வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஏப்ரல் 15, 2010

விக்கிப்பீடியா போட்டி.

தமிழில் விக்கிப்பீடியா இருப்பது வலைப்பதிவர்கள் அனேகருக்கு தெரியும். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. தமிழ் இணைய மாநாட்டை சார்ந்தவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளார்கள். கட்டுரை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. இதில் வெளிநாட்டிலுள்ள கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.  உங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களுக்கு இத்தகவலை சொல்லி அவர்களை போட்டியில் கலந்துக்க சொல்லுங்க. மேலும் விபரங்களுக்கு விரிவான தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அனுகவும்.



மேல் இருக்கும் போட்டி கல்லூரி மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு? இப்போதைக்கு மற்றவர்களுக்கு போட்டியெல்லாம் இல்லை.  ஆனா நீங்க உதவலாம். நீங்க தான் உதவமுடியும். தமிழ் விக்கிப்பீடியா என்பது எனக்கோ உங்களுக்கோ உரிமையானது அல்ல. இது நம் அனைவருக்கும் உரிமையானது. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தொடங்கினால் நீங்களும் அதன் அங்கம். ஏதாவது பிழைகள் தென்பட்டால் நீங்கள் திருத்தலாம். அடுத்தவங்க அதை சரி செய்யட்டும் என காத்திருக்க தேவையில்லை. அங்கு பங்களிக்கும் எல்லோரும் நம்மளைப்போன்றோரே. யார் என்ன மாற்றம் செய்தாலும் அது பதிவாகிவிடும். தவறுதலாக நீக்கிவிட்டால் அதை மீட்டுவிடலாம். கட்டுரையின் வரலாறு என்ற tabல் யார் எப்போ என்ன எழுதினார்கள் என்ற விபரம் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவர்கள் நிறைய பங்களிக்கலாம். ஏன்னா இவங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியும்.  நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனா பங்களித்திருக்கமாட்டார்கள். ஏதோ ஓர் சிறு தடை. என்னய்யா அது? அதான் புரியமாட்டிக்குது.

சில பேர் விக்கிப்பீடியாவில் பங்களித்தால் எனக்கு என்ன லாபம் என்று கேட்பார்கள். உங்களுக்கு பொருளாதார அளவில் லாபம் ஏதும்  இருக்காது ஆனால் நீங்க எழுதும் கட்டுரையை படிக்கும் வாசகருக்கு பயன் இருந்தால் அது தான் உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி.

நான் எழுதுனது வேற இப்ப இருக்கறது வேற கட்டுரை என்பது விக்கிப்பீடியா கொள்கை பற்றி அறியாததால் எழும் கேள்வி. விக்கிப்பீடியாவில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் உரிமை கோர முடியாது. அது எல்லோருக்கும் பொதுவானது. அடுத்தவர் எழுதிய கட்டுரையிலும் நீங்கள் திருத்தம் செய்யலாம். மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அக்கட்டுரையை வளர்த்தெடுக்கலாம். இது ஒரு கூட்டுழைப்பு.

வலைப்பதிவில் எழுதும் நடையில் எழுதக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் எழுதவேண்டும். அதற்கான சுட்டிகளை இணைக்கவும். இதை மற்றவர்கள் சரிபார்த்துக்கொள்ள உதவும்.

எழுத்துப்பிழையை திருத்தலாம், தகவல் தவறென்றால் அதை திருத்தலாம், ஆதாரங்களை சேர்க்கலாம், படங்களை இணைக்கலாம், தெரிந்த தகவல்களை சேர்க்கலாம் லாம் லாம் லாம் எவ்வளவோ செய்யலாம்.

வலைப்பதிவில் தலைவர்களை பற்றிய பல இடுகைகளை பார்த்துள்ளேன். அவற்றை நீங்கள் இணையத்திலோ, புத்தகத்திலோ படித்து தான் எழுதியிருப்பீர்கள். நீங்கள் அத்தலைவரை பற்றி விக்கிப்பீடியாவில் ஏன் எழுதக்கூடாது? மேற்கோள்களையும் கொடுத்தால் நீங்கள் எழுதிய கட்டுரையின் நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும். இங்கு எழுதினால் பலரைச் சென்றடையும் அல்லவா?

உங்க ஊரைப்பற்றி மற்றவரை விட உங்களுக்கு தான் நல்லா தெரியும்.  உங்கள் ஊரைப்பற்றி எழுதலாம். எல்லா ஊர்களைப்பற்றிய தகவல்களும் விக்கிப்பீடியாவில் உண்டு ஆனால் விரிவான தகவல்கள் சில ஊர்களுக்கு தான் உள்ளது. உங்களுக்கு பிடித்தமான தலைப்பிலோ அல்லது துறை சார்ந்த கட்டுரைகளோ எழுதலாம். தமிழில் எழுதவேண்டிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

சிறுக சிறுக தகவல்களை சேர்க்கலாம். தவறில்லை. உங்களிடம் உள்ள சிறு தடையை உடைத்து மடை திறந்த வெள்ளமாக அல்லாவிடினும் வயலுக்கு பாயும் சிறிய வாய்காலாகவாவது அல்லது சென்னை குழாய் தண்ணி அளவாவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள். அது நாம் தமிழ் சமூகத்துக்கு செய்யும் பெரும் உதவி.


.
.

6 கருத்துகள்:

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

குறும்பன், விக்கிப்பீடியான்னு பதிவில் எழுதினால், பின்னூட்டம் கூட வராது போலிருக்கே !

நிற்க. நல்ல கருத்தைத் தான் சொல்லி இருக்கீங்க. இனி வரும் காலத்தில் நிறையப் பங்களிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்போம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

//விக்கிப்பீடியான்னு பதிவில் எழுதினால், பின்னூட்டம் கூட வராது போலிருக்கே !//

:(

நட்சத்திர வாரத்தில் இது பற்றி எழுதியது சிறப்பு.

குறும்பன் சொன்னது…

விக்கிப்பீடியான்னு சொன்னா பின்னூட்டம் போட கூட சிறு தடை வந்திடும் போல இருக்கு. :-))

பின்னூட்டத்துக்கு பதிலா விக்கிப்பீடியாவில் இரண்டு கட்டுரை எழுதுனாங்கன்னா போதும்.

//வரும் காலத்தில் நிறையப் பங்களிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்போம். //

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு.

குறும்பன் சொன்னது…

நன்றி இரவிசங்கர்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வணக்கம்,

தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

போட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி,

இரவி.

குறும்பன் சொன்னது…

இரவி இது ஊக்கம் தரும் செய்தி. எல்லோரையும் அழைப்போம். வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசு இருக்குங்க.