வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், பிப்ரவரி 08, 2016

பண்பாட்டு மாற்றம்

கிராமத்தில் உள்ள அத்தை வீட்டிற்கு மாரியம்மன் திருவிழாவுக்கு போயிருந்தேன்.  எட்டு ஊரு மக்களுக்கு அதான் மாரியாயி. மாரியம்மன் திருவிழா தான் அவங்க கொண்டாடும் பெரிய விழா. அதனால நிறைய சொந்தங்களையும் அழைத்திருந்தார்கள். நாடகம் போட்டிருந்தாங்க நாடகத்தில் அத்தை பையனுக்கு பெண் வேடம். நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்தோம் அந்த நேரத்திலயும் வீட்டில் பெண்கள் அரட்டை ஓயவில்லை. எப்பவும் இல்லாம இன்று மட்டும் கோம்பை ஆயாவிடம் உள்ள வேறுபாடு தெரிந்தது. தூங்கும் போது மண்டையை கசக்கியும் அது என்னான்னு தெரியலை.

எல்லோரும் அத்தை வீட்டை விட்டு கிளம்பிட்டோம். ஆனா எனக்கு கோம்பை ஆயாவின் வேறுபாடு குறித்து ஒரே சிந்தனை.  மூன்று நாள் கழித்து கண்டுபிடித்து விட்டேன். அதாவது கோம்பை ஆயா மார்புக்கச்சையாகிய சா(ஜா)க்கெட் அணிந்திருந்தார். அவர் வயது ஒத்த மற்ற ஆயாக்களிடம் மார்புக்கச்சை அணியும் பழக்கம் இல்லை. பதில் சொல்ல தகுதியான என் ஆயாவிடம் கோம்பை ஆயாவின் வேறுபாட்டைப் பற்றி கேட்டேன்.
கோம்பை தாத்தா திருமணத்துக்கு முன் மலேசியாவில் வேலை செய்துள்ளார். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே தாயகம் வந்துள்ளார். இங்குள்ள விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு இனி மலேசியா போகும் எண்ணமில்லைன்னு சொல்லியிருக்கார்.

அவரின் சொந்தங்களும் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தனர். பெண் வீட்டாரிடம் மாப்பிளையின் முடிவை சொல்லி பெண் கேட்டு அது திருமணத்தில் முடிந்து விட்டது.

 கோம்பை ஆயாவுக்கு திருமணமான மூன்று  ஆண்டுகளில் கோம்மை தாத்தாவுக்கு இங்க உள்ள விவசாய வருமானம் போதாம மலேசியாவுக்கு கூப்பிட்டாராம். அங்க எசுட்டேட்டில் தான் வேலை ஆனா வரும்படி அதிகம். கோம்பை தாத்தாவை நேரில் பார்த்ததில்லை நான் பிறக்கும் முன்பே சிவலோக பதவியை  அடைந்துவிட்டார்.

மார்புக்கச்சை எனப்படும் சா(ஜா)க்கெட் அணியும் பழக்கம் அக்கால எம்குலப் பெண்களுக்கு கிடையாது. ஆனால் மலேசியாவிற்கு வானூர்தியிலோ கப்பலிலோ செல்லவேண்டுமானால் மார்புக்கச்சை அணிந்தாக வேண்டும். கோம்பை ஆயா அணியமுடியாது என்று பிடிவாதமாக இரண்டு ஆண்டு தாக்குபிடித்துள்ளார். பின் சொந்தங்களின் அறிவுரையின் (வற்புறுத்தலின்) பேரில் பிடிவாதம் தளர்ந்து மார்பு கச்சை அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டு மலேசியாவிலேயே 30 ஆண்டுகள் இருந்து விட்டு இனி அந்த ஊர் போதும் என்று விட்டு தாயகம் வந்துவிட்டார்.

இப்ப பழக்கத்தால் சா(ஜா)க்கெட் போடுகிறார். பண்பாடு அல்லது உடை பழக்கம் எப்படி மாறுதுண்ணு பாருங்க.

கொசுறு - எங்க பக்க ஆயாக்கள் படத்தில் உள்ளது போல் தான் இருப்பாங்க. என் ஆயா காலத்து ஆட்களுக்கு நெற்றியில் ஈறுகுச்சி போல (மூக்கிலுருந்து தலை வகுடு வரை) பச்சை குத்தப்பட்டிருக்கும்.  சில பேர் கையில் வித விதமாக பச்சை குத்தப்பட்டிருக்கும்.

(படங்கள் உதவி - கூகுள், பிளிக்கர்)

சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

உலகின் மோசமான நிலநடுக்கங்கள் & சில விபரங்கள்

இப்ப நேபாளத்தில் ஏற்பட்ட 7.9   ரிக்டர் அளவு நிலநடுக்கம்  மோசமான நிலநடுக்க பட்டியலில் சேராதிருக்க வேண்டும்.

இதுவரை 2,200க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக சொல்கிறார்கள். இப்ப தான் தொலை தூரத்திலிருந்து இறந்தவர்கள் பற்றி செய்தி வர ஆரம்பித்துள்ளது அதனால் பலியானவர் எண்ணிக்கை 4,000க்கும் அதிகமாக தான் இருக்கும்.

நேபாளம் மலைப்பகுதி என்பதாலும் போக்குவரத்தும் தகவல் தொடர்பும் அதிகம் இல்லாததாலும் அதிக உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள்.  இன்னொரு பயம் என்னன்னா நிலநடுக்கம் ஏற்பட்டது 10-15 கிமீ ஆழத்தில் தான் இது மேல்மட்டம் என்பதால் புவியின் மேற்பரப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆழிப்பேரலையால் நாம் பாதிக்கப்பட்டதும் இம்மாதிரி நிலநடுக்கம் 20-30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் தான்.  80 கிமீக்கும் மேலான ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டா தான் நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.


CCTVயில் நிலநடுக்கம் பதிவாகியதை பாருங்கள் .   நன்றி - Indian Express

மோசமான அப்பிடின்னா அதிக உயர்கள் பலியான நிலநடுக்கம் என்று கொள்ளவும். ரிக்டர் அளவில் இது கணிக்கப்படவில்லை.
  • 2003ஆம் ஆண்டு ஈரானின் பான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர்.
  • 2004ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அது உருவாக்கிய ஆழிப்பேரலையாலும் பலியானவர்கள் 230,000. பல (இந்தியா, இலங்கை, தாய்லாந்து...) நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம்.  நிலநடுக்கத்தின் அளவு 9.1 ரிக்டர். இதை நம்மாளும் மறக்க முடியாது. இந்தியா என்று சொன்னாலும் தமிழகத்திற்கு தான் பாதிப்பு அதிகம்.
  • 2005ஆம் ஆண்டு பாக்கித்தான் நிருவகிக்கும் காசுமீரின் தலைநகர்  முசபார்நகர் அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.6 ரிக்டர்.
  • 2008ஆம் ஆண்டு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.9 ரிக்டர்.
  • 2010ஆம் ஆண்டு எயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 220.000 பேர் பலியானார்கள். நிலநடுக்கத்தின் அளவு 7.0 ரிக்டர். இது கூபாவுக்கு அருகில் 80 கிமீ தொலைவில் உள்ளது. 

1934ஆம் ஆண்டு நேபாளம்-பீகார் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நேபாளத்தில் 8,500 பேர் பலியானார்கள்,  பீகாரில் 10,000க்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள்.

உலகிலுள்ள அனைத்து நிலத்தட்டுகளின் வரைபடமும் பெயரும்
நன்றி - விக்கிப்பீடியா


இந்திய நிலத்தட்டு ஆனது ஐரோஆசிய (ஐரோப்பாவும் ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதி) நிலத்தட்டுடன் பல்லாயிரம் ஆண்டுகள் மோதியதால் தான் இமய மலையே உருவாகி உள்ளது.  மோதல் இப்போதும் தொடர்கிறது, ஆண்டுக்கு 4-5 செமீ என்ற அளவில் நிலத்தட்டுக்கள் நெருங்குகிறது. அதாவது இந்திய நிலத்தட்டு தான் ஐரோஆசிய நிலத்தட்டுடன் மோதுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய "துணைக்கண்டம்" ஆசியாவில் ஒட்டியிருக்காமல் தனித்தீவாக தான் இருந்தது. ஆப்பிரிக்காவை ஒட்டி உள்ள மடகாசுக்கர் தீவு இந்திய துணைக்கண்டத்துடன் முன்பு ஒட்டியிருந்தது என்றும் கருதுகிறார்கள்.

7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துக்கு அடுத்து வந்த பெரிய நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என்று இந்தியாவும் 6.7 ரிக்டர்  என்று அமெரிக்கா காரனும் சொல்றாங்க.  இது இந்தியாவில் நிறைய இடங்களில் உணரப்பட்டுள்ளது. (மழைக்கு அப்பறம் வரும் தூவானம் -  கொழைஞர்) இது 7.9 வந்த இடத்துக்கு அருகில் தான் வந்தது. இதனால் உயிர் பலி குறைவாக தான் இருக்கும் ஏன்னா 7.9 வந்ததுக்கு அப்பறம் கட்டடங்களில் யாரும் தங்காமல் வெட்ட வெளியில் தான் தங்கியிருப்பாங்க.

எயிட்டி தான் அமெரிக்காக்களிலேயே மிக ஏழ்மையான நாடு.  லத்தீன் அமெரிக்காக்களில் முதலில் சுதந்திரம் பெற்றதும் இது தான். 1804 ஆண்டில் சுதந்திரம் பெற்றது  பிரான்சு, பிரித்தானியா, எசுப்பானியா ஆகிய மூன்று ஐரோப்பிய இராணுவபலம் உள்ள அரசுகளை இது தோற்கடித்துள்ளது. எயிட்டியின் வரலாறு படிக்க ஆர்வமூட்டுவது.

அமெரிகாக்களின் (வட, தென் அமெரிக்கா)  மேற்கு பகுதி, இமய மலை பகுதி, ஈரான், சப்பான், இந்தோனேசியா, இத்தாலி, எசுப்பானியா ஆகியவை நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் உள்ளவை.  நிலத்தட்டுகள் ஒரசினா நிலநடுக்கம் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

அதுக்காக மற்ற இடங்களில் நிலநடுக்கம் வராது என்று பொருளல்ல. வரும் வாய்ப்பு மிக குறைவு, வந்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது. கட்டடம் உறுதி இல்லைன்னா பாதிப்பு அதிகமாகிடும். சப்பானை நினைச்சு பாருங்க அவங்க நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் தான் கட்டடம் கட்டுவார்கள்.

கலிபோர்னியாவே குறிப்பாக சான் பிரான்சிசுகோ & லாசு ஏஞ்சலசு நகரங்கள் இருப்பது நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தான்.  சான் பிரான்சிசுகோ  ஏற்கனவே 1906இல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கு அதனால அதுக்கு பயம் அதிகம். சான் ஆண்டிரியாசு பிளவு என்பது நீளமானது மட்டுமல்ல கலிபோர்னியாவின் மேற்கு கரை நகரங்களை பயமுறுத்தும் ஒன்று. அது பெரிய குறிப்பிடத்தகுந்த பிளவு அதை தவிர நிறைய பிளவுகளும் உள்ளன.  அதனை இதன் கிளைகள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு 75 ஆண்டுக்குப் பிறகும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலோ அதற்கு அருகிலோ குறிப்பிடத்தகுந்த நிலநடுக்கம் வரும் என்கிறார்கள். அந்த கணக்குப்படி 2090 வரை நேபாளத்தில் பெரிய நிலநடுக்கம் வராது. 2090க்கு அப்பறம் பெரிய நிலநடுக்கம் வரும் வரை நேபாளம் பக்கம் தலைவச்சு படுக்காதிங்க.