நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக இருந்தால் அவரது நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் இந்தியாவில் இம்மரபு ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை.
தந்தை நரிமன் - வழக்குரைநர் |
மகன் நரிமன் - நீதிபதி |
1961 வரை பலமுறை வழக்குரைஞர்கள் அவர்கள் உறவினர்களின் நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார்கள். 1961இல் இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் கிடைத்தது. இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதி எண் 6ன் கீழ் நீதிபதியின் உறவினர்கள் யாரெல்லாம் வாதடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி நீதிபதியின் மகன், மகள், மருமகள், மருமகன், சம்பந்தி, சகோதர சகோதரிகள், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, அத்தா, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குழந்தைகள் மற்ற நெருக்கமான உறவினர்கள் வழக்குரைஞராக அந்நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது. எனினும் இதிலும் குறை இருந்தது. நீதிபதி பணியாற்றும் நீதிமன்றத்திலேயே (நீதிமன்ற வளாகம்?) வாதாடக்கூடாதா? (அவர் அங்கு இருக்கும் வரை) அந்நீதிபதியின் கீழ் வரும் வழக்குளுக்கு வாதாட கூடாதா? என்ற தெளிவு இல்லை. (வழக்குரைஞர்களுக்கு சட்டத்தின் ஓட்டையை கொடுக்கலாமா?)
1980களின் தொடக்கத்தில் கருநாடக உயர் நீதிமன்றம் இவ்விதியை பற்றி விளக்கமளித்தது. அச்சமயத்தில் கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி நசர்கி மனைவியை இழந்திருந்தார். அவரை பெண் வழக்கரைஞர் பிரமிளா நசர்கி மணமுடித்தார். அச்சமயம் பிரமிளா மூத்த வழக்குரைஞர் அல்ல எனவே அவர் பெயர் வழக்காடும் அனுமதி பெற்றதாக அவர் வாதாடும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இதை கவனித்த நீதிபதி அவர் வாதாடும் வழக்குக்குக்கு அவரை வழக்காடும் அனுமதி பெறும் படி கூறினார். அடுத்த நாள் அவர் பெயர் வழக்காடும் அனுமதி பட்டியலில் இருந்தது. ஆனால் அவர் வாதாடும் வழக்கின் நீதிபதி அவரை அனுமதிக்க மறுத்து விட்டார்.
அவர் இந்திய வழக்குரைஞர் மன்றம் உருவாக்கிய விதியின் படி நீதிபதியின் எந்த உறவினரும் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றக்கூடாது என்றார். ஆனால் நீதிமன்றம் என்றது மொத்த கருநாடக உயர் நீதிமன்றத்தையும் (உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்றங்கள் இருக்கும் - வளாகம்) என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. இது தான் முன்னமே தெரியுமே அப்படிங்கிறிங்களா? அதுவும் சரிதான்.
இப்பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி அறிவிப்பை இந்திய வழக்குரைஞர் மன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது. ஆனால் இப்பிரச்சனையில் தொடர்புடைய பிரமிளா மூத்த வழக்குரைஞராக மாறிவிட்டதாலும் அவரின் நீதிபதி கணவர் ஓய்வு பெற்றுவிட்டதாலும் இப்பிரச்சனை முடிவு எடுக்கப்படமாலே முடிந்தது (நீதியின் வேகத்தால் இஃகி இஃகி). ஆனாலும் இவ்விதியை சரியாக விளங்கிக்கொள்வதில் \ விளக்குவதில் நீதிமன்றங்களால் இன்னும் சரியான முடிவு எடுக்கமுடியவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருட்டிண ஐயர் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் வழக்குரைஞர் மகன் கிருட்டிணமூர்த்தி வேறு மாநிலத்துக்கு சென்று வழக்குரைஞர் தொழிலை செய்தார். 1970களில் இன்னொரு விவரமான வேலையை சில வழக்குரைஞர்கள் செய்தார்கள். பிணை வழங்குவதில் கண்டிப்பான அவர்களின் நீதிபதி மாமனாருக்கு செல்லும் பிணை மனுக்களில் இவர்களும் தோன்றுவதாக கையெழுத்து இடுவார்கள் அதனால் அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டுவிடும். அப்புறம் என்ன...
உச்ச நீதிமன்ற நீதிபதியாக கிருட்டிண ஐயர் பதவியேற்றதும் அவரின் வழக்குரைஞர் மகன் இந்தியாவின் எந்த நீதிமன்றங்களிலும் பணியாற்றுவதில்லை என்று முடிவெடுத்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சிவராமன் நாயரின் மகளும் மருமகளும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்ற தொடங்கியதும் சிவராமன் நாயர் குடியரசு தலைவரிடம் கேட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி சென்றார்.
இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் தன் வரலாறு கூறும் நூலில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்குள்ள வழக்குரைஞர்கள் சிவப்புக் கொடி என்ற முறையை கையாண்டதை குறிப்பிடுகிறார்.
மகன், தந்தையின் நீதிமன்றத்தில்\அமர்வில் வழக்காட முடியாது என்பதால் சிலர் அவரின் நீதிமன்றத்துக்கு\அமர்வுக்கு தங்களுடைய வழக்கு செல்லக்கூடாது என்று கருதும் போது மகனிடம் வழக்கின் விபரங்களை கூறி வழக்கு அவரின் தந்தையிடம் செல்லாமல் தடுத்துவிடுவார்கள். இம்முறையானது சிவப்பு கொடி என்று அழைக்கப்பட்டது. இவ்வகையில் சட்டத்தின் விதியை முறையற்ற முறையில் கையாள்வது இங்கு அதிகம் காணப்பட்டது. சில இளம் வழக்குரைஞர்கள் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள். சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதியின் மகன்களுக்கு ஆதராவாக இருந்ததாகவும் கேள்வியுற்றேன் என்றும் லீலா சேத் கூறுகிறார். இம்முறையிலும் சிவப்பு கொடி முறை வளர்ந்தது.
1981இல் குப்தா வழக்கில் நீதிபதிகளை இடமாற்றும் போது அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் அவரின் உறவினர் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் உறவினர் நீதிபதிக்கு மற்ற நீதிபதிகளைவிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நிலை உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓர் கருத்தரங்கில் கூறிய அறிவுரையை பின்பற்றுவது என்று முடிவாகியது. அக்கருத்தரங்கில் அவர் மாறுதலாகும் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி அவரின் உறவினர் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் போது மற்றவர்களை விட தனக்கு அதிக வாய்ப்புகள் வரலாம் என்பதாலும் அது முறையற்றது என்பதாலும் அவ் வாய்ப்பை பயன்படுத்த கூடாது என்று நீதியை காக்கும் பொருட்டு வேறு மாநில நீதிமன்றத்துக்கு சென்றுவிட வேண்டும் என்றார்.
1997இல் அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் "சட்டவாழ்வின் மதிப்புகள்" என்ற தீர்மானத்தை கடைபிடிப்பதாக உறுதியேற்றார்கள். அத்தீர்மானம் நீதிபதியின் உறவினர் நீதிபதியின் நீதிமன்றத்தில் வாதாடுவதை தடுப்பது என்றும் நீதிபதியின் வீட்டில் தங்கி அவரின் உறவினர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய நீதிபதி அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.
மார்கண்டேய கட்சு சில நீதிபதிகளின் உறவினர்கள் அதே நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார்கள் என்றும் சில ஆண்டுகளிலேயே அவர்களின் உறவினர் வழக்குரைஞர்கள் பெரும் செல்வந்தர்களாகி விடுவதையும், விலையுயர்ந்த மகிழுந்து & வீடு என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் குறிப்பிட்டார்.
லோதா - முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி |
தற்போது நரி தன் மகன் நீதிபதியாக உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார். நீதியின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை கெடுவதற்குள் வழக்குரைஞர் மன்றம் இது தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதுய கட்டுரை ஆங்கிலத்தில் இருந்தது. நான் தமிழாக்கம். கட்டுரையை படித்தபோது சில இடங்கள் புரியவில்லை. அச்சுக்கு தகுந்த மாதிரி வெட்டி நாம புரிஞ்சிக்காம செய்துவிட்டார்கள் என்று தைரியமாக கூறலாம். சில இடங்களில் என் கருத்தை சேர்த்துள்ளேன் நான் என்ன தொழில் முறை மொழிபெயர்ப்பாளரா? ஆனால் அவரின் கருத்தில் இருந்து மாறவில்லை என்றே எண்ணுகிறேன்.
இக்கட்டுரையை படித்தால் வழக்குரைநர் தொழிலிலும் அறத்தை கடைபிடித்தவர்கள் இருந்ததை காணலாம்.
நரிமன் நிறைய பணம் சேர்த்துள்ளவர் இன்னும் ஏன்? இவரின் செயல் சட்டப்படி சரியென்றாலும் அறமில்லையே? செயலலிதாவுக்கு வேறு திறமையான வழக்குரைநர்கள் கிடைக்கமாட்டார்களா? உச்ச நீதி மன்றத்தில் வேறு திறமையான வழக்குரைஞர்கள் இல்லையா? நடுவண் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக இருந்த இவர் தவறான முன்னுதாரணம் ஆனது நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் செயல் அன்றி வேறு என்ன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த லோதா ஒரு உறுதியான முடிவை அப்போது எடுத்து இச்சிக்கலுக்கு தீர்வுகண்டிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக