வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஜூலை 06, 2014

2014 உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டம் ஒரு பார்வை

பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை போடுபவர் தருமி அவர்கள் தான்.  நானும் ரவுடி தான் அப்படின்னு காட்ட சின்ன இடுகை. அவர் பிரேசில் அணியின் இரசிகர், பிரேசிலின் போட்டியில் தான் அதிகளவில் அழுகுண்ணி (foul) ஆட்டம் இருந்தது  (கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்திலும் (51) கால் இறுதியிலும் (54))



செருமனி 1 - பிரான்சு 0
 கால் இறுதி ஆட்டம், நன்றாக இருந்தாலும் நான் நினைத்தபடி விருவிருப்பாக இல்லை. இறுதி நிமிடங்களில் செருமனிக்கு எளிதாக கவல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியும் தவறவிட்டுவிட்டார்கள். எப்படியோ 1-0 என்ற கணக்கில் செருமனி வென்று அரையிறுதிக்கு போய்விட்டது. சொல்லிக்கொள்ளும் படி இவ்வாட்டத்தில் ஒன்றும் இல்லை.


பிரேசில் 2 - கொலம்பியா 1
பிரேசில் கொலம்பியா ஆட்டத்தில் பிரேசில் கையே ஓங்கி இருந்தது. இது வரைகொலம்பியா வென்றதை வைத்து அதன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. கொலம்பியா தேசிய அணி போல் விளையாடவில்லை. ஏதோ ஒரு உள்ளூர் அணி போல் விறையாடியது. அதுவும் முதல் கவல் அடிக்கும் வரை பிரேசில் ஆட்டம் அருமை. அப்பறம் தான் இருவரும் முரட்டுத்தனத்தில் இறங்கினர். பிரேசிலும் உள்ளூர் அணி போல் தான் விளையாடியது.

பிரேசில் முதற்பாதியில் 1 கவல் மட்டும் போட்டது கொலம்பியாவின் ஆகூழ் தான். நிறைய போட்டிருக்கனும்.

இரு அணிகளும் வீரர்களும் காட்டுத்தனமாக விளையாடினர். இவர்களை நடுவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா வெற்றி பெறுபவர்கள் செருமனி கூட தான விளையாடனும். இது உலகக்கோப்பையான்னு எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. அவ்வளவு கேவலம்.

இரண்டாவது பாதி பரவாயில்லை. ஓரளவு கொலம்பியா பிரேசிலுக்கு ஈடு கொடுத்தது. கொலம்பியா முதல் கவலை போட்டவுடன் ஆட்டம் அதன் பக்கம் திரும்பியது ஆனால் நேரம் மிக குறைவு.

நெய்மர் இருக்காரு அப்படின்னு ஒரே பேச்சு. ஆட்டத்தில் யாருன்னே தெரியவேயில்லை (அதுவும் உள்ளூர் அணிக்கூட)  முதுகெலும்பின் கீழ்பகுதியை காலால்குத்தி இவ்வுலகக்கோப்பையில் இனி விளையாட முடியாத படி பண்ணிட்டாங்க. பிரேசிலின் இன்னொரு சிறந்த வீரர் சில்வா (அணித்தலைவர்) அடுத்த போட்டியில் விளையாட முடியாத படி இரட்டை மஞ்சள் அட்டை வாங்கிட்டாரு.

இறுதியில் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது அது கொலம்பியாவுக்கு மஞ்சள் இல்லாததால் தான் அது சரியா விளையாடலை, சிவப்பு அதுக்கு ஆகாத நிறம் இஃகி இஃகி



அர்செண்டினா 1 - பெல்சியம் 0
அருமையான ஆட்டம். பிரேசில் கொலம்பியா ஆட்டத்தை பார்த்துட்டு எதை பார்த்தாலும் நல்ல ஆட்டமா தெரியுங்கிறிங்களா. அதுவும் சரிதான். முதல் கவலை அர்செண்டினா போட்டதால் இதுவும் முரட்டு ஆட்டமா இருக்குமோன்னு பார்த்தேன், அப்படி இல்லை பெல்சியம் அணி வீரர்கள் கவல் அடிக்க கடுமையாக முயன்றார்கள் காட்டுத்தனமாக விளையாடவில்லை. வர்ணனையாளர்கள் மெசி மெசி என்று மெசி புராணம் பாடியது தான் கடுப்பாக இருந்தது. நல்லவேளை மெசி கவல் அடிக்கவில்லை அடிக்கவும் உதவவில்லை. கவலி மட்டும் இருந்தும் மெசியால் கவல் அடிக்க முடியவில்லை (அருமையான வாய்ப்பு). அப்ப மட்டும் மெசி கவல் அடித்திருந்தால் மெசி புராணம் பாடும் வர்ணனையாளர்களால் என் காது சவ்வு பிய்ந்திருக்கும், ஆண்டவன் இருக்கான் என்பதை நிருபித்த நிகழ்வு இது. நடுவர்கள் மெசிக்கு சிறிது ஆதரவா நடந்த மாதிரியும் தெரிந்தது.

நெதர்லாந்து 4 - கோசுட்டரிக்கா 3 (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 0.

நெதர்லாந்து கோசுட்டரிக்கா போட்டியில் முதல் 20 நிமிமடங்களுக்கு கோசுட்டரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. நெதர்லாந்து என்னடா இப்படி சொத்தை மாதிரி ஆடுதுன்னு நினைச்சேன். அப்புறம் அவர்கள் ஆட்டம் சூடு பிடித்தது. இவர்களின் சில கவல் அடிகள் கவல் கம்பத்தில் பட்டு திரும்பியது என்றாலும் கோசுட்டரிக்காவின் தடுப்பரணை நெதர்லாந்தால் உடைக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் பறக்கும் டச்சாக யார் இருப்பார்கள் என்று பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது

மிகைநேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோசுட்டரிக்காவின் தாக்குதல் பலமாக இருந்தது நெதர்லாந்து அதில் தப்பியது அவர்களின் ஆகூழ். கோச்சுட்டரிக்காவின் முன்னனி வீரர் கேம்பல் மற்றும் சிலர் ஆட்டத்தின் நடுவிலிருந்து வெளியேறிய போதும் நெதர்லாந்தின் ஆட்டம் பலனளிக்கவில்லை.

நெதர்லாந்து இறுதி 1 நிமிடம் இருக்கும் போது தன் கவுலியை மாற்றியது, புது கவலி சமன்நீக்கி ஆட்டத்தில் வல்லவரான கவலியா இருப்பார் போல அதுவே கவலி மாற்றத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன் இல்லையென்றால் நெதர்லாந்து கவலியை மாற்ற அவசியமே இல்லை. கோசுட்டரிக்கா கவலிதான் அடிபட்டவர். இருவரும் கவல் எதுவும் போடாததால் சமன்நீக்கி முறை வந்தது. அதில் நெதர்லாந்து 4-3 என்ற கணக்கில் வென்றது.

இப்படி அது ஆடினால் அர்செண்டினாவை வெற்றி கொள்வது கடினம்.
தோற்றாலும் வெற்றிபெற்றது கோசுட்டரிக்காவே.

அமெரிக்க கால்பந்து போல் உடனடி மரணம் என்ற முறை கால்பந்தில் வரவேண்டும். சமன்நீக்கி முறை விலக்கப்பட வேண்டும்.


                                                                    **************


கால் இறுதியை விட கால் இறுதிக்கு தகுதி பெற நடைபெற்ற ஆட்டங்கள் சிறப்பாக விருவிருப்பாக இருந்தன.


1. அல்சீரியா 1 -  யெர்மன் 2
அல்சீரியா யெர்மன் போட்டியில் அல்சீரியா இந்தளவு அதுவும் பலசாலியான யெர்மனிக்கெதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகைநேரத்தில் யெர்மனி 2-1 க்கு என்ற கணக்கில் அல்சீரியாவை வென்றதே அல்சீரியா வென்ற மாதிரி.

2. மெக்சிக்கோ 1- நெதர்லாந்து 2
மெக்சிக்கோ இறுதி நேரத்தில் சரியான உத்தி வகுக்காததின் பலனான தோல்வி. சரியான உத்தியை கையாண்ட நெதர்லாந்துக்கு வெற்றி.
இப்போட்டியில் மெக்சிக்கோ வென்றிக்க வேண்டும் ஆனால் இறுதி 20 நிமிடங்களில் சரியான உத்தியை கையாளதாதின் பலன் கால் இறுதி வாய்ப்பு கைநழுவி போயிருச்சு.


3. கோசுட்டரிக்கா 5 - கிரேக்கம் 3 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
கோசுட்டரிக்கா கால் இறுதிக்கு தகுதியான அணி. கிரேக்கம் ஆடியதை பார்த்தால் அதன் ஆதரவாளர்கள் கூட அதற்கு ஆதரவாக இருப்பார்களா என்பது ஐயமே.
நெதர்லாந்துக்கு சரியான போட்டி கோசுட்டரிக்கா தான்.

10 பேரை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடம் கோசுட்டரிக்கா ஆடியது 11 கொண்டும் கிரேக்கத்தால் வெல்லமுடியவில்லை என்றால் அதன் தரத்தை புரிந்துகொள்ளவும். கிரேக்கம் இவ்வளவு கேவலமா ஆடுமுன்னு நான் நினைக்கலை


4. பிரேசில் 3 - சிலி 2  ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
நியாமாக பார்த்தால் சிலி தான் வென்றிருக்க வேண்டும்.
சிலி கவலி அருமையாக தடுத்தார். இரண்டாவது மிகைநேர ஆட்டத்தில் சிலி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டது இல்லையென்றால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும்

5. அர்செண்டினா 1 - சுவிசு  0
அர்செண்டினா சுவிசு ஆட்டம் நன்றாக இருந்தது. மெசி குசி அப்படின்னு சொன்னாங்க ஆனா அவர் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை. மிகைநேரத்தில் மெசி பந்தை எடுத்து கொடுக்க மரியோ கவுல் அடித்தார். சுவிசுக்கு ஆகூழ் இல்லை அடுத்த நிமிடம் அவர்கள் அடித்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அர்செண்டினாவின் தடுப்பாட்டம் இதில் மோசமாக இருந்தது.

6. அமெரிக்கா 1 - பெல்சியம் 2
அமெரிக்கா பெல்சியம் ஆட்டத்தில் பெல்சியத்தின் கையே ஒங்கி இருந்தது. அமெரிக்காவின் ஆகூழ் பெல்சியத்தால் 90 நிமிடங்களில் கவல் (goal) அடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் கவலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  ஒரு மனுசன் 15 கவல் முயற்சியை தடுப்பது என்பது எளிதான செயலா. மிகைநேரத்தில் பெல்சியம் 2 கவல்களையும் அடித்தது.
அர்செண்டினாவை எதிர்க்க பெல்சியமே சரியான அணி.


சனி, ஜூலை 05, 2014

அறிவியல் தமிழர் - ஆரோக்கியசாமி பால்ராசு

இவரு கோயம்புத்தூர் காரர் இந்திய கடற்படைக்கு  APSOH சோனார் உருவாக்கியவர், 4G ன் அடிப்படையான MIMOவைக் கண்டுபிடித்தவர்.

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையால் 2014ல் (www.fetna2014.com) சிறப்பு செய்யப்படவிருப்பவர்.

இவர் பெற்றுள்ள விருதுகள்:
-----------------------------------------
2014 ல் மார்க்கோனி விருது
2010ல் இந்திய அரசின் பத்ம பூசன் விருது.
2011ல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் பெற்றுள்ளார்.

நன்றி:தென்றல் (www.TamilOnline.com)
==============
இந்தியக் கடற்படையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர்; இந்தியாவில் மூன்று தேசிய ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவியவர்; பத்மபூசண் முதல் பல தேசிய விருதுகளைப் பெற்றவர்; 4G எனப்படும் செல்பேசித் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தொழில்நுட்பமான MIMOவைக் கண்டுபிடித்தவர்; 400க்கும் மேல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர்: தனது கண்டுபிடிப்புகளுக்காக 59க்கும் மேல் தொழில்நுட்ப உரிமங்களைப் (US patents) பெற்றிருப்பவர் என்று இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைச் சந்தித்து உரையாட தென்றலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்து சில சுவையான பகுதிகள்…..

இளைமைக் காலம் மற்றும் கல்வி
என் தந்தை இந்தியக் கடற்படையில் இருந்தார். நான் ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில் (Montfort School) நான்கு வருடங்கள் படித்தேன். பின் சில மாதங்கள் லயோலா கல்லூரியில் படித்தேன். என் தந்தை நான் கடற்படையில் சேரவேண்டும் என்று விரும்பினார். அப்போது எனக்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. நான் என் தந்தையின் விருப்பத்தை ஏற்று National Defense Academyயில் சேர்ந்தேன். கடற்படையில் radar, missile systems போன்றவற்றின் மின்சாதனங்களைப் பராமரிக்கப் பயிற்சி பெற்றேன்.

பள்ளி நாட்களில் இருந்தே நான் கணக்கிலும், பௌதீகத்திலும் சிறந்து விளங்கினேன். NDA-விலும் நான் சிறந்த மாணவனாகத் தேர்வு பெற்றேன். அதனால் என்னை மேலே M.Tech. படிக்க அனுப்பினார்கள். அது என் வாழ்க்கையைத் திசை திருப்பியது. எனக்கு அடிப்படையான B.Tech. பட்டம் கிடையாது. ஆனால் IIT, டில்லியில் இருந்த பேரா. P.V. இந்திரேசன் அவர்களுக்கு என்னைப் பிடித்துவிடவே, அவர் IIT நிர்வாகக் குழுவிடம் பேசி M.Tech. சேருவதற்கான சிறப்பு அனுமதி பெற்றுத் தந்தார். IITயில் சேர்ந்த சில மாதங்களிலேயே நான் Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட விரும்பினேன். ஆனால் கடற்படை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடற்படைக்குப் பொறியாளர்கள்தான் தேவையே ஒழிய விஞ்ஞானிகள் தேவையில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் பேரா. இந்திரேசன் விடாது முயற்சி செய்து அதற்கான அனுமதியையும் பெற்றார். அப்போது M.Tech. படிப்பு இரண்டு வருடங்கள். என்ன வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் இரண்டாண்டுகளில் கடற்படை சேவைக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டனர். நான் ஏற்றுக் கொண்டேன்.

அதன்பிறகு நான் முழுமையாகக் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். Stochastic Calculus பிரிவில் ஆராய்ச்சிகள் செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்குத் திரும்புகையில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்குக் குறைந்தது மூன்று வருடங்கள் கல்லூரியில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும். என் ஆராய்ச்சியைத் தொடர வசதியாக என்னை டில்லியிலேயே வேலையில் வைத்திருக்குமாறு வேண்டி அனுமதி பெற்றேன்.

சோனார் (Sonar) ஆராய்ச்சி
1971-ல் இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் போர்க்கப்பல் INS குக்ரி (INS Khukri) பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் குண்டு தாக்கி மூழ்கியது. 170க்கும் மேல் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். அது இந்தியாவின் முன்னணிப் போர்க்கப்பல். அதில் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க சோனார் சாதனங்கள் இருந்தன. அதேபோன்று மேலும் இரண்டு கப்பல்களில் சோனார் சாதனங்கள் இருந்தன. சாதாரணமாகத் தரைப்படையிலும், விமானப் படையிலும் போர்ச் சேதங்கள் இருக்கும். கடற்படையில் சேதம் அதிகம் வராது.

சோனாரை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், என்னை ஆராயச் சொன்னார்கள். அந்த ஆராய்ச்சியை IIT, டில்லியில் தொடர அனுமதி கேட்டேன் – என்னுடைய Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையையும் முடிக்கலாமே என்ற ஆர்வத்தில்.

ஆறேழு மாதங்களில் புதிய மின்னணு சர்க்கியூட்டுகளை உருவாக்கினோம். அப்போதுதான் அமெரிக்காவில் மைக்ரோ சிப்புகள் தயாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் அவற்றை வரவழைத்துப் பயன்படுத்தினோம். இந்தியா 1971 காலகட்டத்தில் அத்தனை சிக்கலான மின்னமைப்புகளை அதுவரை உருவாக்கியதில்லை. அதை நான் அப்போது உணரவில்லை. நாங்கள் உருவாக்கிய மின்னணு ரிசீவர், சோனாரின் தரத்தைப் பெருமளவில் உயர்த்தியது. இந்த வெற்றியால் கடற்படை அதிகாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். வெளியில் எனது ஆராய்ச்சிகளைத் தொடரச் சலுகைகள் எனக்குக் கிடைத்தன.

APSOH சோனார் உருவாக்கிய அனுபவம்
நான் ஒரு வருடம் இங்கிலாந்தில் லஃப்பர்க் (Loughborogh) பல்கலைக் கழகத்தில் இருந்தேன். இந்தியக் கடற்படை ஏராளமான சாதனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை உணர்ந்தேன். சோனார் சாதனங்கள் ஃபிரான்சில் இருந்தும் பிரிட்டனில் இருந்தும் வந்தன. அந்தச் சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்களைவிட நான் சோனார் பற்றி அதிகம் அறிந்திருந்ததை உணர்ந்தேன்.

இந்தியா திரும்பியதும், கடற்படையே ஏன் சோனார் சாதனம் தயாரிக்கக் கூடாது என்று தோன்றியது. அது கப்பலின் மிக விலையுயர்ந்த கருவி. கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் மதிப்புள்ளது. மிக அதிகமான மின்சுற்றுக்களைக் (electronic circuit) கொண்டது. அதை இயக்க 400 கிலோ வாட்டுக்கு மேல் மின்னாற்றல் தேவை. ஆனால் அதை நாமே உருவாக்கலாம் என நம்பினேன். பல போராட்டங்களுக்குப் பின் கடற்படை அதற்கு அனுமதித்தது.

நான் கொச்சியில் ஓர் ஆராய்ச்சிக் கூடத்தில் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 1983ல் அது கடற்படையால் அங்கீகரிக்கப்பட்ட போது அது உலகத்திலேயே முன்னிலை சோனார் சாதனமாக இருந்தது. அது இந்தியாவின் R&D திறனை மாற்றியமைத்தது.

ஸ்டான்ஃபோர்ட் முதல் அனுபவம்
என் Ph.D. ஆராய்ச்சிக் கட்டுரையைப் பரிசீலித்த பேராசிரியர்களில் ஒருவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பேரா. தாமஸ் கைலாத் (Thomas Kailath) அவர்கள். ஸ்டான்ஃபோர்டில் என் ஆராய்ச்சியைத் தொடர அவர் வாய்ப்பளித்தார். எந்தத் திசையில் இருந்து குறிப்பலை (signal) வருகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அதுகுறித்து நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டிருந்தன. MUSIC algorithm என்ற பெரிய கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். நான் சோனார் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீருக்கடியில் குறிப்பலை வரும் திசையைக் கண்டுபிடிப்பதைப் பற்றி யோசித்து வைத்திருந்தேன். அந்தக் கணிதத்தை எப்படிப் பொதுவாக்கிப் பயன்படுத்துவது என்று பல மாதங்கள் யோசித்தேன். இறுதியில் ESPRIT என்ற ஒரு புதிய கருத்தை வெளியிட்டேன். அது வேகமாகப் பரவி ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டது.


இந்தியாவில் ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவியது
இந்தியா திரும்பியபின் DRDOவின் தலைவர் டாக்டர். அருணாசலம், மற்றும் கடற்படைத் தலைவர்கள் உதவியுடன் செயற்கை அறிவு ஆய்வுக்கூடம் (Artificial Intelligence Lab) உருவாக்கினேன். அதே சமயம் சாம் பிட்ரோடா அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெங்களூரில் CDAC அமைப்பையும் உருவாக்கினேன். இரண்டையும் ஒரே சமயத்தில் இயக்கி வந்தேன்.

Dr. அருணாசலம் லகுரகப் போர்விமானத் திட்டம் (Light Combat Aircraft program) ஒன்றைத் தீட்ட விரும்பினார். அரசாங்கத்தின் கீழ் இயங்கினால் மிகத் தாமதமாகலாம் என்றெண்ணிய நான் அரசாங்க நிதியுதவியுடன் ஒரு தனியார் அமைப்பாக அதை உருவாக்க விரும்பினேன். நானும் Dr. அருணாசலமும் எவ்வளவோ முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை.

அப்போது பாரத் எலக்ட்ரானிக்ஸில் Central Research Lab ஒன்றை ஏற்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் ஏற்றுக் கொண்டதும், இவற்றை நடத்துவதில் இருந்த செயல்முறைச் சிக்கல்களும் என்னை மீண்டும் ஸ்டான்ஃபோர்ட் வந்து ஆராய்ச்சியைத் தொடரத் தூண்டின.

MIMO கண்டுபிடிப்பு
நான் ஸ்டான்ஃபோர்டில் கணிதத் துறையில் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். மற்ற சிக்னல்களை ஒதுக்கி தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்வது எப்படி என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. குறிப்பலைகளை ஆராய்ச்சிக் கூடத்தில் உண்டாக்கி ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான சாதனங்களை இணைத்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் நான் எதிர்பாராத விளைவு ஒன்றைக் கவனித்தேன். அதிலிருந்து தோன்றியதுதான் MIMO (Multiple Input Multiple Output). இதுதான் 4G மொபைல் தொழில்நுட்பத்தின் அடிப்படை. MIMO இப்போது எல்லாக் கம்பியில்லாச் சாதனங்களிலும் இருக்கிறது.

16 QAM அலைக்கற்றைகளை அனுப்புவதே அரிதாக இருந்த காலம் அது. நான் ஒரு மில்லியன் QAM அலைக்கற்றைகளை அனுப்பலாம் என்று கூறினேன். AT&T, மோடரோலா, எரிக்சன் போன்ற நிறுவனங்கள் என் கருத்தை ஏற்க மறுத்தன. BELL Labs சில ஆராய்ச்சிகளுக்குப் பின் எனது கருத்தை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு MIMO பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போது MIMO பயன்படுத்தி 64 மில்லியன் QAM வரை அலைக்கற்றைகளை அனுப்பலாம்.

1998-ல் Iospan என்ற ஒரு நிறுவனத்தைத் துவங்கி MIMO-வுடன் OFDMA தொழிநுட்பத்தையும் சேர்த்து WiMax தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். இது 4G தொழில்நுட்பத்தின் முக்கியப் பகுதி. இந்த நிறுவனத்தை Intel குழுமம் வாங்கியது. அதன் பின் Beceem Communications நிறுவனத்தை உருவாக்கி அதில் 4G தொழில்நுட்பத்திற்கான சிலிக்கான் சில்லுகள் தயாரித்தேன்.

MIMO தொழில்நுட்பத்தில் 3000க்கும் அதிகமான Ph.D. ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 12,000 க்கும் அதிகமான உரிமங்கள் (patents) பதியப்பட்டுள்ளன. 14,000க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் உலகெங்கிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலம்
இந்தியாவில் ஆராய்ச்சியும் தொழில்நுட்பமும் தேக்கம் கண்டிருக்கிறது. விமானங்கள், டெலிகாம் சாதனங்கள், precision electronics போன்ற பல தொழில்நுட்பங்களையும் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் IT செலவு 150 பில்லியன் டாலர். பத்தாண்டுகளில் அது 420 பில்லியன் டாலர் ஆகிவிடும். நாம் தொடர்ந்து இறக்குமதி செய்யமுடியாது. உலகின் தலைசிறந்த சில்லு வடிவமைப்பாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காக வேலை செய்கிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் நிறுவனத்தின் பங்கு உரிமை (Stock Options) கிடையாது. பல வகைகளிலும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

நாம் முன்னேறித்தானே இருக்கிறோம். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். நாம் தினசரி பயன்படுத்தும் எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனமும் இந்தியாவில் தயாரிக்கப் பட்டதல்ல.

நாம் கவனமாக இல்லையென்றால் சிரியாவைப்போல ஆகிவிட வாய்ப்புண்டு. சிரியா ஒரு காலத்தில் இந்தியாவைவிடக் கல்வியில் சிறந்ததாக, மிக முன்னேறிய நாடாக இருந்தது. இப்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

நமக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து அபாயம் இருக்கின்றது. சீனாவுடனான நமது அந்நியச் செலாவணி வணிக நிலுவை (BOP) 45 பில்லியன் டாலர். நாம் வணங்கும் சிவன், முருகன் போன்ற கடவுளர் சிலைகள்கூட சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. பொருளாதார ரீதியிலும் சீனாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

சீனா பல விதங்களில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. கல்வியில் IISc, IIT போன்ற கழகங்கள் உலகத்தரத்தில் 250 அல்லது 500 ஆம் இடத்தில் இருக்கின்றன. ஆனால் சீனாவில் பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உலகத் தரவரிசையில் 100 இடங்களுக்குள் இருக்கின்றன.

அறுபதுக்குப் பிறகு இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. அதுதான் நாம் பின்தங்கிப் போனதற்கு முக்கியக் காரணம். மோதி அரசு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புவோம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் வலிமை. இத்தகைய அமைப்பில் மாற்றங்கள் வேகமாக வராது. ஆனால் அந்த வளர்ச்சி நிலையானது. சீனாவில் மாற்றங்கள் வேகமாக வந்தாலும் அடிப்படையாக இருக்கும் அழுத்தங்கள் அரசாங்கத்தால் அமுக்கி வைக்கப் பட்டிருக்கலாம். ஒரு சிறிய விரிசல் வந்தாலும் அது பெரிதாக வெடித்துக் கிளம்ப வாய்ப்புண்டு.

இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்மிடம் திறமைக்குப் பஞ்சமில்லை.

விருதுகள்
எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப் படக்கூடிய விருதுகள் – அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் (Alexander Graham Bell Medal). இது எனது அடிப்படை கணித ஆராய்ச்சிக்காகக் கொடுக்கப்பட்டது. மார்கோனி பரிசு (Marconi Prize) பல தடைகளையும் தாண்டி ஒரு கருத்தைப் பலகோடி மக்களுக்குப் பயன்படும் வகையில் வடிவமைத்துத் தருவதற்காகக் கொடுக்கும் அரிய பரிசு. பத்மபூஷண் APSOH சோனார் உருவாக்கியதற்காக அளிக்கப்பட்டது.

மற்ற ஆர்வங்கள்
எனது ஆர்வமும் அன்பும் என் பேரக்குழந்தைகளிடம்தான். எனக்கு நான்கு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். இருவர் லாஸ் வேகஸில், இருவர் லண்டனில். எனக்கு வாழ்க்கைச் சரிதங்களைப் படிக்கப் பிடிக்கும். சார்லி ரோஸ் ஷோ மிகவும் பிடிக்கும். தினமும் தவறாமல் பார்ப்பேன். விரைவில் நானும் அந்த நிகழ்ச்சியில் வரவிருக்கிறேன்.

குடும்பம்
இந்தியக் கடற்படையில் என் தந்தை இருந்தார். நாங்கள் குழந்தைகள் ஆறு பேர். அப்பா வேலை நிமித்தமாக வெளியூருக்கும் கடலுக்கும் சென்றுவிடுவார். அம்மாவும் நாங்களும் பெரும்பாலும் கோயம்பத்தூரில்தான் இருந்தோம். அம்மா, அப்பா இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு சகோதரன் துபாயில் இருக்கிறார். மற்றொருவர் அமெரிக்காவில். அனைவரும் தொடர்பில் இருக்கிறோம். மின்னஞ்சல் போன்ற நவீன சாதனங்களுக்கு நன்றி கூற வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலோ, உலகின் வேறொரு பகுதியிலோ சந்திப்போம்.

என் மனைவியின் பெயர் நிர்மலா. எனக்கு இரண்டு பெண்கள் – மல்லிகா, நிருபமா. மல்லிகா கணவருடன் இங்கிலாந்தில் வசிக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். நிருபமாவும் அவள் கணவரும் மருத்துவர்கள். லாஸ் வேகஸில் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள்.

இளைஞர்களுக்கு…..
தற்கால இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியர்களுக்கு கணிதம் மற்றும் இயற்பியலில் இன்னும் ஆர்வம் இருக்கிறது. புதுக் கருத்துக்களைக் கண்டுபிடிக்கவும், அக்கருத்துக்களை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கவும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்களைப் பற்றி மேலும் விவரம் அறிய: www.stanford.edu/~apaulraj/

சந்திப்பு: C.K. வெங்கட்ராமன், சிவா சேஷப்பன்
தொகுப்பு: சிவா சேஷப்பன்


ஞாயிறு, ஜூன் 01, 2014

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 2 தொகுதிகளில் 4ம் இடம், 3இல் 3ம் இடம்

நடந்து முடிந்த 16வது மக்களவை தேர்தலில் (2014ம் ஆண்டு) மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இரு தொகுதிகளில் 4ம் இடமும் மூன்று தொகுதிகளில் 3ம் இடமும் மூன்று தொகுதிகளில் 2ம் இடமும்  பெற்றுள்ளது. அதாவது 5 தொகுதிகளில் இது இரண்டாம் இடம் கூட பிடிக்கவில்லை.


                                                                      அசோனல்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
பாபுல் சுப்ரியோபாசக419983
டோலா சென்திரிணாமுல்349503
பன்சா கோபால் சௌத்திரி மார்க்சிய பொதுவுடமைவாதி255829
இந்ராணி மிசுராஇந்திரா காங்கிரசு48502

                                                                      டார்சிலிங்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அலுவாலியாபாசக488257
பாய் சங் பூட்டியாதிரிணாமுல்291018
சாமன் பதக் (சுரச்)மார்க்சிய பொதுவுடமைவாதி167186
சுசய் காடக்இந்திரா காங்கிரசு90076

                                                                      ராய்கன்ஞ்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
சலிம்மார்க்சிய பொதுவுடமைவாதி317515
தீபா தாசுமுன்சிஇந்திரா காங்கிரசு315881
நிமு போமிக்பாசக203131
பபித்ரா ரன்சன் தாசுமுன்சி (சத்யா)திரிணாமுல்192698

                                                                      முர்சிடாபாத்து
வேட்பாளர்கட்சிவாக்குகள்
படருட்டோசு கான்மார்க்சிய பொதுவுடமைவாதி426947
அப்துல் மன்னன் உசைன்இந்திரா காங்கிரசு408494
அலி முகமதுதிரிணாமுல்289027
சுசித் குமார் கோசுபாசக101069


                                                                      உத்தர மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
மாவுசம் நூர்இந்திரா காங்கிரசு388609
காகன் முர்முமார்க்சிய பொதுவுடமைவாதி322904
சௌமித்ர ரேதிரிணாமுல்197313
சுபாசு கிருசுணா கோசுவாமிபாசக179000

                                                                       தட்சிண மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபு காசிம் கான் சௌத்திரிஇந்திரா காங்கிரசு380291
பிசினு பட ராய்பாசக216180
அப்துல் ஆசன்ட் கான்மார்க்சிய பொதுவுடமைவாதி209480
மோசிம் உசைன்திரிணாமுல்192632


                                                                      சாங்கிபூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபிசித் முகர்சிஇந்திரா காங்கிரசு378201
முசாபர் உசைன்மார்க்சிய பொதுவுடமைவாதி370040
நூருல் இசுலாம்திரிணாமுல்207455
சாம்ராட் கோசுபாசக96751
அபிசித் முகர்சி குடியரசு தலைவர் பிரணாப் முகர்சியோட மகன். பிரணாப் குடியரசு தலைவர் ஆனதும் 20012ல் நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிய கட்சியை 2536 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். அத்தேர்தலில் திரிணாமுல் போட்டியிடவில்லை என்பதும் அவர் வெற்றிக்கு காரணமாகும். இப்போது திரிணாமுல் போட்டியிட்டு 2.07,455 வாக்குகள் பெற்றாலும் அதனால் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இப்போது வாக்கு வேறுபாடு 8161.

                                                                      பகரம்பூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அதிர் ரன்சன் சௌத்திரிஇந்திரா காங்கிரசு583549
இந்ராணில் சென்திரிணாமுல்226982
பிரமோத் முகர்சிபுரட்சிகர சோசலிசுட்டு225699
தீபசு அதிகாரிபாசக81656


தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.

1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)

கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.

மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.