உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டது. ஆனா இத்தேர்தலில் புழங்கிய பணம் என்னை மலைக்க வைத்து விட்டது. சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் புழங்கப்பட்டதை விட பல மடங்கு பணம் இத்தேர்தலில் புழங்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு 100 ரூபாய் என்பது போய் சில இடங்களில் 1000, 1500 ரூபாயெல்லாம் கொடுத்துள்ளார்கள் ( உங்களால் நம்பமுடிகிறதா? ). இவ்வளவு பணம் செலவு செய்து இவர்கள் பெற போகும் பலன் என்ன என்று தான் எனக்கு தெரியவில்லை.
நகராட்சி வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெற்றி பெற்றால் செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா? அந்த அளவுக்கு உள்ளாச்சிகளில் பணம் புழங்குதா? எனக்கு தெரியவில்லை.
இவர்கள் என்ன தான் பணம் செலவு செய்து வெற்றி பெற்றாலும் பகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் மீண்டும் அடுத்த முறை வெற்றி என்பதை நினைத்து பார்க்க முடியாது. உள்ளாட்சி அமைப்பின் பலமே இது தான்.
இதில் இந்த கட்சி அந்த கட்சி என்று இல்லாமல் எல்லா கட்சியினரும் செலவு செய்துள்ளனர். பணம் வைத்திருந்தவன் அள்ளி வீசி இருக்கிறான்.
எதுக்குடா இவ்வளவு பணம் செலவு செய்யறாங்க என்று ஆய்ந்து பார்த்தால் திமுக தான் சூத்திரதாரி என்பது புரிந்தது. இப்போ நகராட்சி தலைவரை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்குள் இருந்து ஒருவரை தான் தேர்ந்தெடுக்கனும் முன்னாடி நகராட்சி தலைவர் தனியாக வாக்கு பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் (அமெரிக்க குடியரசு தலைவர் மாதிரி). அதனால ஒருவர் நகரவை தலைவராக வேண்டும்மென்றால் அவர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது அவரை ஆதரிக்கக்கூடிய மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும். அதனால் தலைவர் பதவிக்கு குறி வைப்பவர்கள் மற்றவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும். பழைய முறையாக இருந்தால் எப்படியும் இவர் பணம் செலவு செய்ய வேண்டும் இப்ப அந்த பணத்தை வார்டு வேட்பாளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற வைக்க முயல்கிறார்.
ஏன் திமுக இப்புதிய முறையை கொண்டு வந்தார்கள் என்றால் இப்போ அவர்கள் ஆட்சியில் இருப்பதால் சுலபமாக உறுப்பினர்களை வாங்க முடியும் என்பதாலயே. இதுவே அதிமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு இம்முறை மூலம் பெரிய பலன் இருக்கும். எனவே இப்புதிய தேர்தல் முறையை மாநில ஆளுங்கட்சிக்கு தோதான முறை எனக் கூறலாம்.
உள்ளாட்சி முறையை இவ்வாறு அரசியல் கட்சிகள் பந்தாடுவது மக்களுக்கு நல்லதல்ல. அரசியல் சார்பற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதே உள்ளாட்சிகளுக்கு நன்மைபயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக