வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜூலை 08, 2019

டோஜி

டோஜி
தொடக்க விலையும் முடிவு விலையும் ஒன்றாக இருந்தால் அது டோஜி எனப்படும். போக்கு மாற்றத்தை குறிக்கும் குறிப்பிடத்தக்க ஒழுங்காகும்.


தொடக்க விலையும் முடிவு விலையும் ஒன்றாக இல்லாமல் மிக நெருக்கமாக இருந்தாலும் அது டோஜி எனப்படும் அதை நெருங்கிய டோஜி என்பர். எது நெருங்கிய டோஜி என்பது அவரவர் பார்க்கும் பார்வையை பொருத்தது இதை வரையறுக்க கடுமையான விதிகள் இல்லை. ஆனால் சமீபத்திய சந்தையின் செயல்பாட்டை வைத்து இதை அறிய முற்படுவது ஒரு வழிமுறை. தொடர்ச்சியாக நிறைய சிறிய உடல்கள் இருந்தால் நெருங்கிய டோஜி குறிப்பிடத்தக்கதாக பார்க்கப் படாது. சந்தையானது முக்கியமான திருப்புமுனை புள்ளியில் இருந்தாலோ காளை அல்லது கரடியின் ஓட்டம் முற்றிய கட்டத்தில் இருந்தாலோ மற்ற நுட்ப காட்டிகள் எச்சரிக்கை சமிக்கை கொடுத்தாலோ நெருங்கிய டோஜியை டோஜி எனக்கொள்ளலாம்.
டோஜி போக்கு மாற்றம் நடைபெறப்போவதை குறிக்கும் சமிக்கையாகும். டோஜி குறிக்கும் போக்கு மாற்றம் நடைபெறாமல் போனாலும் தவறான சமிக்கை படி நடப்பது உண்மையான சமிக்கை படி நடக்காமல் இருப்பதை விட மேலானதாகும்.

போக்கு மாற்றம் நடைபெறுவதும் அதன் வலிமையும் அடுத்த நாள் உடலின் நிறத்தையும் நீளத்தையும் பொருத்தே உறுதிபடுத்தப்படும். சந்தையில் நிறைய டோஜிக்கள் உருவாகாவிட்டால் மட்டுமே புதிதாக உருவாகும் டோஜி சிறப்பானதாக கருதப்படும். ஒரு நாளின் 30 நிமிட வரைபடத்தை பார்த்தால் அதில் நிறைய டோஜிக்களும் நெருங்கிய டோஜிக்களும் தென்படும் அதனாலேயே மெழுகுவர்த்தி அலசல் ஒரு நாளின் 30 நிமிட வரைபடத்தை பார்த்து வர்த்தகம் புரிபவர்களுக்கு ஏற்றதல்ல.

*தெளிவான  இறங்கு முக போக்கிலோ ஏறு முக போக்கிலோ டோஜி  ஏற்பட்டால் போக்கு மாற்றம் நடைபெற வாய்ப்பு.
*டோஜிக்கு முன் நீளமான உடல் தோன்றினால் அந்த நிற உடல் முடிவுக்கு வருது என்று பொருள்.
*ஏறு முக போக்கில் டோஜிக்கு பின் நீளமான கருப்பு உடல் தோன்றினால் ஏறுமுக போக்கு முடிவுக்கு வந்ததை அறியலாம். இதே போல் இறங்கு முக போக்கில் டோஜிக்கு பின் நீளமான வெள்ளை உடல் தோன்றினால் இறங்கு முக போக்கு முடிவுக்கு வந்ததை அறியலாம்.

உச்சியில் டோஜி

டோஜி ஏறுமுகத்தின் உச்சியில் இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படப்போவதை அறிவிக்கும்  எச்சரிக்கை மணியாக விளங்கும். பொதுவாக ஏறுமுக போக்கில் நீளமான வெள்ளை  உடல் உலக்கைக்கு பின் டோஜி தோன்றினால் போக்கு மாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம். டோஜி முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையை காட்டுவதால் அது ஏறுமுக போக்கில் மாற்றத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது.  காளைகளின்  மனக்குழப்பம் ஏறுமுக போக்கை கட்டுக்குள் வைத்திருக்க உதவாது,  திட நம்பிக்கை அதற்கு வேண்டும். ஏறுமுக போக்கு தொடர்ந்தாலோ அதிக வாங்கல் நிகழ்ந்தாலோ டோஜி காளைகள் பக்கம் சாய்ந்து விட்டத்தை அறியலாம்.

இதே போல் டோஜி இறங்கு முகத்திலும் போக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்  வலிமை  உடையது.  டோஜிக்களில் காளைகளுடைய வலுவும் கரடிகளின் வலுவும் சமநிலையில் இருக்கும் இதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் உச்சியில் ஏற்படும் ஏறுமுக போக்கு மாற்றத்தை விட இறக்கு முக போக்கு மாற்றத்தை உறுதிபடுத்த அதிக சமிக்கைகள் வேண்டும். சமிக்கைகள் என்றால் பல காட்டிகள் என்று பொருள்.

கருத்துகள் இல்லை: