வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.

நான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை  உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.

இந்த சுட்டியில் 18  நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சி.




எரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.

போலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.

எல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.

பசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.

நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2010

மதம் நம்மை ஒன்றுபடுத்துகிறதா?

இந்து

யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.

இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.

இசுலாம்

இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.

கிருத்துவம்

உரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.

ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்....  ....

இன்னும் ஏகப்பட்டது இருக்கு.


பௌத்தம்

ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று  பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம். 

தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம். 

நாத்திகம்

நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.

திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.





எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த  பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.


தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?

நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்



.
.

வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சமூக சேவை அமைப்புகள்

நம்ம நாட்டுல உண்மையா சேவை புரியும் பல சேவை அமைப்புகள் இருக்குது.
நான் இருக்குற இரண்டு அமைப்புகளை பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கேன். இவை இரண்டும் இங்குள்ள தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

எயிம்ஸ் இந்தியா - aimsindia.net 

வாசிங்டன் பகுதியில் வசித்த சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கிய பலர் அமெரிக்க வாழ்க்கை போதும் என்று  இப்ப இந்தியாவில்  வசிக்கிறாங்க.

மக்களை ஒன்று சேர்ப்போம் (மொழி பெயர்ப்பு சரியா?) (Bringing People Together) என்பது இந்த அமைப்பின் சூளுரை. இவங்க தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்கள். பலதரப்பட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு உதவுதல் (கழிப்பறை கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பற்றாக்குறையாக உள்ள ஆசியரை நியமிப்பது (சம்பளமும் இவங்கதான்), மேசைகள் தருவது போன்றவை), கிராமபுறத்தில் மருத்துவமனை கட்டுவது, ஏரியை தூர் எடுப்பது, கிராமபுற பெண்களுக்கு வருமானம் வருவதற்கு உதவுவது, சுனாமி விழிப்புணர்வு மற்றும் நலம் பற்றி மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சொல்வது, கிராமபுற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது என்பது சில. இதுவல்லாமல் இவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வலைதளத்தில் விரிவாக அவற்றை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வாசிங்டன் பகுதியில் நிருவாக குழு கூடி அன்றைய மாதம் நடந்த திட்டங்களையும், நிதி நிலை அறிக்கையையும் அதை பொருத்து அடுத்து எந்த திட்டத்தை ஏற்பது என்பது பற்றியும் முடிவெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடுவது, நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடத்துவது என்று நிதி சேகரித்தார்கள். அதில் வேலை அதிகம், தன்னார்வலர்கள் அதிகம் ஆனால் நிதி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மாரத்தான் ஓட்டத்திற்கு மாறினார்கள். இதுவே இவர்களின் தற்போதய முதன்மையான நிதி வருமானம் ஆகும். அதாவது நீங்கள் இந்த அமைப்பு சார்பாக ஓடுகின்றீர்கள் என்றால் இவ்வளவு பணம் புரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதற்கு அவர்களும் உதவுவார்கள். காசு கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டுவிட மாட்டார்கள். மாரத்தான் ஓட ஆசை, அதே சமயம் சமூக அமைப்புக்கும் பணம் கொடுக்க விருப்பம் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு அல்லவா? மாரத்தான் ஓட பயிற்சியும் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட இடத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி நடைபெறும்.மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை இந்த பயிற்சி இருக்கும். அக்டோபர் மாத கடைசியில் வாசிங்டன் பகுதியில் பெரிய அளவில் நடைபெறும் மெரைன் கார்ப் மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். முழு மாரத்தான் ஓட முடியாதவங்க பால்டிமோர் பகுதியில் நடைபெறும் அரை மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். ஓடறது தான தேவை.

எந்த திட்டத்துக்கும் இவர்கள் முழு பணமும் தருவதில்லை. குறைந்தது 30% உள்ளூர் மக்களின் பணம், பற்றாக்குறைக்கு இவங்க உதவுவாங்க. இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை பாருங்க. நீங்க சமூக சேவை செய்துகொண்டிருந்தால் பணம் போதவில்லை என்றால் இந்த அமைப்பை அணுகலாம். 

இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வரிவிலக்கு பெற்றது. எனவே இந்த அமைப்புக்கு நன்கொடை அளித்தால் அதற்கு வரி விலக்கு பெற முடியும்.



 இந்தியா டீம் - indiateam.org 


இந்த அமைப்பு கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு உதவுவது தான் இவர்களின் குறிக்கோள். பல குழுக்கள் உள்ளன. மாதம் பத்து டாலர் போடனும், மாதாமாதம் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 500 டாலர் கொடுக்கப்படும் அந்த பணத்தை கொண்டு அவர் தான் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு அதை செலவு செய்யலாம். இது அவர் பணம். முதல் மாதமே அவருக்கு பணம் கிடைத்தாலும் $490ஐயும் அவர் கொடுத்தாக வேண்டும். மாதம் $10 கொடுப்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்பதே தெரியாது. 

நான் வேலை செய்யும் நிறுவனம் சமூக சேவைக்கு பணம் கொடுக்குது, பல நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் $1 போட்டா $1ஐ அவர்கள் கொடுப்பார்கள் , நான் கொஞ்சம் பணத்தை போட்டு செலவழிக்கலாம் (சமூக சேவைக்கு தான்) என்று இருக்கிறேன் அதற்கு ஏதாவது வழி உண்டா? அதற்காக FSA என்ற கணக்கு இருக்கிறது. இதில் நீங்கள் விருப்பப்படும் தொகையை போடலாம். அது உங்க கணக்கு, வேற யாரும் உங்க பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாது. நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்தவருக்கு பணம் கொடுக்கலாம். முதலில் நீங்க உங்க கை காச போட்டு செலவழிக்கனும் பின் எல்லா ரசீதுகளையும் கொடுத்து பணத்தை திரும்பபெறலாம்.  அமெரிக்க மக்களே உங்க கை காச போட்டு பள்ளிகளுக்கு செலவு செய்யனும் என்று நினைத்தால் டீமில் FSA கணக்கு தொடங்கி செலவழிக்கலாம். உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இது அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்பு.


வியாழன், ஏப்ரல் 15, 2010

விக்கிப்பீடியா போட்டி.

தமிழில் விக்கிப்பீடியா இருப்பது வலைப்பதிவர்கள் அனேகருக்கு தெரியும். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. தமிழ் இணைய மாநாட்டை சார்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளார்கள். கட்டுரை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. இதில் வெளிநாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இத்தகவலை சொல்லி அவர்களை போட்டியில் கலந்துக்க சொல்லுங்க. மேலும் விபரங்களுக்கு விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அனுகவும்.



மேல் இருக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு? இப்போதைக்கு மற்றவர்களுக்கு போட்டியெல்லாம் இல்லை.  ஆனா நீங்க உதவலாம். நீங்க தான் உதவமுடியும். தமிழ் விக்கிப்பீடியா என்பது எனக்கோ உங்களுக்கோ உரிமையானது அல்ல. இது நம் அனைவருக்கும் உரிமையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கினால் நீங்களும் அதன் அங்கம். ஏதாவது பிழைகள் தென்பட்டால் நீங்கள் திருத்தலாம். அடுத்தவங்க அதை சரி செய்யட்டும் என காத்திருக்க தேவையில்லை. அங்கு பங்களிக்கும் எல்லோரும் நம்மளைப்போன்றோரே. யார் என்ன மாற்றம் செய்தாலும் அது பதிவாகிவிடும். தவறுதலாக நீக்கிவிட்டால் அதை மீட்டுவிடலாம். கட்டுரையின் வரலாறு என்ற tabல் யார் எப்போ என்ன எழுதினார்கள் என்ற விபரம் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நிறைய பங்களிக்கலாம். ஏன்னா இவங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும்.  நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனா பங்களித்திருக்கமாட்டார்கள். ஏதோ ஓர் சிறு தடை. என்னய்யா அது? அதான் புரியமாட்டிக்குது.

சில பேர் விக்கிப்பீடியாவில் பங்களித்தால் எனக்கு என்ன லாபம் என்று கேட்பார்கள். உங்களுக்கு பொருளாதார அளவில் லாபம் ஏதும்  இருக்காது ஆனால் நீங்க எழுதும் கட்டுரையை படிக்கும் வாசகருக்கு பயன் இருந்தால் அது தான் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி.

நான் எழுதுனது வேற இப்ப இருக்கறது வேற கட்டுரை என்பது விக்கிப்பீடியா கொள்கை பற்றி அறியாததால் எழும் கேள்வி. விக்கிப்பீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் உரிமை கோர முடியாது. அது எல்லோருக்கும் பொதுவானது. அடுத்தவர் எழுதிய கட்டுரையிலும் நீங்கள் திருத்தம் செய்யலாம். மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். இது ஒரு கூட்டுழைப்பு.

வலைப்பதிவில் எழுதும் நடையில் எழுதக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அதற்கான சுட்டிகளை இணைக்கவும். இதை மற்றவர்கள் சரிபார்த்துக்கொள்ள உதவும்.

எழுத்துப்பிழையை திருத்தலாம், தகவல் தவறென்றால் அதை திருத்தலாம், ஆதாரங்களை சேர்க்கலாம், படங்களை இணைக்கலாம், தெரிந்த தகவல்களை சேர்க்கலாம் லாம் லாம் லாம் எவ்வளவோ செய்யலாம்.

வலைப்பதிவில் தலைவர்களை பற்றிய பல இடுகைகளை பார்த்துள்ளேன். அவற்றை நீங்கள் இணையத்திலோ, புத்தகத்திலோ படித்து தான் எழுதியிருப்பீர்கள். நீங்கள் அத்தலைவரை பற்றி விக்கிப்பீடியாவில் ஏன் எழுதக்கூடாது? மேற்கோள்களையும் கொடுத்தால் நீங்கள் எழுதிய கட்டுரையின் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இங்கு எழுதினால் பலரைச் சென்றடையும் அல்லவா?

உங்க ஊரைப்பற்றி மற்றவரை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்.  உங்கள் ஊரைப்பற்றி எழுதலாம். எல்லா ஊர்களைப்பற்றிய தகவல்களும் விக்கிப்பீடியாவில் உண்டு ஆனால் விரிவான தகவல்கள் சில ஊர்களுக்கு தான் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான தலைப்பிலோ அல்லது துறை சார்ந்த கட்டுரைகளோ எழுதலாம். தமிழில் எழுதவேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சிறுக சிறுக தகவல்களை சேர்க்கலாம். தவறில்லை. உங்களிடம் உள்ள சிறு தடையை உடைத்து மடை திறந்த வெள்ளமாக அல்லாவிடினும் வயலுக்கு பாயும் சிறிய வாய்காலாகவாவது அல்லது சென்னை குழாய் தண்ணி அளவாவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள். அது நாம் தமிழ் சமூகத்துக்கு செய்யும் பெரும் உதவி.


.
.

புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு  தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.

ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.  வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும்.  தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை. 

வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில்  ஒன்றாகிய  இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?

சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.

திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான்.  இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க.  இந்த வாய்ப்பை விடுவனா?  எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.

என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை  ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.

என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).

குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.

இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி.  ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்). 

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கோவை - மாநாடு - சாலை

கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.

கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.

நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.

ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.

ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.

வியாழன், ஏப்ரல் 08, 2010

வழக்கறிஞர் நகைச்சுவை

ஒரு விருந்தில் மருத்துவரும் வழக்கறிஞரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்களால் தொடர்ச்சியா தடங்கல் இல்லாமல் பேசமுடியவில்லை. ஏகப்பட்ட பேர் மருத்துவரிடம் தங்கள் உடல் நிலையை, நோயை கூறி இலவச மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் இது மாதிரி நடந்தது, மருத்துவரின் பொறுமை போயிடுச்சி (யாரும் தப்பு சொல்ல முடியாது, மனுசன நிம்மதியா விருந்தில் பேச விடறாங்களா), அவர் வழக்கறிஞரிடம் நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது சட்ட ஆலோசனை கேட்டு வருபவர்களை தடுக்க என்ன செய்யறீங்கன்னார்.

நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் அப்புறம் அவர்களுக்கு அதற்கான கட்டணத்தை கட்ட சொல்லி கட்டண ரசீதை அஞ்சலில் அனுப்பிடுவேன் என்று வழக்கறிஞர் சொன்னதைக்கேட்ட மருத்துவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது தவறு என்பது அவர் கருத்து ஆனாலும் இம்முறையை ஒரு தடவை முயற்சித்து பார்க்க முடிவு செய்தார். குற்ற உணர்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் நேற்றைய விருந்தில் மருத்துவ ஆலோசனை கேட்டவர்களுக்கான கட்டண ரசீதை தயார் படுத்திக்கிட்டு இருந்தார். அப்பவந்த அஞ்சல்காரர் ஒரு உறையை இவர்கிட்ட கொடுத்திட்டு போனார். அது வழக்கறிஞரிடம் இருந்து வந்த கட்டண ரசீது அஞ்சல்.



சோமசுந்தரம் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்துக்கு தொலை பேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். வரவேற்பு அறை பெண் போன வாரம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. அடுத்த நாள் தொலைபேசி என் வழக்கறிஞரிடம் பேச வேண்டும் என்று சோமசுந்தரம் சொன்னார். தொலைபேசியை எடுத்த வரவேற்பு அறை பெண் என்னடா இந்த ஆளோட ஒரே தொல்லையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு மன்னிக்கனும் ஐயா அவர் இறந்துட்டாருன்னு சொன்னேனே மறந்துட்டீங்களான்னு கேட்டாங்க. அதுக்கு சோமசுந்தரம் அவர் இறந்திட்டாருன்னு தெரியுங்க ஆனாலும் அவர் இறந்துட்டாருன்னு அடுத்தவங்க சொல்றத கேக்கறப்ப இனிமையா இருக்குன்னார்


மருத்துவர் ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது தன் பழைய வழக்கறிஞர் நண்பரை சந்தித்தார். இங்க என்ன பண்றங்கீன்னு கேட்டார். நான் ஒரு தண்டாம போன வீட்டை வாங்கினேன் இல்லையா, அது தீ பிடித்து எரிந்து விட்டது. தீ காப்பீட்டு திட்டதில் இருந்து கொஞ்சம் பணம் வந்தது, செலவழிந்து போக மீதமான பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். ஆமா நீங்க  இங்க என்ன பண்றங்கீன்னு மருத்துவரை பார்த்து வழக்கறிஞர் கேட்டார்.  ஆத்தோரமா நிலம் வாங்கி இருந்தேன் இல்லையா, ஆத்துல வெள்ளம் வந்து நிலம் பாதிக்கப்பட்டுச்சு, வெள்ள காப்பீட்டு திட்டத்தில் இருந்து வந்த பணத்தை வச்சுகிட்டு இங்க வந்தேன்னு சொன்னார். அதை கேட்டதும் வழக்கறிஞரின் முகத்தில் வியப்பு, குழப்பம் எல்லாம் தெரிந்தது. மருத்துவரிடம் வெள்ளத்தை எப்படிங்க தொடங்கனிங்கன்னு கேட்டார்.



வழக்கறிஞர் தனக்கு குணப்படுத்த முடியாத கட்டி மூளையில் இருப்பதை அறிந்து கொண்டார். அது பெரிசாகவும் இருந்தது. மூளையை மாற்றுவது தான் ஒரே வழி. என்னென்ன மூளைகள் தங்களிடம் உள்ளது என்பதை மருத்துவர் அவருக்கு காட்டினார். ஒரு சாடியில் ஏவுகணை அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 5000 ரூபாய். ஒரு சாடியில் சாதாரண அறிவியலார் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 8000 ரூபாய். ஒரு சாடியில் வழக்கறிஞர் மூளை இருந்தது. அதன் விலை அவுன்சுக்கு 90,000 ரூபாய்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் இது பகல் கொள்ளை அது எப்படி வழக்கறிஞர் மூளை மட்டும் விலை அதிகமாக இருக்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர் உங்களுக்கு தெரியுமா? ஒரு அவுன்சு எடுக்க எவ்வளவு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டாங்கன்னு கேட்டார்.



பொறியாளர், கணக்கர் மற்றும் வழக்கறிஞரிடம் 2+2 எவ்வளவுன்னு கேட்டாங்க.
பொறியாளர் நான்கு என்று பதில் சொன்னார்.
கணக்கர் 3 அல்லது 4 ஆக இருக்கலாம் என்று சொல்லிட்டு இருங்க எதுக்கும் என்னோட ஸ்பிரட் சீட்ல கேள்விய ஓட்டி பார்க்கறேன்னு சொன்னார்.
வழக்கறிஞர் அது இதுன்னு அலப்பறை பண்ணிட்டு மெதுவான குரலில் எவ்வளவா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறிங்க என்று கேட்டார்.