வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மார்ச் 09, 2017

அமுக்குப் பிசாசு

நாங்க ஐந்து நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்தோம். நானும் இன்னொரு நண்பனும் எப்பவும் மொட்டை மாடியில் தூங்குவது தான் வழக்கம். அங்கிருந்து கொஞ்சம்  தள்ளி இன்னொரு மாடி வீடு இருந்தது அந்த வீட்டுக்காரங்களின் அழகான கல்லூரி பொண்ணு காலையில் மாடிக்கு வந்து உடற்பயிற்சி செய்வா ஆனா அங்கிருந்து பார்த்தா நாங்க மாடியிலிருந்து அவளை பார்ப்பது தெரியாது, ஏன்னா எங்களது இரண்டு மாடி கட்டடம் அவங்களது ஒரு மாடி கட்டடம். சுற்றி மாடி கட்டடம் இல்லாதது எங்களுக்கு வசதியாக இருந்தது. அப்படியிருந்தாலும் நாங்க எச்சரிக்கையா ஒளிந்து இருந்து தான் பார்ப்போம். அவ போனதையும்  நாங்களும் அறைக்கு போய் விடுவோம். அப்புறம் அவ அண்ணன் மேல வருவான் அவ அம்மா துணி காயப்போட வருவாங்க. இவங்கள் வந்தா எங்களுக்கென்ன வராட்டி எங்களுக்கென்ன.

என் மற்ற அறை நண்பர்களுக்கு இது தெரியும் ஆனா என்னை மாதிரி பொண்ணுங்களை கண்டால் வாயில் எச்சில் ஒழுகுபவர்கள்  அல்ல அவர்கள்  என்பதால் என் மாடி தூக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. இது கிட்டத்தட்ட ஓராண்டு நல்லா போய்க்கிட்டு இருந்தது.

இந்த சமயத்தில் தான் ஒரு நாள் நடு இரவில் என் முகத்தை அமுக்கிக்கிட்டது போல இருந்தது, திமிறினேன் யாரோ என்  கையையும் காலையும் அமுக்கிட்ட மாதிரி இருந்தது என்னால எதுவும் செய்ய முடியவில்லை.  சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு முழித்துக்கொண்டேன். சில்லுன்னு காத்து வீசியபோதும் என் முகம் உடம்பு முழுக்க வியர்வை. என்  செப்பத்தின் (இதயம்) தேளை (லப் டப் என்னும் இதய ஒலி) ஒரு பர்லாங் தூரத்துக்கு கேட்பது மாதிரி அவ்வளவு சத்தமா அடிச்சிக்சி.  என் நண்பனை பார்க்கிறேன் போர்வையை இழுத்துப்போர்த்தி குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான். உடனே அவனை எழுப்பி இவ்விடயத்தை சொன்னேன். அவனுக்கும் ஏதும் புரியவில்லை. உடனே போர்வையை சுருட்டிக்கிட்டு அறைக்கு வந்துவிட்டோம், அன்றைய இரவு என் தூக்கமே போச்சி. அன்றைக்கு அறைக்கு வரும் போது நான் சுடுகாட்டு பக்கம் இருந்து வந்தேன் அப்போது பிணம் எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தேன்.

மற்றவர்கள் பயப்படலாம் என்று இரவே கூற என்னை தடுத்து விட்டதால், விடிந்ததும் எனக்கு இரவு மொட்டை மாடியில் நடந்ததை கூறினேன். சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்த்ததால் கெட்ட கனவு வந்திருக்கும் என்றனர். ஆனா எனக்கு பயம் போகலை நான் மொட்டை மாடிக்கு போய் தூங்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். மாடியில் தூங்க இனி வரமுடியாது என்று கூறிவிட்டான்.  .இன்னொரு நண்பன் வீரமானவன் மனத்திடம் உள்ளவன் பேய், பிசாசு இதுக்கெல்லாம் பயப்படாதவன், நான்  சொல்வதைக்கேட்டு கடுப்பாயிட்டான். இனிமே நான் உங்கூட மேல வந்து தூங்கறேன் எது வருது என்று பார்க்கலாம் என்றான். என்னால அந்த அழகு தேவதையை விடிந்ததும் பார்க்காம இருக்க முடியாது என்பதால் சரின்னு ஒத்துக்கொண்டேன்.

புதுசா மாடியில் தூங்க வந்த நண்பனோட என் தூக்கம் மாடியில் நான்கு மாதத்திற்கு நல்லா போயிக்கிட்டு இருந்தது. என் நண்பனுக்கும் எனக்கு நடந்த மாதிரியே பேய் அமுக்கிருச்சு.  நெஞ்சாங்குலை படபடக்க உடம்பு வியர்த்து கொட்ட நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நடந்ததை கூறி அறைக்கு போகலாம் என்றான். இரண்டு பேரும் பாயையும் போர்வையும் சுருட்டிக்கிட்டு அறைக்கு அடிச்சுக்க பிடிச்சுக்கன்னு ஓடிப்போனோம்.

விடிந்ததும், இரவு மொட்டை மாடியில் நடந்ததை எங்கள் அறையின் மிக திடமான மனதும் வலுவும் உடைய என் நண்பன் விளக்கினான். அவன் வரும் வழியில் சுடுகாடு எல்லாம் கிடையாது. நிறுவனத்திலிருந்து எங்கள் அறைக்கு அவன் வரும் சாலை மக்கள் நடமாட்டம் மிக்கது. அவனுக்கும் எனக்கு நடந்தது போலவே நடந்ததால் மாடியில் பிசாசு இருக்குன்னு முடிவு செய்தோம். துணி காயப்போட மாடிக்கு தான் போகனும். குறைந்தது மூன்று பேர் சேர்ந்து தான் மாடிக்கு போவோம். 9 மணிக்கு மேல தான் போவோம் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு துணி காய்ந்தாலும் காயாவிட்டாலும் அறைக்கு எடுத்து வந்து விடுவோம்.

இரண்டு வாரங்கள் கழித்து என் நண்பன் என்னை பார்க்க வந்தான். அவனிடம் எனக்கு நேர்ந்ததையும் என் நண்பனுக்கு நேர்ந்ததையும் கூறினேன். அவன் இத்தெருவின் கோட்டு வீட்டில் அதாவது கடைசியில் உள்ள வீட்டில் இரண்டு  ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்  தன் இரண்டு வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதுக்கு காரணம் தன் கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் என்றும் மாமியார் வீட்டு கொடுமை என்றும் பல விதமாக கூறுகிறார்கள் என்றும் அப் பெண் பேய் அமுக்கி இருக்கலாம் என்றும் கூறினான். நாங்க இங்க வந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆனா தான் இரண்டு ஆண்டு ஆகும் என்பதால் இவ்விபரம் எங்களுக்கு தெரியவில்லை.  நிறைவேறா ஆசையுடனோ ஏமாற்றப்பட்டதாகவோ நினைக்கும் பெண்ணோ ஆணோ தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பேயாக பிசாசாக திரிவார்கள் என்றும் அவர்கள் மற்றவர்களின் மூச்சை அடக்கி கொல்ல முயல்வதால் அப்பிசாசை அமுக்குப் பிசாசு என்று அழைப்பார்கள் என்று அவனின் ஆயா கூறியுள்ளதாகவும் கூறினான்

அமுக்குப் பிசாசிடம் இருந்து  போராடி தப்பிய நாங்கள் ,சரி நான், இனி மாடிக்கு தூங்கப்போவோம் \வேன்? அழகு தேவதையை விடிந்ததும் பார்ப்பதை விட உயிர் முக்கியமில்லையா? வாடகைக்கு வீடு பார்க்கும் படலம் தொடங்கி விட்டது.

2 கருத்துகள்:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

good one

குறும்பன் சொன்னது…

நன்றி ஆரூர் பாசுகர்