டோஜிக்களில் நாலு வகை உண்டு. அவை
- நீளக்கால் டோஜி
- தட்டான் டோஜி
- கல்லறை டோஜி
- நால்விலை டோஜி
நீளக்கால் டோஜி
இது சாதாரண டோஜி மாதிரி ஆனா அதை விட கீழ் மேல் குச்சிகளின் நீளம் அதிகமாக இருக்கும். சாதாரண டோஜியை விட இந்த வகை டோஜியில் முதலீட்டாளர்கள் அதிக குழப்பத்தில் இருப்பர். ஏறுமுகத்திலோ இறங்குமுகத்திலோ போக்கு இருந்தால் இது சிறப்புத்துவம் பெறும். விலை மேலும் கீழும் இறங்கி பின் ஓர் இடத்தில் வலுப்பெறுவதை இதைக்கொண்டு அறியலாம். வரைபடத்தின் பல கால அளவுகளில் இது தென்பட்டாலும் நீண்ட கால அளவுகளில் தென்படுவது சிறப்பாகும் நீண்ட கால அளவில் தென்படுவதை வைத்து முடிவு எடுப்பது அதிகம் பயனளிக்கும். 52 வார அதிக விலையை பங்கு அடையும் போது நீளக்கால் டோஜி தோன்றினால் போக்கு மாற்றம் உறுதி. குழப்பம் ஏற்படுத்தும் நீளக்கால் டோஜி ஏற்பட்ட பின் இரண்டு மூன்று நாட்களுக்கு சந்தை சோம்பலாக இருக்கும்.
தட்டான் டோஜி
தட்டான் டோஜியை தும்பி டோஜி என்றும் அழைப்பர். இதற்கு மேல் குச்சி இருக்காது அல்லது மிகச்சிறியதாக இருக்கும் கீழ் குச்சி நீண்டதாக இருக்கும். பார்க்க T போல இருக்கும்.
இறங்கு முகத்தில் சுத்தியல் போன்றும் ஏறு முகத்தில் தொங்கும் மனிதனை போலவும் இருக்கும். உடல் அவற்றுக்கு பெரிது இதற்கு மிகச்சிறியது. இதற்கு அடுத்த உலக்கையின் உடலின் நிறத்தை வைத்தே போக்கை கணிக்க முடியும். போக்கு மாற்றத்தை விட முதலீட்டாளர்களின் குழப்பமான மன நிலையையே இது காட்டுகிறது. இறங்கு முக இறுதி அதாவது ஆதரவு கோட்டில் இது தோன்றினால் போக்கு மாற்றம் நடைபெறும். இது தோன்றியும் இறங்கு முக போக்கு தொடர்ந்தால் விரைவில் அப்போக்கு முடிவுக்கு வரப்போகுதுன்னு பொருள்.
கல்லறை டோஜி
இதற்கு கீழ் குச்சி இருக்காது அல்லது மிகச்சிறியதாக இருக்கும் மேல் குச்சி நீண்டதாக இருக்கும். பார்க்க Tஐ திருப்பி போட்டது போல இருக்கும்.
இறங்கு முகத்தில் தலைகீழ் சுத்தியல் போன்றும் ஏறு முகத்தில் விழும் விண்மீனைப் போலவும் இருக்கும். உடல் அவற்றுக்கு பெரிது இதற்கு மிகச்சிறியது. இதற்கு அடுத்த உலக்கையின் உடலின் நிறத்தை வைத்தே போக்கை கணிக்க முடியும். போக்கு மாற்றத்தை விட முதலீட்டாளர்களின் குழப்பமான மன நிலையையே இது காட்டுகிறது. ஏறு முக இறுதி அதாவது தடை கோட்டில் இது தோன்றினால் போக்கு மாற்றம் நடைபெறும். இது தோன்றியும் ஏறு முக போக்கு தொடர்ந்தால் விரைவில் அப்போக்கு முடிவுக்கு வரப்போகுதுன்னு பொருள்.
நால்விலை டோஜி
டோஜி என்பதால் தொடக்க விலை முடிவு விலை ஒன்று என்பது தெரிந்தது. இதற்கு மேல் குச்சியும் கீழ் குச்சியும் இருக்காது இருந்தாலும் அவை மிகச்சிறியதாக இருக்கும். என்னைப்பொருத்த வரை இதுவே முதலீட்டாளர்களின் உள்ளம் மிக அதிக குழப்பநிலையில் உள்ளதை காட்டுவது. வாங்கல் விற்றல் குறைவாக நடந்திருக்குன்னு தெரிந்து கொள்ளலாம்.
சந்தை நேரம் முடிந்த பின்பும் சந்தை தொடங்கும் முன்பும் இது அடிக்கடி தோன்றும். 1 நிமிட இடைவெளி வரைபடத்தில் இது அதிகமாக தென்படும். அடுத்த நாள் உடலின் நிறத்தை வைத்து போக்கு எப்படி போகும் என கணிக்கலாம்.
உச்சியில் டோஜி
டோஜி ஏறுமுகத்தின் உச்சியில் இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படப்போவதை அறிவிக்கும் எச்சரிக்கை மணியாக விளங்கும். பொதுவாக ஏறுமுக போக்கில் நீளமான வெள்ளை உடல் உலக்கைக்கு பின் டோஜி தோன்றினால் போக்கு மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம். டோஜி முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டுவதால் அது ஏறுமுக போக்கில் மாற்றத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது. காளைகளின் மனக்குழப்பம் ஏறுமுக போக்கை கட்டுக்குள் வைத்திருக்க உதவாது, திட நம்பிக்கை அதற்கு வேண்டும். ஏறுமுக போக்கு தொடர்ந்தாலோ அதிக வாங்கல் நிகழ்ந்தாலோ டோஜி காளைகள் பக்கம் சாய்ந்து விட்டதை அறியலாம்.
இதே போல் டோஜி இறங்கு முகத்திலும் போக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை உடையது. டோஜிக்களில் காளைகளுடைய வலுவும் கரடிகளின் வலுவும் சமநிலையில் இருக்கும் இதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் உச்சியில் ஏற்படும் ஏறுமுக போக்கு மாற்றத்தை விட இறக்கு முக போக்கு மாற்றத்தை உறுதிபடுத்த அதிக சமிக்கைகள் வேண்டும். சமிக்கைகள் என்றால் பல காட்டிகள் என்று பொருள்
சுழலும் சக்கரம் (Spinning top)
இது டோஜி அல்ல என்றாலும் பார்க்க நீளக்கால் டோஜி மாதிரி தான் இருக்கும். சிலருக்கு அதான் இதா இது தான் அதா என குழப்பம் வரும். இரண்டுக்கும் என்ன வேறுபாடுன்னா உடலின் நீளமே. நீளக்கால் டோஜியில் உடல் இருக்காது அதாவது தொடக்கமும் முடிவும் ஒன்று. சுழலும் சக்கரத்தில் சிறிய உடல் இருக்கும். கரடிக்கும் காளைக்கும் நடக்கும் பெரும் சண்டையை இது எடுத்து காட்டும். அடுத்த நாள் ஏற்படும் உடலின் நிறத்தை வைத்து தான் சண்டையில் காளை வென்றதா கரடி வென்றதா போக்கு எப்படி போகும் என அறியமுடியும். போக்கு நீட்சியின் தொடர்ச்சியில் இது வந்தால் கவனிக்க தக்கதாக இருக்கும் ஏன்னா உந்தத்தின் வேகம் குறைந்து போக்கு மாற்றம் ஏற்படப்போவதை குறிப்பதாக இருக்கும்.
.