வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 07, 2016

அமெரிக்க தேர்தலைப் பற்றிய நம் தவறான புரிதல்கள்

அமெரிக்க தேர்தலைப் பற்றிய பெரும்பாலான நம் ஆட்களுக்கு சில தவறான புரிதல்கள் இருக்கு.

அமெரிக்காவும் நம்மளைப் போன்றே  ஒன்றியம் தான். நாம ஒன்றியம் இல்லை என்று சண்டைக்கு வருபவர்கள் ஒன்றிய நிதிநிலை அறிக்கை (UNION BUDGET) என்று ஒன்றிய அரசு ஏன் சொல்லுகிறது என்பது புரிந்தால் சரி.

அமெரிக்காவில மாநிலங்கள் தான் பலமானவை அடுத்து தான் ஒன்றியம். இந்தியாவில் ஒன்றியம் அப்புறம் தான் மாநிலங்கள் சிறு தனிப்பட்ட அதிகாரம் கூட மாநிலங்களுக்கு கிடையாது எல்லாம் ஒன்றிய ராசாவுக்கு அடங்கிய வரி வசூல் மையங்கள்.  அமெரிக்காவில்   ஒன்றிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முறையை மாநிலம் தான் அந்த மாநிலத்துக்கு வகுக்கும். ஒன்றியத்துக்கு வேலை இல்லை.

அமெரிக்க அதிபரை அமெரிக்கர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதாக நாம் நினைத்துக்கொண்டுள்ளோம் அது தவறு. மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் தான் வாக்கு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்

270 தேர்வாளர்கள் வாக்கு கிடைப்பவர்களே அதிபர் ஆக முடியும். மாநிலத்துக்கு மாநிலம் தேர்வாளர்கள் வாக்கு வேறுபடும்.  காட்டாக -  கலிபோர்னியாவுக்கு 55 தேர்வாளர்கள் வாக்கு, பென்சில்வேனியாவுக்கு 20 தேர்வாளர்கள் வாக்கு, புளோரிடாவுக்கு 29 தேர்வாளர்கள் வாக்கு , லூசியானாவுக்கு 8 தேர்வாளர்கள் வாக்கு என்று இருக்கும்.

மெய்ன், நெப்ராசுக்கா தவிர அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலங்களில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்த மாநிலத்துக்கு உரிய தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்கும். காட்டாக - கலிபோர்னியாவில் மற்றவர்களை விட இலாரி அதிக வாக்குகள் பெற்றால் 55 தேர்வாளர்கள் வாக்கும் இலாரிக்கே கிடைக்கும்.

மெய்ன் & நெப்ராசுக்காவில் சிறு மாற்றம். மாநில அளவில் அதிக வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 வாக்குகளும் காங்கிரசு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு (அதிக வாக்குகள் பெறுவோருக்கு) 1 வாக்கும் கிடைக்கும்.

மெய்னில் 2 காங்கிரசு மாவட்டமும் நெப்ராசுக்காவில் 3 காங்கிரசு மாவட்டமும் உள்ளது. மெய்னுக்கு 4 தேர்வாளர்கள் வாக்கும் நெப்ராசுக்காவுக்கு 5 தேர்வாளர்கள் வாக்கும் உள்ளது.

நாம் இலாரி அல்லது திரம்பு அல்லது வேறு வேட்பாளர் யாரும் பிடிக்கவில்லை எனில் நமக்கு பிடித்த ஆள் பெயரை எழுதி அவருக்கு வாக்கு செலுத்தலாம். ஒகையோ மாநிலத்தின் குடியரசு கட்சியை சேர்ந்த  ஆளுநர் குடியரசு கட்சி வேட்பாளர் திரம்புக்கு வாக்களிக்காமல் இத் தேர்தலில் நிற்காத மெக்கெய்னுக்கு வாக்கு செலுத்தியது போல். அவர் அந்த மாநிலத்துக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை.  மெக்கெய்ன் அரிசோனா மாநிலத்துக்காரர்.  மாநில வாரியாகத் தான் கணக்கெடுப்பு நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் தனி சட்டம். அதன் படி தான் தேர்தல் நடக்கும்.

இதே போல் தான் துணை அதிபருக்கும். அதனால் இலாரி வென்றாலும் அவர் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வென்றாக வேண்டும் என்ற அவசியமில்லை. வேறொருவர் கூட துணை அதிபராக வெல்லலாம்.  காட்டாக குடியரசு கட்சியின் பென்சு, இருவரும் (இலாரி\பென்சு) இணைந்து வேலை செய்தாகத்தான் வேண்டும்.

ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் வெற்றி பெற்றதாக கருதுவது தவறு, முன்னமே கூறிய படி 270 தேர்வாளர்களை பெறுபவர் தான் வெற்றி பெருபவர்.  காட்டாக கலிபோர்னியா, டெக்சசு, நியு யார்க், பென்சில்வேனியா, புளோரிடா, இலினாய்சு, ஒகையோ, மிச்சிக்கன், வர்சீனியா, மேரிலாந்து, மாசெசூசெட்சு, போன்ற மக்கள் தொகை மிகுந்த 20 மாநிலங்களில் மட்டும் போட்டியிட்டு ஒருவர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற முடியும். ஆனால் அதிபராக வெற்றிபெற முடியாது.

சிறந்த அண்மைய எடுத்துக்காட்டு 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல். அதில் அல் கோர்  ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றும் சார்ச் புசு 270 தேர்வாளர் வாக்குகள் பெற்றதால் அதிபர் ஆக முடியவில்லை. புளோரிடா கவுத்து விட்டது.  புளோரிடாவில் புசு, அல் கோரை விட 537 வாக்குகள் அதிகம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதிபர் ஆனார். புசுக்கு கிடைத்த தேர்வாளர்கள் வாக்கு 271 அல் கோருக்கு கிடைத்தது 267. அல்கோர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புசை விட 5,43,895 வாக்குகள் ஒன்றிய அளவில் அதிகம் பெற்றிருந்தார்.

பெருங்கட்சிகளான குடியரசு, சனநாயகக்கட்சி வேட்பாளாராக அல்லாமல் மற்றவரும் பெரிய அளவில் வாக்குகள் பெற முடியும் என்பதற்கு இன்னோரு அண்மைய எடுத்துக்காட்டு 1992 ஆம் ஆண்டில் கிளிண்டன் வெற்றி பெறவும் அப்பா புசு அதாவது 2000 அதிபராகிய புசின் தந்தையும் சீனியர் புசு என்று அழைக்கப்படுவரும் தோற்க காரணம் ராசு பெரோட் என்ற கட்சி சாரா வேட்பாளர் ஆவார்.  அதிக வாக்குகள் பெற்றாலும் இவர் எந்த மாநிலத்திலும் அதிக வாக்குகள் பெறாததால் தேர்வாளர்களை பெறவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கே அதிக செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கியில் இதை படியுங்கள் உங்களுக்கு பிடிக்கலாம்

               
அதிபர் வேட்பாளர்ஒன்றிய அளவில் வாக்குஒன்றிய அளவில் %
கிளிண்டன் 44,909,806 43.01
சீனியர் புசு 39,104,550 37.45
ராசு பெரோட் 19,743,821 18.91

திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?

புதன், அக்டோபர் 05, 2011

இலங்கை மீது போர் குற்றம் & மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவையா இல்லையா

வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்று ஒரு கையெழுத்து விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் வெற்றிகரமாவதற்கு 5000 கையெழுத்துகள் தேவை. இது வரை 1547 மட்டுமே விழுந்துள்ளது. இன்னும் 3453 கையெழுத்துகள் தேவை. 5000 கையெழுத்துகள் விழுந்தால் மட்டுமே அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும். நான் குறைந்தது 15,000 கையெழுத்தாவது விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஈழப்படுகொலை தொடர்பாக பதிவுகளில் மக்கள் பொறிந்ததை பார்த்ததால் 5000 கையெழுத்துகளை இன்னேரம் தாண்டி இருக்கும் என நினைத்தேன். இது வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்பம் என்பதால் இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உறுதியாக இருக்கும் அதற்கு அவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தது 5000 கையெழுத்துகள்.
மக்களே உங்கள் கையெழுத்துகளை இந்த இணைப்பில் செலுத்தி அமெரிக்க அரசு போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள். பெரியண்ணன் பேச்சுக்கு மதிப்பு உண்டு, இலங்கையும் பெரியண்ணன் பேச்சை தட்டி எதுவும் செய்யமுடியாது.  குறிப்பாக உங்கள் நண்பர் அமெரிக்காவில் இருந்தால் அவரை கட்டாயம் கையெழுத்து இடச்சொல்லுங்கள்.

https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

WE THE PEOPLE

செவ்வாய், டிசம்பர் 28, 2010

தேசிய மால்

நமக்கு தமிழில் உள்ள கோல் மால் என்றால் என்ன என்று நன்கு தெரியும், மால் கொடுத்தியா என்றால் அதன் பொருளும் புரியும். -

இப்ப அமெரிக்காவ பாத்து நம்பெரு நகர்களிலும் மால் (இது இங்கலிபீசு மால்)நிறைய வந்திருச்சு. நானும் மால் அப்படின்னா பெரிய வணிக வளாகம் அதில் நிறைய கடைகள் இருக்கும் என்று புரிந்து வைத்திருந்தேன். நானும் பல மால்களுக்கு பொருட்கள், துணிகள் வாங்க சென்றிருக்கறேன்.  அமெரிக்காவின் பெரிய மால் புளூமிங்டன் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்கா அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அமெரிக்காவின் தேசிய மால் அப்படி கிடையாது சொல்லப்போனா அது மாலே கிடையாது. அது ஒரு வெட்ட வெளி.


தேசிய மால் படம்:-  அமெரிக்க காங்கிரசு கட்டடம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது லிங்கன் நினைவகம். 

எனக்கு இது மொதல்ல தெரியல. அமெரிக்க விடுதலை தினத்தன்று அமெரிக்காவின் கிட்டதட்ட எல்லா ஊர்லயும் வாண வாடிக்கை நடக்கும். நான் இருந்த ஊர்லயும் நடந்திச்சு அதை கண்டு நான் வாய பொழந்தப்ப  பக்கத்திலிருந்த நண்பர் வாசிங்டன் டிசில நடக்கும் வாண வேடிக்கை பெருசா இருக்குமுன்னார். அடுத்த ஆண்டு அங்க போங்கன்னு சொன்னார். அந்த வாண வேடிக்கை தேசிய மால்ல தான் நடத்துவாங்கன்னு கூட வேலை செய்யறவங்க சொன்னாங்க.. மால்ல எப்படி வாண வேடிக்கைன்னு நினைச்சேன். மால்ல எப்படின்னு கேட்டேன், அதுக்கு மால் பெரிசா இருக்கறதால அங்க தான் பட்டாசு கொளுத்துவாங்கன்னு சொல்லிட்டாங்க.. நான் மாலில் ஏன் என்று ஏன் கேக்கறன்னு அவங்களுக்கு புரியலை. திருப்பி திருப்பி மால பத்தி கேட்டா நல்லா இருக்காதுன்னு அதைப்பத்தி கேக்கறத விட்டுட்டேன். நம்ம மரியாதையை நாமே கெடுத்துக்கலாமா?  எப்படி போகனும் எங்க உட்கார்ந்தா வாண வேடிக்கை நல்லா தெரியும் என்று எல்லா விவரத்தையும் கூட வேலை செய்யும் மக்கள் சொல்லிட்டாங்க. வாசிங்டன் டி.சி-யில் வாண வேடிக்கைக்கு போகாதது தான் பாக்கி. எனக்கு மால்ல எப்படி? அப்படிங்கற சந்தேகம் மட்டும் தீரவேயில்லை.

சூலை 4-லும் வந்தது. மெட்ரோ ஏறி (அதாங்க local train) வாசிங்டன் நினைவுத்தூண் போயி லிங்கன் நினைவகத்தை பார்க்கற மாதிரி துண்ட போட்டு எடத்தை புடிச்சேன். நமக்கு முன்னாடியே பல பேர் குடும்பத்தோட வந்து துண்டு மன்னிக்க சமக்காளத்தையே போட்டு இடத்தை புடிச்சிருந்தாங்க. நாற்காலி, தண்ணி, தின்பண்டம், போர்வை என்று அனைத்து வசதிகளோடும் முகாம் போட்டிருந்தாங்க. நேரம் ஆக ஆக கூட்டம் நிறைய வந்தது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். சிறுநீர் கழிக்கவும் ஆய் போகவும் தற்காலிக கழிவறைகளை அமைத்திருந்தனர். கூட்டம் நிறைய வர இடத்துல இது முக்கியம் இல்லைன்னா இடம் நாறிடும்.


தேசிய மால் படம்:-  லிங்கன் நினைவகம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது அமெரிக்க காங்கிரசு கட்டடம்.

தேசிய மால் அப்படிங்கிறது லிங்கன் நினைவகத்திலுருந்து அமெரிக்க காங்கிரசு கட்டடம் வரை உள்ள வெட்ட வெளி தான். இதன் நீளம் கிட்டதட்ட 3 கி.மீ.  லிங்கன் நினைவகத்துக்கும் அமெரிக்க காங்கிரசு கட்டடத்துக்கும் இடையில் வாசிங்டன் நினைவுத்தூண் இருக்கு. லிங்கன் நினைவகத்துக்கு முன்னாடி செவ்வக வடிவில் குளம் உள்ளது. (ஆழம் குறைவு அதனால வாத்த தவிர யாரும் நீச்சல் அடிக்க முடியாது) வாசிங்டன் நினைவுத்தூணின் நிழல் இதில் விழும் அதனால இதை எதிரொலிக்கும் குளம் (reflecting pool) அப்படின்னு சொல்லுவாங்க. வாசிங்டன் நினைவுத்தூணில் இருந்து வலது பக்கதில்  வெள்ளை மாளிகை இருக்குது.

வாண வேடிக்கை நடக்கறப்ப இந்த குளத்து தண்ணிய காலி செய்து அங்கிருந்து தான் வாண வேடிக்கை நடத்துவாங்க. அதனால லிங்கன் நினைவகத்தை நோக்கி வாசிங்டன் நினைவுத்தூண் பக்கம் உட்கார்ந்து பார்த்தா வாண வேடிக்கை நல்லா தெரியும். 20 நிமிடம் நடக்கும் இந்த வாண வேடிக்கை நல்லாவே இருக்கும்.

அறிவது: எல்லா மாலும் மாலல்ல.

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

EAD கிடைப்பதில் தாமதம்.

அமெரிக்காவில் EAD எனப்படும் வேலை செய்ய அனுமதி அட்டை இருந்தால் விசா இல்லாமல் வேலை செய்யமுடியும் அதாவது பச்சை அட்டை மாதிரி ஆனால் பச்சை அட்டை கிடையாது. 
பச்சை அட்டைக்கு முன் இது கொடுப்பார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமாகும் போது இதை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். இது பற்றி விளக்கினால் நிறைய சொல்லவேண்டி இருக்கும் அதனால் இந்த சுருக்கம் போதும்.

நம்ம மக்கள் நிறைய பேர் இப்ப EAD-ல் வேலை செய்கிறார்கள். பச்சை அட்டை கிடைக்க தாமதமானால் EADஐ புதுபித்துக்கொள்ள வேண்டும். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்ததை இரு ஆண்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இரு ஆண்டுகளுக்கு புதுபிப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஒரு ஆண்டு உறுதி.

EAD காலாவதி ஆவதற்குள் அடுத்த EAD வாங்கிவிட வேண்டும். வழக்கமா EADஐ புதுபிக்க விண்ணபித்தால் விரைவில் கிடைத்துவிடும். இவ்வளவு காலமா இப்படி தான் இருந்தது.

இப்ப புதுபிக்கும் EAD கிடைக்க தாமதமாகிறது. EAD இல்லாட்டி வேலை செய்யமுடியாது. 60 நாட்களுக்கு முன் விண்ணபித்தவர்கள் பலருக்கு இன்னும் புது EAD வராததால் அவர்கள் வேலை செய்யமுடியாத நிலை.சிலருக்கு 75 நாட்கள் ஆனதாக கேள்வி.

எனவே மக்களே நீங்களோ உங்கள் நண்பரோ EADஐ புதுபிப்பதாக இருந்தால் 120 நாட்களுக்கு முன் விண்ணபித்து விடுங்கள்.

செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)