வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஜனவரி 09, 2012

அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு

நவம்பர் 2012ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் சனநாயக கட்சி சார்பாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுவார் /போட்டியிடுகிறார்.  அவரை எதிர்த்து நிற்க ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில்(உட்கட்சி தேர்தல்) குடியரசு கட்சி உள்ளது.

உட்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று யார் ஒபாமாவை எதிர்க்க போகிறார் அப்படிங்கிற எதிர்பார்ப்பு தினமும் கூடிக்கிட்டே இருக்கு. நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாக காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. இவர் தான் முன்னனியில் இருக்காருன்னு யாரையும் சொல்லமுடியலை. ஆனா சீரா எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  மிட் ராம்னி முன்னனியில் இருக்கார் ஆனா அவர் ஆதரவு பெரிய அளவில் இல்லை அதனால அவர் தான் வெற்றி பெறுவார் அப்படின்னு யாராலும் சொல்ல முடியலை. "Anybody but Romney" - ராம்னிய தவிர யாரு வேண்டுமானாலும் சரி- அப்படின்னு பலம் வாய்ந்த கிருத்துவ பழமைவாதிகள் குழு குடியரசு கட்சியில் இருக்கு. ராம்னிக்கு மாற்றா வேற ஆள அவங்க தேடறாங்க, அவங்க யாராவது ஒருத்தரை ஆதரிக்க முடிவு எடுத்தா ராம்னி காலி.

ராம்னியும் கிருத்துவர் தான் ஆனா அவர் மொர்மன் என்ற பிரிவை சார்ந்தவர். அது தான் அவருக்கு சிக்கலே. பெரும்பாலான குடியரசு கட்சிகாரர்கள் சீர்திருத்த சபையை(புரட்டதசுட்டன்\ Protestant) சார்த்த கிருத்துவர்கள். எவங்கலிசம் , பாப்டிசம், பெத்தகொசுத்தே,  மற்ற பிரிவுகள் எல்லாம் இதுல வருது. இவங்களுக்கு மொர்மன் பிரிவை சுத்தமா பிடிக்காது. சில பேர் அவங்க கிருத்துவர்களே அல்ல அப்படிப்பாங்க.

டீ பார்ட்டி
டீ பார்ட்டி குழு என்று திடீர்ன்னு ஒன்று 2009 வாக்குல குடியரசு கட்சியில் முளைத்தது. இவர்களை ஆரம்பத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட குடியரசு கட்சிக்காரங்க கண்டுக்கலை. ஆனா இவங்களை மீறி கொட்டை போட்ட ஆட்களால் பிரைமரி எனப்படும் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. இவங்க பலம் 2010 காங்கிரசு மற்றும் செனட் தேர்தலில் நன்கு வெளிப்பட்டது. இப்ப குடியரசு கட்சி கீழவையான காங்கிரசில் பெரும்பான்மை பெற்று இருக்குன்னா அதுக்கு டீ பார்ட்டி குழு தான் காரணம்.

ஆரம்பத்தில் இருந்த நிலை

டீ பார்ட்டி முதலில் மிச்சால் பாக்மன் அவர்களை ஆதரித்தது. அவர் முன்னனியில் இருந்தார், ரிக் பெர்ரி வந்தவுடன் எல்லாரும் அவரை ஆதரித்ததால் மிச்சால் பாக்மன் முன்னிலை தகர்ந்தது. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட குடியரசு கட்சி போட்டியாளர்க்கிடையேயான தருக்கத்தில் மோசமாக செயல் பட்டதால் (பலமுறை) இவரின் முன்னனி தகர்ந்தது. தருக்கத்தில் 9-9-9 என்று வரி விதிப்பு பற்றி எளிமையாக விளக்கியதால் கெர்மன் கெய்னுக்கு ஆதரவு பெருகியது. இதை அவரே எதிர்பார்க்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு காரணமாக இவரின் ஆதரவு குறைந்தது. ராம்னிக்கு எதிரா உறுதியான வேட்பாளர் வேண்டும் என்பதால் நியுட் கிங்ரிச்க்கு ஆதரவு கூடியது. ஆரம்பத்தில் இவரின் போக்கு பிடிக்காமல் இவரின் குழுவில் பலர் விலகியதும் நடந்தது. இவரு போட்டி போடறது தண்டம் என்று பலர் நினைத்திருக்க திடீர் என்று இவருக்கு ஆதரவு பெருகியது.  பிரடி மே என்ற வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்திற்கு ஆலோசனை சொன்னதற்கு கூலியாக 1.5 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றது வெளியில் வந்ததால் இவரின் ஆதரவு குறைந்தது (அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டதில் இவ்வகையான வீட்டுக்கடன் கொடுத்த நிறுவனங்களும் காரணம், சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் கடன் கொடுத்தா கொடுத்த காசு திரும்பி வருமா), ராம்னிக்கு மாற்றாக யாரை ஆதரிக்கலாம் என்று பழமைவாதிகள் தடுமாறிக்கிட்டு இருந்தாங்க. ரான் பவுல் என்பவரை ஆதரிப்பது கடினம். ரான் பவுல் சுதந்திரவாதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவர். தாராண்மியவாத கொள்கையை கடைபிடிப்போர் அவரின் ஆதரவாளர்கள், இவர்கள் பெரும்பான்மையாக இல்லாவிடிலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். திடீர்ன்னு பென்சில்வேனியா மாநிலத்தின் சார்பாக அமெரிக்க மேலவையில்  செனட்டராக இருந்த ரிக் சாண்ட்ரமுக்கு ஆதரவு பெருகியது.

அயோவா
இந்நிலையில் உட்கட்சி தேர்தல் முதலில் நடைபெறும் அயோவா மாநிலத்தின் caucus நெருங்கி வந்தது.  caucus என்றால்  வேட்பாளரை தீர்மானிக்க சந்திக்கும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் என சொல்லலாம். அயோவா மாநிலத்தில் நடந்த வாக்கெடுப்பில் ராம்னி முதல் இடத்தையும் ரிக் சாண்ட்ரம் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்கள். வேறுபாடு 8 வாக்குகள் மட்டுமே. ரான் பவுல் மூன்றாவது இடத்தை பிடித்தார். ராம்னி 30,015 சாண்ட்ரம்  30,007, ரான் பவுல் 26,219 வாக்குகளும் பெற்றனர். 4வது இடம் பிடித்த கிங்ரிச் ராம்னிக்கு எதிராகவும் ரான் பவுலுக்கு எதிராகவும் தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளார். 5வது இடம் பிடித்த ரிக் பெர்ரி வாங்கடா தென் கரோனிலாவுக்கு (இது பழமைவாதிகள் நிறைந்த மாநிலம்) அங்க பார்க்கலாமுன்னு சொல்லிட்டார். 6வது இடம் பிடித்த மிச்சால் பாக்மன் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

 அயோவுக்கு அடுத்து
இந்நிலையில் அயோவாவில் கலந்துக்காத ஜோ ஹண்ட்சுமேன்  நியு ஹாம்சுபியர் மாநில உட்கட்சி தேர்தலில் கலந்துக்கறார். இவரும் மோர்மன் பிரிவை சார்ந்த கிருத்துவர். பழமைவாதிகளின் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களுக்கு சிதறியதால் தான் ராம்னி அயோவாவில் வெற்றி பெற்றார் என்பதால் பழமைவாதிகள் அனைவரும் ஒரே வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என சில பழமைவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் சாண்ரோமை ஆதரிப்பது சிறந்தது எனவும் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு கூறியுள்ளனர்.  நியு ஹாம்சுபியர் தேர்தலில் ராம்னி வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இவர் பக்கத்து மாநிலமான மாசசூட்ச்சசின் ஆளுனராக இருந்தவர் அதனால் இப்பகுதியில் இவருக்கு மற்றவர்களை விட செல்வாக்கு அதிகம். ஆனால் அவரின் உண்மையான சோதனைக்கட்டம் அதற்கடுத்த தேர்தல்களில் தான் இருக்கிறது.

வர்ஜீனியா கூத்து
வர்ஜீனியா மாநில தேர்தலில் கலந்துக்க மிட் ராம்னி, ரான்  பவுல் ஆகிய இருவர் மட்டுமே தகுதிபெற்று இருக்காங்க, மற்றவங்க எல்லாம் ஆட்டத்துக்கு சேர்த்துக்கப்படலை. கிங்ரிச் இப்ப வாசிங்டன் டிசி பெருநகரத்தின் எல்லையில் வர்ஜீனியாவில் மெக்லீன் என்ற இடத்தில் 1999 ல் இருந்து வசிக்கிறார்.வர்ஜீனியா குடியரசு கட்சி சட்டப்படி 10,000 வர்ஜீனியா வாக்காளர்களின் கையெழுத்தை பெற்று குடுத்திருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் கலந்துக்கமுடியும். இதை உரிய காலத்திற்குள் செய்தவர்கள் இருவர் மட்டுமே. செய்யாத மற்றவங்க இப்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காங்க.

குடியரசு கட்சி ஆதரவாளரான என் நண்பனிடம் யாருடா வருவாங்க அப்படின்னு கேட்டேன். மிட் ராம்னி தான் கடைசியில் வெற்றிபெறுவார் பாரேன் அப்படின்னான். பார்க்கலாம். எனக்கென்னமோ நம்பிக்கையில்லை, 2008 குடியரசு கட்சி உட்கட்சி தேர்லை மறக்கமுடியுமா?

12 கருத்துகள்:

குறும்பன் சொன்னது…

எதிர் பார்த்த மாதிரியே ராம்னி நியு ஹாம்சியரில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தென் கரோலினாவிலும் புளோரிடாவிலும் எப்படி என்று பார்ப்போம், கதையே அங்க தான் ஆரம்பமாகுது.

ராம்னி - 39% (97,042)
பவுல் - 23% (56,403)
ஹண்ட்சுமேன் - 17% (41,669)
கிங்ரிச் = 9% (23,271)
சாண்ட்ரம் = 9% (23,118)
பெர்ரி = 1% (1,752)

பழமைபேசி சொன்னது…

பராக் ஒபாமா? அவர்தான் வெல்வாரு...

குறும்பன் சொன்னது…

பழமைவாதிகள் கொண்டாடிய டெக்சாசு பிச்து ரிக் பெர்ரி தென் கரோலினா போட்டியில் இருந்து கழுன்டுகிட்டு நியுட் கிங்ரிச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். ஹண்ட்சுமேன் போட்டியில் இருந்து கழுன்டுகிட்டு ராம்னிக்கு ஆதரவு தெரிவித்தார். கிங்ரிச் இங்கு முதல் இடத்தையும் ராம்னி 2-ம் இடத்தையும் பிடித்தார்கள்.

கிங்ரிச் 243,155 40.4%
ராம்னி 167,279 27.8%
சாண்ட்ரம் 102,055 17%
பவுல் 77,993 13%

குறும்பன் சொன்னது…

ஏய்யா கிங்ரிச்சுக்கு வாக்கு போட்டன்னு கேட்டதுக்கு நிறைய பேர் ஒபாமாவை எதிர்க்க mean ஆளு தான் வேணுமாம். கிங்ரிச்ச அடிச்சுக்க இதில் யாராலயும் முடியாதாம். நல்ல தகுதி.

mean -கீழ்த்தரமான, இழிந்த --சுருக்கமா மோசமான ஆளுன்னு பொருள். don't be mean. அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்களே.

bandhu சொன்னது…

கொஞ்சம் கொஞ்சமா நம் நாட்டு நிலைமைக்கு வந்துவிட்டார்கள், தேர்தலில் ரௌடியை நிறுத்துவது போல.. நம் ஊரில் தான் இது போன்ற அடாவடி ஆட்களுக்கு பெரும் மதிப்பு! இப்போது அமெரிகவிலுமா!

குறும்பன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
குறும்பன் சொன்னது…

ஆமாங்க பழமை, குடியரசு கட்சி(GOP)யில் நடக்கும் கூத்த பார்த்தா பராக் ஒபாமா சுலபமா வென்றிடுவார்ன்னு தான் தோணுது.

குறும்பன் சொன்னது…

bandhu அரசியல்ன்னு வந்துட்டா இதெல்லாம் சாதாணரம்ப்பா. இப்ப தான் நமக்கு தெரியுது! இன்னும் பல மாநிலங்களில் தேர்தல் உள்ளதே. இது குடியரசு கட்சிகாரங்க மட்டும் கலந்துக்கிற தேர்தல். மோசமான\கேவலமான ஆளுன்னா பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது மிகக்கடினம்.

குறும்பன் சொன்னது…

புளோரிடாவில் நடந்த தேர்தலில் ராம்னி வெற்றி பெற்றுள்ளார்.

ராம்னி - 46.4% (771,842)
கிங்ரிச் = 31.9% (531,294)
சாண்ட்ரம் = 13.4% (222,248)
பவுல் - 7% (116,776)

குறும்பன் சொன்னது…

நவாடாவில் நடத்த caucusல் ராம்னி வெற்றி பெற்றார்.

ராம்னி - 50.1% (16,486)
கிங்ரிச் - 21.1% (6,956)
பவுல் - 18.8% (6,175)
சாண்ட்ரம் - 10% (3,277)

குறும்பன் சொன்னது…

கொலராடோ caucus ல் சாண்ட்ரம் வெற்றி பெற்றார். 2008ல் ராம்னி இங்கு வெற்றி பெற்றார் என்பது குறிபிடத்தக்கது. அப்ப 60% வாக்குகளை பெற்றிருந்தார்.
சாண்ட்ரம் - 40.2% (26,372)
ராம்னி - 34.9% (22,875)
கிங்ரிச் - 12.8% (8,394)
பவுல் - 11.8% (7,713)

மிசௌரி பிரைமரி தேர்தலில் சாண்ட்ரம் வெற்றி பெற்றார். இப்ப நடந்த தேர்தல் அழகு போட்டி மாதிரி, மார்ச் 17ல் நடக்கும் caucusல் தான் வேட்பாளரை தேர்வு செய்யும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சாண்ட்ரம் - 55.2% (138,957)
ராம்னி - 25.3% (63,826)
பவுல் - 12.2% (30,641)

மின்னசோட்டா caucusல் சாண்ட்ரம் வெற்றி பெற்றார்.

சாண்ட்ரம் - 44.9% (21,703)
பவுல் - 27.1% (13,099)
ராம்னி - 16.9% (8,147)
கிங்ரிச் - 10.8% (5,197)

கிங்ரிச் சிறந்த பழமைவாதி அல்ல சிறந்த ஆள் நான்தான் அப்படின்னு சாண்ட்ரம் வெற்றி சொல்லுது இனி எடுபடலாம். இனி வரும் தேர்தல்களில் கிங்ரிச் பெறுவாரியான பழமைவாதிகள் வாக்குகளை பெறுவதில் சிக்கலாகலாம்.

குறும்பன் சொன்னது…

மெய்ன் மாநிலத்தின் caucusல் ராம்னி வெற்றி பெற்றார்.
ராம்னி - 39% (2,190)
பவுல் - 36% (1,996)
சாண்ட்ரம் = 18% (989)

சில கவுண்டிகளில் (நம்ம மாவட்டம் மாதிரி) மோசமான வானிநிலை காரணமா caucus நடக்கவேயில்லை ஆனாலும் ராம்னி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதை பவுல் குழு கண்டித்துள்ளது.