வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?புதன், பிப்ரவரி 21, 2018

காவிரி கடந்து வந்த பாதை

காலைக்கதிரில் பிப்பரவரி 17அன்று வந்தது.  காலைக்கதிர் தினமலரின் சண்டையால் உருானது, இது தினமலரின் நிறுவனர் குடும்பத்துக்கு உரியது அல்ல. ஆகப்பெரும் பழைய தினமலர் ஊழியர்கள் இதில் தான் பணிபுரிகின்றனர்.

1924 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு.

1956 - மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. சென்னை மாகாணம் தமிழ்நாடாகியது மைசூர் கருநாடகம் ஆகியது சென்னை மாகாணத்தின் குடகு கருநாடகத்திற்கு போனது.

1974 பிப் 18 - காவிரி நீரை பகிர்ந்து கொள்ள சென்னை மாகாணம் மைசூர் அரு இடையே உடன்பாடு நீங்கியது.

1980 யூன் 2 - 1970இலிருந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது

1991 யூன் 25 - தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தர நடுவர் மன்றம் இடைக்கால ஆணையிட்டது

1991 டிச 11 - நடுவர் மன்ற ஆணையை ஏற்று தமிழகத்துக்கு நீர் திறக்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை. அதனால்  கருநாடகத்தில் தமிழர்கள் மீது வன்முறை இதில் 20 தமிழர்கள் பலி.

1993 யூலை - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி அப்போதைய முதல்வர் செயா  4 நாள்கள் உண்ணாவிரதம்

1996 ஆக 1997 சன 5- உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் கருநாடக முதல்வர் சே. எச். பாட்டிலுக்கும் இடையே நடத்த 5 சுற்று பேச்சில் முடிவு  எதுவும் எட்டப்படவில்லை.

1997 யூலை 3 - நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்த கோரி ஒன்றிய அரசிடம் தமிழகம் கோரிக்கை.

1998 ஏப் 10- தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வாச்பாய் பணிந்து விடக்கூடாது என கருநாடக முதல்வர் பாட்டில் பேட்டி.

1998 யூன் 16 -காவிரி குடி நீர் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கக்கூடாதென கருணாநிதி கூறியது தவறான முன்னுதாரணம் என முன்னாள் முதல்வர் தேவகௌடா பேட்டி.

1998 யூன் 24 - கிருட்டிணா ஆற்று திட்டத்தின்  மூலம் தமிழகத்துக்கு வழங்கப்படும் 5 டிஎம்சி  நீரும் நிறுத்தப்படும் என கருநாடகம் எச்சரிக்கை.

1998 யூலை 20 -நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை நடைமுறைபடுத்தினால் தமிழகத்துக்கும் கருநாடகத்தும் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கருநாடக அனைத்து கட்சி எம்பிக்கள் பிரதமர் வாச்பாயிடம் மனு.

1998 யூலை 21 - ஆகத்து 21இக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 205  டிஎம்சி நீரை கருநாடகா வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணை.

1998 ஆக 7 - பிரதமர் வாச்பாயி முன்னிலையில் தமிழகம் கருநாடகம் கேரளா புதுச்சேரி முதல்வர்கள்  பேச்சு.

1998 ஆக 8 - காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாவிட்டால் வாச்பாய் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும் என் செயா மிரட்டல்.

1999 மே 7 - 1991-92இல் கருநாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மே 15இக்குள் வழங்க உச்ச நீதிமன்றம் கருநாடகாவுக்கு ஆணை

2002 அக் - கருநாடக முதல்வர் கிருட்டிணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததிற்கு  நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி காவிரி நீரை  திறந்துவிட ஆணையிட்டார்.

2002 அக் 11 - தமிழக திரைப்படத்துறையினர் கருநாடகத்தை கண்டித்து சென்னையிலிருந்து நெய்வேலி வரை பேரணி.

2002 அக் 12 - கருநாடகம் காவிரியில் நீர் திறந்து விடக்கோரி நடிகர் இரசனி சென்னையில் உண்ணாவிரதம்

நவ 29 - காவிரி நடுவர் மன்றக் கூட்டம் தமிழக முதல்வர் செயா பங்கேற்க இயலாததால் ஒத்திவைப்பு.

2003 சன 13 - தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் நீரை தர கருநாடகம் ஒப்புதல்.

2005 ஆக 5 - காவிரி நடுவர் மன்றத்தின் ஆயுள் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.

2006 ஏப்பில் 24 - நடுவர் மன்றத்தின் இறுதி வாதம் முடிவு.

2006 ஆக 3 - காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பு.

2007 பிப் 5 - காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி திறந்து விட வேண்டுமென தன் இறுதி தீர்ப்பை அறிவித்தது. கேரளத்துக்கும் புதுவைக்கும் நீரை திறக்க ஆணை. இதை தமிழகம் ஏற்றது. கருநாடகா ஏற்காமல் மேல் முறையீடு செய்தது.

2012 செப் 13 - காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து நீர் தர முடியாது என கருநாடக முதல்வர் செகதீசு செட்டர் அறிவிப்பு.

செப் 19 - காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் ஆணை.

செப் 21- ஒன்றிய அரசு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கருநாடகம் மனு.

செப் 24-தண்ணீர் திறந்து விடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் மனு.

செப் 28 - தண்ணீர் திறந்து விடாத கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் கண்டிப்பு

அக் 4 - தமிழகத்துக்கு அக்டோபர் 15 வரை தண்ணீர் தர முடியாது என உச்ச நீதி மன்றத்தில் கருநாடகம் மனு

அக் 8 -  காவிரியில் தினமும் 9,000 கன அடி கருநாடகம் தமிழகத்துக்கு தர வேண்டுமென  உச்ச நீதி மன்றம் ஆணை.

அக் 8 -  பிரதமர் அக்டோபர் 20 வரை தண்ணீர் தர ஆணை, பிரதமர் & உச்ச நீதி மன்ற ஆணையை கருநாடகம் சில மணி நேரங்களிலேயே அவமதித்தது.

அக் 9 - கருநாடக அரசு மீது தமிழகம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கை  தொடுத்தது.

அக் 9- கருநாடகாவை  கண்டித்து காவிரி கழிமுக மாவட்டங்களில் இரயில் மறியல்.

அக் 17- நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனுவை உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் அளித்தது.

நவ 15 - நவம்பர் 16இக்குள் 4.8  டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்து விட காவிரி நதி நீர் ஆணையம் ஆணை.

நவ 29- காவிரிப்பிரச்சனை குறித்து கருநாட முதல்வர் செகதீசு செட்டருடன் தமிழக முதல்வர் செயா பெங்களூரில் பேச்சு.

டிச 6 - தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 7 - நீரை திறக்க முடியாதென எம்பிகளுடன் செகதீசு செட்டர் பிரதமரை சந்தித்து வலியுறுத்தல்.

டிச 7 - தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறப்பு.

டிச 10 - தமிழகத்துக்கு உடனடியாக 15,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

டிச 21 -  நடுவர் மன்ற தீர்ப்பை அரசின் அழைப்பிதழில் (கெசட்டில்) வெளிடக்கோரி பிரதமருக்கு செயா இரண்டாவது முறையாக கடிதம்.

டிச 25 - அரசின் அழைப்பிதழில்  நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை வெளியிடக்கூடாதென பிரதமருக்கு செட்டர் கடிதம்.

2013 சன 4 - நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிடாதற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்

பிப் 4 - காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பிப் 20இக்குள் அரசிதழலில் ஒன்றிய அரசு வெளியிட உச்ச நீதி மன்றம் ஆணை.

பிப் 9 - தமிழகத்துக்கு 2.44 டிஎம்சி நீர் திறப்பு.

பிப் 13 - குறைந்த அளவு  நீரை திறந்து விட்ட கருநாடகத்தின் மீது தமிழகம் அவமதிப்பு வழக்கு.

பிப் 20- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஒன்றிய அரசு  அரசிதழலில் வெளியிட்டது

2014 சன 6-  காவிரி நடுவர் நீதிமன்ற புதிய  தலைவராக சவுகான் அறிவிக்கப்பட்டார்


2015 மார்ச் 30 -காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்படும் என்று  கருநாடக சட்டசபையில் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

செப் 6 - காவிரியில் 227.55 டிஎம்சி நீரை  விடச் சொல்லி ஆணையிட பிரதமருக்கு செயா கடிதம்.

நவ 15 - தமிழகத்தின் கோரிக்கைக்கு உச்ச நீதி மன்றத்தில் கருநாடகா எதிர்ப்பு.

2016 ஆக 16 - உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்  செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் செயா அறிவிப்பு.

செப் 2 - வாழ்வோம் வாழ விடுவோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்துக்கு உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 7 - இதைத்தொடர்ந்து கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம். தமிழர்களின் வண்டிகள் தீ வைத்து எரிப்பு.

செப் 11 -  உத்தரவை மாற்றக்கோரி கருநாடகம் உச்ச நீதி மன்றத்தில் மனு.

செப் 12 - 15,000 கன அடிக்கு பதிலாக 12,000 கன அடி நீரை  திறக்க உச்ச நீதி மன்றம் ஆணை.

செப் 16 - தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தில் முழு கடையடைப்பு.

செப் 20 -  4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு.

அக் 03 - காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க தனக்கு ஆணையிட உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லையென ஒன்றிய அரசு நீதி மன்றதில் தெரிவித்தது

2018 பிப் 16 - உச்ச நீதி மன்றத்தில்  தீர்ப்பு. இதில் 177.25 நீரை தமிழகத்திற்கு வழங்க உத்திரவு. தமிழகத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்ச்சியாக உள்ளதால் கருநாடகம் வழங்க  வேண்டிய நீர் 192 டிஎம்சியிலிருந்து 14.25 டிஎம்சி  ஆக குறைப்பு

.
எனக்கு தெரிந்த பல செய்திகளே இதில் இல்லை. இருந்தாலும் இதை பத்திரப்படுத்துவோம். வரலாறு முக்கியம் மக்களே.


ஞாயிறு, ஜனவரி 21, 2018

Ice Cream செய்வது எப்படி? சர்க்கரை இல்லை கொழுப்பு உண்டு என்பதால் பேலியோ மக்களுக்கு இது உதவலாம்

Ice Cream செய்வது எப்படி? Ice Cream கருவி இல்லாமலும் சர்க்கரை இல்லாமலும் சேர்த்தும்.ஆனா முட்டை கரு உண்டு

தேவையான பொருட்கள்
முட்டை 8
Heavy Cream பால்
கொழுப்பு  நீக்காத பால்
வெண்ணிலா சாறு
       * வேண்டுமென்றால் - சிவப்பு பெர்ரி பழம், வாழைப்பழம், சாக்லெட், சர்க்கரை


அடுப்பில் வைத்து சூடாக்கும் முறை 

1. எட்டு முட்டை மஞ்சக்கருவை நன்றாக அடித்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளைக்கருவை பயன்படுத்தக்கூடாது. சர்க்கரை வேண்டுமென்றால் மஞ்சக்கருவுடன் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளுங்கள். சர்க்கரை வேண்டாம் ஆனா இனிப்பு வேணும் என்பவர்கள் சர்க்கரைக்கு மாற்றாக உள்ள சர்க்கரையை பயன்படுத்தவும்.  எச் சர்க்கரையையும் பயன்படுத்தாமலும் இருக்கலாம்.
2.Heavy Cream பாலையும் கொழுப்பு நீக்காத பாலையும் சம அளவில் கலந்து குறைந்த மிதமான சூட்டுக்கு நடுவில் சூடாக்குங்கள். அதில் வெண்ணிலா பொடி அல்லது வெண்ணிலா சாறு அல்லது வெண்ணிலா கொட்டையை போட்டு சூடாக்கவும். அப்ப அப்ப கிளரிவிடவும். பொங்குவது போல் வரும்போது (பால் சிறிது மேலே வரும் போது) அடுப்பு தீயை அணைத்து விடவும்.
3. கொதிநிலைக்கு இந்த பால் கரைசலில் சிறிதை அடித்து வைத்த மஞ்சள் கருவுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும். (முதலில் நிறைய சேர்த்தால் முட்டை வெந்து விடும்) பின்பு கொதிநிலையில் உள்ள பால் சிறிது சேர்த்து அடிக்கவும். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து அடிக்கவும். பாதி பாலுக்கு மேல் தீர்ந்ததும் எல்லாத்தையும் கொட்டி நன்றாக அடிக்கவும்\கிளரவும்.
4. இப்ப மஞ்சள் கருவுடன் பாலும் கலந்து உள்ள கரைசலை அடுப்பில் குறைந்த சூட்டில் பொங்குவது போல் வரும் வரை சூடாக்குங்கள். இதில் மீண்டும் வெண்ணிலா சாறை சிறிது சேருங்கள். துக்கியூண்டு உப்பையும் சேருங்கள். இக்கரைசலை கிளரிக்கொண்டே இருக்கவேண்டும். பொங்கும் நிலைக்கு வந்ததும் தீயை அணைத்து பாத்திரத்தை தூக்கிவிடுங்கள்.
5. பால் உள்ள பாத்திரத்தின் சூடு போக வேண்டும். அதனால் பாத்திரத்தை குளிர் நீர் உள்ள சட்டியில் வைத்து குளிர்வியுங்கள், இது விரைவாக குளிர்விக்க உதவும்.
6. குளிர்ந்த கரையலை நன்றாக கிளரவும் பின் அக்கரைசலை Freezer வெப்பநிலையை தாங்கும் டப்பாவிலோ கண்ணாடி பாத்திரத்திலோ ஊற்றி அதை மிகுதியாக குளிர வைக்கவும் Freezer part of fridge. அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டவும் இப்போது பெர்ரி பழத்தை மிக்சியில் அடித்து அதை கலந்து பின் நன்றாக கிளரவும். (பெர்ரி இனிப்பு ஆகும்) பெர்ரி சுவைக்கு பதில் சாக்ல்லேட் Ice Cream வேண்டுபவர்கள் சாக்லேட்டை கரைத்து ஊற்ற வேண்டும் என்ன சுவை வேண்டுமோ அதை ஊற்றுங்கள். மீண்டும் Freezers இல் வைக்கவும்.
7. மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezers இல் வைக்கவும். இப்படியாக நன்றாக Ice Cream ஆனது கெட்டியாகும் (Freeze) வரை அரை மணிக்கு ஒரு முறை எடுத்து கிளரிவிடவும்.
8. கெட்டியானதும் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் கழித்து சுவையுங்கள்.


மற்றொரு முறை - இதில் சூடு பண்ண வேண்டாம்.

1. முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream . பாலையும் ஒரு மணி நேரம் fridge இல் வைத்து குளிர வைக்கவும்.
2. முட்டை மஞ்சள் கரு 4 அல்லது 6 உடன்1 மணி நேரம் குளிர்ந்த முழு கொழுப்பு உள்ள பாலையும் Heavy Cream பாலையும் வெண்ணிலா சாறு சில துளிகளையும் சர்க்கரை தேவைப்படும் அளவு அல்லது சேர்க்காலும் இருங்கள். இதை நன்றாக அடித்து சிறிது நேரம் கிளருங்கள்.கரைசலை கடுங் குளிரை தாங்கும் கண்ணாடி பாத்திரத்துக்கு மாற்றவும்.
3. இதை Freezer sல் 1 மணி நேரம் வைக்கவும். சிவப்பு பெர்ரி பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
4. Freezer ஒரு மணி நேரம் இருந்த Ice Cream கரைசலை வெளியே எடுத்து நன்றாக கிளரவும் அதனுடன் சிவப்பு பெர்ரி பழம் அரைத்த கரைசலை ஊற்றவும். பின்பு நன்றாக கிளரவும். பின்பு அதை எடுத்து Freezer இல் வைக்கவும். மீண்டும் அரை மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக கிண்டி மீண்டும் Freezer இல் வைக்கவும். பின்பு 5 மணி நேரம் Freezers லேயே இருக்கட்டும்.
5. Freezer இல் எடுத்து சுவையுங்கள்.
முட்டை இல்லாமலும் Ice Cream செய்யலாம். முட்டையுடன் செய்வது பழங்காலத்து முறை. கொழுப்பு வேண்டும் என்பவர்களுக்கானது. எனக்கு கொழுப்பே இல்லை அதனால் முட்டையுடன் உள்ளது தான் எனக்கு

புதன், டிசம்பர் 13, 2017

சொற்களின் சேர்க்கை - பகுதி ஒன்று

இலக்கணத்தில் தொடர்ச்சியாய் எல்லார்க்கும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது புணர்ச்சி இலக்கணம்தான்.
தமிழைத் தலைகீழாய்க் கற்று முடித்தாலும் புணர்ச்சி இலக்கணத்தில் தெளிந்த அறிவைப் பெற்றிராவிட்டால் தவறிழைத்துவிடுவீர்கள்.
தனியாக அமர்ந்து புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுத் தேர்வது என்று முடிவெடுத்தாலும் மேற்செல்லும்போது நாமே நம்மைக் கைவிட வேண்டி வரும்.
முகநூல் பதிவுபோன்ற ஓர் உரையாடல் இழையில் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்பது மிகச் சிறப்பான கூட்டுப் படிப்பாக அமையும் என்று கருதுகிறேன்.
தமிழ் இலக்கணத்தை எப்படிக் கற்க வேண்டும், தெரியுமா ? ஐயத்திற்கிடமின்றி அடிப்படையிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
முதலில் ஒலிப்புகளைத் தெளிவாய் அறிய வேண்டும். அவ்வொலிப்புகள் எழுத்துகளாய் எவ்வாறு குறியிடப்படுகின்றன என்பதை அறிய வேண்டும்.
ஒலிப்பின்படி எழுத்துகள் என்னென்ன என்று அறிந்து, நம் மொழியின் ஒலிகளுக்கேற்ற எழுத்துகளை எழுதக் கற்றுக்கொள்கிறோம்.
இப்போது உங்களுக்கு ஒலிப்புகள் தெரியும். அதிலேயும் நணன – ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்தி ஒலிப்பது என்பதில் குழப்பம் வரும்.
எடுத்ததும் ந என்று சொல்லுங்கள். அதுதான் நகரத்தின் ஒலி.
ணன-கரங்கள் ஒருபோதும் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாக மாட்டாதவை. அதனால் அவை ந என்று அதே ஒலிப்பில் தனக்கு முன்னால் வரும் எழுத்துக்கேற்பவும் தனக்குப் பின்னால் வரும் எழுத்துக்கேற்பவும் ஒலித்துக்கொள்ளும். அவ்வளவுதான்.
நகர எழுத்துகள் சொல்லுக்கு நடுவிலோ கடைசியிலே எங்கேயும் வரமாட்டாதவை. அப்படி வந்தாலும் செய்ந்நன்றி, தந்நலம், வெரிந் போன்று சிற்சில சொற்களே உள்ளன.
அந்நியன், அநாதை, அநியாயம் போன்றவை வடசொற்கள். நகரங்கள் மொழி நடுவில் வரமாட்டா என்ற கொள்கையுடையவர்கள் அன்னியன், அனாதை, அனியாயம் என்று எழுதுவார்கள்.
சொல்லுக்கு முதலாவது நகர ஒலிப்பு. சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றுவது ணன-கர ஒலிப்பு. இப்படிப் பல நுண்மைகள் உள்ளன.
இப்போது நாம் இத்தொடரில் புணர்ச்சி இலக்கணத்தைத்தான் தொடப்போகிறோம்.
நமக்கு வழிகாட்டியாக நன்னூலை வைத்துக்கொள்ளலாம். அந்நூற்படி புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றுக்கொண்டாலே நாம் தமிழில் செழுமை அடைந்துவிட்டதாக இறுமாப்பு அடையலாம்.
நம் மொழிக்குத் தொன்மையான இலக்கண நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை தோன்றியிருக்கின்றன. அவை அனைத்தையும் நாம் வழிகாட்டியாகக் கொள்வதைவிடவும் தொல்காப்பியமோ நன்னூலோ சிறப்பாக இருக்கும்.
தொல்காப்பியத்தை அடைய நாம் இன்னும் பல கற்றல் படிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதால் காலத்தால் சற்றே பிந்திய நன்னூலை எடுத்துக்கொண்டோம்.
எங்கே வலிமிகும், எங்கே வலிமிகாது என்பதைத் தலைகீழாய் நின்று மனப்பாடம் செய்தாலும் புணர்ச்சி இலக்கணத்தைக் கற்றால் ஒழிய நமக்கு விடிவில்லை.
புகட்டும்போதே வாந்தியெடுக்கக்கூடியவாறு இருப்பது இலக்கணம் என்ற கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்.
புணர்ச்சி இலக்கணம் கடினமே இல்லை.
பாலும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும், எண்ணெய்யும் தண்ணீரும் சேர்ந்தால் என்னாகும் என்பது நமக்குத் தெரியும்.
பாலும் தண்ணீரும் சேரும். எண்ணெய்யும் தண்ணீரும் சேராது.
மொழிச்சொற்களுக்கிடையிலும் இதைப் போன்றே சேர்க்கையும் சேராமையுமான இயற்கை காணப்படும். அதை இழையிழையாக விளக்குவதுதான் புணர்ச்சி இலக்கணம்.
ஓர் ஒலி தனித்து ஒலிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகள் நிரல்பட ஒலித்தால் அங்கே சொல் தோன்றுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்து நடந்தால் வாக்கியம் பிறக்கிறது. வாக்கியம் என்பதைத் தமிழில் சொற்றொடர் (சொற்களின் தொடர் வரிசை) என்பார்கள்.
ஓரெழுத்தோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ கூடி எவ்வாறு சொற்களைத் தோற்றுவிக்கின்றன என்பதைச் சொல் இலக்கணம் கற்றுத் தருகிறது.
இரண்டு சொற்கள் எவ்வாறெல்லாம் சேரலாம் சேரக்கூடாது என்பதைப் புணர்ச்சி இலக்கணம் கற்பிக்கிறது.
புணர்ச்சி என்றால் சேர்க்கை. தனித்துக் கிடப்பவற்றால் ஆனதில்லை மொழி. சேர்ந்து சேர்ந்து சேர்ந்து சேர்ந்து ஆவதுதான் மொழி.
சின்ன சின்ன ஒலிகளின் சேர்க்கை. சொற்களின் சேர்க்கை. சொற்றொடர்களின் சேர்க்கை. இதுதான் மொழியின் கட்டமைப்பு.
புணர்ச்சி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் எப்படிச் சேரும் என்பதை விளக்கும் இயல். அதைத்தான் அடிமுதல் நுனிவரை கற்றுத் தெளியப் போகிறோம்.
- தொடரும்
- கவிஞர் மகுடேசுவரன்
https://www.facebook.com/magudeswaran.govindharajan/posts/1672296679475481