வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஏப்ரல் 03, 2009

சோனியா காந்தியின் சம்பந்தி தூக்கு மாட்டி மரணம்

அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.

60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.

7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.

செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.

ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....

செவ்வாய், மார்ச் 17, 2009

போப்பும் ஆணுறையும்.

போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.

ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.

போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))