போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.
இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.
ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.
போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.