வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.