங்கிள், ஆன்ட்டி, கசின் என்று சொல்லாம தமிழில் உறவுமுறைகளை சொல்லுவாங்க என்பது எண்ணம்.
              என் நண்பரோட அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், அவரு பிரதர் இன் லா, ஸிஸ்டர் இன் லா, பாதர் இன் லா, மதர் இன் லா அப்படின்னு ஒரே இன் லா கதையா நிறையா பேசினார் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை அவரு பெரியவர் நான் ஏதாவது சொல்லப்போயி அவரு மனசு புண்பட்டிருச்சுன்னா என்ன பண்றது? இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்குமா? ஒரு நாள் என்னங்க பாரிஸ்டர் இன் லா கணக்கா பிரத்ர் இன் லா, ஸிஸ்டர் இன் லான்னு சொல்லறீங்க தமிழ்ல உறவுமுறையை சொல்லுங்க நமக்கு இந்த இன் லா முறையில் சொன்னீங்கன்னா என்ன சொல்லறீங்கன்னு புரியறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுது, நீங்க தமிழ்ல சொன்னாதானே எங்களுக்கும் உறவுமுறை பேரெல்லாம் தெரியும் அப்படின்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஆல் ரைட் தம்பி அப்படீன்னார். அதுக்கப்புறம் அவர் இந்த இன் லா கதையை என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.
              நம்ம மொழியை நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்? உங்களை தமிழ் தெரியாத ஆளுங்ககிட்ட தமிழ் பேச சொல்லலை, தமிழ் தெரிந்த ஆளுங்ககிட்ட தமிழில் பேசங்க. அதனால யாரும் உங்களை இங்கிலிஸ் தெரியாதவன் அதாவது முட்டாள்ன்னு நினைக்க மாட்டார்கள். வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.
              சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.
              இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.