வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஏப்ரல் 27, 2006

அங்கிள், ஆன்ட்டி, அ(+க்)சின் உறவு முறைகள்



               தமிழில் உறவுகளுக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, கணவன், மனைவி, சக்களத்தி, ஓப்பிடியா, ஓரகத்தி, பொறந்தவன், பொறந்தவள் ...... உறவின் பெயரைக்கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கிறவங்க எவ்வளவு பேர் இந்த உறவுமுறைப்பெயர்களை தெரிஞ்சவங்க என்று பார்த்தா குறைவா தான் இருப்பாங்க. கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் வசித்தவர்களுக்கு இந்த உறவு முறை பெயர்கள் தெரிந்திருக்கும் மற்றும் புழங்கியிருப்பார்கள் ஆனால் பெரு நகரத்தில் வசித்தவர்களுக்கு இப்பெயர்கள் தெரிந்திருப்பது கடினம்.

              இப்ப நகரமயமாதல் அதிகரித்து கிராமங்களில் வசிப்போரின் என்ணிக்கை குறைந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படி நகரங்களுக்கு குடியேரும் கிராமத்தினரின் வாரிசுகள் தமிழ் உறவுமுறை பெயர்களை புழங்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இப்படி தமிழ் உறவுமுறை சொற்கள் என்பது வயசானவர்கள் புழங்கும் சொற்களாக மாறி இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

              இந்த பதிவு போட காரணம் சிறு வயதில் என்கூட ஒன்னா ஊர்சுத்துன என் நண்பன் என்கிட்ட அவனோட மாமா அத்தையை அங்கிள் ஆன்ட்டின்னான் பாருங்க அது தான். அவனை ரெண்டு வாங்கு வாங்கிட்டேன் அப்புறம் தான் மனசு ஆறுதல் அடைந்தது.

              அப்புறம் கவனிச்சா தமிழ்கூறும் நல்லுலகின் பெரும்பான்மையான மக்கள் மம்மி டாடியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அங்கிள் ஆன்ட்டி யின் ஆதிக்கத்துக்குள் இருப்பது தெரிய வந்தது. இதுல கொடுமை என்னன்னா சில தமிழ் ஆர்வலர்களும் ( அம்மாவை மம்மின்னும் அப்பாவை டாடின்னும் கூப்பிடாதவர்கள் ) "சொல்லுங்க ஆன்ட்டி", "சரிங்க அங்கிள்" என்பது தான்.

              என் நண்பரோட மனைவிடம் யாருங்க இவரு என்று அவங்ககூட வந்தவரை பற்றி கேட்டேன், என்னோட "கசின்" அப்படின்னாங்க. நானும் கசின்னு மொட்டையா சொன்னா எப்படிங்க எந்த முறையில் கசின் அப்படின்னு கேட்டேன் அவங்க விட்டாங்களா என் "அன்கிளோட சன்" அப்படின்னாங்க, நான் அன்கிள்ன்னா? மாமாவா? சித்தப்பாவா?, பெரியப்பாவா? என்று கேட்டேன், என் பெரியப்பாவோட பையன் அப்படின்னாங்க. எனக்கு அப்பாடான்னு இருந்தது. ( அவங்களுக்கும் தான் என்று சொல்லத்தேவையிலை :-) ) .

              அவங்க "என் பெரியப்பாவின் பையன்" அப்படின்னு சொல்லி இருந்தா பளிச்சுன்னு புரிந்து இருக்கும் "அன்கிள்ன்னு" சொன்னதால எனக்கு சரியான உறவுமுறை தெரியாம போக ஏகப்பட்ட கேள்வி கேட்டும்படி ஆயிடுச்சு. இந்த மாதிரி கேட்டாதான் குறைந்தபச்சம் என்னிடமாவது அங்கிள், ஆன்ட்டி, கசின் என்று சொல்லாம தமிழில் உறவுமுறைகளை சொல்லுவாங்க என்பது எண்ணம்.

              என் நண்பரோட அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், அவரு பிரதர் இன் லா, ஸிஸ்டர் இன் லா, பாதர் இன் லா, மதர் இன் லா அப்படின்னு ஒரே இன் லா கதையா நிறையா பேசினார் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை அவரு பெரியவர் நான் ஏதாவது சொல்லப்போயி அவரு மனசு புண்பட்டிருச்சுன்னா என்ன பண்றது? இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்குமா? ஒரு நாள் என்னங்க பாரிஸ்டர் இன் லா கணக்கா பிரத்ர் இன் லா, ஸிஸ்டர் இன் லான்னு சொல்லறீங்க தமிழ்ல உறவுமுறையை சொல்லுங்க நமக்கு இந்த இன் லா முறையில் சொன்னீங்கன்னா என்ன சொல்லறீங்கன்னு புரியறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுது, நீங்க தமிழ்ல சொன்னாதானே எங்களுக்கும் உறவுமுறை பேரெல்லாம் தெரியும் அப்படின்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஆல் ரைட் தம்பி அப்படீன்னார். அதுக்கப்புறம் அவர் இந்த இன் லா கதையை என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.

              நம்ம மொழியை நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்? உங்களை தமிழ் தெரியாத ஆளுங்ககிட்ட தமிழ் பேச சொல்லலை, தமிழ் தெரிந்த ஆளுங்ககிட்ட தமிழில் பேசங்க. அதனால யாரும் உங்களை இங்கிலிஸ் தெரியாதவன் அதாவது முட்டாள்ன்னு நினைக்க மாட்டார்கள். வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.

              சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.

              இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

சில உண்மைகள்

நகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :

  • எந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.

  • சொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.

  • யாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.

  • குழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.

  • தியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்?).

  • ஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.



புதன், ஏப்ரல் 05, 2006

வாக்கு போடாத மன்மோகன் சிங்

தேர்தலில் வாக்கு அளிப்பது நமது மிக முக்கிய கடமை மற்றும் உரிமைகளில் ஒன்று. ஆனால் நமது பிரதமரே அந்த கடமையை செய்யவில்லை என்னும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏப்ரல் 3, 2006 அன்று நடந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் மன்மோகன் சிங் வாக்கு செலுத்தவில்லை.

மெத்த படித்தவர், நாணயமானவர், பொருளாதார மேதை, அரசியல்வாதி இல்லாத பிரதமர் என்று பல பல சிறப்புகளை உடைய நமது பிரதமருக்கு இந்த செயல் ஒரு மாபெரும் தவறு என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாதான் இருக்கு.

1991 ல் இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்றால் அவர் அம்மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். இதன் பொருட்டே இவர் அஸ்ஸாம் வாசியானார். இவரின் நிரந்தர முகவரி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள டிஸ்பர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. அஸ்ஸாம் வாசியானது தவறில்லை ஆனால் ஒரு குடிமகனின் கடமையை தவறாமல் குறைந்தபச்சம் தேர்தல் சமயத்திலாவது செய்ய வேண்டுமல்லவா?

இவர் இதுவரை ஒரு அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலிலும் வாக்கு அளித்ததில்லை. 1998 பொதுதேர்தலில் மட்டும் வாக்களித்தார். அப்படியென்றால் உலகின் மிகப்பெரிய மக்களாச்சியின் தலைவர் கடந்த 15 (1991 - 2006) ஆண்டுகளில் ஒரே ஒரு முறை தான் வாக்களித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் வாக்கு போடலைன்னா புரிந்துகொள்ளலாம். - நிரந்தர அதிபர்.

மன்மோகன் சிங் கதை அப்படியல்லவே. இவர் உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவர். வாக்கின் அருமை தெரிந்து நடந்திருக்கவேண்டும். என்ன செய்வது உலகின் மிக பெரிய மக்கள் ஆட்சி நாட்டின் தலைவராக இருந்தாலும் இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இன்னும் இவர் மாநிலங்கவை உறுப்பினர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான்.

ஒரு வேலை இதனால் தான் இவருக்கு வாக்கின் அருமை தெரியாமல் போய்விட்டதோ?

இதில் என்ன வேடிக்கைனா, ஓட்டு பதிவுக்கு 2 நாளைக்கு முன்னாடி தொகுதிக்கு வந்து மகா (மக்கு ?) சனங்களே வாக்கு போடுங்கன்னு பிரசாரம் பண்ணியிருக்கிறார். ஆனா இவர் வாக்கு போடவில்லை. மன்மோகன் சிங் வாக்களிக்க வருவார் என்று இவர் சார்ந்த வாக்குசாவடி மக்கள் நினைத்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். சரியப்பா சில பேரால் வர முடியாது அதற்கு தானே அஞ்சல் வாக்கு முறை உள்ளது. பிரதமர், குடியரசு தலைவர், ஆளுனர், மந்திரிகளுக்கு இச்சலுகை உண்டு. மன்மோகன் சிங் அஞ்சல் வாக்கு முறையையும் பயன்படுத்தவில்லை.

தென் டில்லி மக்கள் இவரை 1999 -இல் தோற்கடித்தப்போ என்னடா மக்கள் ஒரு நல்ல ஆளை தேர்தெடுக்கமாட்டீங்கறாங்க என்று நினைத்ததுண்டு, இப்ப தான் தெரியுது தென் டில்லியில் நிறைய மன்மோகன் சிங்குகள் இருக்கிறாங்கன்னு.
அதனால் இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மகா சனங்களே வாக்கு போடாதவர்கள் எல்லாம் மன்மோகன் சிங் மாதிரி. அப்ப நீங்க?
:-))

வாழ்க மக்கள் ஆட்சி.
மன்மோகனுமா? அப்படின்னு நொந்து போயி எழுதின பதிவுங்க இது.

source april 4, 2006 - dailypioneer newspaper.

http://www.dailypioneer.com/archives2/default12.asp?main_variable=front%5Fpage&file_name=story5%2Etxt&counter_img=5&phy_path_it=D%3A%5Cdailypioneer%5Carchives2%5Capr406

ஞாயிறு, ஏப்ரல் 02, 2006

திமுக - பாமக தொகுதிகளில் மாற்றம்.

பாமக போட்டியிடுவதாக இருந்த பெண்ணாகரம் தொகுதி திமுகவுக்கும் , திமுக போட்டியிடுவதாக இருந்த தர்மபுரி தொகுதி பாமகவுக்கும் மாற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் பெரியண்ணன் அத்தொகுதிக்கு பதில் பெண்ணாகரத்தில் போட்டியிடுவார்.

தற்போதைய பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற உறப்பினர் ஜி.கே.மணி மேட்டூரில் போட்டியிடுவதால் எவ்விதமான சிக்கலும் இன்றி இத்தொகுதி மாற்றம் நடந்துள்ளது.

2001 - இல் சுயேச்சையாக போட்டியிட்டு 34,729 வாக்குகள் வாங்கினவர் பெரியண்ணன், அத்தேர்தலில் திமுக 3-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

2001 ம் தேர்தலுக்கு பின் பெரியண்ணன் திமுகவில் இணைந்துவிட்டார். தற்போது மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

பெண்ணாகர தேர்தல் முடிவுகள் ( 2001 )

ஜி.கே.மணி (பாமக) = 49125
பெரியண்ணன் (சுயேச்சை) = 34729
குமார் (திமுக) = 17371

ஆதாரம்: தினமணி & Thatstamil

சனி, ஏப்ரல் 01, 2006

விருதாசலத்தில் மற்றொரு திருப்பம்.

      பா.ம.க வுக்கு சவால்விடும் வகையில் தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் பா.ம.க வின் கோட்டையிலேயே களம் இறங்கியுள்ளதால் பா.ம.க அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ள பா.ம.க தலைவர் இராமதாஸ் அவர்கள் விஜயகாந்திற்கு "டெபாசிட்" தொகைகூட கிடைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். விருதாசலம் தொகுதி வெற்றியை இராமதாஸ் ஒரு மானப்பிரச்சனையாக கருதுவதாக பா.ம.க வின் முக்கிய புள்ளி ஒருவர் கூறினார். அதனால் தற்போதைய வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு பதிலாக காடுவெட்டி குரு விருதாசலத்தில் போட்டியிடுகிறார். ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவுக்கு பதிலாக "இராமு படையாச்சி" போட்டியிடுகிறார்.

      காடுவெட்டி குரு தற்போது களத்தில் குதித்துள்ளதால் விருதாலச்தில் சூடு பறக்கும் என்று நிச்சயமாக கூறலாம், தேர்தல் கமிசன் சிறப்பு பார்வையாளரை இத்தொகுதிக்கு நியமித்து கண்காணித்தல் தேர்தல் பிரச்சினை இல்லாமல் நடக்க உதவும்.