வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 08, 2016

பண்பாட்டு மாற்றம்

கிராமத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு மாரியம்மன் திருவிழாவுக்கு போயிருந்தேன்.  எட்டு ஊரு மக்களுக்கு அதான் மாரியாயி. மாரியம்மன் திருவிழா தான் அவங்க கொண்டாடும் பெரிய விழா. அதனால நிறைய சொந்தங்களையும் அழைத்திருந்தார்கள். நாடகம் போட்டிருந்தாங்க நாடகத்தில் அத்தை பையனுக்கு பெண் வேடம். நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் அந்த நேரத்திலயும் வீட்டில் பெண்கள் அரட்டை ஓயவில்லை. எப்பவும் இல்லாம இன்று மட்டும் கோம்பை ஆயாவிடம் உள்ள வேறுபாடு தெரிந்தது. தூங்கும் போது மண்டையை கசக்கியும் அது என்னான்னு தெரியலை.

எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை.  மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.

அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.

 கோம்பை ஆயாவுக்கு திருமணமான மூன்று  ஆண்டுகளில் கோம்மை தாத்தாவுக்கு இங்க உள்ள விவசாய வருமானம் போதாம மலேசியாவுக்கு கூப்பிட்டாராம். அங்க எசுட்டேட்டில் தான் வேலை ஆனா வரும்படி அதிகம். கோம்பை தாத்தாவை நேரில் பார்த்ததில்லை நான் பிறக்கும் முன்பே சிவலோக பதவியை  அடைந்துவிட்டார்.

மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.

இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.

கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும்.  சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.

(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)

சனி, நவம்பர் 22, 2014

திருப்பதி பயணம்(ங்கள்)

திருப்பதி வேங்கடவனை பார்க்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை ஆனா பாருங்க அதுக்கு கொடுப்பினை இல்லாமல் இருந்தது. எங்க குடும்பத்தில் வேங்கிய பார்க்க போவனும்னு பேசிக்குவோம். அது பேச்சாவே இருந்தது.

வேங்கடவன் அலங்காரம் இல்லாமல்
அலங்காரம் இல்லாமல் உள்ள வேங்கடவன் திருமலை வேங்கி இல்லைன்னு நினைக்கிறேன். திருமலை வேங்கியின் புகைப்படம் (நிழற்படம்) வெளியில் வந்திருக்கான்னு தெரியலை. அலங்காரத்தோடு உள்ள வேங்கி மற்ற இடத்திலுள்ள வேங்கி என்பது என் எண்ணம்.

தனக்கு பிடித்த மலர் அலங்காரத்தோட வேங்கி.
நான் சின்ன பயனா இருந்தப்போ (வயசு மறந்துடுச்சி) எனக்கு உடம்பு சரியில்லை (வயித்துக்கடுப்பு) அதை சொல்லியும் கூட, சுற்றுலா போறவங்க யாரோ வரலைன்னு என்னை விடாப்பிடியா கூப்பிட்டாங்க. என் அத்தை மூலமா அந்த சுற்றுலா ஆளு எங்க வீட்டுக்கு வந்து என்னை பிடிச்சார். அலுவல் காரணமா எங்க அம்மாவால வர முடியாத நிலை என்ன பண்றது என்னை சுற்றுலா குழுவோடு அனுப்பி வைச்சாங்க. திருமலை போற வரைக்கும் எனக்கு உடல்நிலை சரியாகலை. அங்க கூண்டுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கறப்ப அங்க (அதுக்குன்னு கூண்டிலிருந்த இடத்தில்) குளிச்சேன் உடல் நிலை நல்லாயிடுச்சி. அது வரைக்கும் ரொம்ப பட்ட பாடு சொல்லி மாளாது :( .

கூண்டிலிருந்து (தர்ம தரிசன கூண்டு) மக்கள் சாமியை பார்க்க செல்கின்றனர்..

அடுத்த முறை குடும்பத்தோட போனோம் காட்பாடிய தாண்டினதும் விஜயவாடா அல்ல விசயநகரத்தில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசு மக்களவை உறுப்பினர் இறந்ததாலோ அல்ல தாக்கப்பட்டு கவலைக்கிடமானதாலோ ஆந்திராவுல மறியல் அப்ப இராமாராவ் ஆட்சி, எந்த வண்டியும் ஓடல. சோத்து மூட்டைய தூக்கிக்கிட்டு நாங்க நடந்தோம் அப்ப யாரோ புண்ணியவான்கள் எங்களை ஜீப்பில் ஏற்றிக்கிட்டாங்க. சித்தூரில் எங்களை இறக்கிவிட்டாங்க. அங்க காத்திருந்து தொடருந்து புடிச்சி திருப்பதி போனோம்.  அடுத்த தேர்தலில் காங்கிரசு ஆட்சிக்கு வர அந்நிகழ்வும்  "கை" கொடுத்தது. இது தான் நன்றாக நினைவு தெரிந்து நான் போன முதல்  தொடருந்து பயணம். எல்லாப்புகழும்  காங்கிரசு செய்த மறியலுக்கே :)

அலிப்பிரி என்னும் அடிவாரத்தில் உள்ள கோபுரம்
அப்புறம் மாமா பையனுக்கு மொட்டை அடிக்கிறதுக்காக குடும்பத்தோட போனோம். இப்ப வாடகை மகிழுந்தில் போனோம். பாவிநாசனத்தில் உள்ள அணையில் ஓரமா எல்லோரும் குளிக்க மேல இருந்து தண்ணி வருமே அதுல நல்லா குளிச்சோம். அங்க பூங்கா இருக்கு. சோத்து மூட்டைய அவிழ்த்து திங்க தொடங்கினோம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நானும் என் மாமா பையனும் தனியா போயி அங்கு வந்திருந்த பெண்களை (வயசு காரணம்;) ) சைட் அடித்தோம். பெண்களும் நைசா சைட் அடித்தார்கள். அங்கிருந்து வரவே மனசில்லை. எப்படி? அங்கிருந்து கிளம்ப மனசு வரும் இஃகி இஃகி. அங்கே அணை உள்ளது ஆனால் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை. திருமலையில் உள்ள கட்டடங்களுக்கும் கோயில்களுக்கும் இங்க இருந்து தான் நீலு (தெலுங்கு சொல் ஒன்னு கத்துக்குங்க) வருது.

பாபவிநாசனம் என்ற இடத்தில் குளியல்




படி இல்லா சம தள நடைபாதை







அடுத்த முறை என் மாமா பையனும் நானும் (நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் போது) திருப்பதி போனோம். திருப்பதியில் தமிழ் பேசும் இருவர் கூட சேர்ந்து கொண்டோம், அவர்களால் திருப்பதியில் உள்ள கோவிந்தராச பெருமாளை கும்பிட்டோம், எத்தனை பேர் கோவிந்தனை பார்த்திருக்காங்கன்னு தெரியலை, பெரும்பாலோர் வேங்கிய பார்ப்பதோட சரி.  பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து மேல(திருமலை) போனோம். மேல போனதும் நாங்க அவங்களிடம் இருந்து பிரிஞ்சிட்டோம். நல்லா சாமி கும்பிட்டோம். Semester (செமசுடர்) தேர்வில் எல்லாம் தேர்வாகனும் என்று வேண்டிக்கொண்டோம். அதுக்குத் தானே போனது.

திருப்பதி நகரிலுள்ள கோவிந்த ராச பெருமாள் கோவில் கோபுரம்.
கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்தாச்சு. நானும் என் நண்பனும் நினைச்சா சின்ன நண்பர்கள் குழுவ (3~6 பேர் ) சேர்த்துக்கிட்டு திருப்பதி போயிடுவோம். பல முறை போயிருக்கோம் எப்பவும் மேல போறப்ப நடை பின் தேவசுதான அறைய பிடிச்சு குளிச்சுட்டு சாமிய கும்பிட்டுட்டு பேருந்தில் கீழே. அப்புறம் நேரா சென்னை. சில முறை திருத்தணி வழியா போகும் பேருந்து, சில முறை தடா வழியா போகும் பேருந்து. போகும் போதும் வரும் போதும். சில முறைக்கு அப்புறம் தடாவுக்கு தடை போட்டுட்டோம் ஏன்னா அவ்வழி சாலை மோசமாக இருந்ததுதான்.
அடிவாரத்தில் படி. காலுக்கு நல்ல பயிற்சி.
அடிவாரம் வரை (மலைப்பாதை தொடங்கும் இடம்) போவதற்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஜீப் அதுக்கு ஆளுக்கு 10 ரூபா. நடு இரவில் (12 மணி வாக்குல) அது கிடைப்பதே பெரிசு இல்லையா? ஆளு நிறைய சேர்ந்த பின் தான் வண்டிய எடுப்பார்கள். மலைப்பாதைகளில் நிறைய கடைகள் உண்டு தண்ணி (நீலு), கோக், இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும். சிகரெட், பீடி விற்க திருமலையில் தடை. ஆனால் புகை பிடிக்க \இலுக்க தடையில்லை.

 திறந்தவெளி கூண்டுக்குள் மான்
மலைப்பாதையில் நிறைய இடங்களில் மான்களை பார்க்கலாம் திறந்த வெளி கூண்டுக்குள் இருக்கும். கம்பி வலை நமக்காக (நம்மிடமிருந்து மானை காப்பாத்தனுமே) அப்புறம் தான் மானுக்காக. முதல் முறை போனபோது தெரிந்த கோபுரத்தை பார்த்து திருமலைக்கு வந்ததாக நினைத்தோம். நிறைய பேர் இப்படி ஏமாறுவார்கள். அதுவரை படி. அப்புறம் படி இல்லை. சாலையில் சிறிது நேரம் அப்புறம் படி அப்புறம் திருமலை. சாலையை அடையும் முன் பெரிய அனுமன் சிலை வரும் அவ்விடத்தில் யோகநரசிம்மர் கோவிலும் உண்டு. கிட்டதட்ட ஒரு கிமீ சாலையில் நடக்கனும். தூரம் ஒன்னா அல்லது இரண்டு கிமீரா? எனக்கு தெரியவில்லை, நேக்கு தெலுசா?. சாலைப்பயணம் முடிந்ததும் படி. இதில் ஏற கடினமா இருக்கும்.  ஏற்றம் (சாய்வு) கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த படி ஏற்றம் முடிந்ததும் திருமலை வந்திடும்.
சாலையை அடையும் முன் உள்ள அனுமன்
இந்த சாலையில் தான் நடக்கனும் இங்க படி இல்லை.

தேவசுத்தான அறைய வாடகைக்கு எடுக்க பெருங்கூட்டம் இருக்கும் நாங்க 3 ~ 4 க்கெல்லாம் திருமலைக்கு சென்றுவிடுவதால் அறை எங்களுக்கு கிடைத்துவிடும். 6 மணிக்கு மேல தான் அறை (கன்னத்தில் அல்ல) கொடுக்க ஆரம்பிப்பாங்க.  அறைக்கு பக்கத்திலேயே இட்லி கிடைக்கும் சில முறை கிடைக்காது எங்கு அறை உள்ளதோ அதைப்பொருத்து இது மாறும். அறையை காலி செய்யும் பொழுது கூட்டுபவர்களுக்கு காசு கொடுக்கனும், கொடுக்காமலும் வரலாம், அவர்கள் நமக்கு செய்யும் உதவியை பொருத்து நாம் முடிவு செய்யலாம். இதை அங்குள்ளவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்( காக்கா பரம்பரையான்னு கேக்காதிங்க ). ஆனா சாவியை ஒப்படைக்கும் இடத்திலும் காசு கேட்பார்கள் (நம்ம முன் பணம் அவங்ககிட்ட இருக்கில்ல) அடேய் என்னமோ நான் வந்ததும் அறையை கொடுத்த மாதிரி கேக்கறானேன்னு கோபம் வரும் ஆனா அதை வெளிக்காட்டிக்காமல் நம் முழு முன் பணத்தையும் வாங்கிட்டு வரனும். நிறைய பேர் முன் பணத்தில் ஒரு பங்கை கொடுத்துவிடுவார்கள்.(அரசு பணத்தை அவன் நமக்கு இலவசமா குடுக்கிற மாதிரி நினைப்பு, இது ஒரு வகையான உடலியல் மிகப்பெரும்பாலோர் இதற்கு இரையாவார்கள்) 100 என்று சொல்லாமல் 99.99 என்று விலை வைப்பதும் இதனால் தான். (இந்த உடலியலை நம்பித்தான்)


வீடு திரும்பும் முன் இங்க சூடம் பத்த வைச்சு சாமி கும்பிடும் இடம்

ஒரு முறை சாமி இருக்கும் உள் கோவிலை உடலால் உருண்டு வர (அங்கபிரதட்ணம்) செய்ய நானும் என் நண்பனும் முடிவு செய்து அங்க கேட்டா ஒருத்தரும் உருப்படியான தகவலை சொல்லலை. இறுதியில் ஒருத்தர் சொன்னார் உடனே ஓடினோம் ஏன்னா இன்னும் 5 நிமிடம் தான் அதுக்கு இருந்தது. அங்க இருந்த குழாயில் குளித்து விட்டு சென்றோம் குளித்துவிட்டா என்றால் உடலை தண்ணீரால் நனைத்துக்கொண்டு. நாங்க பல மணி நேரமா கேட்டுக்கிட்டு இருந்தோம் அப்பவே இத்தகவல் தெரிந்திருந்தால் வரதனோட குளத்தில் முழுக்கு போட்டு விட்டு அவதியில்லாம பொறுமையாக கூட்டத்துடன் சேர்ந்திருப்போம். அப்புறம் தான் தெரிந்தது அங்கபிரதட்சனம் செய்பவர்களுக்கு தான் முதலில் சாமி காட்சி தருவாராம். அப்புறம் தான் மற்றவர்களுக்காம்.
மேல் செல்லும் வழியுள்ள நடைபாதை கடைகள்

இதனாலயே இப்ப நிறைய பேர் அங்கபிரதட்சனம் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாகி விட்டது, 150 பேர் தான் உள் கோயிலை உடம்பால் சுற்ற முடியுமுன்னா 500 பேருக்கு மேல வந்தா என்ன பண்றது அதனால இப்ப  அதுக்கு சீட்டு முறை கொண்டு வந்துட்டாங்க.  நிறைய பேர் சீட்டு வாங்க முயல்வதால் அது கிடைப்பது கடினம் என்ற நிலை.

இரவில் ஒளிரும் வேங்கியின் இல்லம்.
ஒரு முறை எங்களில் பலசாலியான  ஒருத்தன் மேல ஏற திணருனான். நோஞ்சான் மாதிரி இருந்தவன் எல்லாத்துக்கும் முன்னாடி ஏறிக்கிட்டு இருந்தான். அப்ப தான் புரிஞ்சது மேல படி வழியே செல்வதற்கு பலசாலியா இருந்தா மட்டும் பத்தாது என்பது.

பகலில் பறவை பார்வையில் வேங்கியின் இல்லம்.
நாங்க எப்பவும் காசு இல்லா முறையில் தான் சீனியை பார்ப்போம். ஒரு முறை 50 ரூபா கொடுத்து போனோம் ஆனா பாருங்க அப்ப 50 ரூபா வரிசையை மெதுவாகவும் காசு இல்லா வரிசையை விரைவாகவும் விட்டாங்க. அப்ப முடிவு பண்ணினோம் இனி என்ன ஆனாலும் காசு கொடுத்து சீனியை பார்ப்பதில்லை என்று. 
இது 50 ரூ வரிசை லட்டுக்கா அல்ல சாமிய பார்க்கவான்னு தெரியலை
நாங்க உணவுக்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகத்தை நாடமாட்டோம். எப்பவும் கையேந்தி பவன் தான். காசு குறைவு என்பதோடு அங்க தான் ருசி அருமையா இருக்கும். சீனியை பார்த்துட்டு வந்ததும் விலையில்லா (இலவச) சோற்றுக்கு டோக்கன் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து வெளியில் வந்து விலையில்லா சோறு வேண்டாம் என்பவர்கள் அதற்காகவே காத்து இருப்பவர்களுக்கு கொடை அளித்து அன்னகொடை அளிக்கலாம்.
பக்தர்களை நம்பி திருமலையில் உள்ள கடைகள்
கிளம்பும் முன் சீனியை பார்த்தமாதிரி இருக்கும் இடத்தில் சூடம் கொளுத்தி கும்பிட்டு வருவோம். அனுமார், கருடாழ்வார் கோவிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குமே. அவ்விடத்தை விரிவாக்கம் என்ற பெயரில் இப்ப இடிச்சுட்டாங்களாமே?  படத்தில் உள்ள மரத்தை வெட்டிட்டாங்களான்னு தெரியலை.

இந்த லட்டை வாங்க என்ன கூட்டம். லட்டே திருமலைக்கு சென்றதற்கு அறிகுறி
இன்னொரு முறை பேருந்தில் சென்னைக்கு வரும் போது நண்பன் ஒருத்தன் "தண்ணிலு" என்பது தெலுங்கு என்று கூறி எங்களை ஏமாத்திக்கிட்டு வந்தான்.  தெலுங்கு தெரியாது ஆனா சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியும்னான். நாங்க அவன் சொல்றத நம்பினோம் (நாங்கல்லாம் அப்பாவிங்க நம்புங்க). நாங்க சென்னை வருவதற்கள் எங்களுடன் வந்த இன்னொருவனுக்கு இவனுக்கு தெலுங்கு வார்த்தை எதுக்கும் பொருள் தெரியாது, தண்ணிலு தெலுங்கு அல்ல சும்மா புருடா விடுறான் அப்படின்னு ஐயம் வந்திருச்சு. சும்மா அவனை இரண்டு அடி போட்டதும் அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்பதையும் தண்ணிலு என்பது இவன் கண்டுபிடிப்பு என்றும் ஒத்துக்கிட்டான். தமிழ் சொல்லோட "லு" போட்டா அது தெலுங்கு அப்படினுட்டான்.
யாரு முதல்ல இந்த கல்லை அடுக்கிவச்சாங்களோ இப்ப தொடருது
நடைபாதையில் நிறைய இடங்களில் கல்லை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஏறும் போதோ இறங்கம் போதே ஓய்வு எடுத்த யாரோ பொழுதை கழிக்க கல்லை அடுக்கி இருப்பார்கள் இப்ப மக்கள் அதை தொடர்கிறார்கள். இப்படி கல்லை அடுக்கினா விரைவில் வீடு கட்டும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறார்கள். நாங்க சும்மா இருப்பமா நாங்களும் நிறைய கல் வீடு கட்டி இருக்கோம்.

இறுதி படி. இது முடியும் இடம் திருமலையே.

 தடுப்பு ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பிரிப்பதற்காக. ஆனால் ஏறுபவர்களுக்கு கைப்பிடியாக துணையாகவும் இருக்கும். தொடக்கத்தில் உள்ள படியில் தடுப்பு இருக்காது ஆனா தொடக்க படி முடியும் முன்பு சில இடங்களில் தடுப்பு இருக்கும். சமதளத்தில் தடுப்பு இருக்காது. இறுதி படிக்கட்டில் தடுப்பு இருக்கும்.

இப்ப கூட்டமும் அதிகமாகி விட்டது கோவிலும் மிகவும் வணிக முறை ஆகிவிட்டது. சீனியை இன்னும் விற்காம இருக்காங்களேன்னு மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். திருப்பதி கோவில் லட்டு முன்ன மாதிரி இல்லை. அளவும் சின்னதாகி விட்டது, ருசி கூட பழைய மாதிரி இல்லை.  ஏதோ அதிக வணிகமுறைக்கு கோவில் மாறுவதற்குள் அங்க அடிக்கடி போனேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். முதலில் அங்க நிறைய தமிழும் அறிந்த (ஏறக்குறைய 90%) ஊழியர்கள் இருந்தார்கள். மெதுவா தமிழ் அறியாத மற்றவர்கள் அதிகளவில் ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். உள்ளூர் ஆட்களுக்கு திருமலையில் வேலையில்லாமல் போனது வருத்தம் தான். அங்க தமிழ் பக்தர்களின் வருகை மிக மிக அதிகம் ஆனால் சில அறிவிப்பு பலகைகளில் தமிழ் இருக்காது. தமிழிலும் எழுதினால் பக்தர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை ஏன் தேவசுதானம் புரிந்து கொள்ள மாட்டிக்குது?
.

இப்ப தெரிந்து கொண்ட சில மனவாடு வார்த்தைகள்:

மனவாடு மனதேசம் - நம்மஆளு நம்ம தேசம்.
நீளு - நீர்
காவலா - வேண்டுமா
காவாலி - வேண்டும்
போ - போ (மென்மையா போ என்பதை அதாவது கிளம்பு என்பதை வெள்ளு என்பார்கள்)
வெள்ளு - கிளம்பு
சம்பேஸ்தானு - கொன்னுடுவேன்
சால - நல்லா
சால பாகுந்தி - நன்றாக இருக்கிறது.
பாகுனானா - எப்படிய்யா இருக்க என்று கேட்போம்மில்ல அது மாதிரி
சால பாகுனானு - நன்றாக உள்ளேன் (மேலே கேட்டதற்கு பதில்)

பெள்ளி -திருமணம்
மிர்ச்சி - மிளகாய்
ஆவுதா - அப்படியா
கொடுக்கு - மகன்
கூத்துரு  - மகள்
அம்மாயி - பெண்
தெல்லிது - தெரியாது
தெலுசா - தெரியுமா
 செப்பு- சொல்லு
இடி - இது
கடவு - படி
அத்தடு - அவன்
போஜனம் \ அன்னம் - சோறு\சாப்பாடு
சேசாவா - முடிச்சாச்சா
நிஜமா - நிசமா நாமளும் நிஜமா என்று சொல்லுவோம்
ஏமிட்டி - என்ன
அத்தனு - அந்தாளு
எவரு - யார்\எவர்
அக்கடிக்கி  வெள்ளு - அங்கே போ
எந்த \ எல - எப்படி
இக்கட சூடு ஹ ஹ ஹா - இங்கே பார் (இரஜினியால் இச்சொல்லை அறிந்தேன்)





திங்கள், செப்டம்பர் 20, 2010

எச்சு மிச்சு - அனுபவம்

நான் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் போது அடிக்கடி குளிக்க பக்கத்திலிருக்கும் கிணத்துக்கு போவோம் (தண்ணி இருக்கறப்பதான்). நீச்சல் தெரியாத பசங்களும் வருவாங்க. கிணறு பெரிசா வட்டமா இருக்கும்.

எங்க ஊர்ப்பகுதியில் எல்லாம் செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் கிணறு இருக்கும். பொதுவாக ஒரக்கிணறு (பொதுக்கிணறு) சதுரமாவும் விவசாய கிணறு செவ்வகமாகவும் இருக்கும்.  அதாவது சிறு கிணறு சதுரமாகவும் பெருங்கிணறு செவ்வகமாகவும் இருக்கும். விவசாய கிணறில் மேல இருந்து கிட்டதட்ட 5அடி கீழ போனா பாம்பேரின்னு ஒன்னு இருக்கும் அந்த பகுதி கிட்டதட்ட 2 அடி அகலத்துக்கு இருக்கும். பாம்பேரிக்கு மேல் தண்ணி வராது. இப்பவெல்லாம் 2 அடிக்கு தண்ணி இருக்கறதே பெரிசு. பாம்பேரிக்கு வேலையே இல்லை.

எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் மத்தவனுங்க மரியாதையா பார்ப்பானுங்க. என்னையும் சேர்த்து 2 பேருக்கு நல்லாவும் 3 பேருக்கு சுமாராவும் மத்தவனுங்களுக்கு நல்லா கடப்பாரை நீச்சலும் தெரியும்.

ஒரு முறை நாங்க வட்ட கிணத்துல குளிச்சிட்டு விடுதிக்கு வந்துக்கிட்டு இருந்தோம், அப்ப பேச்சு வாக்குல நான் ஏதோ சொன்னேன் (தப்பா எல்லாம் இல்லிங்க) , கூட இருந்த நண்பன் (சோழ நாட்டான்) இப்ப  என்ன சொன்னன்னு கேட்டான்.
சொன்ன வாக்கியம் மறந்திடுச்சு ஆனா அவன் புதுசா கேட்ட சொல் மட்டும் நினைவு இருக்கு.

அதிகமா இருக்கு. ஜாஸ்தியா இருக்கு, நிறைய இருக்கு,  ரொம்ப இருக்கு இப்படி பல சொற்களை சொன்னேன். அவன் அதெல்லாம் இல்லை வேற சொன்ன அப்படின்னான். எனக்கு ஒன்னும் தோணவேயில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கொங்கு நாட்டான் என்ன எச்சான்னு கேட்டான். ஆமா அதே தான் அப்படின்னு நம்ம சோழ நாட்டான் புடிச்சிக்கிட்டான். எனக்கு அதை கேட்டதும் அட இதை நாம்ப ஏன் சொல்லவேயில்லை அப்படின்னு தோன்றியது. எச்சு அப்படிங்கிற புதிய சொல்லை நம்ம சோழநாட்டான் தெரிஞ்சுக்கிட்டான். கொங்கு பகுதியில் அதிகம் என்பதற்கு பதிலா எச்சு என்ற சொல்(லும்) புழங்குவதை அங்க போன மற்ற பகுதி\நாட்டுக் காரங்க கவனிச்சிருக்கலாம். சரி எச்சு-ன்னா அதிகம் அதென்ன மிச்சுன்னு கேக்கறிங்களா? எல்லாம் எதுகை மோனை தான் இஃகி இஃகி.

காட்டு: விலை எச்சா இருக்கே.

புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.