செருமனி 1 - பிரான்சு 0
கால் இறுதி ஆட்டம், நன்றாக இருந்தாலும் நான் நினைத்தபடி விருவிருப்பாக இல்லை. இறுதி நிமிடங்களில் செருமனிக்கு எளிதாக கவல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியும் தவறவிட்டுவிட்டார்கள். எப்படியோ 1-0 என்ற கணக்கில் செருமனி வென்று அரையிறுதிக்கு போய்விட்டது. சொல்லிக்கொள்ளும் படி இவ்வாட்டத்தில் ஒன்றும் இல்லை.
பிரேசில் 2 - கொலம்பியா 1
பிரேசில் கொலம்பியா ஆட்டத்தில் பிரேசில் கையே ஓங்கி இருந்தது. இது வரைகொலம்பியா வென்றதை வைத்து அதன் மீது ஒரு நம்பிக்கை இருந்தது. கொலம்பியா தேசிய அணி போல் விளையாடவில்லை. ஏதோ ஒரு உள்ளூர் அணி போல் விறையாடியது. அதுவும் முதல் கவல் அடிக்கும் வரை பிரேசில் ஆட்டம் அருமை. அப்பறம் தான் இருவரும் முரட்டுத்தனத்தில் இறங்கினர். பிரேசிலும் உள்ளூர் அணி போல் தான் விளையாடியது.
பிரேசில் முதற்பாதியில் 1 கவல் மட்டும் போட்டது கொலம்பியாவின் ஆகூழ் தான். நிறைய போட்டிருக்கனும்.
இரு அணிகளும் வீரர்களும் காட்டுத்தனமாக விளையாடினர். இவர்களை நடுவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா வெற்றி பெறுபவர்கள் செருமனி கூட தான விளையாடனும். இது உலகக்கோப்பையான்னு எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. அவ்வளவு கேவலம்.
இரண்டாவது பாதி பரவாயில்லை. ஓரளவு கொலம்பியா பிரேசிலுக்கு ஈடு கொடுத்தது. கொலம்பியா முதல் கவலை போட்டவுடன் ஆட்டம் அதன் பக்கம் திரும்பியது ஆனால் நேரம் மிக குறைவு.
நெய்மர் இருக்காரு அப்படின்னு ஒரே பேச்சு. ஆட்டத்தில் யாருன்னே தெரியவேயில்லை (அதுவும் உள்ளூர் அணிக்கூட) முதுகெலும்பின் கீழ்பகுதியை காலால்குத்தி இவ்வுலகக்கோப்பையில் இனி விளையாட முடியாத படி பண்ணிட்டாங்க. பிரேசிலின் இன்னொரு சிறந்த வீரர் சில்வா (அணித்தலைவர்) அடுத்த போட்டியில் விளையாட முடியாத படி இரட்டை மஞ்சள் அட்டை வாங்கிட்டாரு.
இறுதியில் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது அது கொலம்பியாவுக்கு மஞ்சள் இல்லாததால் தான் அது சரியா விளையாடலை, சிவப்பு அதுக்கு ஆகாத நிறம் இஃகி இஃகி
அருமையான ஆட்டம். பிரேசில் கொலம்பியா ஆட்டத்தை பார்த்துட்டு எதை பார்த்தாலும் நல்ல ஆட்டமா தெரியுங்கிறிங்களா. அதுவும் சரிதான். முதல் கவலை அர்செண்டினா போட்டதால் இதுவும் முரட்டு ஆட்டமா இருக்குமோன்னு பார்த்தேன், அப்படி இல்லை பெல்சியம் அணி வீரர்கள் கவல் அடிக்க கடுமையாக முயன்றார்கள் காட்டுத்தனமாக விளையாடவில்லை. வர்ணனையாளர்கள் மெசி மெசி என்று மெசி புராணம் பாடியது தான் கடுப்பாக இருந்தது. நல்லவேளை மெசி கவல் அடிக்கவில்லை அடிக்கவும் உதவவில்லை. கவலி மட்டும் இருந்தும் மெசியால் கவல் அடிக்க முடியவில்லை (அருமையான வாய்ப்பு). அப்ப மட்டும் மெசி கவல் அடித்திருந்தால் மெசி புராணம் பாடும் வர்ணனையாளர்களால் என் காது சவ்வு பிய்ந்திருக்கும், ஆண்டவன் இருக்கான் என்பதை நிருபித்த நிகழ்வு இது. நடுவர்கள் மெசிக்கு சிறிது ஆதரவா நடந்த மாதிரியும் தெரிந்தது.
நெதர்லாந்து 4 - கோசுட்டரிக்கா 3 (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 0.
நெதர்லாந்து கோசுட்டரிக்கா போட்டியில் முதல் 20 நிமிமடங்களுக்கு கோசுட்டரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. நெதர்லாந்து என்னடா இப்படி சொத்தை மாதிரி ஆடுதுன்னு நினைச்சேன். அப்புறம் அவர்கள் ஆட்டம் சூடு பிடித்தது. இவர்களின் சில கவல் அடிகள் கவல் கம்பத்தில் பட்டு திரும்பியது என்றாலும் கோசுட்டரிக்காவின் தடுப்பரணை நெதர்லாந்தால் உடைக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்த ஆட்டத்தில் பறக்கும் டச்சாக யார் இருப்பார்கள் என்று பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது
மிகைநேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோசுட்டரிக்காவின் தாக்குதல் பலமாக இருந்தது நெதர்லாந்து அதில் தப்பியது அவர்களின் ஆகூழ். கோச்சுட்டரிக்காவின் முன்னனி வீரர் கேம்பல் மற்றும் சிலர் ஆட்டத்தின் நடுவிலிருந்து வெளியேறிய போதும் நெதர்லாந்தின் ஆட்டம் பலனளிக்கவில்லை.
நெதர்லாந்து இறுதி 1 நிமிடம் இருக்கும் போது தன் கவுலியை மாற்றியது, புது கவலி சமன்நீக்கி ஆட்டத்தில் வல்லவரான கவலியா இருப்பார் போல அதுவே கவலி மாற்றத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன் இல்லையென்றால் நெதர்லாந்து கவலியை மாற்ற அவசியமே இல்லை. கோசுட்டரிக்கா கவலிதான் அடிபட்டவர். இருவரும் கவல் எதுவும் போடாததால் சமன்நீக்கி முறை வந்தது. அதில் நெதர்லாந்து 4-3 என்ற கணக்கில் வென்றது.
இப்படி அது ஆடினால் அர்செண்டினாவை வெற்றி கொள்வது கடினம்.
தோற்றாலும் வெற்றிபெற்றது கோசுட்டரிக்காவே.
அமெரிக்க கால்பந்து போல் உடனடி மரணம் என்ற முறை கால்பந்தில் வரவேண்டும். சமன்நீக்கி முறை விலக்கப்பட வேண்டும்.
**************
கால் இறுதியை விட கால் இறுதிக்கு தகுதி பெற நடைபெற்ற ஆட்டங்கள் சிறப்பாக விருவிருப்பாக இருந்தன.
1. அல்சீரியா 1 - யெர்மன் 2
அல்சீரியா யெர்மன் போட்டியில் அல்சீரியா இந்தளவு அதுவும் பலசாலியான யெர்மனிக்கெதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகைநேரத்தில் யெர்மனி 2-1 க்கு என்ற கணக்கில் அல்சீரியாவை வென்றதே அல்சீரியா வென்ற மாதிரி.
2. மெக்சிக்கோ 1- நெதர்லாந்து 2
மெக்சிக்கோ இறுதி நேரத்தில் சரியான உத்தி வகுக்காததின் பலனான தோல்வி. சரியான உத்தியை கையாண்ட நெதர்லாந்துக்கு வெற்றி.
இப்போட்டியில் மெக்சிக்கோ வென்றிக்க வேண்டும் ஆனால் இறுதி 20 நிமிடங்களில் சரியான உத்தியை கையாளதாதின் பலன் கால் இறுதி வாய்ப்பு கைநழுவி போயிருச்சு.
3. கோசுட்டரிக்கா 5 - கிரேக்கம் 3 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
கோசுட்டரிக்கா கால் இறுதிக்கு தகுதியான அணி. கிரேக்கம் ஆடியதை பார்த்தால் அதன் ஆதரவாளர்கள் கூட அதற்கு ஆதரவாக இருப்பார்களா என்பது ஐயமே.
நெதர்லாந்துக்கு சரியான போட்டி கோசுட்டரிக்கா தான்.
10 பேரை வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடம் கோசுட்டரிக்கா ஆடியது 11 கொண்டும் கிரேக்கத்தால் வெல்லமுடியவில்லை என்றால் அதன் தரத்தை புரிந்துகொள்ளவும். கிரேக்கம் இவ்வளவு கேவலமா ஆடுமுன்னு நான் நினைக்கலை
4. பிரேசில் 3 - சிலி 2 ( (சமன்நீக்கி முறையில்) வழக்கமான நேரத்தில் இருவரும் 1 )
நியாமாக பார்த்தால் சிலி தான் வென்றிருக்க வேண்டும்.
சிலி கவலி அருமையாக தடுத்தார். இரண்டாவது மிகைநேர ஆட்டத்தில் சிலி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டது இல்லையென்றால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும்
5. அர்செண்டினா 1 - சுவிசு 0
அர்செண்டினா சுவிசு ஆட்டம் நன்றாக இருந்தது. மெசி குசி அப்படின்னு சொன்னாங்க ஆனா அவர் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை. மிகைநேரத்தில் மெசி பந்தை எடுத்து கொடுக்க மரியோ கவுல் அடித்தார். சுவிசுக்கு ஆகூழ் இல்லை அடுத்த நிமிடம் அவர்கள் அடித்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.
அர்செண்டினாவின் தடுப்பாட்டம் இதில் மோசமாக இருந்தது.
6. அமெரிக்கா 1 - பெல்சியம் 2
அமெரிக்கா பெல்சியம் ஆட்டத்தில் பெல்சியத்தின் கையே ஒங்கி இருந்தது. அமெரிக்காவின் ஆகூழ் பெல்சியத்தால் 90 நிமிடங்களில் கவல் (goal) அடிக்க முடியவில்லை. அமெரிக்காவின் கவலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மனுசன் 15 கவல் முயற்சியை தடுப்பது என்பது எளிதான செயலா. மிகைநேரத்தில் பெல்சியம் 2 கவல்களையும் அடித்தது.
அர்செண்டினாவை எதிர்க்க பெல்சியமே சரியான அணி.
11 கருத்துகள்:
சமன்நீக்கி முறையில் = இது நல்லா இருக்கு.
கவல், கவலி - இது எப்பூடி?
foul இல்லாத தமிழில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
பதிவுலகில் எனக்கு தெரிந்து கால்பந்து பற்றி இடுகை போடுபவர் தருமி அவர்கள் தான். //
அதெல்லாம் யாரும் வாசிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் எழுதுவது. எனக்கு ஒரு டைரி மாதிரி. 2006(ஆங்கிலம்) 2010,2014 (தமிழ்) எழுதியிருக்கிறேன். மற்றபடி உங்களைப் போல் திறனாய்வு எல்லாம் இல்லையே!
நீங்க எழுதறதை உடனே படிக்கவில்லையென்றாலும் நாள் கழித்தாவது படித்து விடுவேன். சில முறை மறுமொழி இடுவேன் பெரும்பாலான சமயங்களில் படிப்பதோடு சரி. உங்கள் நண்பர்களின் மறுமொழி இடுகையின் சுவையை மேலும் கூட்டும். இஃகி இஃகி
அமான்னு சொன்னது என்னன்னு தெரிஞ்சிக்க நைசீரிய தொடர்புகளை பயன்படுத்துன நீங்க எங்கே? நான் எங்கே?
எனக்கு கால்பந்தின் நுணுக்கங்கள் தெரியாது. ஏதோ இந்த உலக்கோப்பையை பார்த்ததால் எழுதியுள்ளேன். இடுகை போடும் முன் என்ன எழுதியிருக்கிங்க என்று அறிய உங்க பதிவை பார்த்தேன் :( என்ன இப்படி ஏமாத்திட்டிங்க.
ஏன் GOAL என்பதை கவல் எனச்சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு நாக இளங்கோவன் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள். (முகநூலில்) -- கவல் என்ற சொல்லைப் படைத்தவர் முனைவர் இராம.கி. இரண்டு கம்பங்களுக்கிடையே உள்ள இடைவெளிதான் Goal Space அல்லது Goal Spot அல்லது Goal Area. அந்த "வெளிக்குள்" பந்து போவதுதான் கோல் எனப்படுகிறது. நமது கால்களின் இடைவெளியைக் கவட்டை/கவட்டி என்கிறோமே, வடிவில் அதனையொத்ததுதான் Goal Area/Post. கவட்டியின் இடைவெளி போலவே Goal Post இடைவெளியும் இருக்கிறது. இதனை ஒப்பிட்டு, கவட்டைக்குள் செல்வதைக் கவல் என்று பரிந்துரைத்தார் அவர். இந்த ஏரணம் நமது பழக்கங்களையும் உடல் உறுப்புகளின் தன்மையையும் கொண்டிருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இலக்கணத்தில் சினைப்பெயர் என்று சொல்வார்களே, அது இங்கே ஆகிவருகிறதோ அல்லது தொக்கி நிற்கிறதோ என்று சிந்திக்க வைத்தது. நமது வழக்கு, இயல்பில் இருந்து கிடைத்த ஒப்புமைப் பெயர் என்பதால் நான் இதையே பயன்படுத்திவருகிறேன். இது ஒரு நல்ல பெயர்ச்சொல். நீங்களும் பயன்படுத்த முன்வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாகும். வினவலுக்கு நன்றி.
திரு இராம.கி அவர்களின் http://valavu.blogspot.com/2009/06/3.html என்ற இந்தத்தொடுப்பைப் படிக்க வேண்டுகிறேன். இதில் கவல்/கவள் என்ற சொல் எந்த அளவுக்கு நம்மில் தொன்மையானது என்பதும், அதன் புழக்காடு எவ்வளவு என்பதையும் புரிய வைக்கிறது. இதனைப் புரிந்து கொண்டால் கவல் எளிதாகப் புரியும்
---------
எனக்கு கவல் Goal கவலி Goalkeeper எனக்கு இது சரி என்று தோன்றியதால் கவல் என்று பயன்படுத்துகிறேன்.
ஏரணம் = ?
//என்ன இப்படி ஏமாத்திட்டிங்க.//
எனக்கும் ஏமாற்றம் தான். ஓரிரு நாள் எழுத உடலும் உள்ளமும் ஏனோ மறுத்தன. உட்டுட்டேன்.
நற்றமிழ் முயற்சிக்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.
ஏரணம் = Logic நிறையபேர் இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா.
பேசுவது தமிலிங்கிலமாக இருந்தாலும் எழுத்திலாவது நற்றமிழை பயன்படுத்த விருப்பம். இவ்வாறு எழுத எழுத பின் பேச்சிலும் தமிலிங்கிலம் குறைந்து விடும் என்று நம்பிக்கை.
பிரேசில் 7 கவல் வாங்கி கேவலமாக செருமனியிடம் தோற்றதை நான் பார்க்கவில்லை. நீங்கள் பார்த்திருந்தால் அவ்வாட்டத்தை பற்றி விளக்கமாக இடுகை இடவும்.
//நீங்கள் பார்த்திருந்தால் அவ்வாட்டத்தை பற்றி விளக்கமாக இடுகை இடவும்.//
எழுதிட்டேனே ... எழுதிட்டேனே...
:(
corner shot, foul (தப்பாட்டம்?)இதுக்கு என்ன தமிழ்?
Corner shot = மூலையுதை \ மூலையடி
Foul = அழுகலாட்டம் நீங்க சொன்ன மாதிரி தப்பாட்டம் என்றும் கூட சொல்லலாம்.
இப்பகுதியின் - http://dharumi.blogspot.in/2014/07/771-quarter-finals.html - இறுதிப் பகுதியை மீண்டும் வாசிக்கவும்.
குறும்பன் ,
வழக்கமா உதைப்பந்தாட்டத்தை கவனிப்பதுண்டு ஆனால் இம்முறை என்னமோ தெரியலை நேரம் ஒத்தே வரலை ,எனவே பெரும்பாலும் ஹைலைட்ஸ், செய்தி என ஓடிடுச்சு, ஆ அதுக்கூட பரவாயில்லை , பின்னூட்டமிடக்கூட முடியலை , கைப்பேசியில் தான் பதிவுகளும் படிக்க எணிய சூழல் அவ்வ்..
# இப்படி " ^" அல்லது "Y" இப்படியான வடிவத்தில் இருந்தால் தான் "கவண்" வடிவம் கவட்டை என்பதெல்லாம் "ப" வடிவில் இருப்பதை "கவன்/கவட்டை" எனவும் அதில் இருந்து கவல் என சொல்வது சரியான ஏரணமாக தெரியலையே.
"goal or gol" இன் etymology படி எல்லை என்ற பொருள் தான் வருது , அதாவது எதிரணியின் எல்லைக்கோட்டை தாண்டி பந்தை கொண்டு செல்வதை நோக்கமாக வைத்து ஆடும் விளையாட்டு. பின்னாளில் கோல் போஸ்ட் ,வலை எல்லாம் போட்டுக்கிட்டாச்சு.
இன்னும் சொல்லப்போனால் கோல் போடுவதில் கூட சில முறை குழப்பமாகிடும், கோல் போஸ்ட் இடையே பந்து சென்றாலே கோல் ஆ அல்லது வலையினை தொட வேண்டுமா என்றெல்லாம் "சண்டையாகியிருக்கு , ஒரு முறை கோல் கீப்பர் வலையில் பந்து மோதும் முன்னர் உட்புறமாக பிடித்து விட்டார்!!!
எனவே அதன் பின்னர் பந்து வலையினை தொட வேண்டும் என விதியை மாற்றியிருக்கிறார்கள்.
# //நடுவருன்னு ஒரு ஆளு இருந்தாரான்னே எனக்கு ஐயம். இரண்டு பேரும் அடிச்சிக்கிட்டு சாவட்டும் என்று செருமனிக்கிட்ட காசு வாங்கி இருப்பாரோ?. ஏன்னா//
உதைப்பந்தில் நடுவராக பணியாற்றுவது மிக கடினமான வேலை , வீரர்கள் ஓடும் வேகத்திற்கு ஈடாக ஓட வேண்டும் , கூடவே யார் தவறு செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும், பல முறை நடுவர்கள் மூக்கை உடைத்துக்கொள்வார்கள் , அடி உதையும் கிடைக்கும் அவ்.
கடந்த முறை உலககோப்பை உதைப்பந்தில் கோட்டு நடுவராக (லைன் ரெஃப்ரீ)தமிழ் நாட்டை சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றினார் , அவர் தான் உலக கோப்பையில் பணியாறிய முதல் இந்தியர் என நினைக்கிறேன், இம்முறை யாரும் இருக்கான்களானு தெரியலை.
வவ்வால்,
அவர்கள் ப வடிவம் கவண் என்று கூறவில்லை. ஆனால் |_| என்பதுகூட கவணாக | பயன்பட்டிருக்கலாம். எனக்கு இந்த ஏரணம் சரிபோல் தோன்றுகிறது. வேறுயாராவது இன்னும் சரியான ஏரணத்துடன் உரிய சொல்லை பரிந்துரைத்தால் அதை பயன்படுத்திவிட்டுப்போகிறோம். ஆமாம் GOAL என்பது எல்லை, இலக்கு, குறி, தடை என பலவற்றை குறிக்கிறது\குறித்துள்ளது. இப்ப எல்லையை குறிக்குதா? இலக்கு, குறி என்பவற்றை குறிப்பது தெரியும். கால்பந்து ஆட்டளவில் கவல் என்பது தான் சரி. மற்ற சொற்கள் அந்நிறைவை கொடுக்காது.
எனக்கும் நினைவு உள்ளது (மங்கலாக) பந்து வலையை தொட்டா தான் கவல் என்பதாக.
நடுவர் பணி சிரமமானது என்பதை ஒத்துக்கறேன். ஆனா கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் படு படு மோசம். உலகக்கோப்பைக்கு இப்படியா நடுவர் இருப்பார்.
எப்படி சங்கர் இருந்தாருன்னு கண்டுபுடுச்சிங்க. நீங்க தான் கூகுள் தேடல் கில்லாடி ஆச்சே. இந்த உலகக்கோப்பையில் இந்தியாவில் இருந்து யாராவது நடுவரா இருந்தாங்களான்னு தேடி எங்களுக்கு சொல்லுங்க.
கருத்துரையிடுக