வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

தமிழகத்தின் குழப்பமும் ஒன்றிய அரசின் சித்து விளையாட்டும்

தமிழகம் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளது, இந்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திமுகவும் ஒன்றிய ஆளும் அரசான பாசகவும் முயல்கின்றன.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே முதல்வராக வரவேண்டும்.  எட்டாந் தேதி இரவு வரை ஆளுநர் சென்னைக்கு வரவில்லை. அதாவது அடுத்த முதல்வரை நியமிக்க காலதாமதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொல் கேட்காமல் போகக்கூடிய பணபலம் பொருந்திய சசிகலா வருவதை விரும்பவில்லை. செயலலிதா உயிரோடு இருந்த பொழுது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமிருந்ததும் காரணமாக இருக்கும். அவர் விலகியிருந்த போது தான் சோக்களிடம் சசிகலா நிருவகித்த  மிடாசு சாராய ஆலை உட்பட பொருப்புகளை தற்காலிகமாக செயா தந்தார். அவாளிடம் அவாள் அல்லாத ஆளின் நெருக்கம் அவாள் அவாளை தன்னிடம் நெருங்க விடாதது எல்லாம் பாசகவின் சசிகலா வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே தீரவேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் அங்கு அவரை மக்கள் ஆதரவுடன் தோற்கடித்தால் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுமே. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து அவரது தலைமையால் அதிமுகவிற்கு பயன் இல்லை என்று காட்டலாமே. அதிமுக நிருவாகிகளே அப்போ அவரை எதிர்ப்பார்களே.

ஆளுநர் ஐந்தாம் தேதியே சென்னையில் இருந்திருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் அல்லவா?  ஏன் ஐந்தாம் தேதி ஊட்டியிலிருந்து மும்பைக்கு போகிறார்? ஏன் பன்னீரின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்? எதற்காக காலதாமதம்?  காலதாமதம் குதிரை பேரத்தை வளர்ப்பது அல்லவா. பன்னீருக்கு இரு நாட்களுக்கு பிறகு செயா ஆவியிடம் பேச தோன்றி கட்டாயப்படுத்தி கையெழுத்து என சொன்னது ஏன்?. ஏன்னா மோதி சொல்லியிருப்பார் அதனால செயா சமாதிக்கு சென்று 5 நிமிடம் சிறு உறக்கம் போடுகிறார். தியானம் என்பது கடும் பயிற்சி இல்லாம வராது தம்பி.

மோதி ஆட்டுவித்தது போல் பன்னீர் பேசியாயிற்று, பாசக ஆளுநர் அதற்காகத்தானே தாமதம் செய்தார்.  பன்னீரின் வயசென்ன அரசியல் அனுபவம் என்ன? (எத்தனை பேரை மிதித்துவிட்டு மேல வந்திருப்பார்) இப்ப முதல்வராகவும் உள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்க முடியுமா அப்படியே வாங்கியிருந்தாலும் மிரட்டலுக்கு பணிகின்றவர் நமக்கு முதல்வராக இருக்கலாமா?முதல்வரே கட்டாயத்திற்கு உள்ளாகி கையைழுத்து போட்டால் குடிகளின் கதி? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு?  நாளைக்கு வேறொருவரின் மிரட்டலுக்கு பன்னீர் பணியமாட்டார் என்பதற்கு என்ன உறுதியிருக்கு?

ஆகசட்டு 31, 2017 தமிழக ஆளுநராக ரோசையாவின் கடைசி நாள். அவருக்கு பதவி நீடிப்பு இல்லை என்று ஒன்றிய அரசு முடிவெடுத்தபின் வழக்கமாக இறுதி நாளுக்கு முன்பே ஒரு மாதத்திற்கு முன் அடுத்த ஆளுநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விடும். சரி ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழகமும் மகாராட்டிரமும் இந்தியாவின் பெரிய மாநிலங்கள், ஒன்றியத்துக்கு பெரும் அளவில் வரியை ஈட்டி தருபவை. பெரிய மாநிலமான தமிழகத்திற்கு இன்னும் நிரந்தர ஆளுநரை போடாடதன் அரசியல் என்ன? ஒன்றிய பாசக அரசே விளக்கவேண்டும்.

துரை முருகன் பழுத்த அரசியல்வாதி எப்படி பேசி, எதை புரியவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். துரைமுருகன் உங்களுக்கு துணையாக இருப்போம் என்பதை புரிந்து கொண்டால் சரி. ஊழல்வாதி செயலலிதா மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போதே நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல், முழு தேர்தல்களில் 20,000இக்கும் அதிகமான வாக்கு வேறுபாட்டில் திருக்குவளை கொள்ளைக்கூட்டத்தின் கட்சி தோற்றது. இத்தனைக்கும் கருணாநிதி, இசுடாலின் பரப்புரை இருந்தது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெறமுடியாததால் இப்போ குழப்பத்தை பயன்படுத்தி குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். திமுக நண்பர்கள் இந்த ஆட்சி கவிழவேண்டும் அடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த ஆட்சி கவிழாதா என்று ஆசையாக காத்துக்கொண்டுள்ளார்கள்.

சசிகலா கூட்டம் ஒழுங்கா என்றால் இல்லை அவர்கள் செயலலிதா உயிருடன் இருந்த போது அவரின் உதவியுடன் தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் தான். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள், கங்கை அமரனின் சிறுதாவூர் பங்களாவை (உண்மையில் பையனூர்  பங்களா தான், அருகில் சிறுதாவூர் உள்ளது) மிரட்டி வாங்கியவர்கள் மன்னிக்க அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். வாங்கிய கோடிக்கனக்கான மதிப்புள்ள நகைகளுக்கு பணம் தர மறுத்ததால் நகைக்கடையாளர் பாலு இறப்பிற்கு காரணமானவர்கள். அமிர்ந்தாஞ்சன் தலைவலி தைல முதலாளியின் வீட்டை மிரட்டி அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். மிரட்டி அடி மாட்டு விலைக்கு தான் எந்த நிலத்தையும் வாங்குவார்கள் மன்னிக்க பரிப்பார்கள். மிடாசு சாராய ஆலை அதிபர்கள் இது உருவானது அதிமுக ஆட்சி காலத்தில் தான். டாசுமாக் அவர்களிடம் சரக்கு வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடிகள் பார்த்திருப்பர்.

பன்னீர் ஒழுங்கா என்றால் அவரும் இல்லை பெரும் ஊழல்வாதி ரெட்டியுடன் பிணைந்திருப்பவர்.  மெரினா போராட்டத்தை கடைசி நாளில் இரத்தக்களறி ஆக்கியது அவர் தான். இது அலங்காநல்லூரிலும் கோவையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா  போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். காவல்துறை அமைச்சரும் இவரே. ஆறு இலட்சம் பேர் மெரினாவில் ஒரு வாரம் இடைவிடாமல் போராட்டம் நடத்தியதை மாநில அரசும் ஒன்றிய அரசும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. ஏன் உச்ச நீதிமன்றமும் புறம் தள்ளமுடியாது. மெரினா மட்டுமல்ல போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. உலகம் முழுக்க நடந்தது. வெளிநாட்டு நாளேடுகளில் செய்தி வந்த பிறகு அதை புறக்கணிக்க முடியாது. அழுத்தமும் முடிவும் போராட்டத்தால் தான் வந்தது,  செயலலிதா உயிரோடு இருந்த போதே அவருக்கு தெரியாமல் ஊழல் செய்து பணம் சேர்த்ததால் செயாவின் கோபத்திற்கு ஆளானவர் (செயா பங்கு போனதால் தான் கோபம்). இவருக்கும் கரூரில் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருந்தல்லவா? சேகர் ரெட்டிக்கு தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக தாரைவார்த்து தமிழக ஆறுகளை சுரண்டியவர் இவரே. தம்பி ராசா பையன் ரவீந்திரநாத் மூலம் வெளிநாட்டு (முறைகளை மீறி) முதலீடுகளுக்கு அடித்தளம் அமைத்தார். டீ கடையும் பால் பண்ணையும் விவசாயமும் பார்த்தவரிடம் எப்படி பல கோடிகள் சேர்ந்தது? சசி கொள்ளை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு பன்னீரின் கொள்ளைகள் தெரியவில்லை என்பது உண்மையே.

சசிகலா கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம், பன்னீர் கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம். இருவருக்கும் உள்ள வேறுபாடு கொள்ளையடிக்கும் முறையில் தான் உள்ளது. ஆனால் நம் பொருட்கள் கொள்ளை போவது உறுதி. எனக்கு இவன் தான் கொள்ளையடிக்கனும் , இவன் கொள்ளையடிக்கும் அழகு தான் பிடித்துள்ளது என்று மக்கள் கேட்பது புரியாதது.

அதிமுகவிலும் பழ.கருப்பையா போன்ற நல்லவர்கள் உள்ளார்கள் (பழ. கருப்பையா வெளியேறிவிட்டார் என்பது வேறு) . அவர்களை யாராவது அடையாளம் காட்டி அவர்கள் முதல்வர் ஆக மாணவ & இளைஞர் சமூகம் குரல் கொடுத்தால் ஏற்கலாம் ஆனால் மெரினா சல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை  ஒரு முறை கூட சந்திக்காதவருக்கு ஆதரவு தருவதை நினைக்க முடியவில்லை.

நமக்கு சசிகலா கூட்டத்தின் மேல் ஒவ்வாமை இருக்கலாம் அதற்காக ஆளுநர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்த சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிடாதது நம் மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பது ஆகும். இப்பவே மாநில உரிமைகள் ஆடுது, அதை மீட்கவே எத்தனை ஆண்டுகள் போராடனும் என்று தெரியவில்லை! என்பதை நினைவில் கொள்க. ஆளுநருக்கு ஏதாவது ஐயம் இருந்தால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் மாளிகையில் கேட்கலாம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலாவை கேட்கலாம். அது தான் முறை. ஒன்பதாம் தேதி ஆளுநர் சென்னை வந்தார் பன்னிரெண்டாம் தேதி வரை முடிவு எதையும் எடுக்கவில்லை. நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பின் போக அவகாசம் கொடுக்கிறார் அப்படியும் 15 உறுப்பினர்கள் கூட பன்னீர் பின் இன்னும் திரளவில்லை. என்று எட்டுவார் என்றும் தெரியவில்லை, இந்த ஆண்டு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் வருகிறது அதற்கா ஒன்றிய பாசக ஏதேனும் சித்து விளையாட்டை அரங்கேற்றுகிறதோ என்னவோ.