வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், அக்டோபர் 29, 2014

நரிமனும் அறமும் நீதியும் செயலலிதாவின் பிணையும்


நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக இருந்தால் அவரது நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் இந்தியாவில் இம்மரபு ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை.

தந்தை நரிமன் - வழக்குரைநர்

இப்போது மூத்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பாலி சாம் நரிமன் செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்காக (பிணைக்காக) வாதாடியது இப்பிரச்சனைக்கு  உயிர் கொடுத்துள்ளது. பாலி சாம் நரிமனின் மகன் ரோகின்டன் பாலி நரிமன் உச்ச நீதிமன்றத்தில் யூலை 2014 முதல் நீதிபதியாக உள்ளார்.  கோபால் சுப்பரமணியத்தை நீதிபதியாக ஆக்க விடாமல் பாசக அரசு பல தகிடுதத்தங்களை செய்தது அப்போது தான், இல்லாவிட்டால் கோபாலும் ரோகின்டனுடன் நீதிபதியாகி இருப்பார்.  தந்தை நரி வழக்குரைஞராக அவ்வழக்கில் தோன்றுவது குறித்து அப்போது எழுத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளிய தந்தை நரி தான் வழக்காடுவது குறித்து சட்டப்பூர்வ தடையில்லை என்றார். எல்லோரும் சட்டப்படி ஒரே மாதிரி பார்க்கப்படுகிறார்கள் என்றார்.
மகன் நரிமன் - நீதிபதி

1961 வரை பலமுறை வழக்குரைஞர்கள் அவர்கள் உறவினர்களின் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்கள். 1961இல் இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதி  எண் 6ன் கீழ் நீதிபதியின் உறவினர்கள் யாரெல்லாம் வாதடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.  அதன் படி  நீதிபதியின் மகன், மகள், மருமகள், மருமகன், சம்பந்தி, சகோதர சகோதரிகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தா, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குழந்தைகள் மற்ற நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது. எனினும் இதிலும் குறை இருந்தது. நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்திலேயே (நீதிமன்ற வளாகம்?) வாதாடக்கூடாதா? (அவர் அங்கு இருக்கும் வரை) அந்நீதிபதியின் கீழ் வரும் வழக்குளுக்கு வாதாட கூடாதா? என்ற தெளிவு இல்லை. (வழக்குரைஞர்களுக்கு சட்டத்தின் ஓட்டையை கொடுக்கலாமா?)

 1980களின் தொடக்கத்தில் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்விதியை பற்றி விளக்கமளித்தது.  அச்சமயத்தில் கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி நசர்கி மனைவியை இழந்திருந்தார். அவரை பெண் வழக்கரைஞர் பிரமிளா நசர்கி மணமுடித்தார். அச்சமயம் பிரமிளா மூத்த வழக்குரைஞர் அல்ல எனவே அவர் பெயர் வழக்காடும் அனுமதி பெற்றதாக அவர் வாதாடும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இதை கவனித்த நீதிபதி அவர் வாதாடும் வழக்குக்குக்கு அவரை வழக்காடும் அனுமதி பெறும் படி கூறினார். அடுத்த நாள் அவர் பெயர் வழக்காடும் அனுமதி பட்டியலில் இருந்தது. ஆனால் அவர் வாதாடும் வழக்கின் நீதிபதி அவரை அனுமதிக்க மறுத்து விட்டார்.

அவர்  இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதியின் படி நீதிபதியின் எந்த உறவினரும் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றக்கூடாது என்றார்.  ஆனால் நீதிமன்றம் என்றது மொத்த கருநாடக உயர் நீதிமன்றத்தையும் (உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்றங்கள் இருக்கும் - வளாகம்) என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இது தான் முன்னமே தெரியுமே அப்படிங்கிறிங்களா? அதுவும் சரிதான்.


இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி அறிவிப்பை இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது.   ஆனால் இப்பிரச்சனையில் தொடர்புடைய  பிரமிளா மூத்த வழக்குரைஞராக மாறிவிட்டதாலும் அவரின் நீதிபதி  கணவர்  ஓய்வு பெற்றுவிட்டதாலும் இப்பிரச்சனை முடிவு எடுக்கப்படமாலே முடிந்தது (நீதியின் வேகத்தால் இஃகி இஃகி).  ஆனாலும் இவ்விதியை சரியாக விளங்கிக்கொள்வதில் \  விளக்குவதில் நீதிமன்றங்களால் இன்னும் சரியான முடிவு எடுக்கமுடியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருட்டிண ஐயர் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் வழக்குரைஞர்  மகன் கிருட்டிணமூர்த்தி வேறு மாநிலத்துக்கு சென்று வழக்குரைஞர் தொழிலை செய்தார்.  1970களில் இன்னொரு விவரமான வேலையை சில வழக்குரைஞர்கள் செய்தார்கள். பிணை வழங்குவதில் கண்டிப்பான அவர்களின் நீதிபதி மாமனாருக்கு செல்லும் பிணை மனுக்களில் இவர்களும் தோன்றுவதாக கையெழுத்து இடுவார்கள் அதனால் அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுவிடும்.  அப்புறம் என்ன...


உச்ச நீதிமன்ற நீதிபதியாக கிருட்டிண ஐயர் பதவியேற்றதும் அவரின் வழக்குரைஞர் மகன் இந்தியாவின் எந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவராமன் நாயரின் மகளும் மருமகளும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கியதும் சிவராமன் நாயர் குடியரசு தலைவரிடம் கேட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி சென்றார்.


இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் தன் வரலாறு கூறும் நூலில் பாட்னா  உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்குள்ள வழக்குரைஞர்கள் சிவப்புக் கொடி என்ற முறையை கையாண்டதை குறிப்பிடுகிறார்.

மகன், தந்தையின் நீதிமன்றத்தில்\அமர்வில் வழக்காட முடியாது என்பதால் சிலர் அவரின் நீதிமன்றத்துக்கு\அமர்வுக்கு தங்களுடைய வழக்கு செல்லக்கூடாது என்று கருதும் போது மகனிடம் வழக்கின் விபரங்களை கூறி வழக்கு அவரின் தந்தையிடம் செல்லாமல் தடுத்துவிடுவார்கள். இம்முறையானது சிவப்பு கொடி என்று அழைக்கப்பட்டது. இவ்வகையில் சட்டத்தின் விதியை முறையற்ற முறையில் கையாள்வது இங்கு அதிகம் காணப்பட்டது. சில இளம் வழக்குரைஞர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதியின் மகன்களுக்கு ஆதராவாக இருந்ததாகவும் கேள்வியுற்றேன் என்றும் லீலா சேத் கூறுகிறார். இம்முறையிலும் சிவப்பு கொடி முறை வளர்ந்தது.


1981இல் குப்தா வழக்கில் நீதிபதிகளை இடமாற்றும் போது அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் அவரின் உறவினர் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் உறவினர் நீதிபதிக்கு மற்ற நீதிபதிகளைவிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நிலை உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓர் கருத்தரங்கில் கூறிய அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவாகியது. அக்கருத்தரங்கில் அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரின் உறவினர் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் போது மற்றவர்களை விட தனக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்பதாலும் அது முறையற்றது என்பதாலும் அவ் வாய்ப்பை பயன்படுத்த கூடாது என்று நீதியை காக்கும் பொருட்டு வேறு மாநில நீதிமன்றத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.

1997இல் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் "சட்டவாழ்வின் மதிப்புகள்" என்ற தீர்மானத்தை கடைபிடிப்பதாக உறுதியேற்றார்கள். அத்தீர்மானம் நீதிபதியின் உறவினர் நீதிபதியின் நீதிமன்றத்தில் வாதாடுவதை தடுப்பது என்றும் நீதிபதியின் வீட்டில் தங்கி அவரின் உறவினர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.


மார்கண்டேய கட்சு சில நீதிபதிகளின் உறவினர்கள் அதே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே அவர்களின் உறவினர் வழக்குரைஞர்கள் பெரும் செல்வந்தர்களாகி விடுவதையும், விலையுயர்ந்த மகிழுந்து & வீடு என்று  ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் குறிப்பிட்டார்.

லோதா - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சதாசிவத்திற்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்ற லோதாவிடம் நீதிபதியின் உறவினர்கள் அவர் பணியாற்றும் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞனர் தொழில் புரிய தடை விதிக்கப்படுமா என்று கேட்டப்பட்டபோது இது பற்றி  வழக்குரைஞர் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமென்றார். இது தொடர்பாக பொது நல வழக்கை வழக்குரைஞர் சர்மா தொடுத்ததை தள்ளுபடி செய்தார்.

தற்போது நரி தன் மகன் நீதிபதியாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்.  நீதியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை கெடுவதற்குள் வழக்குரைஞர் மன்றம் இது தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.

ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதுய கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது. நான் தமிழாக்கம். கட்டுரையை படித்தபோது சில இடங்கள் புரியவில்லை. அச்சுக்கு தகுந்த மாதிரி வெட்டி நாம புரிஞ்சிக்காம செய்துவிட்டார்கள் என்று தைரியமாக கூறலாம். சில இடங்களில் என் கருத்தை சேர்த்துள்ளேன் நான் என்ன தொழில் முறை மொழிபெயர்ப்பாளரா? ஆனால் அவரின் கருத்தில் இருந்து மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.

இக்கட்டுரையை படித்தால் வழக்குரைநர் தொழிலிலும் அறத்தை கடைபிடித்தவர்கள் இருந்ததை காணலாம்.

நரிமன் நிறைய பணம் சேர்த்துள்ளவர் இன்னும் ஏன்?  இவரின் செயல் சட்டப்படி சரியென்றாலும் அறமில்லையே? செயலலிதாவுக்கு வேறு திறமையான வழக்குரைநர்கள் கிடைக்கமாட்டார்களா? உச்ச நீதி மன்றத்தில் வேறு திறமையான வழக்குரைஞர்கள் இல்லையா?  நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக  இருந்த இவர் தவறான முன்னுதாரணம் ஆனது நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் செயல் அன்றி வேறு என்ன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லோதா ஒரு உறுதியான முடிவை அப்போது எடுத்து இச்சிக்கலுக்கு தீர்வுகண்டிருக்கலாம்.

வியாழன், அக்டோபர் 16, 2014

நோபல் அமைதி பரிசு சரியானவர்களுக்கு கொடுத்தார்களா


நோபல் அமைதி பரிசு என்பது அரசியல் தொடர்புடையது. சில முறை சரியானவர்கள் பெற்றுள்ளார்கள் என்ற போதிலும் இதில் நிறைய அரசியல் உள்ளது. அதற்காக மற்ற  துறைகளில் அரசியல் இல்லை என்று கருதவேண்டாம் அங்கு மிக குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம். அண்மைய கால அமைதிப்பரிசை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒபாமா (இது அவருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒன்று), வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம், ஐநா போன்றவை நிறையவே சொல்லும்.

இப்போது இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்கள்.

 கைலாசு சத்தியார்த்தி சுதந்திர இந்தியாவில் பிறந்து இந்தியராக இருந்து நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். அன்னை தெரசா இந்தியர் தான் என்றாலும் அவர் ஐரோப்பாவிலுள்ள மாசிடோனிய குடியரசில் பிறந்தவர்.

மற்ற இந்தியர்கள் சுதந்திரத்துக்கு முன் நோபல் வாங்கியவர்கள் (இராமன், தாகூர்), வெளிநாடுகளில் குடியேறியவர்கள் (அவர்கள் இந்திய வம்சாவழியினர் இந்தியர் அல்ல)

இதில் கொடுமை கைலாசு சத்தியார்த்திக்கு இந்திய அரசு  இது வரை எச்சிறப்பையும் செய்யவில்லை. பத்மா விருது என்பார்களே நம்ம சின்ன கலைவாணர் விவேகிற்கு கொடுத்தார்களே அதைக்கூட தரவில்லை.

வெளிநாடுகள் நிறைய விருதுகளை இவருக்கு கொடுத்துள்ளன. இவரை பரிந்துரைத்தது கூட சில வெளிநாட்டினர் தான்.

நம் அனைத்து (அச்சு, இணைய, தொக்கா) ஊடகங்களும்  இவரைப்பற்றி இது வரை விரிவாக சொன்னதில்லை.  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகாவது இவரைப்பற்றி சொல்லியிருக்கலாம். இப்போதும் இவரைப்பற்றி பெரிய அளவு செய்தி இல்லை.  நோபல் பரிசு இந்தியருக்கு என்றவுடன் செய்திபோட்டாக வேண்டும் ஆனால் அவர்களுக்கு இவரைப்பற்றி விரிவாக செய்திபோட இயலவில்லை. மலாலாவுக்கும் கொடுத்ததால் தப்பித்தார்கள், அவரைப்பற்றி தான் நிறைய காணொளிகள் உள்ளதே. சத்தியார்த்தி பற்றி கால் பங்கு மலாலாவைப்பற்றி முக்கால் பங்கு வெளியிட்டு தப்பித்தார்கள்.

 நம் ஊடகங்களும் அரசும் எப்படி என்பது இதன் மூலம் மேலும் விளங்கும் (இவர்களைப்பற்றி தெரியும் என்றாலும்).

30 ஆண்டுகளாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வரும் இவருக்கு நோபல் விருது கிடைத்தது மிகவும் பொருத்தம். இவரைப்பாதுக்காக்க இந்த விருது உதவும்.  எப்படியோ இவ்வளவு காலம் கொலைவெறித்தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். இவ்விருதால் இவருக்கு கிடைத்த  ஆகச்சிறந்த பயன் இதுவென்று கூறலாம். இவர் அமைப்புக்கு பணம் கிடைத்ததை விட இதுவே சிறப்புடையது. இப்ப இவர் சென்றால் இவரை தாக்க குழந்தைகளை பணிக்கு அமர்த்திய அரசியல் பணபல ஆள்பல செல்வாக்கு உடையவர்கள் அஞ்சுவார்கள், புகார் அளித்தால் காவல்துறை தட்டி கழிக்க முடியாது. இப்ப இவர் சொல்லுக்கு ஊடகத்தில் மரியாதை இருக்கும்.

மலாலாவுக்கு கொடுத்தது சரியா என்றால் இல்லை என்று கூறலாம். 

மலாலாவின் சாதனை குறைவானதா என்றால் இல்லை.  இப்போது வாங்க அவருக்கு தகுதியில்லை என்பதே உண்மை. அவர் தாலிபான்களுக்கு எதிராக தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்று போராடினார். அந்த அஞ்சா நெஞ்சத்தை பாராட்ட வேண்டும். பின் தாலிபான்களால் சுடப்பட்டு பாக்கித்தானில் சரியான சிகிட்சை முறை இல்லாததால் பிரித்தானியாவுக்கு சென்று மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தார். இவரை தாலிபான்களுக்கு எதிரான பரப்புரைக்கு மேற்குலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை இசுலாம் மதத்தை சேர்ந்தே பெண்ணே எதிர்ப்பது சில முட்டாள் தீவிரவாத முசுலிம்களுக்கு செருப்படியாக இருக்கும்.

பிரித்தானியாவுக்கு வந்ததில் இருந்து அவர் பாக்கித்தானுக்கு செல்லவில்லை. சென்றால் உயிருக்கு பாதுகாப்பில்லை. பாக்கித்தான் அரசால் அப்பகுதியிலிருந்து தாலிபான்களை விரட்ட முடியவில்லை. தாலிபான்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழ் படுகிறது என்பது உண்மை ஆனால் இசுலாமாபாத்துக்கு வடபுறம் நிறைய நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது? பரப்புரைக்கு மட்டுமே மலாலா பயன்படுத்தப்பட்டு வருகிறார். அப்போது தாலிபான்களை எதிர்த்ததுக்கா நோபல்?

நிறைய பெண்கள் தாலிபான்களை எதிர்த்து களத்தில் உயிருக்கு பயப்படாமல் இன்னும் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பிக்கலாம்.

இப்போது மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் (கிடைத்தது) அரசியல் தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

இதில் அவர் பகடைக்காய்.







ஞாயிறு, அக்டோபர் 05, 2014

சசிகலா குடும்ப கிளைப்படம் விபரம் படத்துடனும் விளக்கத்துடனும்

கருணாநிதி குடும்ப குடும்ப கிளைப்படம் தான் நமக்கு இது வரை தெரியும். அதிமுகவின் அசைக்க முடியாத செல்வாக்குள்ள சசிகலா குடும்பத்தினரின் குடும்ப கிளைப்படம் இது வரை நிறைய பேருக்கு தெரியாது. இவர்களை மன்னார்குடி மாப்ஃபியா என்றும் மக்கள் அன்போடு ( அன்போடா? வெறுப்போடா? பயத்தோடா?) அழைப்பார்கள்.


மன்னார்குடி குடும்ப வகையறா


சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.

(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி

(2)மருத்துவர். கருணாகரன் -இவரது ஓரே குழந்தை (மகன்)  மருமகன் ஆர்பி. இராவணன் (மிடாசு மதுபான ஆலையின் தலைவர்) இவரின் மகள் பெயர் தெரியவில்லை. இவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் தெரியவில்லை.
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )

விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:

1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். 

*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்

2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்

3. சசிகலா (நடராசன்)

4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)

5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி

6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)

சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அண்ணன் பையன் சுதாகரன் ஆகியோர் செயலலிதாவோடு சேர்த்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள். 

தஞ்சாவூரில் மருத்துவமனையை வாங்கி அதற்கு வினோதகன் பெயர் இட்டார்கள் என்று நினைக்கிறேன். 

பெயருக்கு  முன்போடும் முன்னெட்டு பற்றி முழு விபரம் தெரியவில்லை. டிடிவி என்றால் "தி"ருத்"து"றைப்பூண்டி "வி"வேகானந்தன் என்று நானாக நினைத்துக்கொண்டு உள்ளேன் எனக்கு முழு முன்னெட்டுக்கான காரணம் தெரியாது.