வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



சனி, டிசம்பர் 27, 2014

சம்மு காசுமீர் தேர்தல் அலசல்

2014 ஆம் ஆண்டு  சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.

இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
 
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.

பாசக  லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.

தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.

காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.

அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?


கட்சி வெற்றி பெற்றது% வாக்குகள்மொத்த வாக்குகள்
பாரதிய சனதா கட்சி (பாசக)2523 %11,07,194
மக்களின் சனநாயக கட்சி2822.7 %10,92,203
தேசிய மாநாட்டு கட்சி1520.8 %10,00,693
காங்கிரசு1218%8,67,883
மார்க்சிய பொதுவுடைமை10.5%24,017
மக்கள் கூட்டமைப்பு21.9%93,182
மக்கள் சனநாயக முன்னனி10.7%34,886
கட்சி சாராதவர்கள்36.8%3,29,881


மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்.  இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.

சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று.  சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.

பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.

People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.

சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.

தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.

முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25

சம்மு பகுதி: (6) பாசக 04
காங்கிரசு 02
காசுமீர் பகுதி: (5) காங்கிரசு 01
தேசிய மாநாடு 04
லடாக் பகுதி: (4) காங்கிரசு 03
கட்சி சாராதவர் 01

இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02

சம்மு பகுதி: (9) பாசக 03
காங்கிரசு 03
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 01
கட்சி சாராதவர் 01
காசுமீர் பகுதி: (9) காங்கிரசு 01
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 03
மார்க்சிய பொதுவுடமை 01
மக்கள் கூட்டமைப்பு 02
கட்சி சாராதவர் 01

குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.

மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09

காசுமீர் பகுதி: (16) காங்கிரசு 01
தேசிய மாநாடு 03
மக்களின் சனநாயகம் 11
மக்களின் சனநாயக முன்னனி 01

நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14

சம்மு பகுதி: (2) பாசக 02
காசுமீர் பகுதி: (16) தேசிய மாநாடு 04
மக்களின் சனநாயகம் 11
காங்கிரசு 01

ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20

சம்மு பகுதி: (20) பாசக 16
மக்களின் சனநாயகம் 02
தேசிய மாநாடு 02



முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

வெள்ளி, டிசம்பர் 05, 2014

இப்போது கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன ?அலசல்

உலக அரசியலில் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என்ன?  பாதிப்பு நமக்கு உண்டே அதை தெரிஞ்சுக்க வேண்டாம்?
 
யூலை முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது தெரியும் இதற்கு காரணம் கச்சா எண்ணெயால் அதிக லாபம் அடையும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தருவதாக இருக்கலாம். உருசியாவின் பொருளாதார பலம் அதன் கச்சா எண்ணெய் தான். அடிமடியில் கையை வைத்தால் உருசியா உக்ரைனுக்கு தரும் நெருக்கடி குறையும் மேற்கின் பலம் அங்கும் பல இடங்களிலும் அதிகரிகரிக்கும்.

5 ஆண்டு விலை நிலவரம்

கவனித்துப்பார்த்தால் யூலை மாதம் தான் மலேசிய வானூர்தி புரட்சி\கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. புரட்சி\கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் கிழக்கிலுள்ள சுலோவின்சுக் நகரை அரசின் படைகளிடம் விட்டு விட்டு ஓடியதும் அப்போது தான் (அரசு படையின் தாக்குதல் தீவிரம்).


ஓர் ஆண்டின் விலை நிலவரம்


அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதால் உருசியா மீது சில பொருளாதார தடை விதித்ததும் அம்மாதத்தில் தான். உருசியா இதை மறுக்கிறது என்பது வேற. உருசியா ஆதரவு இல்லாம புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கும்? தெரிந்த இரகசியம் என்பது இது தான்.

ஏன் உருசியா உக்ரைன் விடயத்தில் தலையிட வேண்டும்?. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் உக்ரைன் உருசிய பேரரசின் பிடிக்குள் தான் எப்போதும் இருந்துள்ளது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் காட்டும் நெருக்கமும் நேட்டோ உருசியாவின் அண்டை நாடுகளில் தளம் அமைப்பதும் அதற்கு உவப்பாக இல்லை.  உக்ரைனும் நேட்டோவின் கைகளுக்குள் போவதை தடுக்க முயல்கிறது. நேட்டோ பக்கத்தில் வருவது உருசியாவின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல். பல நாடுகள் இணைந்தது நேட்டோ என்றாலும் நடைமுறையில் அது அமெரிக்காவின் முகமூடி. இது எல்லொரும் அறிந்ததே.

இப்போதும் நேட்டோ உக்ரைனை தங்களுடன் சேர்ப்பதில்லை என்ற உறுதியை உருசியாவானது நேட்டோவிடம் கேட்கிறது. அதை அவர்கள் தந்தால் புரட்சி\கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை நிறத்திவிடுவதாகவும் அவர்களை உக்ரைன் அரசுடன் இணைந்து இருக்குமாறும் சொல்வதாக கூறுகிறது. அப்படி சொல்லவில்லை ஆனால் உறுதி கிடைத்தால் கொடுக்கபோகும் பதில் அதுதான். இது வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.


2011, 2012, 2013ம் ஆண்டுகளை விட இப்போது எப்படி பாறைநெய் பயன்பாடு குறையும்? கிணறுகளில் இப்போது கச்சா எண்ணெய் குறைந்திருக்கும். ஆனா விலை???? எப்படி? கணக்கு உதைக்குதே. 2010இல் கூட இன்றைய விலையை விட அதிகம்.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் (Shale oil) எடுப்பது காரணமாக சொல்லப்பட்டாலும் உருசியாவுக்கு பொருளாதார நெருக்கடி தான் உண்மையான காரணமாக இருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
அந்த அளவுக்கா பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து விட்டார்கள்? அதில் எடுத்த விபரம் வெளியே வரலையே.

பாறை இடுக்கில் இருந்து கச்சா எண்ணெய்- இதை களிப்பாறை கச்சா எண்ணெய் எனலாமா?

நம்மூர் அரசியலே பெரிசா இருக்கு இதுல உலக அரசியல் நமக்கு எதுக்கு? ஆனா அதன் பாதிப்பு நம்மை தாக்கும்.

நம்மூர் பக்த கோடிகள் விலை குறைந்ததற்கு மோதி தலைமையில் நடுவண் அரசு அமைந்தது தான் காரணம் என்று கூறாமல் இருந்தால் சரி. இப்படியும் கூறுவார்கள் அதையும் சிலர் நம்புவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

டிசம்பர் 1 அன்று  விலை குறைந்துள்ளது.  ஆமா நமக்கு எவ்வளவு விலைய குறைச்சு இருக்காங்க?

பாறைநெய், டீசல் போன்றவற்றின் குறைந்த விலைகுறைப்புக்கு ஏமாறாதிங்க மக்களே. சந்தைவிலையை பொருத்து விலை நிர்ணயம் என்று சொல்லி விலையை ஏத்தும் போது கடுமையா ஏத்திட்டு குறைக்கும் போது ????

பாறைநெய் விலை அதிகரித்தது என்றால் விலை நிர்ணயமானது கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சார்ந்தது என்பார்கள்.

ஓர் ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

5 ஆண்டில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு

2010லிருந்து பாறைநெய் விலை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
இது சென்னையை அடிப்படையாக கொண்ட விலை நிலவரம்:

            ஆண்டு 2010
தேதி விலை
பிப்பரவரி 2 51.59
ஏப்பிரல் 1 52.13
யூன் 26 55.92
செப்டம்பர் 8 56.02
செப்டம்பர் 21 56.31
அக்டோபர் 17 57.09
நவம்பர் 9 57.44
டிசம்பர் 16 60.65

2010இல் விலை ஒரு முறை கூட குறையவில்லை.

       ஆண்டு 2011
தேதிவிலை
மார்ச்சு 261.63
மே 1567.22
யூலை 167.5
செப்டம்பர் 1670.82
நவம்பர் 472.73
நவம்பர்1670.38
டிசம்பர் 169.55

        ஆண்டு 2012
தேதிவிலை
மே 2477.53
யூன் 375.4
யூன் 2972.27
யூலை 2473.16
யூலை 2572.19
ஆகசுட்டு 172.19
அக்டோபர் 971.48
அக்டோபர் 2771.77
நவம்பர் 1670.57


        ஆண்டு 2013
தேதிவிலை
சனவரி 1 70.58
சனவரி 1870.26
பிப்ரவரி 1672.17
மார்ச்சு 273.95
மார்ச்சு 1671.41
ஏப்பிரல் 270.34
ஏப்பிரல் 1669.08
மே 165.9
யூன் 166.85
யூன் 16 69.39
யூன் 29 71.71
யூலை 1573.6
ஆகசுட்டு 174.49
செப்டம்பர் 177.48
செப்டம்பர் 1479.55
அக்டோபர் 175.68
நவம்பர் 174.22
டிசம்பர் 2174.71

       ஆண்டு 2014
தேதிவிலை
சனவரி 475.71
மார்ச்சு  176.48
ஏப்பிரல் 175.49
ஏப்பிரல் 1674.6
யூன் 774.71
யூன்  2574.76
யூலை  176.93
ஆகசுட்டு 175.78
ஆகசுட்டு 1573.47
ஆகசுட்டு 3171.55
அக்டோபர்  1 70.87
அக்டோபர்  1569.59
நவம்பர் 167.01
டிசம்பர் 166.05
பாசக ஆட்சிக்கு வந்து 6 முறை விலை குறைந்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் விலை குறையவில்லை. 
நானும் விலை குறைச்சிருக்கேன் என்று சொல்லி மக்களை நம்பவைக்க இது உதவும். ஆனா விவரம் தெரிஞ்சவன் கிட்ட இந்த பருப்பு வேகாது, ஆனா ஊடகங்களும் அரசின் ஊதுகுழலா இருந்து மக்களை நம்பவைக்கும்.

கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பாறைநெய் விலையை அரசு குறைக்க சொல்லாமல் இறக்குமதியாகும் கச்சா எண்ணைய்க்கு மூன்று வார இடைவெளிக்குள் பாறைநெய்க்கு லிட்டருக்கு 3.75 ரூவா என்றும் டீசலுக்கு லிட்டருக்கு 2.5 ரூவா என்றும் உற்பத்தி வரி விதித்து (அதிகரித்து, முன்னமே வரி உண்டு) பொதுமக்களுக்கு விலை குறைவு ஏற்படாமல் செய்துள்ளது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் 40 % அளவுக்கு குறைந்துள்ளது ஆனால் பாறைநெய் 11%, டீசல் 8% மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.  
 

 இந்த சுட்டியில் விரிவாக போட்டுள்ளார்கள்.

சனி, நவம்பர் 22, 2014

திருப்பதி பயணம்(ங்கள்)

திருப்பதி வேங்கடவனை பார்க்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை ஆனா பாருங்க அதுக்கு கொடுப்பினை இல்லாமல் இருந்தது. எங்க குடும்பத்தில் வேங்கிய பார்க்க போவனும்னு பேசிக்குவோம். அது பேச்சாவே இருந்தது.

வேங்கடவன் அலங்காரம் இல்லாமல்
அலங்காரம் இல்லாமல் உள்ள வேங்கடவன் திருமலை வேங்கி இல்லைன்னு நினைக்கிறேன். திருமலை வேங்கியின் புகைப்படம் (நிழற்படம்) வெளியில் வந்திருக்கான்னு தெரியலை. அலங்காரத்தோடு உள்ள வேங்கி மற்ற இடத்திலுள்ள வேங்கி என்பது என் எண்ணம்.

தனக்கு பிடித்த மலர் அலங்காரத்தோட வேங்கி.
நான் சின்ன பயனா இருந்தப்போ (வயசு மறந்துடுச்சி) எனக்கு உடம்பு சரியில்லை (வயித்துக்கடுப்பு) அதை சொல்லியும் கூட, சுற்றுலா போறவங்க யாரோ வரலைன்னு என்னை விடாப்பிடியா கூப்பிட்டாங்க. என் அத்தை மூலமா அந்த சுற்றுலா ஆளு எங்க வீட்டுக்கு வந்து என்னை பிடிச்சார். அலுவல் காரணமா எங்க அம்மாவால வர முடியாத நிலை என்ன பண்றது என்னை சுற்றுலா குழுவோடு அனுப்பி வைச்சாங்க. திருமலை போற வரைக்கும் எனக்கு உடல்நிலை சரியாகலை. அங்க கூண்டுக்குள்ள காத்துக்கிட்டு இருக்கறப்ப அங்க (அதுக்குன்னு கூண்டிலிருந்த இடத்தில்) குளிச்சேன் உடல் நிலை நல்லாயிடுச்சி. அது வரைக்கும் ரொம்ப பட்ட பாடு சொல்லி மாளாது :( .

கூண்டிலிருந்து (தர்ம தரிசன கூண்டு) மக்கள் சாமியை பார்க்க செல்கின்றனர்..

அடுத்த முறை குடும்பத்தோட போனோம் காட்பாடிய தாண்டினதும் விஜயவாடா அல்ல விசயநகரத்தில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசு மக்களவை உறுப்பினர் இறந்ததாலோ அல்ல தாக்கப்பட்டு கவலைக்கிடமானதாலோ ஆந்திராவுல மறியல் அப்ப இராமாராவ் ஆட்சி, எந்த வண்டியும் ஓடல. சோத்து மூட்டைய தூக்கிக்கிட்டு நாங்க நடந்தோம் அப்ப யாரோ புண்ணியவான்கள் எங்களை ஜீப்பில் ஏற்றிக்கிட்டாங்க. சித்தூரில் எங்களை இறக்கிவிட்டாங்க. அங்க காத்திருந்து தொடருந்து புடிச்சி திருப்பதி போனோம்.  அடுத்த தேர்தலில் காங்கிரசு ஆட்சிக்கு வர அந்நிகழ்வும்  "கை" கொடுத்தது. இது தான் நன்றாக நினைவு தெரிந்து நான் போன முதல்  தொடருந்து பயணம். எல்லாப்புகழும்  காங்கிரசு செய்த மறியலுக்கே :)

அலிப்பிரி என்னும் அடிவாரத்தில் உள்ள கோபுரம்
அப்புறம் மாமா பையனுக்கு மொட்டை அடிக்கிறதுக்காக குடும்பத்தோட போனோம். இப்ப வாடகை மகிழுந்தில் போனோம். பாவிநாசனத்தில் உள்ள அணையில் ஓரமா எல்லோரும் குளிக்க மேல இருந்து தண்ணி வருமே அதுல நல்லா குளிச்சோம். அங்க பூங்கா இருக்கு. சோத்து மூட்டைய அவிழ்த்து திங்க தொடங்கினோம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நானும் என் மாமா பையனும் தனியா போயி அங்கு வந்திருந்த பெண்களை (வயசு காரணம்;) ) சைட் அடித்தோம். பெண்களும் நைசா சைட் அடித்தார்கள். அங்கிருந்து வரவே மனசில்லை. எப்படி? அங்கிருந்து கிளம்ப மனசு வரும் இஃகி இஃகி. அங்கே அணை உள்ளது ஆனால் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை. திருமலையில் உள்ள கட்டடங்களுக்கும் கோயில்களுக்கும் இங்க இருந்து தான் நீலு (தெலுங்கு சொல் ஒன்னு கத்துக்குங்க) வருது.

பாபவிநாசனம் என்ற இடத்தில் குளியல்




படி இல்லா சம தள நடைபாதை







அடுத்த முறை என் மாமா பையனும் நானும் (நான் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் போது) திருப்பதி போனோம். திருப்பதியில் தமிழ் பேசும் இருவர் கூட சேர்ந்து கொண்டோம், அவர்களால் திருப்பதியில் உள்ள கோவிந்தராச பெருமாளை கும்பிட்டோம், எத்தனை பேர் கோவிந்தனை பார்த்திருக்காங்கன்னு தெரியலை, பெரும்பாலோர் வேங்கிய பார்ப்பதோட சரி.  பின்னர் மலைப்பாதை வழியாக நடந்து மேல(திருமலை) போனோம். மேல போனதும் நாங்க அவங்களிடம் இருந்து பிரிஞ்சிட்டோம். நல்லா சாமி கும்பிட்டோம். Semester (செமசுடர்) தேர்வில் எல்லாம் தேர்வாகனும் என்று வேண்டிக்கொண்டோம். அதுக்குத் தானே போனது.

திருப்பதி நகரிலுள்ள கோவிந்த ராச பெருமாள் கோவில் கோபுரம்.
கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு வேலை தேடி வந்தாச்சு. நானும் என் நண்பனும் நினைச்சா சின்ன நண்பர்கள் குழுவ (3~6 பேர் ) சேர்த்துக்கிட்டு திருப்பதி போயிடுவோம். பல முறை போயிருக்கோம் எப்பவும் மேல போறப்ப நடை பின் தேவசுதான அறைய பிடிச்சு குளிச்சுட்டு சாமிய கும்பிட்டுட்டு பேருந்தில் கீழே. அப்புறம் நேரா சென்னை. சில முறை திருத்தணி வழியா போகும் பேருந்து, சில முறை தடா வழியா போகும் பேருந்து. போகும் போதும் வரும் போதும். சில முறைக்கு அப்புறம் தடாவுக்கு தடை போட்டுட்டோம் ஏன்னா அவ்வழி சாலை மோசமாக இருந்ததுதான்.
அடிவாரத்தில் படி. காலுக்கு நல்ல பயிற்சி.
அடிவாரம் வரை (மலைப்பாதை தொடங்கும் இடம்) போவதற்கு பேருந்து நிலையத்தில் இருந்து ஜீப் அதுக்கு ஆளுக்கு 10 ரூபா. நடு இரவில் (12 மணி வாக்குல) அது கிடைப்பதே பெரிசு இல்லையா? ஆளு நிறைய சேர்ந்த பின் தான் வண்டிய எடுப்பார்கள். மலைப்பாதைகளில் நிறைய கடைகள் உண்டு தண்ணி (நீலு), கோக், இட்லி, தோசை எல்லாம் கிடைக்கும். சிகரெட், பீடி விற்க திருமலையில் தடை. ஆனால் புகை பிடிக்க \இலுக்க தடையில்லை.

 திறந்தவெளி கூண்டுக்குள் மான்
மலைப்பாதையில் நிறைய இடங்களில் மான்களை பார்க்கலாம் திறந்த வெளி கூண்டுக்குள் இருக்கும். கம்பி வலை நமக்காக (நம்மிடமிருந்து மானை காப்பாத்தனுமே) அப்புறம் தான் மானுக்காக. முதல் முறை போனபோது தெரிந்த கோபுரத்தை பார்த்து திருமலைக்கு வந்ததாக நினைத்தோம். நிறைய பேர் இப்படி ஏமாறுவார்கள். அதுவரை படி. அப்புறம் படி இல்லை. சாலையில் சிறிது நேரம் அப்புறம் படி அப்புறம் திருமலை. சாலையை அடையும் முன் பெரிய அனுமன் சிலை வரும் அவ்விடத்தில் யோகநரசிம்மர் கோவிலும் உண்டு. கிட்டதட்ட ஒரு கிமீ சாலையில் நடக்கனும். தூரம் ஒன்னா அல்லது இரண்டு கிமீரா? எனக்கு தெரியவில்லை, நேக்கு தெலுசா?. சாலைப்பயணம் முடிந்ததும் படி. இதில் ஏற கடினமா இருக்கும்.  ஏற்றம் (சாய்வு) கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த படி ஏற்றம் முடிந்ததும் திருமலை வந்திடும்.
சாலையை அடையும் முன் உள்ள அனுமன்
இந்த சாலையில் தான் நடக்கனும் இங்க படி இல்லை.

தேவசுத்தான அறைய வாடகைக்கு எடுக்க பெருங்கூட்டம் இருக்கும் நாங்க 3 ~ 4 க்கெல்லாம் திருமலைக்கு சென்றுவிடுவதால் அறை எங்களுக்கு கிடைத்துவிடும். 6 மணிக்கு மேல தான் அறை (கன்னத்தில் அல்ல) கொடுக்க ஆரம்பிப்பாங்க.  அறைக்கு பக்கத்திலேயே இட்லி கிடைக்கும் சில முறை கிடைக்காது எங்கு அறை உள்ளதோ அதைப்பொருத்து இது மாறும். அறையை காலி செய்யும் பொழுது கூட்டுபவர்களுக்கு காசு கொடுக்கனும், கொடுக்காமலும் வரலாம், அவர்கள் நமக்கு செய்யும் உதவியை பொருத்து நாம் முடிவு செய்யலாம். இதை அங்குள்ளவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள்( காக்கா பரம்பரையான்னு கேக்காதிங்க ). ஆனா சாவியை ஒப்படைக்கும் இடத்திலும் காசு கேட்பார்கள் (நம்ம முன் பணம் அவங்ககிட்ட இருக்கில்ல) அடேய் என்னமோ நான் வந்ததும் அறையை கொடுத்த மாதிரி கேக்கறானேன்னு கோபம் வரும் ஆனா அதை வெளிக்காட்டிக்காமல் நம் முழு முன் பணத்தையும் வாங்கிட்டு வரனும். நிறைய பேர் முன் பணத்தில் ஒரு பங்கை கொடுத்துவிடுவார்கள்.(அரசு பணத்தை அவன் நமக்கு இலவசமா குடுக்கிற மாதிரி நினைப்பு, இது ஒரு வகையான உடலியல் மிகப்பெரும்பாலோர் இதற்கு இரையாவார்கள்) 100 என்று சொல்லாமல் 99.99 என்று விலை வைப்பதும் இதனால் தான். (இந்த உடலியலை நம்பித்தான்)


வீடு திரும்பும் முன் இங்க சூடம் பத்த வைச்சு சாமி கும்பிடும் இடம்

ஒரு முறை சாமி இருக்கும் உள் கோவிலை உடலால் உருண்டு வர (அங்கபிரதட்ணம்) செய்ய நானும் என் நண்பனும் முடிவு செய்து அங்க கேட்டா ஒருத்தரும் உருப்படியான தகவலை சொல்லலை. இறுதியில் ஒருத்தர் சொன்னார் உடனே ஓடினோம் ஏன்னா இன்னும் 5 நிமிடம் தான் அதுக்கு இருந்தது. அங்க இருந்த குழாயில் குளித்து விட்டு சென்றோம் குளித்துவிட்டா என்றால் உடலை தண்ணீரால் நனைத்துக்கொண்டு. நாங்க பல மணி நேரமா கேட்டுக்கிட்டு இருந்தோம் அப்பவே இத்தகவல் தெரிந்திருந்தால் வரதனோட குளத்தில் முழுக்கு போட்டு விட்டு அவதியில்லாம பொறுமையாக கூட்டத்துடன் சேர்ந்திருப்போம். அப்புறம் தான் தெரிந்தது அங்கபிரதட்சனம் செய்பவர்களுக்கு தான் முதலில் சாமி காட்சி தருவாராம். அப்புறம் தான் மற்றவர்களுக்காம்.
மேல் செல்லும் வழியுள்ள நடைபாதை கடைகள்

இதனாலயே இப்ப நிறைய பேர் அங்கபிரதட்சனம் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாகி விட்டது, 150 பேர் தான் உள் கோயிலை உடம்பால் சுற்ற முடியுமுன்னா 500 பேருக்கு மேல வந்தா என்ன பண்றது அதனால இப்ப  அதுக்கு சீட்டு முறை கொண்டு வந்துட்டாங்க.  நிறைய பேர் சீட்டு வாங்க முயல்வதால் அது கிடைப்பது கடினம் என்ற நிலை.

இரவில் ஒளிரும் வேங்கியின் இல்லம்.
ஒரு முறை எங்களில் பலசாலியான  ஒருத்தன் மேல ஏற திணருனான். நோஞ்சான் மாதிரி இருந்தவன் எல்லாத்துக்கும் முன்னாடி ஏறிக்கிட்டு இருந்தான். அப்ப தான் புரிஞ்சது மேல படி வழியே செல்வதற்கு பலசாலியா இருந்தா மட்டும் பத்தாது என்பது.

பகலில் பறவை பார்வையில் வேங்கியின் இல்லம்.
நாங்க எப்பவும் காசு இல்லா முறையில் தான் சீனியை பார்ப்போம். ஒரு முறை 50 ரூபா கொடுத்து போனோம் ஆனா பாருங்க அப்ப 50 ரூபா வரிசையை மெதுவாகவும் காசு இல்லா வரிசையை விரைவாகவும் விட்டாங்க. அப்ப முடிவு பண்ணினோம் இனி என்ன ஆனாலும் காசு கொடுத்து சீனியை பார்ப்பதில்லை என்று. 
இது 50 ரூ வரிசை லட்டுக்கா அல்ல சாமிய பார்க்கவான்னு தெரியலை
நாங்க உணவுக்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் உணவகத்தை நாடமாட்டோம். எப்பவும் கையேந்தி பவன் தான். காசு குறைவு என்பதோடு அங்க தான் ருசி அருமையா இருக்கும். சீனியை பார்த்துட்டு வந்ததும் விலையில்லா (இலவச) சோற்றுக்கு டோக்கன் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து வெளியில் வந்து விலையில்லா சோறு வேண்டாம் என்பவர்கள் அதற்காகவே காத்து இருப்பவர்களுக்கு கொடை அளித்து அன்னகொடை அளிக்கலாம்.
பக்தர்களை நம்பி திருமலையில் உள்ள கடைகள்
கிளம்பும் முன் சீனியை பார்த்தமாதிரி இருக்கும் இடத்தில் சூடம் கொளுத்தி கும்பிட்டு வருவோம். அனுமார், கருடாழ்வார் கோவிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குமே. அவ்விடத்தை விரிவாக்கம் என்ற பெயரில் இப்ப இடிச்சுட்டாங்களாமே?  படத்தில் உள்ள மரத்தை வெட்டிட்டாங்களான்னு தெரியலை.

இந்த லட்டை வாங்க என்ன கூட்டம். லட்டே திருமலைக்கு சென்றதற்கு அறிகுறி
இன்னொரு முறை பேருந்தில் சென்னைக்கு வரும் போது நண்பன் ஒருத்தன் "தண்ணிலு" என்பது தெலுங்கு என்று கூறி எங்களை ஏமாத்திக்கிட்டு வந்தான்.  தெலுங்கு தெரியாது ஆனா சில வார்த்தைகளுக்கு பொருள் தெரியும்னான். நாங்க அவன் சொல்றத நம்பினோம் (நாங்கல்லாம் அப்பாவிங்க நம்புங்க). நாங்க சென்னை வருவதற்கள் எங்களுடன் வந்த இன்னொருவனுக்கு இவனுக்கு தெலுங்கு வார்த்தை எதுக்கும் பொருள் தெரியாது, தண்ணிலு தெலுங்கு அல்ல சும்மா புருடா விடுறான் அப்படின்னு ஐயம் வந்திருச்சு. சும்மா அவனை இரண்டு அடி போட்டதும் அவன் தனக்கு தெலுங்கு தெரியாது என்பதையும் தண்ணிலு என்பது இவன் கண்டுபிடிப்பு என்றும் ஒத்துக்கிட்டான். தமிழ் சொல்லோட "லு" போட்டா அது தெலுங்கு அப்படினுட்டான்.
யாரு முதல்ல இந்த கல்லை அடுக்கிவச்சாங்களோ இப்ப தொடருது
நடைபாதையில் நிறைய இடங்களில் கல்லை ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஏறும் போதோ இறங்கம் போதே ஓய்வு எடுத்த யாரோ பொழுதை கழிக்க கல்லை அடுக்கி இருப்பார்கள் இப்ப மக்கள் அதை தொடர்கிறார்கள். இப்படி கல்லை அடுக்கினா விரைவில் வீடு கட்டும் வாய்ப்பு வரும் என்று நம்புகிறார்கள். நாங்க சும்மா இருப்பமா நாங்களும் நிறைய கல் வீடு கட்டி இருக்கோம்.

இறுதி படி. இது முடியும் இடம் திருமலையே.

 தடுப்பு ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பிரிப்பதற்காக. ஆனால் ஏறுபவர்களுக்கு கைப்பிடியாக துணையாகவும் இருக்கும். தொடக்கத்தில் உள்ள படியில் தடுப்பு இருக்காது ஆனா தொடக்க படி முடியும் முன்பு சில இடங்களில் தடுப்பு இருக்கும். சமதளத்தில் தடுப்பு இருக்காது. இறுதி படிக்கட்டில் தடுப்பு இருக்கும்.

இப்ப கூட்டமும் அதிகமாகி விட்டது கோவிலும் மிகவும் வணிக முறை ஆகிவிட்டது. சீனியை இன்னும் விற்காம இருக்காங்களேன்னு மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். திருப்பதி கோவில் லட்டு முன்ன மாதிரி இல்லை. அளவும் சின்னதாகி விட்டது, ருசி கூட பழைய மாதிரி இல்லை.  ஏதோ அதிக வணிகமுறைக்கு கோவில் மாறுவதற்குள் அங்க அடிக்கடி போனேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது தான். முதலில் அங்க நிறைய தமிழும் அறிந்த (ஏறக்குறைய 90%) ஊழியர்கள் இருந்தார்கள். மெதுவா தமிழ் அறியாத மற்றவர்கள் அதிகளவில் ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். உள்ளூர் ஆட்களுக்கு திருமலையில் வேலையில்லாமல் போனது வருத்தம் தான். அங்க தமிழ் பக்தர்களின் வருகை மிக மிக அதிகம் ஆனால் சில அறிவிப்பு பலகைகளில் தமிழ் இருக்காது. தமிழிலும் எழுதினால் பக்தர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை ஏன் தேவசுதானம் புரிந்து கொள்ள மாட்டிக்குது?
.

இப்ப தெரிந்து கொண்ட சில மனவாடு வார்த்தைகள்:

மனவாடு மனதேசம் - நம்மஆளு நம்ம தேசம்.
நீளு - நீர்
காவலா - வேண்டுமா
காவாலி - வேண்டும்
போ - போ (மென்மையா போ என்பதை அதாவது கிளம்பு என்பதை வெள்ளு என்பார்கள்)
வெள்ளு - கிளம்பு
சம்பேஸ்தானு - கொன்னுடுவேன்
சால - நல்லா
சால பாகுந்தி - நன்றாக இருக்கிறது.
பாகுனானா - எப்படிய்யா இருக்க என்று கேட்போம்மில்ல அது மாதிரி
சால பாகுனானு - நன்றாக உள்ளேன் (மேலே கேட்டதற்கு பதில்)

பெள்ளி -திருமணம்
மிர்ச்சி - மிளகாய்
ஆவுதா - அப்படியா
கொடுக்கு - மகன்
கூத்துரு  - மகள்
அம்மாயி - பெண்
தெல்லிது - தெரியாது
தெலுசா - தெரியுமா
 செப்பு- சொல்லு
இடி - இது
கடவு - படி
அத்தடு - அவன்
போஜனம் \ அன்னம் - சோறு\சாப்பாடு
சேசாவா - முடிச்சாச்சா
நிஜமா - நிசமா நாமளும் நிஜமா என்று சொல்லுவோம்
ஏமிட்டி - என்ன
அத்தனு - அந்தாளு
எவரு - யார்\எவர்
அக்கடிக்கி  வெள்ளு - அங்கே போ
எந்த \ எல - எப்படி
இக்கட சூடு ஹ ஹ ஹா - இங்கே பார் (இரஜினியால் இச்சொல்லை அறிந்தேன்)