வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 27, 2009

போடுங்கம்மா ஓட்டு '...' பார்த்து...

போடுங்கம்மா ஓட்டு '......' பார்த்து... தேர்தல் நேரத்தில் இது வழக்கமா கேட்கிற கோசம். நானும் இப்படி கத்தி கத்தி வாக்கு சேகரித்திருக்கேன். ஆனா பாருங்க இந்த தேர்தல் கொஞ்சம் வேறுபாடு உடையது. போடாதிங்கம்மா ஓட்டு 'கை சின்னத்த ' பாத்து..... போடாதிங்கம்மா ஓட்டு 'உதய சூரியன ' பாத்து.... இது தான் இந்த தேர்தலுக்கான கோசம்.

கட்சி பாசம் உடன்பிறப்புகளை தடுக்குது, சரி எவன் ஊட்ல எழவு நடந்தாலும் உதய சூரியனுக்கு தான் வாக்கு போடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் தான் கட்சியின் வாக்கு வங்கி.

பிறப்புகளே சிந்தியுங்கள்... இவர் தான் ஆட்சியில் இருக்கிறார்.... இவர் நினைத்திருந்தால் முன்னமே மத்திய அரசை வழியுறுத்தி போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும்... குறைந்த பட்சம் இலங்கைக்கு பணமும் இராணுவ தளவாடங்களும் போகாமல் செய்திருக்க முடியும். அது போதுமே என்கிறீர்களா... அதுவும் சரி தான்.

பாரதிராசா தலைமையில் ஈழ மக்களுக்காக திரையுலகம் போராட்டம் என்றதும் முழு அடைப்பு.... (டாஸ்மார்க் கடைகள், கலைஞர், சன் தொலைக்காட்சிகள் விதிவிலக்கு) ... செயலலிதா தமிழீழத்துக்கு ஆதரவு சொன்னதும் உண்ணாவிரதம் .... இதுக்கு வேற பல பதிவர்களின் சப்பை கட்டு..... (சில நேரமாவது) இவங்க எப்பதான் கட்சி சார்பா சிந்தித்து முடிவு எடுக்காம இருப்பாங்க... ரெட்டை இலைக்கு தான் ஓட்டுன்னு சொல்ற படிக்காத பாமரர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வேறுபாடு?

உண்ணா விரதமும் போர் நிறுத்தமும்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.

ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.

அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.

அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..

வியாழன், ஏப்ரல் 23, 2009

முழு அடைப்பின் போது டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி

ஆளும் திமுக சார்பில் ஈழ மக்கள் சிக்கல் தீர்வதற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வெற்றிகரமாக அமைதியாக நடந்தது என்பதை முழு அடைப்புக்கு முழு ஆதரவு கொடுத்த உங்களுக்கு தெரியும். ஈழ மக்களுக்காக திமுக நடத்திய முழு அடைப்பு பிடிக்காதவர்கள் பல்வேறு குறைகளை கூறுகின்றனர். பதிவுலகிலும் அப்படிதான் உள்ளது. குறை கூறி பல இடுகைகள்.

அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகள் ஏன் திறந்திருந்தன என்பதே அவர்களில் பெரும்பான்மையோர் கேட்கும் கேள்வி.

அஞ்சா நெஞ்சனை பெற்ற அருந்தவச் செல்வரும், வாழும் வள்ளல் ரித்திசை வேட்பாளராக்கி வள்ளலுக்கெல்லாம் வள்ளலானவரும், மக்கள் நலனுக்காக யார் காலையும் பிடிக்க தயங்காதவரும் அதன் காரணமாக அன்னை சோனியாவின் காலை கையை பிடித்து கெஞ்சியவரும், அண்ணா & பெரியார் கொள்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் சுயமரியாதைச்சிங்கமான தானைத்தலைவர் தன்மானச்சிங்கம் தமிழினக்காவலர் கலைஞர் அவர்கள் சார்பாக நான் பதில்களை சொல்கிறேன்.

1. திமுக என்ற கட்சி தான் முழு அடைப்பு நடத்தியதே தவிர அரசு அல்ல.

2. இந்த அரசு குடிமகன்கள் நலனில் அக்கரை உள்ள அரசு.

3. குடிமகன்கள் முழுஅடைப்பின் போது தகராறு செய்திருந்தால் இந்த அரசை கலைக்க வேண்டும் இதே குள்ள நரிகள் பேசியிருக்கும். இப்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பை இந்தஅரசு கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் என்னனமோ பேசுகிறார்கள்.

4. அன்று மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி. இந்த 10,000 கோடி இந்த அரசுக்கு கிடைக்கக்கூடாது அதன் மூலம் இது பல மக்கள் நல செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற வஞ்சகர்களின் எண்ணம் பலிக்காததால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்களைப் பற்றி தமிழினம் நன்கு அறியும்.

5. ஈழ மக்கள் சிக்கல் தீரவேண்டும் என்று முழுஅடைப்பு, பேரணி நடத்தியது இந்த அரசுதான். கலைஞரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். பல இலட்சம் தந்திகளை உடன்பிறப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இதை எதிர்கட்சிகளால் மறுக்க முடியுமா?

6. கலைஞரின் சொல்வன்மைக்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் அவர் உளருகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார், பல்டி அடிக்கிறார் என்கிறார்கள்.

தமிழக மக்களே மறக்காமல் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் சார்பு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

கருணா சிறையில் கொடுமை - வருத்தப்படுகிறேன்.

கருணா சிறையில் கொடுமை படுத்தப்பட்டால் அதற்காக நான் வருத்தப்படுவேன். அரசியவாதியான அவரை சிறையில் கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதே என் அவா.

வேற ஒன்றும் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீங்களாக கருணா என்பதை கருணாநிதி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய துரோகி கருணாவும் இப்போது அரசியல்வாதி தான் என்பதை நினைவில் கொள்க.

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பிரியங்கா வதேரா - காந்தி

காங்கிரசு தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி இராபர்ட் வதேராவை மணமுடித்த செய்தி அனைவருக்கும் தெரியும். மணமான பின்பு இவரை பிரியங்கா வதேரா என்றே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இப்போது இவர் பெயரை பிரியங்கா காந்தி என பெரும்பாலும் என குறிக்கின்றன. இது தவறல்லவா? NDTV க்கு இது தொடர்பான கட்டுரையில் இத்தவறை குறிப்பிட்டேன், அதை அவர்கள் வெளியிடவேயில்லை. (என்னுடைய ஒரு commentம் அதுல வரமாட்டுங்குதுங்க ;-)) ). காந்தி மயக்கம் போகமாட்டிக்குது. (மகாத்மா காந்தி மயக்கம் இல்லைங்க, அவரை எப்பவோ மறந்தாச்சு) இதை மோசடி என்றே குறிப்பிடவேண்டும். பெயரை கூட மாற்றி வெளியிடும் இவற்றின் செய்திகளை எவ்வாறு நம்புவது?

பின்னாளில் சில செய்திகளை ஆவணப்படுத்த முயலும் போது இது எல்லோரையும் குழப்பும்.

நளினியை பிரியங்கா சந்தித்ததை எழுதிய போது கூட பிரியங்கா வதேராவை பிரியங்கா காந்தி என்றே எழுதினார்கள். நளினி - பிரியங்கா காந்தி சந்திப்பு...

தமிழ்நாட்டின் முதல்வர் யாருன்னு கேட்டா MGR ன்னும், பிரதமர் இந்திரா காந்தின்னும் சிலர் சொல்லுவாங்க. அவங்களுக்கும் இந்த செய்தியாளர்களுக்கும் என்ன வேறுபாடு?

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

சோனியா காந்தியின் சம்பந்தி தூக்கு மாட்டி மரணம்

அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.

60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.

7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.

செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.

ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....