வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

மு. கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல

கருணாநிதி முத்தமிழ் அறிஞர் அல்ல. அவர் தமிழறிஞர் மட்டுமே.  தற்போதைய வெற்று அரசியலுக்காக திமுகவினர் அப்படிக்கூறுவது அவருக்கு பெருமை சேர்க்காது மாறாக இழுக்கைத் தரும்.

திமுக தொண்டர்கள்  அல்லாத பலரும்  இந்த கோயபல்சு பரப்புரைக்கு இரையாகி கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்கிறார்கள். 

இயற்றமிழ், நாடகத்தமிழ், இசைத்தமிழ் ஆகிய மூன்று தமிழ்களிலும் அறிஞராக உள்ளவரையே முத்தமிழ் அறிஞர் என்போம். அந்த வகையில் வெகு சிலர் தான் இருப்பர் இப்போது எவர் உளர் என அறியேன்.  இயற்தமிழில் அதிகமாகவும் அதைவிடக் குறைவாக  இசைத்தமிழிலும் அதைவிடக் குறைவாக நாடகத்தமிழிலும் இருப்பார்கள். 

முத்தமிழும் அறிந்திருப்பது வேறு முத்தமிழிலும் அறிஞராய் விளங்குவது என்பது வேறு, இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் சிக்கலில்லை.  காட்டாக வான்கோழியை மயில் என்று திரும்ப திரும்ப கூறினாலும் அது மயில் ஆகாது என்பதை அறிக. 



திரைப்படத்தை  விட நாடகம் சிறப்புடையது என்றாலும் நாடகங்கள் குறைந்து திரைப்படம் அதிகமாகிவிட்ட படியால் இக்காலத்தில் திரைப்படத்தையும் நாடகத்தமிழில் சேர்க்கலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு மாறுபட்ட  கருத்து இருக்கலாம். ஆனால் திரைப்படமானாலும் நாடகமானாலும் நாடகத்தமிழுக்கான இலக்கணம்  ஒன்று தான் அது இன்னும் மாறவில்லை.

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் அடிகளாசிரியர் முத்தமிழின் இலக்கணத்தை பாட்டாகவே வடித்து தந்துள்ளார். 

ஆசிரியம் முதலா நான்கு பாவினுள்
அறமுதற் பொருளை அமையப் பாவி
மோனை முதலாம் தொடையழகு தோன்ற
அணிபெறப் பாடுதல் இயற்றமிழ் ஆகும்

பாவினம் என்றும் பண்ணத்தி என்றும்
செந்துறை என்றும் செப்பும் பாட்டில்
அறமுதற் பொருளை அமையப் பொருத்திப்
பண்களை அமைத்துப் பாடுதல் தானே
இசைத்தமிழ் என்னும் இன்தமிழ் ஆகும்

நடித்தலுக் கேற்ற வெண்துறைப் பாட்டில்
அறமுத லாகிய பொருள்வகை அமைவரப்
பாடி ஆடுதல் நாடகத் தமிழாம்

பாடி ஆடி நடிப்பது தான் நாடகத் தமிழ்  வரையறைக்குள் வரும் என்று  தெளிவாக  குறிபிடப்பட்டுள்ளது.  

தமிழில் பா எழுதுபவர்கள் எல்லாம் தமிழறிஞர்கள் அல்ல, இசை கோர்ப்பவர்கள் எல்லாம் இசை அறிஞர்கள் அல்ல, பாடி ஆடுபவர்கள் எல்லாம் நாடக அறிஞர்கள் அல்ல.

இதனால் நாடகத்திற்கோ திரைப்படத்திற்கோ கதை, திரைக்கதை , வசனம் மட்டும் எழுதுபவர்களையோ இயக்குபவர்களையோ, பாட்டெழுதுபவர்களையோ இசை கோர்ப்பவர்களையோ அதில் சேர்க்க முடியாது இவை இயற்றமிழிலும் இசைத்தமிழிலும் மட்டுமே  சேரும் என்பதை அறியலாம். இதனால் கருணாநிதி நாடகத் தமிழ் அறிஞர் இல்லை என்பதையும் முத்தமிழ் அறிஞர் என்பது தவறு என்பதையும் அறியலாம்.

கருணாநிதி தமிழில் புலமை மிக்கவர். சில காரணங்களால் அவர் தமிழறிஞர் அல்ல என்றும் சிலர் அவர் மறைந்த 5 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே வாதிடுகிறார்கள். சிலர் இப்படி வாதிடுவார்கள் என்பதை முன்கூட்டி  அறிந்ததாலும், பின் வரும் காலங்களில் தமிழ் அறிஞர்கள் எவரும், தான் தமிழறிஞர் என்பதை மறுகக்கூடாது என்பதாலுமே இவர் முன்பே சங்கத்தமிழ் எழுதி இருந்தாலும் கூடுதலாக  குறலோவியம், தொல்காப்பியப் பூங்காவை முன்னெச்சரிக்கையாக இயற்றினார் எனக் கருதலாம். தொல்காப்பியப் பூங்கா நூலை நான் படித்ததில்லை தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது எளிய செயல் அல்ல என்பதால் அதையே நான் கருணாநிதியை தமிழறிஞர் என்று நிருபிக்கும் சிறந்த படைப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஆனால் எழுதியபோது பலர் தொல்காப்பிய பூங்கா நூல் எழுதும் முயற்சியை வியந்து கூறியதை கேட்டதுடன் சரி , அதன்பின் தமிழறிஞர்கள் மட்டுமல்ல திமுகவினர் உட்பட எவரும் அந்த நூலைப்பற்றி பேசிக்கேட்டதில்லை.


புதன், ஏப்ரல் 13, 2016

2016 தேர்தல் காலம் என் பார்வை



தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது.  கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?

                                                               --**--

நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
                     
                                                               --**--

5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு  ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.


                                                                  --**--

சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .

இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

                                                                   --**--

அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக  புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே.  பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்  யாரு விசாரிச்சு பாருங்க.


மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக  இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.


தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும்  மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.

                                                                   --**--

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.

தேமுதிக + மநகூ+தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு என் அடுத்த பார்வை வரும் எப்படியும் தேர்தல் முடியும் முன் ஒரு இடுகையை போடலாமுன்னு  திட்டம் வைத்துள்ளேன்.


ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

கருணாநிதிக்கு எதிராக கேரளாவில் ராகுல் பேச்சு.

87 வயதாகிவிட்டவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு 87 வயதாகியது அனைவருக்கும் தெரியும், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் செல்வதும் அனைவரும் அறிந்தது. திமுக கூட்டணி வெற்றிபெற்றால் அடுத்த முதல்வர் 87 வயதான சக்கர நாற்காலியில் செல்லும் கருணாநிதிதான் என்பதை அவர்களே அறிவித்துள்ளார்கள்.

சக்கர நாற்காலி தள்ளுபவர் என்ற ஒரே தகுதியின் கீழ்  சக்கர நாற்காலி தள்ளுபவருக்கு முறைகேடாக அரசின் நிலம் ஒதுக்கப்பட்டதை சவுக்கு அல்லது உண்மைத்தமிழனின் வலைப்பதிவை படித்தவர்கள் நன்கு அறிவர்.

ஆனால் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் பிரதமராவார் என கருதப்படும் ராகுல் 87 வயதானவர் மீண்டும் முதல்வராக கூடாது என்று கேரளாவில் பேசியுள்ளது தமிழ தேர்தல் களத்தை பரபரபாக்கியுள்ளது. (ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ?)

மண்ணு மோகன் சிங்கிற்கு வயதாகிவிட்டது என்பதால் தான் அடுத்த முறை காங்கிரசு வெற்றி பெற்றால் அவரை பிரதமராக்குவதில்லை என ராகுலின் அம்மா முடிவெடுத்துள்ளார். மண்ணே கடைசி வரை பிரதமரா இருந்தா அப்புறம் எப்ப பையன் பிரதமராவது?

தினமணி செய்தி

பைனான்சியல் டைம்ஸ் செய்தி

ஓமன் டிரைபுன் செய்தி


அவர் கேரள முதல்வரின் வயதை கூறுவது போல் தமிழக முதல்வருக்கு செய்தி சொன்னதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரின் பேச்சை கேள்விப்பட்ட கருணாநிதி கடும் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் தமிழகம் வந்தால் கருணாநிதியை பார்ப்பது இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அவருக்கு கருணாநிதியை பிடிக்காது என்பது காங்கிரசு மற்றும் திமுக காரர்கள் அறிந்ததே.


ராகுல் இவ்வாறு பேசியுள்ளதால் காங்கிரசு காரர்கள் திமுக வெற்றிக்கு உழைப்பார்களா என்று கேள்விக்குறியே.. தகிடு தத்தங்கள் மூலம் (சிவகங்கை சின்னபையன் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்) திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு காங்கிரசு ஆதரவளிக்குமா என்பது கேள்விக்குறியே.

வியாழன், மே 21, 2009

சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்

மத்திய அரசுக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியது பல திமுக எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நாளை என்ன திருப்பம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அறிந்தும் அவர்கள் அற்ப மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.

இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.

சனி, மே 09, 2009

யாருக்கு வாக்கு செலுத்துவது? திமுகவுக்கு மறந்தும் வேண்டாம்

ஈழ தமிழர் விதயம் காரணமாக யாருக்கு வாக்கு போடுவது என்று நமக்கு குழப்பம். இதில் குழப்பமே வேண்டாம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்தாதீர்கள்.

திமுக கூட்டணி தோற்க வேண்டும் அப்போது தான் இனி வரும் இந்திய அரசு தமிழருக்கு துரோகம் செய்யாது. குறிப்பாக காங்கிரசு படுதோல்வி அடைய வேண்டும். அப்போதான் அதனுடன் சேர்ந்து தமிழர்களை அழித்த திமுகவுக்கும் பாடம் வரும்.

சில திமுக உடன்பிறப்புகளுக்கு இது கடினமான செயல் தான். அவர்கள் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' போன்ற அழகிய சொல்லாடலுக்கு மயங்கி நிற்பவர்கள். மயக்கம் தெளிஞ்சா எல்லாருக்கும் நல்லது. மயக்கம் தெளிய கூடாது என்று தான் முழு அடைப்பு அன்று டாஸ்மார்க் திறந்திருந்தது, சன், கலைஞரில் சிறப்பு படம் போட்டார்கள். புரிஞ்சுக்குங்கப்பா...

அதிமுகவுக்கு வாக்கு செலுத்துங்க. அதிமுக பிடிக்கலையா தேமுதிகவுக்கு வாக்கு செலுத்துங்க, அதுவும் பிடிக்கலையா உங்க தொகுதியில் நிற்கும் வேற கட்சிக்கு அல்லது சுயேச்சைக்கு வாக்கு செலுத்துங்க. மறந்தும் உதயசூரியனுக்கோ, கைக்கோ வாக்கு செலுத்தாதிங்க.

கருணாநிதியை விட செயலலிதா எவ்வளவோ மேல்...
முதல் நாள் பிரபாகரன் நண்பன் என்று பேட்டி கொடுக்க வேண்டியது அடுத்த நாள் நான் அப்படி சொல்லவேயில்லை என்பது.

எனக்கு தெரிந்து கருணாநிதி என்றும் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என்று ஆணித்தரமாக சொன்னதில்லை. என்றுமே இவரு வழவழா கொழகொழா தான்.
செயலலிதா இத்தேர்தலில் அப்படி சொல்லி உள்ளார். அப்படி சொன்னதற்காக அவரை பாராட்டவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி, மத்தியில் பல அமைச்சர்கள் மேலும் அங்கு இவருக்கு பெரும் செல்வாக்கு. எல்லாம் இருந்தும் ஈழ மக்களை காக்க ஒன்றும் செய்யவில்லை... அப்புறம் எதற்கு திமுகவிற்கு வாக்கு செலுத்தவேண்டும்?

வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

வியாழன், ஏப்ரல் 23, 2009

முழு அடைப்பின் போது டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி

ஆளும் திமுக சார்பில் ஈழ மக்கள் சிக்கல் தீர்வதற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வெற்றிகரமாக அமைதியாக நடந்தது என்பதை முழு அடைப்புக்கு முழு ஆதரவு கொடுத்த உங்களுக்கு தெரியும். ஈழ மக்களுக்காக திமுக நடத்திய முழு அடைப்பு பிடிக்காதவர்கள் பல்வேறு குறைகளை கூறுகின்றனர். பதிவுலகிலும் அப்படிதான் உள்ளது. குறை கூறி பல இடுகைகள்.

அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகள் ஏன் திறந்திருந்தன என்பதே அவர்களில் பெரும்பான்மையோர் கேட்கும் கேள்வி.

அஞ்சா நெஞ்சனை பெற்ற அருந்தவச் செல்வரும், வாழும் வள்ளல் ரித்திசை வேட்பாளராக்கி வள்ளலுக்கெல்லாம் வள்ளலானவரும், மக்கள் நலனுக்காக யார் காலையும் பிடிக்க தயங்காதவரும் அதன் காரணமாக அன்னை சோனியாவின் காலை கையை பிடித்து கெஞ்சியவரும், அண்ணா & பெரியார் கொள்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் சுயமரியாதைச்சிங்கமான தானைத்தலைவர் தன்மானச்சிங்கம் தமிழினக்காவலர் கலைஞர் அவர்கள் சார்பாக நான் பதில்களை சொல்கிறேன்.

1. திமுக என்ற கட்சி தான் முழு அடைப்பு நடத்தியதே தவிர அரசு அல்ல.

2. இந்த அரசு குடிமகன்கள் நலனில் அக்கரை உள்ள அரசு.

3. குடிமகன்கள் முழுஅடைப்பின் போது தகராறு செய்திருந்தால் இந்த அரசை கலைக்க வேண்டும் இதே குள்ள நரிகள் பேசியிருக்கும். இப்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பை இந்தஅரசு கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் என்னனமோ பேசுகிறார்கள்.

4. அன்று மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி. இந்த 10,000 கோடி இந்த அரசுக்கு கிடைக்கக்கூடாது அதன் மூலம் இது பல மக்கள் நல செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற வஞ்சகர்களின் எண்ணம் பலிக்காததால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்களைப் பற்றி தமிழினம் நன்கு அறியும்.

5. ஈழ மக்கள் சிக்கல் தீரவேண்டும் என்று முழுஅடைப்பு, பேரணி நடத்தியது இந்த அரசுதான். கலைஞரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். பல இலட்சம் தந்திகளை உடன்பிறப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இதை எதிர்கட்சிகளால் மறுக்க முடியுமா?

6. கலைஞரின் சொல்வன்மைக்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் அவர் உளருகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார், பல்டி அடிக்கிறார் என்கிறார்கள்.

தமிழக மக்களே மறக்காமல் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் சார்பு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.

புதன், பிப்ரவரி 04, 2009

திமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்

தினமணியில் வந்த இந்த கார்ட்டூனை நீங்களும் இரசியுங்கள்.

திமுகாவின் ஐம்பெரும் தலைவர்கள்.



வட நாடு - தென் நாடு பாகப்பிரிவினை



திமுகாவுக்கு தொல்லை மா ;-)


வெள்ளி, ஜனவரி 30, 2009

போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்

சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில்,

இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன் செவி சாய்க்கவில்லை?.

இதனால் இலங்கை அரசு தாங்கள் தமிழர்களை காக்க முயன்றதாகவும் ஆனால், புலிகள் அதை தடுத்து விட்டதாகவும் கூறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசின் தற்காலிக போர்நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது வியப்பளிக்கிறது.

புலிகளின் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி ஏராளமான மக்கள் அங்கு அடைக்கலம் தேடி சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக போரில் அவர்கள் பலியாகி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கான முதல் முயற்சி தான் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம். தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி ஏற்பட இதுபோல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.

போர் நடைபெறுவதை நம்மிடம் தெரிவிக்கக் கூட இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இது தொடர்பாக அவர்களிடம் நாம் முறையிட்டால் தீவிரவாத விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகத் தான் போர் நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார் அன்பழகன்.


திமுக ஈழதமிழர்களுக்கு உதவும் என இனியும் நம்புகிறீர்களா? அவர்களுக்கு ஆட்சி தான் தேவை. இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் வேற மாதிரி அறிக்கை விட்டிருப்பார்கள்.

சனி, மே 12, 2007

1 2 3 - கொடுமை

ஒரு கருத்துக்கணிப்பு, இரண்டு வாரிசு, மூன்று கொலை என்று இந்தியன் எக்ஸ்பிரசில் பொருத்தமாக தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.

கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.

கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?

இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.