தன்னுடைய பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு தமிழ் பெயர் வைப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு நிறைய தமிழ் பெயர்கள் தெரியாததால் நல்ல பெயர் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். சின்ன பேரா இருக்கனும் என்பது நிபந்தனை. நானும் எனக்கு தெரிந்த சில பெயர்களை சொன்னேன். சில என்றால் 5 பெயர்கள் தான். எவ்வளவு தான் யோசிச்சாலும் தமிழ் பெயர்கள் நினைவுக்கு வரலை. இணையத்தில் தேடினாலும் எல்லாம் தமிழர்கள் வைக்கும் பெயர்களாக இருக்கே தவிர தமிழ் பெயர் குறைவு. நாம நிறைய கொடுத்தா தான அவர் அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். நாம கொடுக்கறதே குறைச்சலா இருந்தா எப்படி? என்னடா தமிழ் பெயர் வைக்கறேன்னு ஒருத்தர் சொல்லறார் அவருக்கு உதவமுடியலையேன்னு எனக்கு விசனம். நல்ல தமிழ் பெயர் கிடைக்கலைன்னா தமிழ் பெயர் வைக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு நானும் எனக்கு தெரிந்த மக்களிடம் எல்லாம் தமிழ் பெயர் கேக்கறதே வேலையாப்போச்சு. என் முயற்சிக்கு வெற்றி கிடைக்கலை.
தமிழில் பெயர் வைக்கனும் என்று ஆசைப்பட்டாலும் பெயர்கள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் போல் தமிழல்லாத பெயர் வைப்பவர்கள் எத்தனை பேரோ?
இந்தக்குறையை போக்குவதற்காக தமிழ் பெயர்களுக்கான இணையதளத்தை இரவிசங்கர் உருவாக்குவதாக சொன்னார். இன்னும் அந்த தளம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்.
நண்பரின் பக்கத்து வீட்டுக்காரரும் தமிழ் பற்றாளர். அவரும் இவருக்காக பெயர் வேட்டையை நடத்தினார். அவர் தன் தங்கமணியிடம் சில பெயரை சொல்லுவார் அவர் அதை கேலி பேசுவார்...
பக்கத்துவீட்டுகாரரின் தங்கமணி அவர் போல் தமிழ் பற்றாளர் எல்லாம் கிடையாது. அதே போல் தமிழ் எதிரியும் கிடையாது. இவர் தமிழ் தமிழ் என்பதை கேலி பண்ணுவதே அவர் வேலை. இவர் சில பெயர்களை சொல்ல அதை அவர் கேலி பண்ணுவதுமாக நாட்கள் போய்கிட்டிருந்தது. இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் சண்டையே வந்தது. பக்கத்துவீட்டுகாரர் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதற்கு இவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை. குழந்தை பிறக்கும் முன் இவர்கள் இந்தியா செல்லவேண்டிவந்தது.
குழந்தையும் பிறந்து பெயரும் வைத்தாயிற்று. ஊர்ல வந்ததும் இவங்க கேட்ட முதல் கேள்வி குழந்தைக்கு என்ன பெயர் என்பது தான்.
சொன்னதும் அவங்க முகம் போன போக்க பார்க்கனுமே. அவருக்கு மட்டுமாபெயரை கேட்ட எனக்கும் என்னடா இதுன்னு தான் இருந்துச்சி. அந்த பெயரை வச்சி அவரை கேலி பண்ணினாலும் மனதுக்கு சங்கடமா இருந்ததென்னவோ உண்மை. என்னய்யா அந்த பெயர் அப்படின்னு கேட்கறீங்களா.
ஸ்மித்தா