என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான். இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க. இந்த வாய்ப்பை விடுவனா? எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.
என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.
பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை
ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.
என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).
குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.
இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி. ஆதரவு காட்டுங்கப்பா. (
ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).