தமிழில் உறவுகளுக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, கணவன், மனைவி, சக்களத்தி, ஓப்பிடியா, ஓரகத்தி, பொறந்தவன், பொறந்தவள் ...... உறவின் பெயரைக்கொண்டு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதை படிக்கிறவங்க எவ்வளவு பேர் இந்த உறவுமுறைப்பெயர்களை தெரிஞ்சவங்க என்று பார்த்தா குறைவா தான் இருப்பாங்க. கிராமத்தில் அல்லது சிறு நகரத்தில் வசித்தவர்களுக்கு இந்த உறவு முறை பெயர்கள் தெரிந்திருக்கும் மற்றும் புழங்கியிருப்பார்கள் ஆனால் பெரு நகரத்தில் வசித்தவர்களுக்கு இப்பெயர்கள் தெரிந்திருப்பது கடினம்.
              இப்ப நகரமயமாதல் அதிகரித்து கிராமங்களில் வசிப்போரின் என்ணிக்கை குறைந்து வருவது எல்லோருக்கும் தெரியும். இப்படி நகரங்களுக்கு குடியேரும் கிராமத்தினரின் வாரிசுகள் தமிழ் உறவுமுறை பெயர்களை புழங்கும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இப்படி தமிழ் உறவுமுறை சொற்கள் என்பது வயசானவர்கள் புழங்கும் சொற்களாக மாறி இன்னும் சிறிது காலத்தில் மறைந்துவிடும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
              இந்த பதிவு போட காரணம் சிறு வயதில் என்கூட ஒன்னா ஊர்சுத்துன என் நண்பன் என்கிட்ட அவனோட மாமா அத்தையை அங்கிள் ஆன்ட்டின்னான் பாருங்க அது தான். அவனை ரெண்டு வாங்கு வாங்கிட்டேன் அப்புறம் தான் மனசு ஆறுதல் அடைந்தது.
              அப்புறம் கவனிச்சா தமிழ்கூறும் நல்லுலகின் பெரும்பான்மையான மக்கள் மம்மி டாடியிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று அங்கிள் ஆன்ட்டி யின் ஆதிக்கத்துக்குள் இருப்பது தெரிய வந்தது. இதுல கொடுமை என்னன்னா சில தமிழ் ஆர்வலர்களும் ( அம்மாவை மம்மின்னும் அப்பாவை டாடின்னும் கூப்பிடாதவர்கள் ) "சொல்லுங்க ஆன்ட்டி", "சரிங்க அங்கிள்" என்பது தான்.
              என் நண்பரோட மனைவிடம் யாருங்க இவரு என்று அவங்ககூட வந்தவரை பற்றி கேட்டேன், என்னோட "கசின்" அப்படின்னாங்க. நானும் கசின்னு மொட்டையா சொன்னா எப்படிங்க எந்த முறையில் கசின் அப்படின்னு கேட்டேன் அவங்க விட்டாங்களா என் "அன்கிளோட சன்" அப்படின்னாங்க, நான் அன்கிள்ன்னா? மாமாவா? சித்தப்பாவா?, பெரியப்பாவா? என்று கேட்டேன், என் பெரியப்பாவோட பையன் அப்படின்னாங்க. எனக்கு அப்பாடான்னு இருந்தது. ( அவங்களுக்கும் தான் என்று சொல்லத்தேவையிலை :-) ) .
              அவங்க "என் பெரியப்பாவின் பையன்" அப்படின்னு சொல்லி இருந்தா பளிச்சுன்னு புரிந்து இருக்கும் "அன்கிள்ன்னு" சொன்னதால எனக்கு சரியான உறவுமுறை தெரியாம போக ஏகப்பட்ட கேள்வி கேட்டும்படி ஆயிடுச்சு. இந்த மாதிரி கேட்டாதான் குறைந்தபச்சம் என்னிடமாவது அங்கிள், ஆன்ட்டி, கசின் என்று சொல்லாம தமிழில் உறவுமுறைகளை சொல்லுவாங்க என்பது எண்ணம்.
              என் நண்பரோட அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், அவரு பிரதர் இன் லா, ஸிஸ்டர் இன் லா, பாதர் இன் லா, மதர் இன் லா அப்படின்னு ஒரே இன் லா கதையா நிறையா பேசினார் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை அவரு பெரியவர் நான் ஏதாவது சொல்லப்போயி அவரு மனசு புண்பட்டிருச்சுன்னா என்ன பண்றது? இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்குமா? ஒரு நாள் என்னங்க பாரிஸ்டர் இன் லா கணக்கா பிரத்ர் இன் லா, ஸிஸ்டர் இன் லான்னு சொல்லறீங்க தமிழ்ல உறவுமுறையை சொல்லுங்க நமக்கு இந்த இன் லா முறையில் சொன்னீங்கன்னா என்ன சொல்லறீங்கன்னு புரியறதுக்கு கொஞ்சம் நேரமாயிடுது, நீங்க தமிழ்ல சொன்னாதானே எங்களுக்கும் உறவுமுறை பேரெல்லாம் தெரியும் அப்படின்னேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஆல் ரைட் தம்பி அப்படீன்னார். அதுக்கப்புறம் அவர் இந்த இன் லா கதையை என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார்.
              நம்ம மொழியை நாம் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்? உங்களை தமிழ் தெரியாத ஆளுங்ககிட்ட தமிழ் பேச சொல்லலை, தமிழ் தெரிந்த ஆளுங்ககிட்ட தமிழில் பேசங்க. அதனால யாரும் உங்களை இங்கிலிஸ் தெரியாதவன் அதாவது முட்டாள்ன்னு நினைக்க மாட்டார்கள். வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.
              சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.
              இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.
24 கருத்துகள்:
ஒருவன் தன் நண்பனிடம் ஒரு கேள்வி கேட்டான்.
"எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே மாமியார்னாக்க, என் மச்சினன் ஆம்படையா எனக்கு என்ன ஆகணும்?"
விடை கூற இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவு நன்றாக இருந்தது. கசின் வலைய விடுங்க, தமிழ் நாட்ல ரொம்ப பேரு அசின் வலையில விழுந்துட்டாங்கப்பு
தங்களின் ஆதங்கக் கருத்துகளுடன் முழுமைய்யக ஒத்துப் போகும் என்னையும் தங்கள் கணக்கில் சேர்க்கவும்.
ஊரானெல்லாம், உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே, என்று பசப்பும் இந்நேரத்தில், நம் மக்களை நாமே முறையாகக் கூப்பிட்டழைக்கத் தூண்டும் உங்கள் உறவார்வத்துக்கு எனது பாராட்டுகள்!
"நங்கியா" என்பது என்ன உறவுமுறை?
பதிவு மிக அருமை. தங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
ஷ்ரேயா,
நங்கியா-ன்னா சகோதரனின் மனைவி.
நன்றி
கமல்
// எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே மாமியார்னாக்க, என் மச்சினன் ஆம்படையா எனக்கு என்ன ஆகணும்?"
விடை கூற இயலுமா? //
என் மனைவியின் தாயார் - என் மாமியார்.
என் மகளின் தாய் மாமன் - என் மனைவியின் சகோதரன், என் மச்சினன்.
என் மகள் என் மச்சினனை திருமணம் செய்துகொண்டால் எங்கள் இருவருக்கும் ஒரே மாமியார்.
அதாவது என் மச்சினன் இப்போ என் மருமகன் ஆகிட்டான் மன்னிக்க ஆகிட்டார்.
நகைச்சுவையாகச் சொன்னாலும் மிக நல்ல, அவசியமான பதிவு.
'நங்கியா' எனக்கும் புதுசு. சிங்கள 'நங்கி'யோ எண்டு நினைச்சேன். (மழைக்காரியும் அதைத்தான் நினைச்சாவோ?)
//நங்கியா//
குறும்பன் சார். எனக்கு இந்த நங்கியா மட்டும் புரியலை. நான் பிறந்து வளர்ந்தது மதுரை. அது கிராமத்தில் சேருமா, சிறு நகரத்தில் சேருமா இல்லை பெருநகரத்தில் சேருமா? :-)
//வெள்ளைக்காரன் தமிழில் பேசுனாதான் நானும் பேசுவேன் என்று அடம் பிடிக்ககூடாது, அழிச்சாட்டியம் பண்ணகூடாது.
//
அருமை. :-) . நம் மக்கள் அப்படியும் சொல்வார்கள். செய்வார்கள். :-)
//சிறு தகவல் / கொசுறு : - வெள்ளைக்காரன் மாமான்னு சொன்னா அது அம்மாவை குறிக்கும், அதே மாதிரி மாமின்னு சொன்னாலும் அம்மாவைதான் குறிக்கும்.
அமெரிக்காவில் இங்கிலிஸ் தெரியாமல் காலத்தை ஓட்டிடலாம் ( உங்களை யாரும் முட்டாள்ன்னு நினைக்கமாட்டார்கள்) ஆனா தாய் தமிழ் நாட்டில் இங்கிலிஸ் தெரியாதுன்னா கேவலமா போயிடும் ( என்ன தான் அறிவாளியா இருந்தாலும் மக்கள் ஒத்துக்க மாட்டார்கள்) - இதுதாங்க கொடுமை.
//
உண்மை. உண்மை. முழுதும் உண்மை.
என் பொண்ணுக்கு இங்க இருக்கிற எல்லா அங்கிளும் மாமா தான். அவ எப்பவாவது யாராவது ஒரு வெள்ளைக்கார அங்கிளைப் பாத்து மாமான்னு சொல்லி அதுக்கு அந்த அங்கிள் குடுக்குற எதிர்வினையைப் பாக்கணுமே :-) அருமையா இருக்கும்.
//இந்த அங்கிள், ஆன்ட்டி, அசின் மன்னிக்க கசின் வலையில் விழாத ஒரு ஆளை எனக்கு நன்றாக தெரியும் அது நான் தான் - ஹி ஹி.
//
இதானே வேணாங்கறது. எங்களையெல்லாம் பாத்தா எப்படி இருக்கு? ஒரே ஒரு விளக்கம். அசின் வலையில விழலைன்னு சொல்லலை. ஆமா.....
டோண்டு, கோவிகண்ணன், SK, 'மழை' ஷ்ரேயா, கமல் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எனக்கு தெரிந்த சில உறவுமுறை பெயர்களை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
'மழை' ஷ்ரேயா கமல் உங்கள் ஐயத்தை போக்கிட்டாரா?
பாருங்க, கேவலமா இருந்தாலும் "சக்களத்தி" என்பதும் ஒரு உறவுமுறை பெயர் தான்.
ஓ போடுயா மன்னிக்க :-) "ஓப்பிடியா" என்பதும் ஒரு உறவுமுறை பெயர்.
உங்களுக்கு தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத உறவுமுறை பெயர்களை பின்னூட்டினீர்கள் என்றால் என்னை போன்ற சிலர் பயன் பெறுவோம்.
// அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமா, அத்தை, மச்சான், மச்சினன், மாப்பிள்ளை, பெரியம்மா, சின்னம்மா, பெரியப்பா, சித்தப்பா, சகலை, அண்ணி, கொழுந்தியா, கொழுந்தனார், நங்கியா, நாத்தனார்,மாமனார், மாமியார், அம்மாயி, அப்புச்சி, பாட்டன், பாட்டியா, ...... //
கணவன் மனைவி என்ற உறவுமுறையை விட்டுவிட்டீர்களே ஏன் ?
:-))))))
வசந்தன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ஈழ உறவுமுறை பெயர்கள் சிலவற்றை சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கிறோம். சிங்கள "நங்கி" என்னங்க?
//நான் பிறந்து வளர்ந்தது மதுரை. அது கிராமத்தில் சேருமா, சிறு நகரத்தில் சேருமா இல்லை பெருநகரத்தில் சேருமா? :-)
//
மதுரை பெரு / மா நகரம் என்று நான் சொல்ல சில பேர் அது ஒரு மாமாமாபெரும் கிராமம் என்று சொல்ல மதுரைகாரர்கிட்ட கேட்டு ஒரு முடிவுக்கு வருவோம்ன்னு ஒப்பந்தம் போட்டுள்ளோம். கூடல்நகரத்து குமரனே எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லவும். ;-)
//என் பொண்ணுக்கு இங்க இருக்கிற எல்லா அங்கிளும் மாமா தான். அவ எப்பவாவது யாராவது ஒரு வெள்ளைக்கார அங்கிளைப் பாத்து மாமான்னு சொல்லி அதுக்கு அந்த அங்கிள் குடுக்குற எதிர்வினையைப் பாக்கணுமே :-) அருமையா இருக்கும்.
//
:-))))
"என்னடா மாமா How is job?" - அப்படின்னு கேட்கமுடியலீங்க. :-(
// குறும்பன் சார்.//
என்னை ரொம்ப நாளா குடையறது இந்த சார். "சொல் ஒரு சொல்" குமரனும் சாரில் விழுந்துட்டாரா? ம்ம்ம்ம்
நல்ல பதிவு அங்கிள்
"எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே மாமியார்னாக்க, என் மச்சினன் ஆம்படையா எனக்கு என்ன ஆகணும்?"
வடகலை ஐயங்காரா ஆகணும் சார் :)
இதிலென்ன சந்தேகம் குறும்பன் ஐயா. (சார்ன்னா வருத்தப்படறீங்களே). மதுரை ஒரு மாமாமாபெரும் கிராமம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்றும் இன்றும் என்றும் மதுரை அப்படித் தான். :-)
ஒரு நொடி 'குமரன் சாரில் விழுந்துட்டாரா'ங்கறதை, காரில் விழுந்துட்டாரான்னு படிச்சு அடடா என்ன இவர் அபசகுனமா பேசியிருக்காரேன்னு நினைச்சேன். :-)
லதா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
// கணவன் மனைவி என்ற உறவுமுறையை விட்டுவிட்டீர்களே ஏன் ?
:-))))))
//
:-| :S சுத்தமா அது நினைவுக்கு வரலைங்க.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பேரில்லாத பெரியசாமி (அனானிமிஸ்).
கூடல் மாகிராமத்து குமரனே உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தமிழர்கள் "சார்"ன்னு சொல்லுவதைப்பற்றி நண்பர்களிடம் நல்லா கிண்டலடிச்சி பேசியிறுக்கிறேன்/றோம். அதன் விளைவாக "சார்" என்று சொல்லுவதை மிகவும் (95%) குறைத்துக்கொண்டேன். ஐயான்னு சொல்ல இன்னும் பழகவில்லை. "சார்" ஐ பற்றி ஒரு பெரிய பதிவே போடலாம்.
//ஒரு நொடி 'குமரன் சாரில் விழுந்துட்டாரா'ங்கறதை, காரில் விழுந்துட்டாரான்னு படிச்சு அடடா என்ன இவர் அபசகுனமா பேசியிருக்காரேன்னு நினைச்சேன். :-)
//
தப்பா படிச்சவுடனே என்னை திட்டலையே? :-))
பதிவு நன்று. பொறந்தவன், பொறந்தவள் என்பதும் வட்டார வழக்கு உறவுமுறை பெயர்.
- ரமேஷ்
ஓ போடுயா மன்னிக்க :-) "ஓப்பிடியா" என்பதும் ஒரு உறவுமுறை பெயர்.
ஓர்ப்படி - சகோதரர்களின் மனைவியர் உறவு முறையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சகலை என்ற உறவுமுறைக்குப் பெண்பால்தானே அந்த உறவு ?
ஓரகத்தி (ஓர் அகத்தி) (அகம் = இல்லம்) என்று நாங்கள் கூறுவோம். அண்ணன் தம்பி ஓர் அகத்தான் என்பதிலிருந்து வந்திருக்குமோ ?
செல்லமாக "ஓர்ஸ்" என்று அழைத்துக்கொள்வோம்:-)))
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரமேஷ்.
வட்டார வழக்குகளில் ஏராளமான சொற்கள் உள்ளன, அதுவும் அவர்களின் புழக்கத்தில் உள்ளன இவை விரைவில் மறைந்துவிடுமோ என்பதே என் ஆதங்கம்.
// ஓர்ப்படி - சகோதரர்களின் மனைவியர் உறவு முறையைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சகலை என்ற உறவுமுறைக்குப் பெண்பால்தானே அந்த உறவு ? //
ஆம் லதா.
//ஓரகத்தி (ஓர் அகத்தி) (அகம் = இல்லம்) என்று நாங்கள் கூறுவோம். அண்ணன் தம்பி ஓர் அகத்தான் என்பதிலிருந்து வந்திருக்குமோ ?
//
அப்படிதான் இருக்கவேண்டும். வட்டார வழக்குகளை கவனித்தாலே ஒரே பொருள் தரும் பல சொற்களை இனம் காணமுடியும்.
//செல்லமாக "ஓர்ஸ்" என்று அழைத்துக்கொள்வோம்:-))) //
"ஓர்ஸ்" ஸோட "சோர்ஸ்" என்னன்னு பின்னாடி ஒரு பதிவுபோட வைச்சிடாதிங்க :-))
குறும்பாக எழுதியவை. இவற்றில் பெரிதாக எந்த விசயமுமில்லை.
உறவு முறைகள் -1
உறவு முறைகள் 2.
குறும்பன்,
பெயருக்கு ஏற்ற மாதிரி நல்ல ஒர் தேவையான பதிவை நகைச்சுவையாக தந்துள்ளீர்கள்.உங்களின் இப் பதிவை வாசித்து முடித்ததும் என் தாய் மண்ணின் கவிஞன் 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப் பாடலை இங்கே தருகின்றேன்.
-------------------------------
தமிழா!
நீ பேசுவது தமிழா?
அன்னையை தமிழ் வாயால்
மம்மி(mommy) என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை
பேபி(baby) என்றழைத்தாய்
என்னடா, தந்தையை
டாடி(daddy) என்றழைத்தாய்
இன்னுயிர்த் தமிழைக்
கொன்று தொலைத்தாய்
உறவை லவ்(love) என்றாய்
உதவாத பேச்சில்
வைவ்(wife) என்றாய் மனைவியை
பார் உன் போக்கை
இரவை நைற்(night) என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பைச் சுவீற்(sweet) என்றாய்
அறுத்தெறி நாக்கை
கொண்ட நண்பனை
ப்பிரெண்டு(friend) என்பதா?
கோலத் தமிழ் மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
சார்(sir)என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
வண்டிக்காரன் கேட்டான்
லெவ்ற்றா(left ) றைற்றா(right)
வழக்கறிஞன் கேட்டான்
'என்ன தம்பி வைற்றா(fight)'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் லேற்றா(late)
தொலையாதா நம் தமிழ்
இப்படிக் கேட்டால்?
பாட்டன் கையில்
வாக்கிங் ஸ்ரிக்கா(walking-stick)
பாட்டி உதட்டில் என்ன
லிப்ஸிரிக்கா(lipstick)
வீட்டில பெண்ணின்
தலையில் றிப்பனா(ribbon)
வெள்ளைக்காரன் தான்
உனக்கு அப்பனா?
-----------------
இப் பாடலை ஒலி வடிவில் கேட்டு மகிழ விரும்புவோர் கீழ்க்காணும்
இனையத் தள முகவரியில் கேட்டு மகிழலாம்.
http://www.kaasi.info/pages/padal.htm
வெற்றி எடுத்துப் போட்ட காசியரின் 'தமிழா நீ பேசுவது தமிழா' பாட்டைப் பார்த்தபோது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
2004 இல் நடந்த உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்கு வந்திருந்த தமிழார்வலர் ஒருவரிடம், பக்கத்திலிருந்த காசியண்ணர் இந்தபாட்டைக் காட்டிப் பேசிவிட்டு,
"பாட்டு எப்படி இருக்கிறது?"
என்று கேட்டபோது, அந்த அன்பர் சொன்ன பதில்,
"சூப்பருங்கண்ணா".
காசியண்ணருக்கு கொதி வந்ததுதான் மிச்சம். பின்னேரம் மேடையேறினவர் இந்தச் சம்பவத்தையும் சொல்லி ஒரு பிடிபிடிச்சார்.
வசந்தன் குறும்பாக எழுதினாலும் நல்ல ஆராய்ச்சிதான் செய்துதுள்ளீர்கள். ஈழ பேச்சு முறைதான் புரியமாட்டேங்குது. உங்கள் போன்ற பலரின் பதிவுகளை படித்தால் பழக்கமாகிடும்.
வெற்றி 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன் அவர்களின் பாடலை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. மிக அருமையாக எளிமையா குத்தி காட்டி இருக்கார்.
//காசியண்ணர் இந்தபாட்டைக் காட்டிப் பேசிவிட்டு,
"பாட்டு எப்படி இருக்கிறது?"
என்று கேட்டபோது, அந்த அன்பர் சொன்ன பதில்,
"சூப்பருங்கண்ணா".
காசியண்ணருக்கு கொதி வந்ததுதான் மிச்சம்//
ம்ம் இவங்களை எப்படி தான் திருத்துவது.
கருத்துரையிடுக