வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, நவம்பர் 26, 2006

விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு.

விவசாயிகளுக்கு எதிராக இருப்பதென்று தமிழக அரசு கங்கனம் கட்டி கொண்டுள்ளது போல் தெரிகிறது. நல்ல விளைச்சல் தரும் பாசன வசதியுடைய விவசாய நிலங்களை பறித்து துணை நகரம் அமைப்பேன் என்பது, கரும்புக்கு ஆதார விலையை குறைப்பது என்று திமுக அரசு முடிவெடுத்திருப்பது விவசாயிகளின் நலனின் மேல் இந்த அரசுக்கு உள்ள அக்கரையை காட்டுகிறது.

கரும்புக்கு ஆதார விலையை தமிழ அரசு ஒரு டன்னுக்கு 200 ரூபாய் குறைத்துள்ளது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் கரும்பின் ஆதார விலையை உயர்த்துகிறேன் என்று தான் எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும். யார் ஆட்சிக்கு வந்தாலும் உயர்த்தமாட்டார்கள், விவசாயிகள் கடுமையாக போராடினால் தேர்தல் வருவதாக இருந்தால் வாக்கு அறுவடை செய்ய ஆதார விலையை கொஞ்சம் உயர்த்தி விவசாயிகளின் மேல் அக்கரையுள்ளதாக காட்டிக்கொள்வார்கள்.

இந்த முறை நிலைமை இன்னும் மோசம், இருக்கும் ஆதார விலையை குறைத்துள்ளார்கள். தற்போது 1014 ரூபாயாக இருப்பதை 802 ரூபாயாக சத்தமில்லாமல் கமுக்கமாக குறைத்துள்ளார்கள். கரும்பு வெட்டு கூலி டன்னுக்கு 200 ல் இருந்து 300 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்காகவா இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? எப்பப்பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் விவசாயி தலையிலேயே ஏன்யா கை வைக்கிறீங்க. "உழுதவன் கணக்கு பார்த்தா ஒரு ஆலாக்கு கூட மிஞ்சாது" என்பது விவசாயியின் நிலை அறிந்தோருக்கு தெரியுமே.

இதுல வேற நம்ம முதல்வர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அப்பப்ப கூறிக்கொள்வார், இப்ப நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அவர் கம்யூனிஸ்ட் அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகாரர் மாதிரி என்று. கம்யூனிஸ்ட் வேற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வேற என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் பெரும்போராட்டம் நடத்தினால் தான் உண்டு அல்லது மருத்துவர் இராமதாசு அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை விடவேண்டும். ஜெயலலிதா விலை குறைப்பை குறித்து கண்டன அறிக்கை விட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கலைஞர் குடும்பத்து ஆட்கள் சர்க்கரை ஆலையில் பெரும்முதலீடு செய்திருந்தால் கரும்பின் ஆதார விலை அதிகரிப்பு என்பது இந்த ஆட்சியில் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். சிமெண்ட் கதை தான் நமக்கு தெரியுமே.

"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது இப்போ "ஊருக்கு(அரசுக்கு) இளைச்சவன் விவசாயி" என்று மாறிவிட்டது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
.

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

வள்ளுவன் வாக்கு பொய்யா? தெரியாது, ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞருக்கு நன்றாக தெரியும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கருணாநிதியின் திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பதை திமுக ஆதரவாளர்கள் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி.

Machi சொன்னது…

அனானி ஜெயலலிதா தவறான தகவலை வெளியிட்டுள்ளார், அதை மறுத்து வீரபாண்டி ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார். அவரின் அதை விளக்கத்தை அடுத்த பதிவாக போடவுள்ளேன்.

பொதுவாக விவசாயிகளுக்கு ஆட்சியாளர்களால் இன்னல் ஏற்படும், இப்போதும் அது போலவே நடந்திருக்கும் என்று எண்ணி பதிவிட்டேன். நல்லது நடந்தா சரி தான்.