வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், டிசம்பர் 31, 2009

சென்னை மக்களே எச்சரிக்கையாய் இருங்கள்

இது நேற்று உண்மையாக நடந்த நிகழ்வு. எப்படி எனக்கு தெரியும் என்றால் என்னுடன் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பரின் பெற்றோருக்கு இது நடந்தது.

இவரின் பெற்றோர் தனியாக சென்னையில் வசித்து வருகிறார்கள் (பாதுகாப்பான இடம் தான்). சம்பவம் நடந்த அன்று மகிழுந்தில் வந்த 3 பேர் இவர் அம்மா கையிலிருந்த வலையல்களை எடுத்து போயிட்டாங்க. இப்ப பவுன் விக்கிற விலைக்கு கிட்டதட்ட 1 இலட்சம் வருமாம். இவங்க அம்மாவே வலையல்களை கழற்றி கொடுத்திருக்காங்க. அப்பா, நான் தான் இவங்களுக்கு விற்றேன் என்று தாளில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்க சாமியார் வேடத்தில் வந்தார்கள் என்றும் திருநீறு போட்டு வசியப்படுத்தி எல்லாத்தையும் வாங்கி கொண்டு போயிருக்காங்க என்றும் சொல்கிறார்கள். இவங்களுக்கு ஒன்னும் ஆகலை. இப்ப இவர் கதவுல ஆடி வைக்கப்போறார். காலம் தாழ்ந்த நல்ல முடிவு. காவல்துறையில் புகாரும் கொடுத்திருக்காங்க.

அதனால் சென்னை மற்றும் மற்ற நகர மக்களே உங்களுக்கு தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். முக்கியமா கதவுல ஆடி வைங்க. வீட்டில் நிறைய நகையை வைத்துக்கொள்ளாதீங்க.
.
.

புதன், டிசம்பர் 30, 2009

ஈரோடு சென்ற போது கொள்ளையடிக்கப்பட்டேன்

இது பரபரபுக்காக வைக்கப்பட்ட தலைப்பா என்றால் ஆம் இல்லை எனலாம். நடந்த செயல் உண்மை. இவ்விடுகைக்கு வேறு மாதிரி தலைப்பு கொடுக்கத்தான் நினைத்திருந்தேன் ஆனா பதிவுலகில் இப்போ ஈரோடு பேச்சு அதிகமா இருப்பதால் இத்தலைப்பு. இஃகி இஃகிஃ

நான் 3 மாசத்துக்கு முன் இந்தியா போயிருந்தப்ப எங்க ஊரிலிருந்து ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தேன். ௹15 வாங்குனாங்க. அதற்குரிய டிக்கட்லயும் ௹15 போட்டிருந்தது. சின்ன கைக்கடக்கமான எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. பேருக்கு கையடக்கம் என்று சொன்னாலும் அது செங்கல்லைவிட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஒரு சின்ன தாள் தான் அதில் கட்டணமும் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி. பழைய மாதிரி நாலு சீட்டு கொடுத்து அதுல ஓட்டை போடறதெல்லாம் இல்லை. என்னா வளர்ச்சி. அரசு எப்படி நவீனமாகுதுன்னு புரிஞ்சுக்குங்க. இதனால் இப்ப போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசை ஏமாற்றுவது சுலபமான செயல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன் சோழன் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் பிரிவில் தனியே டிக்கட் அடிச்சு வித்துக்கிட்டு இருந்து மாட்டுனாங்க, இது ஊழியர்கள் பல பேர் சேர்ந்து பல ஆண்டுகளாக செய்த கூட்டுக்கொள்ளை. பல கோடி ஊழல்.

இதுல என்ன குறைன்னா அது தமிழில் இல்லை என்பது தான். அதனால என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு தான் இங்கிலிபீசு சூப்பரா தெரியுமேன்னு நீங்க சொல்றது புரியுது. தமிழ் வால்க. செம்மொலி மாநாடு வால்க.

இரண்டாவது முறையா அரசு பேருந்தில் போனப்பவும் ௹15 தான் வாங்குனாங்க. எந்திரம் மூலமா டிக்கட் கொடுத்தாங்க. சின்ன தாளில் கட்டணம் செல்லும் ஊர் பேரு போன்ற விபரங்கள் இருந்துச்சி.

1 வாரம் கழிச்சி எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டுருந்தேன். அவரு ஈரோடு போக ௹14.50 தான் ஆகும்ன்னு சொன்னார். நான் அரசு பேருந்தில் 15க்கு போனதை சொன்னேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் ஈரோடு வழியில் ஓட்டுனராக தனியார் பேருத்தில் வேலைபார்த்தவர். ஒரு முறை ஈரோடு செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார், தனியார் பேருந்து அப்போது தான் கிளம்பியது அதில் ஏறிக்கொண்டேன். 20 ரூபாய் கொடுத்தேன் மீதி 5.50 அப்புறம் தருவதாக சொல்லி டிக்கட் கொடுத்தார்கள். அப்ப ஈரோடு போக 14.50 தான் கட்டணம் அரசு பேருந்தில் வாங்கும் 15 தவறு, 50 காசு கொள்ளை, எத்தனை பேர் அரசு பேருந்தில் பயணிப்பார்கள் டிக்கட் கட்டணம் 50 காசு அதிகம் என்றால் எவ்வளவு லாபம் வரும் நினைத்துப்பாருங்கள்.

தனியார் பேருந்தில் தான் இப்படி இருக்கும் என்று நினைப்பார்கள் ஆனால் அரசு பேருந்தில் அதிகாரபூர்வமாக இப்படி 50 காசு கொள்ளை அடிப்பாங்கன்னு நினைத்து கூட பார்க்கலை.

அப்படி இருந்தும் தனியார் பேருந்துகள் நல்லா இருக்கு. அரசு பேருந்துகளின் நிலை மோசம். நான் போன பேருந்துகளின் நிலையை வைத்தே இதை சொல்லலாம்.

எனக்கு புரியாதது
:-

1. இப்படி கொள்ளை அடிச்சும் அரசு பேருந்துகள் ஏன் மோசமா இருக்கு.

2. ஏன் அரசு போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குது.

3. இது அநியாயம் இல்லையா? அரசே இப்படி அநியாயம் பண்ணலாமா? இது மாதிரி தனியார் பேருந்துகாரர்களும் செய்யலாமா?
.

.

திங்கள், டிசம்பர் 21, 2009

ஆழ்கடலுக்குள் எரிமலை வெடிப்பு

நாம எல்லோரும் எரிமலை வெடிச்சு சிதறுவதை பார்த்திருப்போம். நேர்ல இல்லைங்க, படத்துல தொலைக்காட்சியில யூ டியூப்-ல தான். அறிவியலாளர்களும் பூமில எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க, கடல்ல எரிமலை வெடிச்சு சிதறி பார்த்திக்காங்க ஆனா ஆழ் கடலுக்குள் எரிமலை வெடிச்சு சிதறி பார்த்ததில்லை. இதுக்காக தவம் இருந்திருக்காங்க. பூமியிலிருந்து 1.2 கி.மீ கடலுக்குள்ள இருக்கற எரிமலை வெடிச்சு சிதறுனத ரோபோ மூலமா படம் புடிச்சி ஆகா ஆகான்னு கொண்டாடுறாங்க. ஆடட்டும் தப்பில்ல. இப்ப நாமும் அத பார்க்கலாமா. (அவங்க படம் பார்த்தாங்க நாமளும் பார்க்கப்போறோம் அதனால நாமளும் அறிவியலாளர்கள் தான், என்ன நான் சொல்லறது சரியா இஃகிஃகி)
இது பசிபிக் கடலில் இருக்கும் சமோவாவுக்கு தென் மேற்கே 200 கிமீ தள்ளி இருக்கு. இந்த எரிமலைக்கு பெயர் மேற்கு மாடா.

கடலில் உள்ள எரிமலைகளை நிறைய பார்த்தாலும் ஆழ்கடல் எரிமலை வெடிப்பை படம் பிடிப்பது இது தான் முதல். ஹவாய் தீவுகளில் ஒருவகையான எரிமலை குமறி அதன் குழம்பு கடலுக்கு செல்லும். எப்ப போனாலும் அதை பார்க்கலாம். அது புகழ் பெற்ற சுற்றுலா தளம் கூட. அது போன்றவற்றுடன் மேற்கு மாடாவை சேர்க்காதிங்க. இது தனி வகை.

ஆழ்கடலில் இருந்ததால் தண்ணீரின் அழுத்தம் இதன் வெடிப்பின் பாதிப்பு அல்லது சீற்றத்தை வெகுவாக குறைத்து விட்டதால் ரோபோ மூலம் எரிமலை வெடிப்பிற்கு சில அடி தூரம் வரை செல்ல முடிந்ததாம். நில மற்றும் கடல் மட்டத்திற்கு அருகிலுள்ள எரிமலைகளில் அவ்வாறு செல்ல முடியாது காரணம் அவற்றின் சீற்றம் மற்றும் வெப்பம்.

மேற்கு மாடா எரிமலையானது 9 கிமீ நீளமும் 6 கிமீ அகலமும் உடையது. இதன் அடி 3 கிமீ ஆழத்தில் உள்ளது. இது பசிபிக் டெக்டோனிக் தட்டு ஆசுத்திரிலேயா தட்டுக்கு அடியில் சொருகும் இடத்தில் இருக்கு. இது மிகவும் சிறப்பான இடம். இந்த பகுதியில தான் பாறைகள் மறுபயனீடுக்கு பூமிக்கு உள்ளாற போகும். அதே போல் இங்க தான் உருகிய பொருட்கள் பூமியின் உள்ளுக்குள் இருந்து மேல் பரப்புக்கு வரும். (உள்ளாற போனா வெளியில் வந்து தான ஆகனும்)


இது தொடர்பான செய்தி;
http://edition.cnn.com/2009/TECH/science/12/18/volcano.underwater.explosion.pacific/
http://news.bbc.co.uk/2/hi/science/nature/8419736.stm

குறிப்பு :- வழக்கம் போல் இது நான் எழுதும் தாமதமான சூடான செய்தி.
.
.

செவ்வாய், டிசம்பர் 01, 2009

கூம்பு நோம்பி வாழ்த்து

கூம்பு நோம்பி என்பது கார்த்திகை ஒளித் திருவிழாவைக் குறிக்கும் அதாங்க கார்த்திகை தீபம். கொங்கு நாட்டில் விழாவை நோம்பி என்று தான் அழைப்பார்கள். அன்று தெருக்களில் கோலம் போட்டு வீடுகளை அகல் விளக்கால் அலங்காரம் செய்வார்கள். அன்று ஆடம்பரம் ஏதும் இருக்காது. ஆனால் விழாக் களை இருக்கும். காசு இருந்தா தான் இதை கொண்டாட முடியும் என்றில்லை, இது அனைவராலும் கொண்டாடப்படக்கூடியது. குறிப்பா தீபாவளிக்கு செலவழிக்கும் எந்த செலவும் இதுக்கு கிடையாது. எனக்கு தெரிந்து வாழ்த்தெல்லாம் இதுக்கு சொல்லி கேட்டதில்லை. அப்புறம் ஏண்டா வாழ்த்து இடுகைன்னு கேக்கறீங்களா? இஃகி இஃகி நானும் இடுகை போடனும்முல்ல. தீபாவளிக்கு இணையானது இது. சொல்லப்போனா தமிழர்கள் கொண்டாடும் ஒளி விழா இது தான்.

எங்கள் ஊரில்:-

விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.

கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.

சைவ நெறி - வைணவ நெறி

தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.

தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.

நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...

கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.