வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், நவம்பர் 09, 2009

குமாரமங்கலம் - புரியாதது

குமாரமங்கலம் அப்படின்னு சொன்னா உங்களில் பல பேருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராசன் குமாரமங்கலம் நினைவுக்கு வருவார். சிலருக்கு ஆதித்ய குமாரமங்கலம் பிர்லா நினைவுக்கு வருவார். ரங்கராசன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோட மகன் என்று பலருக்கு தெரிந்திருக்கும், அவரு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பராயனோட மகன். சுப்பராயன் விடுதலைக்கு முன் சென்னை மாகாண முதல்வராக இருந்திருக்கிறார். இது நிறைய பேருக்கு தெரியாது.

இவங்க சொந்த ஊர் திருச்செங்கோடுக்கு பக்கத்திலுள்ள குமரமங்கலம். குமரமங்கலத்துல இருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்தவங்களாம் இவங்க. இவங்க பேரு ரங்கராசன் குமரமங்கலம், மோகன் குமரமங்கலம் அப்படின்னு தான் இருந்திருக்கனும். குமரமங்கலம் எப்படி குமாரமங்கலம் ஆச்சின்னு தெரியலை. kumar - குமார் மாதிரி Kumaramagalam என்று ஆங்கிலத்தில் எழுதினதை குமாரமங்கலம் என்று தப்பா படிச்சு அப்படி ஆகி இருக்கலாம் என்பது என் கணிப்பு.

பிர்லா குழுமத்தை சார்ந்தவரோட பெயருல எப்படி குமாரமங்கலம் சேர்ந்துச்சுன்னு தான் புரியலை. ஆதித்ய குமாரமங்கலம் பிர்லாவோட அம்மா இராஜசிரீ தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. மதுரை மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவங்க. மதுரைல படிப்ப முடிச்சாங்க. அவங்களுக்கும் குமாரமங்கலம்\குமரமங்கலத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல. இவரு அப்பா பேரு ஆதித்திய விக்ரம் பிர்லா. இவங்க நிருவாகத்தின் கீழ் தான் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான BITS பிலானி வருது.

குமார் மங்கலம் அப்படிங்கிறத தான் சிலர் குமாரமங்கலம் அப்படின்னு சொல்லறாங்களா அல்ல குமாரமங்கலம் அப்படிங்கிறதை சிலர் குமார் மங்கலம் அப்படிங்கறாங்களான்னு புரியலை. இந்த இடுகையை படிக்கறவங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

வெள்ளி, அக்டோபர் 30, 2009

தினமணி கருத்துப்படம் - முல்லை, குவாத்ரோச்சி, உசார், அமைச்சர்

படம் பெரிதாக தெரிய அதன் மேல் சொடுக்கவும்.

முல்லைப்பெரியார் அணை சிக்கலை என்ன லாவகமா தலைவர் கருணாநிதி தீர்க்கப்போறார்ன்னு பாருங்க.




வழக்கில் இருந்து தப்ப ஒரே வழி பேரை குவாத்ரோச்சின்னு மாத்திக்கிறதுதான். பேரை குவாத்தோச்சின்னு மாத்திக்க நிறைய பேர் வந்ததால அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் தீர்ந்திடுச்சாம். அந்த விண்ணப்பத்த முதல்லயே பேரை குவாத்ரோச்சின்னு மாற்றிக்கிட்டவர் விலை அதிகம் வைச்சு வெளியில் விக்கறதா பேசிக்கிறாங்க.



பிரமரும் உள்துறை அமைச்சரும் ரொம்ப உசாரா இருக்காங்க. இதைத் தான் வரும் முன் காப்பது என்கிறார்களோ?




தலைவருக்கு தெரியும்யா யாரை சட்டமன்ற உறுப்பினராக்கனும் யாரை மக்களவை உறுப்பினராக்கனும்னு அதுலையும் யாரை எப்ப எங்க அமைச்சராக்கனும்ன்னு. அதனால தான் நாம் அவரை அரசியல் சாணக்கியன் அப்படின்னு சொல்லறோம்.

புதன், அக்டோபர் 28, 2009

அரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்

தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.

TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.

எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.

தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000