எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை. மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.
அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.
மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.
இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.
கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும். சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.
(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக