அமெரிக்காவும் நம்மளைப் போன்றே ஒன்றியம் தான். நாம ஒன்றியம் இல்லை என்று சண்டைக்கு வருபவர்கள் ஒன்றிய நிதிநிலை அறிக்கை (UNION BUDGET) என்று ஒன்றிய அரசு ஏன் சொல்லுகிறது என்பது புரிந்தால் சரி.
அமெரிக்காவில மாநிலங்கள் தான் பலமானவை அடுத்து தான் ஒன்றியம். இந்தியாவில் ஒன்றியம் அப்புறம் தான் மாநிலங்கள் சிறு தனிப்பட்ட அதிகாரம் கூட மாநிலங்களுக்கு கிடையாது எல்லாம் ஒன்றிய ராசாவுக்கு அடங்கிய வரி வசூல் மையங்கள். அமெரிக்காவில் ஒன்றிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முறையை மாநிலம் தான் அந்த மாநிலத்துக்கு வகுக்கும். ஒன்றியத்துக்கு வேலை இல்லை.
அமெரிக்க அதிபரை அமெரிக்கர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதாக நாம் நினைத்துக்கொண்டுள்ளோம் அது தவறு. மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் தான் வாக்கு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்
270 தேர்வாளர்கள் வாக்கு கிடைப்பவர்களே அதிபர் ஆக முடியும். மாநிலத்துக்கு மாநிலம் தேர்வாளர்கள் வாக்கு வேறுபடும். காட்டாக - கலிபோர்னியாவுக்கு 55 தேர்வாளர்கள் வாக்கு, பென்சில்வேனியாவுக்கு 20 தேர்வாளர்கள் வாக்கு, புளோரிடாவுக்கு 29 தேர்வாளர்கள் வாக்கு , லூசியானாவுக்கு 8 தேர்வாளர்கள் வாக்கு என்று இருக்கும்.
மெய்ன், நெப்ராசுக்கா தவிர அனைத்து மாநிலங்களும் அந்த மாநிலங்களில் யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்த மாநிலத்துக்கு உரிய தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்கும். காட்டாக - கலிபோர்னியாவில் மற்றவர்களை விட இலாரி அதிக வாக்குகள் பெற்றால் 55 தேர்வாளர்கள் வாக்கும் இலாரிக்கே கிடைக்கும்.
மெய்ன் & நெப்ராசுக்காவில் சிறு மாற்றம். மாநில அளவில் அதிக வாக்குகள் பெறுபவர்களுக்கு 2 வாக்குகளும் காங்கிரசு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு (அதிக வாக்குகள் பெறுவோருக்கு) 1 வாக்கும் கிடைக்கும்.
மெய்னில் 2 காங்கிரசு மாவட்டமும் நெப்ராசுக்காவில் 3 காங்கிரசு மாவட்டமும் உள்ளது. மெய்னுக்கு 4 தேர்வாளர்கள் வாக்கும் நெப்ராசுக்காவுக்கு 5 தேர்வாளர்கள் வாக்கும் உள்ளது.
நாம் இலாரி அல்லது திரம்பு அல்லது வேறு வேட்பாளர் யாரும் பிடிக்கவில்லை எனில் நமக்கு பிடித்த ஆள் பெயரை எழுதி அவருக்கு வாக்கு செலுத்தலாம். ஒகையோ மாநிலத்தின் குடியரசு கட்சியை சேர்ந்த ஆளுநர் குடியரசு கட்சி வேட்பாளர் திரம்புக்கு வாக்களிக்காமல் இத் தேர்தலில் நிற்காத மெக்கெய்னுக்கு வாக்கு செலுத்தியது போல். அவர் அந்த மாநிலத்துக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மெக்கெய்ன் அரிசோனா மாநிலத்துக்காரர். மாநில வாரியாகத் தான் கணக்கெடுப்பு நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் தனி சட்டம். அதன் படி தான் தேர்தல் நடக்கும்.
இதே போல் தான் துணை அதிபருக்கும். அதனால் இலாரி வென்றாலும் அவர் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் வென்றாக வேண்டும் என்ற அவசியமில்லை. வேறொருவர் கூட துணை அதிபராக வெல்லலாம். காட்டாக குடியரசு கட்சியின் பென்சு, இருவரும் (இலாரி\பென்சு) இணைந்து வேலை செய்தாகத்தான் வேண்டும்.
ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் வெற்றி பெற்றதாக கருதுவது தவறு, முன்னமே கூறிய படி 270 தேர்வாளர்களை பெறுபவர் தான் வெற்றி பெருபவர். காட்டாக கலிபோர்னியா, டெக்சசு, நியு யார்க், பென்சில்வேனியா, புளோரிடா, இலினாய்சு, ஒகையோ, மிச்சிக்கன், வர்சீனியா, மேரிலாந்து, மாசெசூசெட்சு, போன்ற மக்கள் தொகை மிகுந்த 20 மாநிலங்களில் மட்டும் போட்டியிட்டு ஒருவர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற முடியும். ஆனால் அதிபராக வெற்றிபெற முடியாது.
சிறந்த அண்மைய எடுத்துக்காட்டு 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல். அதில் அல் கோர் ஒன்றிய அளவில் அதிக வாக்குகள் பெற்றும் சார்ச் புசு 270 தேர்வாளர் வாக்குகள் பெற்றதால் அதிபர் ஆக முடியவில்லை. புளோரிடா கவுத்து விட்டது. புளோரிடாவில் புசு, அல் கோரை விட 537 வாக்குகள் அதிகம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதிபர் ஆனார். புசுக்கு கிடைத்த தேர்வாளர்கள் வாக்கு 271 அல் கோருக்கு கிடைத்தது 267. அல்கோர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புசை விட 5,43,895 வாக்குகள் ஒன்றிய அளவில் அதிகம் பெற்றிருந்தார்.
பெருங்கட்சிகளான குடியரசு, சனநாயகக்கட்சி வேட்பாளாராக அல்லாமல் மற்றவரும் பெரிய அளவில் வாக்குகள் பெற முடியும் என்பதற்கு இன்னோரு அண்மைய எடுத்துக்காட்டு 1992 ஆம் ஆண்டில் கிளிண்டன் வெற்றி பெறவும் அப்பா புசு அதாவது 2000 அதிபராகிய புசின் தந்தையும் சீனியர் புசு என்று அழைக்கப்படுவரும் தோற்க காரணம் ராசு பெரோட் என்ற கட்சி சாரா வேட்பாளர் ஆவார். அதிக வாக்குகள் பெற்றாலும் இவர் எந்த மாநிலத்திலும் அதிக வாக்குகள் பெறாததால் தேர்வாளர்களை பெறவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கே அதிக செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கியில் இதை படியுங்கள் உங்களுக்கு பிடிக்கலாம்
அதிபர் வேட்பாளர் | ஒன்றிய அளவில் வாக்கு | ஒன்றிய அளவில் % |
---|---|---|
கிளிண்டன் | 44,909,806 | 43.01 |
சீனியர் புசு | 39,104,550 | 37.45 |
ராசு பெரோட் | 19,743,821 | 18.91 |