வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், மே 15, 2007

இந்திய அமெரிக்கர்களிடம் பரபரப்பு.

நேற்று மாலையில் இருந்து இந்திய அமெரிக்கர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றி கொண்டது, ஆளாளுக்கு தொலைபேசி மச்சி தெரியுமா செய்தி என்று செய்தியை பரிமாறிக்கொண்டார்கள்.

அதுவும் புதிதாக அமெரிக்காவிற்கு வந்தவர்களிடம் தான் இந்த பரபரப்பு காணப்பட்டது, பழைய ஆளுங்ககிட்ட சுத்தமா இல்லை. ஏன்னா அவங்களுக்கு இது தேவையில்லை. அதாவது பச்சை அட்டை.

இந்தியர், சீனர், பிலிப்பைன்ஸ்காரர், மெக்சிகோகாரர்களுக்கு மட்டும் அமெரிக்க அரசாங்கம் பச்சை அட்டை பெறுவதற்கான முன்னுருமை தேதியை (priority date) பின்னுக்கு தள்ளி வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பாடு மோசமாக இருந்தது.

நாளாக ஆக ஆக முன்னோக்கி செல்லாமல் தேதியானது பின்னோக்கி சென்றது. பல பேர் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்ததுடன் அதை மறந்து விட்டார்கள், அதாவது fire and forget வகை ஏவுகணை போல.

இப்போது 2001ல் இருந்த முன்னுருமை தேதியை 2003 June க்கு மாற்றியுள்ளார்கள், அதான் இந்த பரபரப்பு. 2 ஆண்டு ஏற்றம் என்றால் சும்மாவா? :-)

சனி, மே 12, 2007

1 2 3 - கொடுமை

ஒரு கருத்துக்கணிப்பு, இரண்டு வாரிசு, மூன்று கொலை என்று இந்தியன் எக்ஸ்பிரசில் பொருத்தமாக தலைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.

கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.

கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?

இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.