வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 29, 2019

மூன்று உள் உலக்கைகள் Three Inside Candlestick Pattern

வெளி உலக்கை விழுங்கி, உள் உலக்கை புள்ளத்தாச்சி  இது தான் வேறுபாடு.

மூன்று  உள் உலக்கை - காளை
இது காளை புள்ளத்தாச்சியை கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.


  1. முதலில்   இறங்குமுக போக்கு இருக்கனும்
  2. இரண்டாவதாக பெரிய கருப்பு உடல் தோன்றனும்
  3. மூன்றாவதாக சிறிய வெள்ளை உடல் தோன்றனும். இது கருப்பு உடலுக்குள் அடங்குவதாக இருக்கனும். (புள்ளத்தாச்சி ஒழுங்கு)
  4. நான்காவதா காளை புள்ளத்தாச்சி ஒழுங்கை உறுதிபடுத்தும் விதமாக அடுத்த நாள் வெள்ளை உடல் தோன்றனும்.

  • சொல்லப்போனா இது காளை புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • புள்ளத்தாச்சி வெள்ளை உடலை விட கருப்பு உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய இறங்கு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.


மூன்று உள் உலக்கை - கரடி

காளை ஒழுங்கு மாதிரி தான் இதுவும். இது கரடி புள்ளத்தாச்சியை 
கொண்டள்ளதும்  அதை உறுதிபடுத்திய  உலக்கையையும் கொண்ட மூவுலக்கை ஒழுங்கு. கீழ்கண்டவாரு இருந்தால் இவ்வொழுங்கை அறியலாம்.



  1. முதலில்  சந்தை ஏறுமுகமாக இருக்கவேண்டும்.
  2. இரண்டாவதாக பெரிய வெள்ளை உடல் தோன்ற வேண்டும்
  3. மூன்றாவதாக சின்ன கருப்பு உடல் தோன்றனும் வெள்ளை உடல் இதை  முழுவதுமாக விழுங்குமாறு இருக்க வேண்டும் (கரடி புள்ளத்தாச்சி)
  4. நான்காவதாக அடுத்த நாள் கரடி புள்ளத்தாச்சியை உறுதிபடுத்தும் விதம் கருப்பு உடல் தோன்ற வேண்டும்.
  • சொல்லப்போனா இது கரடி புள்ளத்தாச்சியை உறுதிப்படுத்தும் ஒழுங்கு. 
  • புள்ளத்தாச்சி கருப்பு உடலை விட வெள்ளை உடல் மிக நீளமாக  இருந்தால் சிறப்பு.
  • நெடிய ஏறு முகம் இருந்து இந்த ஒழுங்கு தோன்றினால் போக்கு மாற்றம் ஏற்பட்டு  விட்டதாக அடித்துக்கூறலாம்.



வியாழன், ஜூலை 25, 2019

மூன்று விண்மீன் - கரடி Bearish Tri-Star Pattern

காளைன்னு ஒன்னு இருந்தா கரடின்னு ஒன்னு இருக்கனுமில்ல. அது தான நியாயம். மூன்று  விண்மீன் - கரடி  ஒழுங்கிலும் மூன்று டோஜிக்கள் தான் ஆனா இவை ஏறு முக போக்கில் தோன்றும்

 இந்த  கரடி ஒழுங்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?



  • முதலில் ஏறு முக போக்கு இருக்கனும்.
  • அடுத்ததாக மூன்று நாள்களுக்கு டோஜி தோன்றனும
  •  முதல் டோஜி உடலுக்கும் அடுத்த டோஜி உடலுக்கும் இடைவெளி இருக்கனும், அதே போல் கீழ் டோஜி உடலுக்கும் மேல் டோஜி உடலுக்கும்  இடையே இடைவெளி இருக்கனும். பார்க்க 3 டோஜிக்களும் Vஐ கவிழ்த்து போட்ட மாதிரி இருக்கும்,
  •  மூன்று டோஜி உடல்களுக்கு இடையே தான்  இடைவெளி இருக்கனும் குச்சி உடலை தொட்டால் தவறில்லை.


சமிக்கையை அதிகரிக்கும் செயல்கள்

  •  மூன்றாவது நாள் டோஜி உடல் கருப்பாக இருந்தால் போக்கு மாற்றம் நடைபெற அதிக வாய்ப்பு.

  •  டோஜிக்கள் தோன்றிய நாளன்று நிறைய வாங்கல் விற்றல் நடந்திருந்தாலும் போக்கு மாற்றம் நடைபெற அதிக வாய்ப்பு. ஆனா குறைவா மட்டும் வாங்கல் விற்றல் நடந்திந்தால் போக்கு மாற்றம் நடைபெறுமா என்பது பெருந்த ஐயத்திற்குரியது.

செவ்வாய், ஜூலை 23, 2019

கரடி உதை Bearish KICKER candlestick pattern

 ஈருலக்கை கரடி ஒழுங்கான இது வெள்ளை கருப்பு உடல்களை கொண்டு  அமைவது.


  1.  ஏறு முகத்தில் இது தோன்ற வேண்டும்.
  2.  வெள்ளை உடல் உலக்கைக்கு பின் கீழாக கருப்பு நிற உடல் தோன்ற வேண்டும்.
  3.  வெள்ளை உடலை கருப்பு உடல் தொடக்கூடாது. இரண்டுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.
  4.  கருப்பு உடலுக்கு மேல் குச்சி இருக்கக்கூடாது மிக அரிதாக மிகச்சிறிய குச்சி ஏற்படும்.





  •  வெள்ளை உடலுக்கும் கருப்பு உடலுக்கும் இடைவெளி அதிகமிருந்தால் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  •  உடல்களின் நீளம்  அதிகமிருந்தாலும் போக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
  •  பொதுவாக ஏதாவது பாதிக்கும் செய்தி வந்தால் கருப்பு உடல் தோன்றும். ஆனால் இடைவெளியை கவனிக்க வேண்டும். முதலீட்டாளர்கள் மேல் அழுத்தம் அதிகரித்து விற்பவர்கள் அதிகமாவர்.
  •  பொதுவாக உதை ஒழுங்குகளை (கரடி, காளை இரண்டையும்) புறக்கணிக்கூடாது, சிலர்  இதை சக்தி வாய்ந்ததாக பார்க்கின்றனர்.


திங்கள், ஜூலை 22, 2019

மேல் & கீழ் இழு The Tweezers Top and Tweezers Bottom

முதலில் கீழ் இழு ஒழுங்கைப்பற்றி பார்ப்போம். இது ஈருலக்கை கரடி  ஒழுங்காகும்.

* வெள்ளை உடலின் முடிவும் அடுத்த நாள் தோன்றும் கருப்பு உடலின் தொடக்கமும் சமம்
* வெள்ளை உடலின் தொடக்கத்தை விட அடுத்த நாள் தோன்றும் கருப்பு உடலின் முடிவு குறைவு அதாவது கீழாக இருக்கும்.
* ஏறு முகத்திலேயே தோன்ற வேண்டும்.
* நன்றாக கவனித்தால் இது காளை விழுங்கி என்பது புலப்படும்.


காளை ஒழுங்கான மேல் இழு ஒழுங்குக்கான விதி

*  கருப்பு உடலின் முடிவும் அடுத்த நாள் தோன்றும்  வெள்ளை உடலின்  தொடக்கமும் சமம்
* கருப்பு உடலின் தொடக்கத்தை விட அடுத்த நாள் தோன்றும் வெள்ளை உடலின் முடிவு அதிகம் அதாவது மேலாக இருக்கும்.
* இறங்கு முகத்திலேயே தோன்ற வேண்டும்.
* நன்றாக கவனித்தால் இது கரடி விழுங்கி என்பது புலப்படும்.


இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்போமா.
மேல் இழு வரைபடத்தில்

சனி, ஜூலை 20, 2019

மூன்று காகங்கள் (Three black crows)

காளையான மூன்று வெள்ளை படை வீரர்களுக்கு எதிரான கரடி ஒழுங்கு இது.


  1. வரிசையா மூன்று  நாள்கள் கருப்பு உடல் தோன்றும்.  ஏறு முக போக்கின்  கடைசி உலக்கையின் உடலின் நிறம் கருப்பாக இருக்கும் இதை முதல் உடல் என்போம்..
  2. அடுத்த நாள் அதாவது இரண்டாம் நாள் உடலின் விலை தொடக்கமும்   முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம்  மற்றும்  முடிவை விடகுறைவாக இருக்க வேண்டும்.
  3. அதேபோல் மூன்றாம் நாளின் உடலின் விலை தொடக்கமும்   முடிவும் முந்தைய நாள் உடலின் விலை தொடக்கம்  மற்றும்  முடிவை விடகுறைவாக இருக்க வேண்டும்.




சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்

* முதல் நாள் உடலை விட பெரிதாக (நீளமாக) இரண்டாம் நாள் உடல் இருக்க வேண்டும்
* இரண்டாம் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் கிட்டத்தட்ட ஒரே நீளத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கரடியின் செல்வாக்கு உள்ளதாக கருதலாம்.
* குச்சிகள் மிக சிறிதாகவோ இல்லாமலோ இருக்க வேண்டும்
* தெளிவான ஏறு முக போக்கில் இந்த ஒழுங்கு தோன்ற வேண்டும்.
* உடல்களின் நீளம் அதிகமாக இருப்பது இதன் வீரியத்தை காட்டும்   அறிகுறி.
* வாங்கல் விற்றல் அதிகமாக நடந்திருக்க  வேண்டும்.



ஒழுங்கைப்பற்றிய சில குறிப்புகள்

**  மூன்றாம் நாள் உடலின் நீளம் மற்ற இரு நாள்களை விட சிறிதாக இருந்தால் தவிர்ப்பது நலம்.

 **  நெடிய ஏறு முக போக்கின் பின் மூன்று காகங்கள் தோன்றுவது சில மாதங்கள் பங்கை வைத்திருந்து விற்பவர்களுக்கு ஏற்றது.

ஏன் இந்த ஒழுங்கு  வேலைசெய்யுமென்று   நினைக்கிறார்கள்?

நெடிய ஏறு முக போக்கின் போது காளைள்  சோர்வடைந்து கரடிகள் வீரியத்துடன் விலையை குறைக்கும். தொடர்ந்து மூன்று நாள்கள் விலை இறங்குவது சந்தையின் போக்கு மாற்றம் அடைகிறது  என்பதை உணர்த்தும் அறிகுறி.

சனி, ஜூலை 06, 2019

மாலையில் விண்மீன் (Evening star)

மாலையில் விண்மீன்

ஏறு முக போக்கிலேயே தோன்றும் மூன்று உலக்கை ஒழுங்கான இது இறங்கு முக போக்கின் தொடக்கம் ஆகும். கரடி ஒழுங்கான இது மூன்று உலக்கைகளை வைத்து கட்டமைக்கப்படும் ஒழுங்காகும்.

  1. மாலையில்  விண்மீனில் முதல் உடல் நீண்ட வெள்ளையாகும். 
  2. இரண்டாவது உடல் முதல் உடலிருந்து  நன்கு இடைவெளி விட்டு மேல் தோன்றும். இது சிறியதாகவும் முதல் நாள் உடலை தொடாமல் விண்மீன் போல் இருக்கும். இச்சிறிய உடல் முதலீட்டாளர்கள் வாங்குவதா விற்பதா என்ற குழப்பமான மனநிலையில் உள்ளதை உணர்த்துகிறது.
  3.  மூன்றாவது நாள் உடல் கருப்பு நிறத்துடன் முதல் நாள் உடலின் பாதியை தொடும் அளவு இருந்தால் போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம், பாதிக்கும் மேல் எந்தளவு நீளமானதாக உள்ளதோ அது ஏற்படப்போகும் போக்கு மாற்றத்தின் வலிமையை குறிக்கும்.



முதல் நாள் உடலும் மூன்றாம் நாள் உடலும் நீளமானதாக இருந்தாலோ விண்மீனின் (இரண்டாம் நாள்) உடல் சிறிதாக குழப்பமான மனநிலையை எதிரொளித்தாலோ இரண்டாம் நாள் உடல் முதல் & மூன்றாம் நாளை தொடாமல் இடைவெளியுடன் இருந்தாலோ போக்கு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

இரண்டாம் நாள் காணப்படும் சிறிய உடலுக்கு நிறம் பொருட்டில்லை என்றாலும்  அது கருப்பாக இருப்பது சிறப்பு.

சமிக்கையை அதிகப்படுத்தும் செயல்கள்




  • தெளிவான ஏறுமுகம் இருக்கவேண்டும்.
  • முதல் நாள் உடலுக்கும் இரண்டாம் நாள் உடலுக்கும் நன்கு இடைவெளி இருக்க வேண்டும். இரண்டாம் நாள் உடலுக்கும்  மூன்றாம் நாள் உடலுக்கும் இடைவெளி இருக்க வேண்டும். அது அதிகமாக இருந்தால் மிகவும் வரவேற்க தக்கது.
  •  முதல் & மூன்றாம் நாள் உடல்களின் நீளம்  அதிகமாக இருப்பது சிறப்பு.
  • மூன்றாம் நாள்  உடலின் நீளம் முதல் நாள் உடலின் உச்சிக்கு அருகில் இருப்பது சிறப்பு.



ஏன் இந்த ஒழுங்கு  வேலைசெய்யுமென்று   நினைக்கிறார்கள்?

ஏறுமுக போக்கு வலிமையாக இருப்பதால் வாங்குபவர்கள் அதிகம் மொய்ப்பார்கள். எனினும் விற்பவர்கள் விலை சரியாக உள்ளதென்று இச் சமயத்தில் பங்கை விற்று லாபம் பார்க்க ஆரம்பிப்பார்கள். இதனால் அடுத்த நாள் காளைக்கும் கரடிக்கும் போராட்டம் நடக்கும் வணிகத்தின் வீச்சும் குறைவாக இருக்கும். காளைகள் கவலை கொள்ளும் கரடிகளின் செல்வாக்கு மிகும்.மூன்றாம் நாள் அதிக விற்பனை நடக்கும். வாங்கல் விற்றலும் அதிகமாக இருக்கும். போக்கு மாறி விட்டதின் அறிகுறி என்று கொள்ளலாம்.

வணிக வீச்சு - trading range