வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மே 19, 2016

அதிமுகவின் பெருவெற்றியை தொடர்ந்து வந்த MEMES

நான் ரசித்த சில MEMES



**




வெற்றிப்பேச்சு தவறாமல் இதைக்கேட்கவும் மேலுவற்றை விட இதுதான் சிறப்பானது ;-)
https://sites.google.com/site/kurumbanfacts/

செவ்வாய், மே 17, 2016

Exit Poll முடிவுகள் (தேர்தலுக்கு பின்பு வந்த கருத்து கணிப்பு)

Exit Poll  என்ற சொல்லுக்கே நம் இந்திய தொக்காக்கள் புது பொருள் கொடுத்துள்ளன.

பொதுவாக Exit Poll என்றால் முடிவுகளில் பெரும் மாற்றம் இருக்காது. ஆனால் எடுத்த ஐந்து பேரின் முடிவும் பெரிதும் மாறுபட்டுள்ளது.  இதிலிருந்தே இது Exit Poll  அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

எப்பவும் கருத்து கணிப்பு வெளியிட்டால் இத்தனை % முன்ன பின்ன இருக்கும் என்பார்கள் இவர்கள் அப்படி எதையும் தெரிவிக்கவில்லை \ தெரிவிப்பதுமில்லை.

Exit Poll என்றால் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களிடன் எடுக்கப்படும் கேட்கப்படும் கருத்தை தெரிவிக்கிறார்கள் என்று பொருள். உலக வழக்கம் இது தான். ஆனால் நம்மூரில் அப்படியில்லை

இங்கு Exit Poll என்பது வாக்குப்பதிவு முடிந்த பின் முன்பே எடுத்த கருத்து கணிப்பை வெளியிடும் கருத்து கணிப்பு என்று பொருள்.

இப்படி வெளியாகும் Exit Poll  வைத்து அதை நம்புவர்கள் தான் மண்டையை பிச்சுக்கணும், நேரில் சென்று கருத்து கேட்காமல் விட்டத்தை பார்த்து எழுதுவது  தன் கருத்தை எழுதுவது அதற்கு செய்தி இதழ்கள் தொக்கா போன்றவை.

இந்திய ஒன்றியத்தில் இதுவரை எந்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் அதாவது Exit Poll  எதுவும் பலித்ததில்லை. காரணம் நம் ஒன்றியம் அதுகூட வேண்டாம் மாநிலங்களே பன்முகத்தன்மை உடையது. ஒவ்வொரு 25\50 கிமீக்கு நம் புவியமைப்பு பழக்கவழக்கம் சமூக அமைப்பு மாறும். வாக்கு போடும் போது சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற காரணிகளும் பங்குபெரும். மேலும் அந்த வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கும்.  இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மேற்கத்திய நாடுகள் முறையையே நாமும் பின்பற்றினால் நம் கருத்துகணிப்பு எக்காலத்திலும் பலிக்காது.


புதன், மே 11, 2016

ஆதி பாவம் - கருணாநிதி பற்றி அரவிந்தன் கண்ணையன்

Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதிப் பாவம்)



திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜியார் பற்றி எங்கள் வீடுகளில் நல்லதாகப் பேசிக் கேட்க முடியாது. கருணாநிதியின் முந்தைய ஆட்சிக் காலங்கள் மறக்கப்பட்டு நெருக்கடிக் காலத்தில் அவர் பதவி இழந்ததும் அப்போது திமுகவினர் அனுபவித்த அடக்கு முறைகளுமே நினைவில் எஞ்சியிருந்த நிலையில் எம்ஜியாரின் மரணத்திற்குப் பின் 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ஆனால் மூன்றாண்டுகளுக்குள்ளாகவே திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டது.

"ஜனநாயக படுகொலை" என்று கூக்குரலிட்டனர் உடன் பிறப்புகள். ஆனால் இப்படி மத்திய அரசை நிர்பந்தித்து மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் வழக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் கருணாநிதியே.

தன்னுடைய அரசை டிஸ்மிஸ் செய்ததோடல்லாமல் தன் மகனையும் கைது செய்த இந்திராவோடு பதவிக்காகக் கைக்கோர்த்து "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக" என்று ஆலவட்டமும் சுற்றி ஆட்சியைக் கைப்பிடித்த இந்திராவை நிர்பந்தித்து எம்ஜியாரின் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார் கருணாநிதி. ஆதிப் பாவம்.

2006-11 கருணாநிதியின் ஆட்சி அவலமானது. ஒரு தேர்தலை ஜெயிப்பதற்காக ஒரு சமூகத்தையே இலவசங்களுக்கு அடிமையாக்கியதில் இருந்து அவர் அடுக்கடுக்காகச் செய்தவை என்னைத் திமுக மீது தீரா வன்மம் கொள்ளச் செய்தது.






இலவசமோ இலவசம்


இந்திய அரசியலில் இலவசங்கள் தவிர்க்க இயலாதவை அது தமிழகத்திற்கும் பொருந்தும். இலவச வேட்டி, சேலை, காலணி ஆகியன முதல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு என்று ஒரு நீண்டப் பட்டியல் தமிழகத்தில் இலவசத் திட்டங்களாக இருந்து வந்தன. அவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளை ஏழைகளுக்குப் பூர்த்திச் செய்வனவாக இருந்தன, அல்லது அது தான் குறிக்கோள் என்றாவது சொல்லப் பட்டது. கருத்துக் கணிப்புகளில் திமுகப் பின் தங்குகிறது என்பதை அறிந்து தேர்தலில் எப்படி வெற்றிப் பெறுவது என்று தத்தளித்த திமுகவுக் கைக் கொடுத்தார் பொருளாதாரம் படித்தவர் என்று சொல்லப்பட்ட நாகநாதன். தமிழர்களின் சினிமா மோகம் உலகறிந்தது. அந்தச் சினிமா மோகத்தை நெய்யிட்டு வளர்த்து அதனால் ஆட்சியைக் கைப்பற்றிய திமுகவுக்கு அது பற்றித் தெரியாதா என்ன? அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் உருவானது.


இலவசத் தொலைக்காட்சி

தொலைக் காட்சி என்பது ஆடம்பர பொருளாகவே இருந்து வந்தது அது வரை. மேலும் கேளிக்கைகளையே முதன்மை நிகழ்ச்சிகளாகக் கொண்ட தமிழகத்தில் குழந்தைகளுக்குப் படிப்பின் மீதான கவனத்தைச் சிதறடிக்கும் என்பதும் ஒரு கருத்தாக நிலவிய சமூகத்தில் 'இலவசத் தொலைக் காட்சி' என்று அறிவித்துத் தேர்தலில் மொத்தக் கவனத்தையும் திமுகவின் மேல் திருப்பினார் கருணாநிதி. தேர்தல் அறிக்கையில் மேலும் இலவசங்கள். "திமுகவின் தேர்தல் அறிக்கையே இத்தேர்தலின் ஹீரோ" என்று இறும்பூது எய்தினார் கி.வீரமணி.

இன்று ஜெயலலிதா அறிவிக்கும் இலவசங்களுக்காகக் குதிக்கும் உடன் பிறப்புகள் அன்று எங்கே போனார்கள்? ஆதிப் பாவம். இலவசத் தொலைக் காட்சி திட்டத்துக்கான செலவு பல்லாயிரம் கோடிகள். இட ஒதுக்கீட்டினை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் திமுக ஆதரவளரான என் உறவினரிடம் கேட்டேன் "எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் அந்தப் பணத்தில் திறக்கப் பட்டிருக்கலாம். இது தவறில்லையா?" அவர் கூலாக "அது தேர்தலை ஜெயிப்பதற்காகச் செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு tactic" என்றார் அந்த அமெரிக்க வாழ் உடன்பிறப்பு. நான் மேலும் கேட்டேன் "இது போல் நீ ஆதரிக்கும் ஒபாமா செய்தால் ஒப்புக் கொள்வாயா?" அதற்கும் அவர் அசரவில்லை, உடன் பிறப்பாயிற்றே, "தமிழக வாக்காளனுக்கு இலவசங்கள் தான் புரியும்" என்றார். பொதுவாக இணையத்தில் எனக்கு இந்தியாவை வசைப் பாடுபவன் என்று பெயர். அவரோ இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காண்பவர். என்னை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் என் வசைகள் பெரும்பாலும் ஆதங்கங்களே. எனக்குப் புரியாத முரண் இந்தியாவை நேசிக்கிறேன் என்று சொல்லும் பலர் தாங்கள் மேலை நாடுகளில் எந்த அரசியல் மற்றும் கலாசாரப் பண்பாடுகள் நிமித்தம் நிம்மதியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றனரோ அதன் சாயல் கூட இந்திய வாக்காளனுக்கோ, குடிமகனுக்கோ கிடைக்க லாயக்கில்லை என்று ஒரு இரட்டை டம்ப்ளர் முறையைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பின்பற்றுவது தான். இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்குத் தமழன் கொடுத்த விலை ரூபாய் நாலாயிரம் கோடி.

சினிமாவுக்கு வரி விலக்குக் கூத்து

கருணாநிதியின் தமிழ் பற்றுக்குத் தமிழகம் கொடுத்த விலை பல நூறு கோடி ரூபாய்கள். தமிழ் சினிமாக்கள் ஒரு கட்டத்தில் பெரும்பாலாக ஆங்கிலப் பெயர்கள் கொண்டே வெளிவந்தன. தமிழினக் காவலர் துடித்துப் போனார். தமிழில் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்தார். சினிமாக்களின் வசனமோ, பாடல்களோ நல்ல தமிழில் இருக்க வேண்டுமென்பதெல்லாம் தேவையில்லை. 'காட்பாதர்' என்று பெயரிட்டிருந்த தன் படத்திற்கு 'வரலாறு' என்று பெயரிட்டார் கே.எஸ்.ரவிக்குமார். அரசு கஜானா சில கோடிகளை இழந்தது அப்படத்திற்குக் கொடுக்கப் பட்ட வரி விலக்கால். அத்திட்டத்தையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று சொல்லி இருக்கலாமே? இதில் வேடிக்கை என்னவென்றால் முத்தமிழ் அறிஞரின் பேரன்கள் நடத்திய சினிமாத் தயாரிப்புக் கம்பெனிகளின் பெயர்கள் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்', 'கிளவுட் நைன்'. அவர் மகன் நடத்திய வீடியோ கடையின் பெயர் 'ராயல் கேபிள் விஷன்', பர்னிச்சர் கடையின் பெயர் 'ராயல் பர்னிச்சர்'.

மேற்சொன்ன இரண்டு இலவசத் திட்டங்களின் விலை மட்டுமே நூற்றுக் கணக்கான பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் போதுமானவை.

செம்மொழி மாநாடுக் கூத்து

முத்தமிழ் காவலரின் தமிழ்த் தாகம் ஊரறிந்தது. தன்னுடைய தமிழ்ப் பற்றை நிலை நாட்டிட உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்தார். அப்புறம் அதில் சிக்கல் என்றவுடன் 'செம்மொழி மாநாடு' என்றார். செலவு 500 கோடி ரூபாய். அம்மாநாட்டால் தமிழுக்கு ஒரு எள் முனையளவுக் கூட உபயோகமில்லை. அம்மாநாடு நடந்த சமயத்தில் நான் தஞ்சை செல்ல நேர்ந்தது. கருணாநிதியால் மலையாளத்தான் என்று இகழப்பட்ட எம்ஜியார் நிறுவிய தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. பல்கலைக் கழகமே நிதி நெருக்கடியில் தத்தளிப்பதை அறிந்தேன். கருணாநிதி நிறுவிய நூலகத்தை ஜெயலலிதா சீரழித்து விட்டாராம். என் உறவினர் ஆதங்கத்துடன் முறையிட்டார் "நீ புத்தகங்களை நேசிப்பவன், ஆராதிப்பவன், இது தவறில்லையா" என்றார். என் பதில் "வேறு யாராவது கேட்டிருந்தால் கட்டாயமாக இது தவறு என்று தயங்காமல் சொல்வேன். ஆனால் கேட்பது உடன்பிறப்பு ஆகையால் என் பதில் 'அதனாலென்ன'". தமிழ்ப் பல்கலைக் கழகத்தைச் சீரழித்த கருணாநிதியைக் கண்டிக்காதவர்கள் இன்று ஜெயலலிதாவை கண்டிக்க வக்கில்லாதவர்கள். ஆதிப் பாவத்தைக் கண்டிக்காமல் விழுதை வசைப் பாடுவது பாரபட்சம்.


தமிழ் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் 2010

விவசாயக் கடன் ரத்து

வாரியிறைக்கப் பட்ட இலவசங்களில் இன்னொன்று 'விவசாயக் கடன் தள்ளுபடி'. 2006 தேர்தலுக்கு முன்பு என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்த வங்கி அதிகாரி ஒருவர் சொன்னார் "விவசாயக் கடன்களை வசூலிக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் 'திமுக ஆட்சிக்கு வந்தால் கடன் ரத்தாகும் ஆகவே தேர்தல் வரை நாங்கள் பணம் தருவதாய் இல்லை' என்கிறார்கள்". பதிவியேற்றவுடன் மேடையிலே கையெழுத்திட்ட முதல் உத்தரவு 'விவசாயக் கடன் ரத்து'. அரசுக்கு 5000 கோடி ருபாய் இழப்பு. விவசாயக் கடன் ரத்தின் சாதக-பாதகங்கள் வேறு விவாதம் ஆனால் அதற்குக் கொடுத்த விலை கணிசமானது.

கல்விக் கடன் ரத்து மேளா

இதோ இத்தேர்தலுக்குக் கவர்ச்சியாக அறிவிப்பு வெளியானது கல்விக் கடன் தள்ளுபடியென்று. இந்தியாவில் வழங்கப்படும் கல்விக்கடன்களில் 50% தென் மாநிலங்களில் இருக்கிறதாம். தமிழகம் கல்விக் கடன்களில் முதலில் நிற்கிறது, 16,380 கோடி ரூபாய். அடுத்த நிலையில் கேரளம், 10,487 கோடி ரூபாய். 16,480 கோடி ரூபாயில் சில ஆயிரம் கோடிகளை ரத்துச் செய்தாலும் அது பல கல்லூரிகள் கட்டுவதற்கான பணத்திற்கு ஈடானது. ஏன் திமுக அறிக்கை 10 அரசுக் கல்லூரிகள் திறக்கப் படும் என்று உறுதி அளிக்கலாமே. இலவசம் என்றால் தான் ஓட்டு விழும். பாவ்லோ தன் நாயைப் பழக்கியது போல் இலவசத்திற்குத் தமிழக வாக்காளனை வாய்ப் பிளக்க வைத்ததே திமுகவின் சாதனை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டமெனும் கூத்து

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று ஒன்று 2006-இல் அறிமுகப் படுத்தப்பட்டது, எப்போதும் போல், பல நூறு கோடிகள் செலவில். இலவச மருத்துவமனகள் நடத்தும் அரசாங்கமே தன் குடி மக்களிடம் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல சொல்லியதோடல்லாமல் செலவையும் தானே ஏற்கும் என்று பித்தலாட்டம் ஆடியது. அரசாங்கம் தான் செலவை ஏற்கிறதே என்று நல்ல நாளிலேயே கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருந்தகங்கள் என்று தமிழக மருத்துவத் துறையே கொள்ளையர் கூடாரமானதோடு விலைகளும் விஷமாய் ஏறின. ஏன் அதற்குச் செலவான கோடிகளைக் கொண்டு அரசு மருத்துவமனைகளைச் சீரமைத்திருக்கலாமே? ஒரு வருடத்திற்கு 500 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டது. 5 வருடங்களுக்கு 2500 கோடி ரூபாய். பாவ்லோவின் நாய்க்குத் தேவை இலவசம் என்று கட்டுமரத்திற்குத் தெரியும்.

கல்வியைச் சீரழித்தது


கருணாநிதி ஆட்சிக் காலங்களில் கல்வியில் தலையிடுவது எப்போதும் நடக்கும். தமிழ் பாட நூல்களில் ஐன்ஸ்டீன், நியூட்டனின் விதிகள் குறுந்தொகையிலும், கம்ப ராமாயனத்திலும் இருப்பதாகத் திமுக அறிஞர்கள் எழுதிய பாடங்களைப் படித்ததை இன்று நினைத்தாலும் குமட்டுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளி வந்த சமீபத்திய செய்தி சொன்னது தமிழ் நாட்டு சமச்சீர் கல்வி முறையில் பயின்றவர்கள் 9 பேர் ஐஐடிக்குத் தேர்வு செய்யப்பட்டனர் என்று. இது மாபெரும் சாதனை. இந்தச் சாதனையின் பெருமை முழுவதும் கருணாநிதியையும் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவையுமே சாரும். இது ஏன் சாதனை என்றால் இது நான் நினைத்ததை விட 9 இடங்கள் அதிகம். வருங்காலச் சந்ததியினரின் கல்வியைக் கெடுத்த மகானுபவர் கருணாநிதியே.

1988-இல் மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் தேர்ச்சிப் பெற்றவன் நான். உயர் நிலைப் பள்ளிக் கல்வி தமிழகப் பாடத்திட்டத்தில் தான். அப்போதே தமிழகப் பாடத்திட்டம், மெட்ரிகுலேஷனை ஒப்பு நோக்கும் போது, மிக எளியதாக இருந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டாலோ தமிழகப் பாடத்திட்டம் ஒன்றுக்கும் உதவாதது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் அப்பாடத்திட்டத்திற்கான புத்தகங்களும் குப்பைகள் என்றால் மிகையில்லை. மழைக்காகக் கூடப் பள்ளியின் பக்கம் ஒதுங்காத கருணாநிதிக்குப் படிப்பைப் பற்றிக் கவலையுமில்லை அது பற்றிய ஞானமுமில்லை.

ஜெயலலிதா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சமச்சீர் கல்வியை நிராகரித்தார் மாணவர்களின் நிலைப் பற்றிக் கவலைப் படாமல். எப்போதும் போல் உடன்பிறப்பு ஒருவர் கொதித்தார் "பார்த்தாயா, உச்ச நீதி மன்றமே கண்டித்து இருக்கிறதே. இது மாணவர்களின் வாழ்க்கை அல்லவா?" என் பதில் அன்றும் இன்றும் ஒன்றே. கருணாநிதி தான் ஆதிப் பாவம். அவர் செய்தது தான் மாணவர்களை இனி பல வருடங்களுக்குப் பாதிக்கும். ஜெயலலிதா இதைப் பக்குவமாகக் கையாண்டிருந்தால் இந்தத் தலைக் குனிவு ஏற்பட்டிருக்காது.

கல்வியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும் கருணாநிதியும் கொண்ட பார்வைகள் கவனிக்கத் தக்கவை. ஜெயலலிதா படித்தது சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் மெட் ரிகுலேஷன் கல்வி முறையில். அவருக்குத் தெரியும் அக்கல்வி முறையின் சிறப்புகள் பற்றி. கருணாநிதிக்கும் தெரியும். எப்படி என்கிறீர்களா. மு.க.ஸ்டாலினை முதன் முதலில் சேர்க்க நினைத்தது சர்ச் பார்க்கில் தான். அது முடியாமல் போகவே சென்னை கிறித்தவக் கல்லூரியின் பள்ளியில் சேர்த்தார். மாறன் சகோதரர்களூம், கனிமொழியும் முறையே தொன் போஸ்கோ பள்ளியிலும் சர்ச் பார்க்கிலும் பின்னர்ப் பயின்றனர். தன் பிள்ளைகளுக்கு உயர் தர கான்வெண்ட் படிப்பும் ஏழை எளிய தமிழக வாக்காளனுக்குச் சமச்சீர் கல்வியும் என்று இரட்டை டம்ப்ளர் முறையை அறிமுகப் படுத்தியவர் கருணாநிதி. ஆதிப் பாவம்.


1967-77 கழக ஆட்சியில் கல்வியின் இருண்டக் காலம்


இட ஒதுக்கீட்டினைப் பற்றி விரிவாக அலச வேண்டிய இடம் இதுவல்ல ஆனால் சில விவரங்கள் நினைவுக் கூறத் தக்கவை. முதலாவது இட ஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்திற்கு ஜஸ்டிஸ் பார்ட்டியின் கொடை. அதில் ஈ.வெ.ராவின் பங்கு ஒன்றுமில்லை. பின்னர் இந்திய அரசியல் சாசனம் அதை இந்திய அளவில் ஸ்தாபித்தது. இட ஒதுக்கீடு கட்டாயமாகச் சமூக முன்னேற்றத்தில் ஒரு மிக முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளது. ஆனால் இன்று அது வெறும் ஓட்டு வங்கி அரசியலாக ஆகிவிட்டது மறுக்க முடியாத உண்மை. அதைவிட முக்கியமானது இந்த இட ஒதுக்கீட்டினை என்னமோ சர்வரோக நிவாரணி ரேஞ்சுக்கு திராவிட இயக்கத்தினர் விற்பனை செய்வது சகிக்க முடியாதது. பின் தங்கிய சமூகங்களின் கல்வி முன்னேற்றத்தில் இட ஒதுக்கீடு ஒரு கருவி மட்டுமே அதுவே அல்லது அது மட்டுமே தீர்வல்ல. பின் தங்கிய சமூகங்களின் முக்கியத் தேவை எளிதில் அனுகக் கூடிய கல்விச் சாலைகள். கல்லூரிகள் நகரங்களில் அமைந்துள்ளன அவற்றில் தங்கிப் படிப்பதே பலருக்குப் பொருளாதாரச் சவால்.

"திராவிட இயக்கங்கள் என்ன செய்து கிழித்து விட்டன" என அதன் எதிரிகள் கேட்கிறார்கள் என்று சு.ப.வீர பாண்டியன் கொதித்தார். கொதித்து விட்டு இன்று படித்துப் பட்டம் பெற்ற பலரின் பெற்றோர் படிப்பறியாதவர்கள் இதுவே திராவிட இயக்கதினரின் சாதனை என்று மார் தட்டினார். யாரோ கட்டிய கல்லூரிகளில் யாரோ ஆரம்பித்து வைத்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இவர் சொந்தம் கொண்டாடுகிறார்.

சு.ப.வீயின் பிதற்றலுக்கு மறுமொழி எழுத ஆராய்ந்த போது ஒரு மிகக் கசப்பான அவலம் வெளிவந்தது. 1967 திமுக ஆட்சிக் கட்டில் ஏறியது. 1977-வரை திமுக ஆட்சி. 1967-1977 வரை ஒரு அரசு பொறியியல் கல்லூரியோ அரசு மருத்துவக் கல்லூரியோ கூடத் திறக்கப் படவில்லை. பத்து வருடங்கள் திமுக அரசு, அதில் இரண்டு வருடம் தவிர எட்டு வருடங்களுக்குக் கட்டுமரம் தான் ஆட்சி, எந்த அரசுத் தொழில் நுட்பக் கல்லூரியையும் திறக்கவில்லை. 80-களின் பிற்பகுதியில் ஒன்றிரண்டு தொழிற் கல்லூரிகள் திறக்கப் பட்டன. பிறகு எம்ஜியார் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து ஒரு கல்விப் புரட்சிக்கும் கல்விக் கொள்ளைக்கும் அடிக்கல் நாட்டினார். கல்லூரிகள் கிராமங்களின் அருகே திறக்கப் பட்டன. தனியார் கல்லூரிகள் அரசாங்கத்தின் உதவியல்லாமல் நடந்தாலும் அவற்றிலும் அரசாங்கத்திற்கென 50% இடம் ஒதுக்கீடு செய்யவும் அப்படி ஒதுக்கிய இடங்களில் அரசின் இட ஒதுக்கீடு விகிதாசாரம் படி இடம் ஒதுக்கவும் ஆணை பிறப்பித்துக் கல்விப் பரவலாக்கத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார் எம்ஜியார். தொழிற் கல்லூரிகள் மட்டுமல்ல ஒன்றிரண்டு கலைக் கல்லூரிகள் தவிர வேறு கல்லூரிகளோ மற்றும் பல்கலைக் கழகங்களோ 1967-1977வரை திறக்கப் படவில்லை. 1967-1977 தமிழ் நாட்டின் கல்வியைப் பொறுத்தவரை இருண்ட காலம்.

1967-77 கல்விக்கு இருண்ட காலம் என்றால் 2006-11 கல்விக்குச் சாவு மணி அடித்த வருடங்கள் என்பது மிகை ஆகாது. சமச்சீர் கல்வியினால் பள்ளிக் கல்வியைச் சீரழித்தது பத்தாது என்று தமிழகமெங்கும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசலாக முளைத்தன. திமுக அமைச்சரவையில் பலர் 'கல்வித் தந்தை'களாக உருவெடுத்தனர். துணை வேந்தர் நியமனங்களில் ஊழல் தலை விரித்தாடியது. அரசாங்கமே நீதிமன்றத்தில் சில ஊழல் துணை வேந்தர்கள் பற்றி அறிக்கைக் கொடுத்தது. பாவம் அவர்கள் போட்ட முதலை திருப்ப வேண்டி ஊழல் செய்தவர்கள்.

இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்தை வைத்து கருணாநிதி அடைந்த அரசியல் லாபத்திற்கு அளவேயில்லை. இந்தி எதிர்ப்பு அரசியலை விதைத்தது அண்ணாதுரையும் ராமசாமி நாயக்கரும் ஆனால் முழுவதுமாக அறுவடை செய்தது கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எந்தத் தலவரும் அல்லது தலைவரின் உறவுகளோ தீக்குளிக்கவோ துப்பாக்கி சூடுகளில் இறக்கவோ இல்லை. மாறாக உயிர்த்தியாகம் செய்த பலரின் குடும்பங்கள் இன்றும் வறுமையில் உழல்கின்றன. தலைவர்களின் பிள்ளைகளோ நகரங்களின் உயர்தரக் கான்வெண்டுகளில் இந்தியை இரண்டாம் மொழியாகக் கற்றனர். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட 'நவோதயா பள்ளிகள்' கிராமபுறங்களில் உயர்தரப் பள்ளிகளுக்கான திட்டம். இந்தியாவிலேயே நவோதயாப் பள்ளிகள் இல்லாத மாநிலங்கள் இரண்டு அதில் ஒன்று தமிழகம். உபயம் கருணாநிதி. மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் கருணாநிதி கல்வியில் தமிழகத்தை மோசம் செய்தே வந்துள்ளார். 'படித்துக் கிழித்தது என்ன, கிழித்துத் தைத்தது தான் என்ன என்ன' என்று கல்வியை வசைப் பாடி கவிதை எழுதியவர் வேறெப்படி செயல்படுவார். கல்வியைப் பொறுத்தவரைக் கருணாநிதியும் திமுகவும் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாது.

திமுக ஜனநாயக மரபுள்ள கட்சியா

அதிமுகத் தனி மனித கவர்ச்சியை முதலீடாகக் கொண்டே ஆரம்பிக்கப் பட்டது. ஆகவே அக்கட்சியின் நிர்வாகிகளும் அமைச்சர்களும் தாங்கள் அடிமைகள் என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். திமுக என்பது இயக்கம் அதிமுக என்பது அரசியல் கட்சி என்ற தொனியில் திமுகத் தொண்டர்கள் பேசுவார்கள். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் திமுக ஜனநாயக மரபுள்ள கட்சி என்பது தான் திமுகப் பற்றிச் சொல்லப்படும் பொய்களில் தலையாயது.

'தம்பி வா, தலைமை ஏற்க வா' என்று தன்னை அண்ணா அழைத்ததாக அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார் கருணாநிதி. கருணாநிதி அப்படி யாரையும் கடந்த 50 வருடங்களில் அழைத்ததில்லை, அதுவும் தன் குடும்பத்தார் அல்லாதாரை. இது தான் திமுக வகை ஜனநாயகம். தாங்கள் அடிமைகள் என்று உணர்ந்த அதிமுகவினர் தாங்கள் அடிமைகள் என்றே உணராத திமுகவினரை விடப் பல படிகள் உயர்ந்தவர்கள்.

ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயக மரபுகள் என்றால் என்ன என்பதின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள் திமுகத் தொண்டர்கள். ஜனநாயகப் படுகொலை நிகழ்த்துவதில் திருக்குவளைக்காரருக்கு ஈடு இணையே கிடையாது. எம்ஜியாரின் அரசை டிஸ்மிஸ் செய்தது ஒரு ஸாம்பிள் தான்.

காலில் விழும் வைபவங்களும் திமுகவும்


ஜெயலலிதா காலில் விழுவதோடல்லாமல் ஹெலிகாப்டரை நோக்கி கரம் கூப்பி வானை நோக்குவது, ஜீப் டயருக்கு வணக்கம் சொல்வது எல்லாம் மிக அருவருப்பானவை. ஆனால் இதற்கும் திமுகவே பிள்ளையாற் சுழி. இதோ வைகோ கருணாநிதி காலில் விழும் புகைப்படம். இப்புகைப்படம் எடுக்கப் பட்ட் காலத்தில் யாரும் ஜெயலலிதா காலில் விழுந்ததாகத் தெரியாது. வயதில் மூத்த கே.என்.நேரு பொது மேடையிலே சமீபத்தில் ஸ்டாலினின் காலில் விழுந்தார். அதெல்லாம் கூடப் பரவாயில்லை புது மணத் தம்பதியர் ஸ்டாலினின் மகன் உதயநிதி காலில் விழுந்த அசிங்கமும் நடந்தது.






நீரா ராடியா டேப், அழகிரி நியமனம்: ஜனநாயகக் கொலைகள்

ஒரு தேசத்தின் அமைச்சரவை என்பது மிக முக்கியமானது. கூட்டணி அமைச்சரவைகளில் பேரங்கள் இருப்பதும் சகஜமே. முக்கிய அமைச்சரவைகள் தன் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என்று எல்லாருமே முயல்வது வழக்கம். சிலர் கட்சி நலன் மீறி மாநில நலனையும் யோசிக்கக் கூடும். அது போன்ற சிறு பிள்ளைத் தனங்களைக் கருணாநிதி என்றுமே செய்ததில்லை. அதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அரசியல் சாசனத்தையெல்லாம் காற்றில் பறக்க விட்டு நாலாந்தரத் தரகரிடம் காய்கறி வியாபாரம் பேசுவது போல் கனிமொழியும் மற்றவர்களும் பேரம் பேசியது வெளிவந்த போது கருணாநிதியோ, கணிமொழியோ, உடன் பிறப்புகளோ அலட்டிக் கொள்ளவேயில்லை.

இந்தியாவின் ஏழைகள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனுக்கும் மிக முக்கியமான பிரச்சினை மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள். இந்தியாவின் மருந்து தயாரிக்கும் கொள்கை உலக வர்த்தக ஸ்தாபனம் ஒப்புக் கொள்ளாதது. அக்கொள்கை பற்றி மிக முக்கியமான விவாதங்கள் நடைப் பெற்ற சமயத்தில் அந்த இலாகாவுக்கு மந்திரியாக அழகிரியை நியமனம் செய்து தன் தந்தைக்குரிய கடமையைச் செவ்வனே செய்தார் கருணாநிதி. அழகிரிக்கோ கோப்புகளைப் படிப்பது, பாராளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்று எதுவும் அறியாப் பிள்ளை. அவர் பாவம் பொட்டுச் சுரேஷ், அட்டாக் பாண்டி என்று அறிவு ஜீவிகளோடவே வாழ்ந்துவிட்டவர். அழகரி விஷயம் சற்று விரிவாகப் பின்னர்.

தேர்தலில் தன் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற வேண்டுமென்று நினைப்பது, தன் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் எதிர்ப்பார்ப்பதே. ஆனால் கழக உடன் பிறப்பு ஒருவர் பேஸ்புக்கில் எழுதுகிறார் "கந்தவர்வக் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கி தலைவர் காலடியில் சமர்பிக்க இருக்கும் என் நண்பன் தமிழ்ராஜாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று. தேர்தல் வெற்றியை தலைவரின் காலடியில் சமர்பிக்கச் சொல்வது அருவருக்கத் தக்க அடிமைத்தனம். தேர்தல் வெற்றி என்பது என்னமோ எதிரி நாட்டின் மீது படையெடுத்து வென்ற வெற்றியல்ல. தலைவனும் கொற்றவனல்ல அவன் காலடியில் அந்த வெற்றியை சமர்பிக்க. ஒரு தொகுதியில் வெல்வதென்பது ஒரு வட்டாரத்து மக்களின் பிரதிநிதியாவதற்கே. அந்த வெற்றியை காலடியில் சமர்பிப்பேன் என்பது அத்தொகுதி மக்களை அவமானப் படுத்துவது.
அமெரிக்கத் தேர்தல் குறித்து யோசிக்கும் போது தோன்றியது. இங்கே ஹிலாரியையும், சாண்டர்ஸையும் அவர்கள் ஆதரவாளர்கள் 'என்னுடைய வேட்பாளர்' (my candidate for presidency) என்று தான் கூறுவர். எந்த வாக்காளனும் ஹிலாரியையோ எனையோரையோ 'தலைவர் ஜெயிக்க வேண்டும்' என்று கூறமாட்டார்கள்.

ஜனநாயகம் அறியா பிரபுத்துவச் சீமான்கள்

அதிமுகவுக்கு வந்துவிடுங்கள் என்று ஒரு உடன்பிறப்பிடம் ஒருவர் பேஸ்புக்கில் கிண்டலாகச் சொல்ல உடன்பிறப்பு சிலிர்த்து "நடிகையின் பின்னால் போக மாட்டேன்" என்கிறார். பாவம் அவருக்குத் தெரியாது 1967 முதல் 2011 வரை நடிகர்களின் பிரபலத்தை நம்பியே திமுகத் தேர்தலில் இறங்கியது. வடிவேலுவை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று மனப் பால் குடித்தனர் திமுகவினர். அது தான் ஜனநாயகம் பற்றியும் மக்கள் ஆதரவுப் பற்றியும் கருணாநிதிக்கு இருந்த மதிப்பு. வடிவேலுவைக் காண ஆயிரகணக்கில் கூடிய மக்கள் வெள்ளத்தை உவகையோடு ஒளிபரப்பு செய்தது சன் டீவி. ஆனால் எல்லா மக்களையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாதென்பதை மக்கள் நிரூபித்தனர். உடன்பிறப்பு ஜெயலலிதாவை 'நடிகை' என்று குறிப்பிட்டதில் திமுகவினருக்கே உள்ள ஆணாதிக்கச் செருக்கும் உள்ளது.

மக்களின் வெள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது அராஜகமா என்றால் ஆமாம். ஆனால் அதைச் சொல்லும் அருகதை திமுகவினருக்குக் கிடையாது அவ்வளவே. மக்களின் வரிப் பணத்தில் செல்லும் பேருந்துக்கு 'அன்னை அஞ்சுகம் போக்குவரத்துக் கழகம்' என்று பெயரிட்டது யார்? ரேஷன் அரிசிப் பைகளில் தன் திருமுகப் புகைப்படத்தைக் கருணாநிதி பதிக்கவில்லையா? மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் திட்டங்களுக்குத் தன் பெயரையே சூட்டி மகிழ்ந்த குழந்தை யார்?

திராவிட இயக்கித்தினர் தான் இந்தப் 'போர்வாள்', 'தளபதி' போன்ற மன்னர் கால வார்த்தைப் பிரயோகங்களுக்குள் இன்னும் சிக்குண்டிருப்பது.






கருணாநிதி இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களிலேயே மிகவும் அருவருக்கத் தக்கது என்றால் நான் தயங்காமல் கீழிருக்கும் படத்தைச் சொல்வேன். கட்சிக்கு நிதி சேர்ப்பது எல்லோரும் செய்வது. பாவம் பல தொண்டர்கள் தங்களிடம் இருக்கும் கடைசிக் காசையும் கட்சி நிதிக்காகக் கரைத்த கதைகள் ஏராளம். அப்படிச் சேகரித்த பணத்தைக் கிரீடமாக்கி தலைவனுக்கு முடி சூட்டி அகமகிழ்ந்து இளித்துக் கொண்டு நிற்கும் இந்த அற்பர்களுக்குத் தெரியுமா இந்தச் சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்க என்ன விலைக் கொடுக்கப் பட்டதென்று? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா?" இந்த அற்பர்களின் கட்சியிலா ஜனநாயகம் வாழ்கிறது. ஜனநாயகம் என்பதைப் பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.






கூட்டணிக் கட்சி தர்மங்கள்

ஜெயலலிதா பேசும் மேடைகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மட்டுமல்ல அவர் கட்சி வேட்பாளர்களும் கூட்டாக ஒரு படி கீழே அமர்ந்திருப்பதும் ஜெயலலிதா உரையாற்றுவதும் எதேச்சாதிகாரத்தின் உச்சம். ஆனால் உடன்பிறப்புகள் திமுகவில் கூட்டணிக் கட்சியினர் ஏதோ ரத்தினக் கம்பள வரவேற்பில் திளைப்பதாகக் கதை அளப்பது வெறும் கதையே. இம்முறை தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகள் தன் கூட்டணியில் இருந்தால் தனக்குச் சில ஜாதியினரின் ஓட்டுக் கிடைக்காதென்றெண்ணி அவர்களைக் கழற்றி விட்டார் கருணாநிதி என்னும் சமூக நீதிக் காவலர். ராமதாஸ் தன் ஜாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்த போது 'அவர் கேட்டு நான் மறுத்ததில்லை' என்று பூரிப்போடு இளகிய கருணாநிதி திருமாவளவன் கட்சி கூட்டணியில் இருந்த போதெல்லாம் உதாசீனமே செய்திருக்கிறார். அது மட்டுமல்ல் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்த போதும் ஆட்சியில் பங்கு தர மறுத்தவர் தான் கருணாநிதி. அடிமைகளை அவர்கள் அடிமைகள் என்று உணராதவாறு நடத்துவதில் ஜெயலலிதா கருணாநிதியிடம் பாலப் பாடம் படிக்க வேண்டும்.

திருமங்கலம் பார்முலா: ஜனநாயகத்தைக் குழித் தோண்டிப் புதைத்தல்


மேற்சொன்ன எல்லாவற்றையும் விட ஜனநாயகம் என்ற கருத்தியலின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது திமுகவின் 'திருமங்கலம் பார்முலா'. தேர்தல் மோசடிகள், கள்ள ஓட்டுப் போடுவது, சில ஓட்டுக்களை விலைக் கொடுத்து வாங்குவது என்பதெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டு அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் திமுக அரங்கேற்றியது வரலாறுக் காணாத தேர்தல் மோசடி. அதன் சிருஷ்டிகர்த்தா கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சராக இருந்த அழகிரி. ஒவ்வொரு இடைத் தேர்தலின் போதும் மிகவும் நூதன முறையில் வாக்காளர்களின் வீட்டிற்குப் பணம், ஆயிரக்கணக்கில், பட்டுவாடா செய்யப் பட்டது. இக்கேடுகெட்ட செயலுக்கு உடன்பிறப்புகள் என்னமோ ஐன்ஸ்டீன் பார்முலா ரேஞ்சில் 'திருமங்கலம் பார்முலா' என்று பெயரிட்டு அகமகிழ்ந்தனர். அடுத்தடுத்து வந்த இடைத்தேர்தல்களில் "கேள்வி வெற்றியாத் தோல்வியா என்பது பற்றியல்ல, ஓட்டு வித்தியாசம் எவ்வளவு என்பது தான்" என்று அஞ்சா நெஞ்சன் தம்பட்டம் அடித்தார். பொது மக்கள் தங்கள் தொகுதி வேட்பாளர் இறக்க மாட்டாரா இடைத் தேர்தல் தங்கள் தொகுதிக்கும் வராதா என்று ஏங்கத் தொடங்கினர். இதில் உச்சம் வைத்தார் போல் இந்த இழிச் செயலை அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் விலாவாரியாகச் செய்விளக்கம் செய்தும் காண்பித்தனர் உடன் பிறப்பு அல்லக்கைகள். விக்கிலீக்ஸ் வெளிவந்த போது இதுவும் அம்பலமானது.

நவீன திருதிராஷ்டிரன்

இக்காலக் கட்டத்தில் தான் கருணாநிதி நவீன திருதிராஷ்டிரனாகப் பரிணமித்தார். அழகிரியைக் கட்சியை விட்டு 2000-இல் நீக்கிய போது மதுரை வன்முறைக்கு ஆளானது. இப்போதோ அவருக்காகவே புதுப் பதவி ஒன்றை, 'தென் மண்டல செயலாளர்', உருவாக்கி அலங்காரம் செய்து மகிழ்ந்தார் நவீன திருதிராஷ்டிரன். மொகலாயச் சாம்ராஜ்யத்தின் சகோதரச் சண்டைகளுக்கு நிகராக ஸ்டாலின், கணிமொழி, அழகிரி, மாறன் சகோதரர்கள் என்று ஒரு விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த சினிமா அரங்கேறியது தமிழகத்தில்.






ஜெயலலிதா 2000-இல் கைது செய்யப் பட்ட போது அதிமுக ரௌடிகள் கல்லூரி மாணவர்கள் நிரம்பிய பேருந்தை தீ வைத்துக் கொளுத்தியத்தில் மூன்று மாணவியர் கொல்லப் பட்டனர். வழக்குப் பதியப் பட்டு பின்னர் அவர்களுக்குத் தூக்கு தண்டனையும் தீர்ப்பானது. திமுகவினர் அந்த மாணவிகளுக்காக நீலீக் கண்ணீர் வடிக்கும் போது தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்டது குறித்துக் கள்ள மௌனம் சாதிப்பர்.

தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்டு மூவர் இறந்த நிலையில் என் அன்புக்குறிய உடன்பிறப்பு உறவினர் தொலைபேசியில் கூப்பிட்டு மிகுந்த வருத்தம் தொனிக்கும் குரலில் சொன்னார் "இந்த மாறன் சகோதரர்களுக்கு நன்றி உணர்ச்சியே கிடையாது. தலைவர் தான் கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என்றாரே இவர்கள் ஏன் வெளியிட்டார்கள்? தாத்தா மனசுக் கஷ்டப்படுமே என்று அவர்கள் நினைக்கவில்லை" என்று குமுறினார். என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. இப்படியா ஒருவர் கட்சி விசுவாசியாக இருப்பது? "என்னடா இப்படிப் பேசுகிறாயே அங்கே மூன்று உயிர்கள் கொல்லப் பட்டன அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் 'தாத்தா மனசு' பற்றிப் பேசுகிறாயா" என்றேன். இது தான் திமுகத் தொண்டனுக்கான லட்சணம்.

தர்மபுரி பஸ் எரிப்புக் கண்டிக்கத் தக்கது அவ்விஷயத்தில் தண்டனையும் கொடுக்கப் பட்டது. ஜெயலலிதாவிற்கு அதில் எந்தச் சம்பந்தமுமில்லாததோடு அக்கயவர்கள் தண்டிக்கப் பட்டதில் அவர் தலையிடவுமில்லை. ஆனால் தினகரன் அலுவலக எரிப்பில் சம்பந்தப் பட்டவர் தலைவரின் மகன், திமுகவினர் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கலாட்டா செய்தது எல்லாம் சன் டீவியிலேயே நேரடி ஒளிபரப்பானது. குற்றம் சாட்டப்பட்ட அழகிரியோ கூலாகச் சட்டமன்றத்துக்கே வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்தார்.

அழகிரியின் கொட்டம் அதோடு அடங்கவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கு நடக்கும் போதே அமைச்சரானவர் அந்த வழக்கில் இருந்து விடுதலையானார் ஏனெனில் எல்லாச் சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாயினர். பொட்டு சுரேஷும் அட்டாக் பாண்டியும் ஒருவரோடு ஒருவர் மோதி மதுரையைக் கலங்கடித்தனர். இருவரும் அழகிரிக்கு இடதும் வலதுமாக இருந்தவர்கள். இந்த லட்சணத்தில் திமுக ஜனநாயக கட்சி என்று நாம் நம்ப வேண்டும்.

மாறன் சகோதர்களின் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே மக்களின் வரிப் பணத்தில் "அரசு கேபிள் டீவி" என்று தொடங்கினார் கருணாநிதி. அதில் மேலும் கோடிகள் நாசமானதோடு கருணாநிதியே நேரடியாக "கலைஞர் டீவி" என்ற சேனலின் நிகழ்ச்சி நிரல் இயக்குனராகவும் ஆனார். தன் சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகள், 'மானாட மயிலாட' என்ற ஆபாச நடன நிகழ்ச்சி, ரேட்டிங்கில் முந்துவதற்காகச் சன் டீவியின் நிகழ்ச்சிகள் மோதுகின்றனவா என்றெல்லாம் கவனம் செலுத்தினார். அரசாங்கம் ஸ்தம்பித்தது. பிறகு அவர்களுக்குள் சமாதானமான பின்பு அரசு கேபிள் டீவியைக் கிடப்பில் போட்டார். கோடிகள் அம்போ.



குடும்ப சுற்றுலா அல்லவாம் தேர்தல் பிரசாரமாம்




மக்களின் வரிப் பணத்தை வாரியிறைப்பது, கொலைக் குற்றம் சாட்டப் பட்ட மகனுக்கு மத்திய மந்திரிப் பதவி, மந்திரிப் பதவியை ஏலம் போட்ட மகளின் ஆசைக்காக மேலும் கோடிகளில் கலாசார விழாக்கள், தன் அதிகார மமதைக்காகச் 'செம்மொழி மாநாடு', பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய இலவசங்கள் என்று 5 வருடத்தில் ஒரு தாண்டவம் ஆடித் தீர்த்தார் கருணாநிதி. ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக உடன் பிறப்புகள் நாவடக்கம் பயில வேண்டும். நாவடக்கம் என்பது தான் தலைவருக்கே கிடையாதே.

சட்டசபை மாண்பும் திமுகவினரும்

சட்ட சபையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா துதிப் பாடுவதிலேயே நேரம் செலவாகின்றது என்பது கண்டிக்கத் தக்கது. திமுகவினர் சட்டசபை மாண்பு பற்றி அங்கலாய்ப்பது தான் வேடிக்கை. சட்டசபையை இழிவுப் படுத்தியதில் திமுகவின் சாதனை விஞ்சக் கூடியதல்ல.

திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜியார் சட்டசபியிலேயே திமுகவினரால் தாக்கப் பட்டார். 'சட்டசபை செத்து விட்டது' என்று கூறி வெளியேறினார் எம்ஜியார். அதெல்லாம் சாதாரணம் என்பது போல் பின்னர் அதிமுகத் தலைவரான ஜெயலலிதா தாக்கப் பட்ட சம்பவம் நடந்தது. ஜெயலலிதா தாக்கப் பட்டதோடல்லாமல் மூத்த திமுக அமைச்சர் ஒருவராலேயே சட்டசபைக்குள்ளேயே மானபங்கம் செய்யப் பட்டார். அலங்கோல நிலையிலேயே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. சபாநாயகரான தமிழ்குடிமகன் திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சேடப்பட்டி முத்தையா ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியது அருவருப்பு ஆனால் தமிழ்குடிமகனின் செயலின்மை அதைவிடக் கீழ்மை.

ஆபாசப் பேச்சுகளும் கருணாநிதியும்


எம்ஜியார் பொது மேடைகளில் பெண்களைக் குறித்து ஆபாசமாகப் பேசியதேயில்லை. கருணாநிதிக்கோ பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசவில்லை என்றால் தூக்கம் வராது. நானறிந்தவரை கருணாநிதி அளவுக்கு வெளிப்படையாக ஆபாசமாகப் பேசும் கட்சித் தலைவர் வேறு யாரும் இந்தியாவில் இருப்பார்களா என்பது சந்தேகமே. சட்டசபையில் பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி. திமுகவின் வெற்றிக் கொண்டான் ஆபாச நரகலை மேடைப் பேச்சு என்ற பெயரில் கடைப் பரப்புவார். அப்படிப்பட்டவர் இறந்த போது கருணாநிதி மிக வருந்தி எப்போதும் போல் கவிதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு அந்தக் கேவலமான மனிதரை "ஆண் சிங்கம்", "வார்த்தை சித்தர்" என்றெல்லாம் அரற்றினார். மேடை பேச்சுகளில் எதிர் கட்சியினரை ஆபாசமாகப் பேசுவது திராவிடஅரசியலின், குறிப்பாகக் கருணாநிதியின், கொடை.

திமுக உடன் பிறப்புகள் போல் பெண்களை ஆபாசமாக மற்றவர்கள் பேசி நான் கேட்டதில்லை. ஜெயலலிதா பெண் என்பதாலும் அதுவும் பிராமணப் பெண் என்பதாலும் திமுகவினரின் ஆபாச வசைப் பாடலுக்குத் தப்பியதில்லை. ஒரு உடன் பிறப்பின் பேஸ்புக் நிலைத் தகவலில் நான் பின்னூட்டமாக "ஜெயலலிதா பிராமணப் பெண் என்பதாலேயே இப்படி ஏசப் படுகிறார்" என்றேன். நான் எழுதி ஒரு வாரத்திற்குள்ளாக முரசொலியில் எழுதும் முழுத் தகுதியிருந்தும் தமிழ் இந்துவில் மட்டும் எழுதும் சமஸ் என்பவர் வெற்றிக்கொணடான் எப்படி ஜாதிப் பாசத்தால் சசிகலாவை வசைப்பாட மறுத்து எப்போதும் போல் ஜெயலலிதாவை மட்டும் ஏசினார் என்று எழுதினார். என் பின்னூட்டத்திற்கு மறு மொழி சொல்வதாகப் புகுந்த இன்னொரு உடன்பிறப்பு அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை 'பேராசிரியர்' என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார் அவர் கடைசியாக வகித்த பதவி 'உதவிப் பேராசிரியர்' என்று) அன்பழகன் சட்டசபையிலேயே "எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா" என்று விரசமாகப் பேசினார். அன்பழகனை சொந்தம் கொண்டாடும் என் உறவினர்களிடையே அவர் பெரிய பண்பாளர் என்பது போன்ற ஒரு பம்மாத்து இருக்கும். அவரும் திமுக என்ற குட்டையில் ஊறிய மட்டை தான்.

இன்னொரு உடன்பிறப்பு உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை "அந்தப் பொம்பளை" என்று குறிப்பிட்ட போது நான் "இது முறை தவறிய சொல்" என்றேன். அவருக்கு உண்மையிலேயே ஒரு பெண் முதல்வரை "அந்தப் பொம்பளை" என்று சொல்வதில் உள்ள முறையின்மைத் தெரியவில்லை. என்ன செய்வது கருணாநிதிக்கு வால் பிடித்தால் எது பெண்களை அவமதிப்பது என்று கூடத் தெரியாமல் போவது ஆச்சர்யமல்ல.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதிமுகச் சாதாரண அதிகார ஆசைகள் கொண்ட வெகுஜன அரசியல் கட்சி ஆனால் திமுகவோ மக்களிடையே 50 வருடங்களாக வெறுப்பை விதைக்கும் கட்சி. தமிழகத்தில் வேறூண்றிய பிராமணத் துவேஷத்தின் வித்து ஜஸ்டிஸ் கட்சி, ராமசாமி நாயக்கர், அண்ணாத்துரை என்று பலரால் விதைக்கப் பட்டாலும் இன்றும் அதன் கொடிய விஷம் குறையாமல் இருப்பதன் முக்கியக் காரணம் திமுக. மிக விரிவாக அலசி எழுதப் பட வேண்டிய ஒரு விஷயம் இது.

பிராமணத் துவேஷமும், இந்து மத வெறுப்பும் திமுகவின் பாஸிசமும்

திமுகப் பிராமணர்கள் மீதும் இந்துக்கள் மீதும் காண்பிக்கும் காழ்ப்பு ஜனநாயக விரோதம். ஜனநாயகம் என்பது சீர் திருத்தத்திற்கு விரோதியல்ல. சீர் திருத்தங்களை எல்லோரையும் அனுசரித்து அனுக்கமாக ஸ்தாபிக்க உலகுக்குக் கற்றுக் கொடுத்த காந்திப் பிறந்த தேசம் இந்தியா. ஜஸ்டிஸ் கட்சியினரின் பிராமண எதிர்ப்பைக் கண்டித்த காந்தி அன்றே சொன்னார் "நீங்கள் விழைவது சமூக நீதி அல்ல. ஒரு சாராரின் ஆதிக்கத்தைத் துரத்தி விட்டு இன்னொரு சாராரின் ஆதிக்கத்தை நிலை நாட்டவே". தமிழகத்தின் இன்றைய ஜாதி நிலவரம் காந்தியை தீர்க்கதரிசியாக்கி விட்டது.

வைகோ கருணாநிதியின் ஜாதியைக் குறித்து இழிவாகப் பேசிவிட்டார் என்று உடன்பிறப்புகள் கொந்தளித்தனர். வைகோ இன்னும் திமுககாரரே ஆதலால் தான் அப்படிப் பேசினார். தன்னோடு பிணக்குக் கொண்ட கம்யூனிஸ் கட்சித் தலைவர் பிராமணர் என்பதாலேயே அவரைப் பிராமணர் என்று பழித்ததோடல்லாமல் பிராமணர்கள் எல்லோரும் தேள்கள் என்று வழக்கம் போல் அரைகுறை கவிதை ஒன்றை எழுதி வெளியிடவே செய்தார் கருணாநிதி. அப்போது பல உடன்பிறப்புகளும் சரி ஏனையோரும் சரி அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுடன் 'இப்படி எழுதியது சரியா' என்று கேட்டால் ராமசாமி நாயக்கரும் அண்ணாதுரையும் விதைத்த பிராமணத் துவேஷத்தின் வேர்கள் பரவிய சமூக உறுப்பினர்கள் 'ஆமாம் சரியாகத் தானே சொன்னார்' என்றனர்.

அவ்வளவு ஏன் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி அக்காலத்தில் சொல்லப் பட்ட 'இந்த இயக்கத்தைக் கண்டு பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்' என்பதை மேற்கோள் காட்டினார். இவையெல்லாம் ஜனநாயக விரோத பாஸிசம் என்பதே உடன்பிறப்புகளுக்குத் தெரியாது, புரியாது. திராவிட இயக்கத்தினரின் அருவருக்கத் தக்க வார்த்தை விளையாட்டுகளில் ஒன்று 'நாங்கள் பார்ப்பணர்களை வெறுக்கவில்லை பார்ப்பணீயத்தைத் தான் வெறுக்கிறோம்' என்பது. நான் அறுதியிட்டு சொல்வேன் பல பிராமணரல்லாதார் மனங்கள் பிராமணர்கள் மீது அப்பட்டமான வெறுப்பு உடையவர்கள்.

ரம்ஜானுக்குக் குல்லாய் போட்டுக் கொண்டு நோண்புக் கஞ்சியைக் குடித்துவிட்டு காயிதே மில்லத்துடனான தன் நட்பை நினைவுக் கூர்ந்து விம்முவார் கருணாநிதி. திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் சில நாட்களுக்கு முன் தொலைக் காட்சியில் தைரியமாகக் கூறுகிறார் "இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறுவது என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கை. இந்துக்களுக்கு வாழ்த்து சொல்வது திமுகக் கொள்கைக்கு எதிரானது". இது ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம். அதிமுகத் திமுகவை விட எவ்வளவோ விஷயங்களில் மோசம் தான் ஆனால் அவர்கள் ஒரு போதும் இப்படிப்பட்ட மடமையைச் செய்ய மாட்டார்கள். தேர்தல் அறிகையிலேயே இன்னொரு இரட்டை டம்ப்ளர் வேலையைத் திமுகச் செய்தது. வக் போர்டுக்கு சொந்தமான நிலங்கள் பராமரிக்கப் படும் என்றும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களோ உபயோகத்தில் இல்லையென்றால் ஏலம் விடப் படும் என்றும் திமுக அறிக்கை சொல்கிறது. இத்தேர்தலில் திமுகத் திட்டவட்டமாகத் தன்னை இந்துக்களுக்கு விரோதியாக நிறுத்திக் கொண்டது ஜனநாயக விரோதம். இது போன்ற பித்தலாட்டங்களே மதச் சார்பின்மைக்கு அவப் பெயர் தேடித் தருவதோடு இந்துக்களைப் பாஜகவிடம் தள்ளுகிறது என்பதை உடன் பிறப்புகள் உணர வேண்டும்.

'உங்களுக்கு மூட நம்பிக்கைகள் உள்ளதாமே' என்று அகங்காரத்தோடு கேட்ட கரண் தாபரிடம் சூடாகப் 'பல்லாயிரம் இந்தியர்களைப் போல் எனக்குக் கடவுள் நம்பிக்கையும் சில நம்பிக்கைகளும் உள்ளாது. உங்கள் கேள்வி அவர்கள் எல்லோரையும் அவமதிப்பது' என்ற ஜெயலலிதா நினைவுக்கு வருகிறார்.

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஏன் வெவ்வேறு அளவுக்கோல்கள்


ஜெயலலிதா பேரிடரால் பாதிக்கப் பட்ட நகரத்தை பார்வையிடாதது, அரசாங்கம் அவர் கண்ணசைவிற்காக ஸ்தம்பித்து நின்றது, மக்களிடம் இருந்து விலகி இருப்பது, பத்திரிக்கைகளைச் சந்திக்காது எல்லாம் கண்டணத்துகுரியது. கருணாநிதி மக்களைச் சந்திப்பவர் என்பது போலும் என்னமோ பத்திரிக்கைப் பேட்டிகள் கொடுக்கிறார் என்றெல்லாம் கூறுவது ஏமாற்று வேலை.

தினகரன் அலுவலகம் எரிக்கப் பட்ட போது, 2ஜி, சிபிஐ விசாரணை போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் கருணாநிதி எந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தி கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. கருணாநிதியின் பத்திரிக்கையாளர் சந்திப்பெல்லாம் கடனே என்று கேட்கப் பட்டக் கேள்விகளுக்கு வார்த்தை விளையாட்டுப் பதில்கள் என்ற அளவிலே தான் இருக்கின்றன. மாறாக ஜெயலலிதா கடுமையான அல்லது சங்கடமான கேள்விகள் கொண்ட நீண்ட பேட்டிகள் அளித்துள்ளார்.

ஜெயலலிதா கால வெள்ளத்தால் தள்ளப்பட்டு அரசியலுக்கு வந்ததோடல்லாமல் சந்தர்ப்பவசத்தால் ஆட்சியையும் பிடித்தவர். அரசாங்கம் என்றால் என்ன, ஜனநாயக மரபுகள், ஆட்சி செய்வது போன்ற எது பற்றியும் எந்தப் புரிதலும் இல்லாமல் முதல்வரானார். முதல் முறை நில அபகரிப்புகள், ஆஸிட் வீச்சு, நீதி மன்றங்களில் ஆபாச நடனம் என்று கந்திரகோளமான ஆட்சி. இரண்டாம் முறை கஞ்சா வழக்குகள், நடுநிசி கைது, அரசியல் சாசன நெருக்கடி என்று கறைப் படிந்தாலும் வீரப்பன் கைது, சுனாமையைச் சமாளித்தது என்று சில முன்னேற்றங்கள். மூன்றாவது முறை பெரிய சர்ச்சைகள் இல்லை ஆயினும் தனி மனித வழிபாடு, உடல் நலக் குறைவால் மக்களை நெருங்காமை, ஆட்சியே தனி ஒருவரின் விரலசைப்பிற்காக ஸ்தம்பித்து நிற்பது என்று குறைகள். ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றுவதற்கான் நியாயங்கள் இல்லை.

கருணாநிதியும் திமுகவும் நீண்ட அரசியல் பாரம்பர்யத்திற்கு உரியவர்கள். திமுகவினர் தங்களை எப்போதுமே தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒரு சித்தாந்த நோக்குடைய கட்சி என்றே பெருமைப் பட்டுக்கொள்வர். ஆகவே கருணாநிதியையும் திமுகவையும் நாம் வேறொரு அளவுக் கோல் கொண்டே அளக்க வேண்டும். அப்படி அளக்கும் போது அவர்களது பல சித்தாந்தங்கள் மக்கள் விரோதமானதாகவும் இன்று அக்கட்சியின் நிலை ஜனநாயக விரோதமாகவும் உள்ளது நிதர்சனம். அதோடல்லாமல் இன்று அதிமுக எந்தக் குறைகளுக்காக வசைப் பாடப் படுகிறதோ அவற்றில் பல் திமுகவால் விதைக்கப் பட்டவை. தனி மனித துதி, ஊழல், வரிப் பணத்தை வீணடித்தல், இலவசங்களைக் கொண்டு மக்களைத் திசை திருப்புவது என்று எல்லாமே திமுகவினரின் கொடை. திமுகவுக்கே உரித்தான வெறுப்பரசியில், மொழி, இனம் என்றெல்லாம் ஜிகினா காட்டி சாமான்யனை ஏமாற்றும் செப்பிடு வித்தைகள் எல்லாம் திமுகவையும் அதன் தலைவரான கருணாநிதியையும் ஆதிப் பாவமாக நம் முன் நிறுத்துகின்றன.







இணையத்தில் கிடைத்தவை




கருணாநிதியின் முனைவர் பட்டமும், தங்கப் பதக்கம் சினிமாவில் சோவும் அறவுணர்வும்

தங்கப் பதக்கம் சினிமாவில் சோ ராமசாமி ஊழல் அரசியல்வாதியாகவும் நேர்மையான போலீஸ்காரராகவும் இரட்டை வேடத்தில் வந்து திமுகவை கலாய்த்திருப்பார். அதில் ஒரு காட்சி.ஒருக் குழந்தை மீது காரை மோதிவிட்டதற்காக ஒரு அரசியல் கட்சி உறுப்பினரை லாக்கப்பில் வைத்திருப்பார்கள். விடுவெடுவென உள்ளே நுழையும் அரசியல்வாதி சோ கைது செய்யப் பட்டவரை விடுதலை செய்யச்சொல்லிக் கேட்பார். கார் மோதியதற்குச் சாட்சி இருக்கிறது என்பார் காவலர். குழந்தை சாகவில்லை என்று சாதிப்பார் அரசியல்வாதி சோ. அது எப்படி என்று காவலர் வினவ 'இறந்த குழந்தைத் தங்களுடையதே அல்ல என்று பெற்றோரே எழுதிக் கொடுத்து விட்டார்கள்" என்று சொல்வார் சோ. இது சினிமாவில் சிரிப்புக் காட்சியாக வந்து போகும். மிகச் சமீபத்தில் இக்காட்சி நினைவுக்கு வந்த போது துணுகுற்றேன். அமெரிக்காவில் சிறு சிறு அத்து மீறல்களுக்கே அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். சோ பகடியாக வைத்த காட்சி உண்மையில் நடந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கருணாநிதிக்கு கௌரவ முனைவர் பட்டம் கொடுப்பதென்று தீர்மானித்த போது கல்வி அமைப்பில் அதிர்ச்சிக் கிளப்பியது. ஏனென்றால் அது வரை கௌரவ முனைவர் பட்டங்கள் அரசியல்வாதிகளுக்குக் கொடுத்ததில்லை. இது அப்பட்டத்திற்கான மதிப்பை குறைக்கும் என்று எண்ணிய மாணவர்கள் போராட்டித்தில் குதித்தனர். அதில் ஒரு மாணவர் இறந்தார். இறந்த மாணவனின் பெற்றோர் உடன்பிறப்புகளால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அந்நிகழ்ச்சியையே சோ பயன்படுத்தினார் என்றும் கேள்வி. கருணாநிதிக்குப் பிறகு தான் கௌரவ முனைவர் பட்டங்கள் கௌரவத்தை இழந்தன. ஆதிப் பாவம்.

இதில் கவனிக்க வேண்டியது அந்நிகழ்ச்சி அக்காலத்தில் பிரபலம். அப்படியிருந்தும் யாருக்கும், படித்தவர்கள் நிரம்பிய என் குடும்பத்தினருக்குக் கூட, உறுத்தவில்லை. எல்லோரும் கருணாநிதி அபிமானிகளாகவே இருந்தனர். அறவுணர்வு மறத்துப் போன சமூகம் தமிழ் சமூகம். அதற்குக் காரணம் திமுக.

ஏன் திமுக மீண்டும் வரக் கூடாது

2006-2011 ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடந்தனவோ அவையெல்லாம் மீண்டும் அரங்கேறுவதற்காண அனைத்துக் கூறுகளும் இன்னும் திமுகவில் தென்படுகின்றன. ஆகவே மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைப்பது பொறுப்பில்லாத்தனம்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஞானி அவர்கள் மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எழுதியதை நானும் அதரிக்கிறேன் ( அவர் எழுதியதற்கான சுட்டி இதோ https://www.facebook.com/notes/ஞாநி-சங்கரன்/யாருக்கு-ஓட்டு-போடவேண்டும்-/10207928572084876# ) . தமிழக வாக்காளனாக இல்லாத எனக்கு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை. அதைத் தமிழக வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள். என் நோக்கம் திமுக எனும் பேரியக்கத்தை விமர்சனத்திற்குட்படுத்துவதே.

திமுகவினருக்கு மக்கள் நலக் கூட்டணியைப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் ம.ந.கூ என்ற அவர்கள் கட்சிப் பெயரை உடன் பிறப்புகள் பலர் மிக ஆபாசமாகக் கே.ந.கூ என்று எழுதுவதே திமுக எனும் பேரியக்கித்தினைப் பீடித்திருக்கும் நோயின் அறிகுறி. மக்கள் பிரதிநிதியாகும் தகுதியை திமுக எனும் ஆதிப் பாவம் இழந்துவிட்டது

ஆக்கம்- அரவிந்தன் கண்ணையன்

திமுக மோசம் என்பதால் அதிமுக உசத்தி என்று எண்ணாதிர்கள் நமக்கு மாற்று வேண்டும் திமுக, அதிமுகவை நல்ல தலைமை ஆள வேண்டும் என்பதே விருப்பம்.


http://contrarianworld.blogspot.com/2016/05/karunanidhi-original-sin_10.html

திங்கள், மே 09, 2016

2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி

திராவிட இயக்க குருதி ஓடும் தற்போதைய தமிழ்நாடு காங்கிரசு தலைவரின் திறமைகளை தெரிந்து கொள்ளுங்கள்




இனி தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க முடியாது என்றாலும் காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டுவது என்று தொண்டர்களுக்கும் நிருவாகிகளுக்கும் ஆலோசனை வழங்கும் காட்சி.



காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டினார் என்பது பற்றிய சிறப்பு பேட்டி.


திமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கியது குறித்து கருணாநிதி இளங்கோவனை பாராட்டல்.(திராவிட இயக்க வாரிசு என்றால் அது சோடை போகாது என்று நிருபித்ததற்காக)


திமுகவிடம் இருந்து 41 தொகுதிகள் காங்கிரசிற்கு கிடைத்ததை வைத்து குசுபுவும் விசயதரணியும் வாய் விட்டு சிரித்தல்.



இந்தியாவில் வரும் கருத்து கணிப்பு எல்லாம் டுபாக்கூர் என்று அறிந்ததால்அதிமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்து கணிப்புகளால் கடுப்பாகி நியூசு 7 மூலம் கருத்து கணிப்பு எடுப்பேன் என்று சொல்லும் காட்சி.


மோதிக்கு இணையாக பொய் பேசக்கூடியவர் ஊடக வெளிச்சத்தை பயன்படுத்துவர் இளங்கோவன் என்பதால் ராகுல் தன் மாதாஜியிடம் அவரை பற்றி கூறல்.


கூடிய விரைவில் டெல்லிக்கு வருவீர்கள் என்றும் அவரின் பயிற்சி தனக்கு தேவை என்றும் கூறல்.



கருத்து கணிப்பும் திமுகவும் அதிமுகவும்


கருத்து கணிப்பு அப்படின்னுட்டு இந்த நாளிதழ்களும் செய்தி தொக்காவும் அடிக்கற கூத்து இருக்குதே அதை சொல்லி மாளாது. 

தந்தி தொக்கா அதிமுகவுக்கு அடிமையா நடக்குது என்பது ஊர் அறிந்த இரகசியம். ஏன்னு சிந்தித்து பார்த்தா தொழில் என்பது தெரியவரும். ஏன்னா திமுகவுக்கு சன், கலைஞர் என்று இரு தொக்காக்கள் உள்ளன. அதிமுகவுக்கு செயா மட்டும் தான் உள்ளது. சன் எல்லோரையும் விட பலம் வாய்ந்தது. தந்தியும் திமுகவுக்கு அடிமை வேலை பார்த்தால் தொழில் சிறக்காது, அதனால் அதிமுகவுக்கு அடிமை வேலை பார்க்குது. புதிய தலைமுறை இந்த விளையாட்டில் கலந்துக்கவில்லை என்பது ஆறுதல். பச்சமுத்துவுக்கு சட்டத்துக்கு புறம்பாக\சட்டத்தை வளைத்து ஏரியில் கட்டிய  தன் கல்லூரிகள் மூலம் வரும் காசே போதும். இந்த தொக்கா வருமானம் பெரிதில்லை. அதனால புதிய தலைமுறை தப்பித்தது. (இதை எழுதிய பின்பு புதவும் கூத்தில் இணைந்துள்ளது) மேலும் தந்திக்கு தினத்தந்தி என்ற நாளிதழும் உண்டு அது தான் அதன் பெரும்பலம் அந்ந நாளிதழுக்கு அரசு விளம்பரம் வேண்டும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி சட்டையை தினந்தந்தி போட்டுக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

தாது கொள்ளையன் வைகுண்டராசன் நியூசு 7 என்ற செய்தி தொலைக்காட்சியை தொடங்கினார். ஏன்னு தெரியுமா? அவரு தாது கொள்ளை வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்த போது செய்தியாளர்கள் நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டனர்  இந்த செய்தி தொக்கா ஆளுங்க அதையும் அவரையும் படம் பிடித்து தங்கள் தொக்காவில் போட்டார்கள். பல நாட்களுக்கு இது தான் எல்லா இடத்திலேயும் சிறப்பு செய்தி. 

எழுதப்படாத விதி என்னவென்றால் செய்தி நிறுவன முதலாளி ஊரை அடித்து உழையில் போட்டாலும் அதை மற்ற செய்தி நிறுவனங்கள் கண்டுக்கப்படாது என்பது தான். வெளியில் பெரிய அளவில் தெரிந்தாலும் அச்செய்திக்கு சிறப்பிடம் கொடுக்காமல் சிறிது காட்டி விட்டு மற்றதுக்கு சிறப்பிடம் கொடுத்து இதை பெரிதாக காட்டக்கூடாது என்பது. ஏன் வைகுண்டம் செய்தி தொக்கா தொடங்கினார் என்று இப்ப புரிகிறதா? வைகுண்டத்துக்கு காசு பற்றி எந்த கவலையும் இல்லை. விளம்பரமே வரவில்லையென்றாலும் அவரால் நியூசு 7 தொக்காவை நடத்தமுடியும். 

நியூசு 7 இளம் செய்தி தொக்கா, எப்படி பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது? தந்தி காரன் அதிமுகவுக்கு ஆதரவா கருத்து கணிப்பு போடறான் அப்ப திமுவுக்கு ஆதரவா போடறது தான் சரியான வியாபார தந்திரம். நியூசு 7உம் அதைத்தான் செய்தது. இதுக்கு நம்பக்கத்தன்மையை கூட்ட பங்காளி சண்டையில் உள்ள தினமலரை கைக்குள் போட்டுக்கொண்டது. 
சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தான் நியூசு 7 உடன் ககவில் ஈடுபட்டது

தினமலர் எப்படி அதிமுகவுக்கு எதிராக என்று நினைப்பது புரிகிறது. ஒரு பங்காளி அதிமுகவுக்கு நெருக்கமாக உள்ளதால் எதிர் பங்காளிகள் அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக கருத்து கணிப்பை வெளியிட்டார்கள். கவனிக்க சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தினமலர் இன்னும் பங்காளிகள் கையில்தான் உள்ளது. சண்டை நீதிமன்றத்தில் உள்ளது. சில  தினமலர் ( சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு) பதிப்புகள்  ஒரு பங்காளிகிட்டயும் மீதமுள்ள பதிப்பு மற்றொரு பங்காளி பொருப்புலேயும் உள்ளது. அது தான் தினமலர் பெயர் வந்துள்ளது. 

நியூசு 7 கருத்து கணிப்பால் அதிமுக கடுப்பாகி தன் தேர்தல் அறிக்கையில் தான் ஆட்சிக்கு வந்தால் தாது மணல் அள்ளும் வணிகத்தை அரசே ஏற்ற நடத்தும் என்று வைகுண்டத்துக்கு பெரிய குண்டை போட்டது. இப்ப வரவில்லையென்றாலும் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பது வைகுண்டத்துக்கு தெரியும். ஆப்பு உறுதி. மேலும் தற்போது அதனிடம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் பாசகவிற்கு அதிமுக ஆதரவு தேவை. கூட்டி கழித்து பார்த்தால் வைகுண்டத்தின் அடி மடியிலேயே அதிமுக கை வைக்கிறது. மேலும் அரசு கம்பிவட வலையமைப்பில் நியூசு 7 இக்கு அதிமுக சிக்கலை ஏற்படுத்தியது. (தற்போது அதிமுக தான் ஆளுங்கட்சி என்பதை புரிந்து கொள்க)



அதிமுக தேர்தல் அறிக்கையீல் தாது மணல் பற்றி
அதனால் கலவரமடைந்த வைகுண்டம் வெள்ளம் பாதித்த சென்னையில் அதிமுகவுக்கு பெரு ஆதரவு உள்ளது என்று கருத்து கணிப்பை வெளியிட்டார்.  அவரின் நல்ல காலம் சென்னையை பற்றி அதுவரை நியூசு 7 கருத்து கணிப்பை வெளியிடாததுதான்.

வைகுண்டத்துக்கு கிலி பிடித்தபின்பு

தமிழகத்தில் கருத்து கணிப்பின் போக்கு இப்படித்தான். அதனால இந்திய அளவில் சிறப்பாக உள்ளது என்று நினைக்காதிர்கள் அங்கும் கருத்து கணிப்பு பல்லிளிக்கிறது. பொய் கருத்து கணிப்பை வைத்தே தேர்தல் காலம் முழுவதும் ஓட்டுபவர்கள் தான் அவர்கள்..

இப்ப தந்தி, நியூசு 7 உடன் புதிய தலைமுறையும் இக்கூத்தில் இணைந்துள்ளது. ஒன்றிய அளவில் காட்ட ஆங்கில தொக்கா என்டிடிவியும் இணைந்துள்ளது.