வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தலைவர் தங்கபாலு வாழ்க வாழ்க

தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு மீது காட்டமடைய ஏதாவது காரமுண்டா? அவர் நடைமுறையில் இல்லாதது எதையும் செய்யவில்லை. எனவே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

தங்கபாலுவுக்கு தெரியும் யாரை வேட்பாளராக்குவது என்று. காங்கிரசில் நிறைய குழுக்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு குழு தலைவரும் அவர்கள் ஆட்களுக்காக போராடி தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே இல்லாத ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணி சங்கர் அய்யரை சேர்ந்த குழுவுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அவரும் அந்த இடத்தை தன் மனதுக்கு இனியவருக்கு கொடுத்துவிட்டார். தனக்கு பிடித்தவருக்கு தானே தர முடியும், பிடிக்காதவருக்கா தரமுடியும்?

கருப்பையா மூப்பனார் மகன் வாசன், சிவகங்கை சின்ன பையன் சிதம்பரம், பக்தவச்சலம் மகள் ஜெயந்தி நடராசன், காங்கிரசை ஒழிக்கனும் என்ற பெரியாரின் தம்பியின் பேரன் இளங்கோவன், பெரிய இடத்து பிள்ளை ராகுலின் அரவணைப்பின் கீழுள்ள புதிய குழு, பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தி கிருசுணசாமி, டெல்லியில் வாழ்ந்தாலும் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென் மாநிலத்தை சேர்ந்தவங்க மதராசி தான்) தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காகவும் காங்கிரசு மேலிடத்தொடர்பு இருப்பதாலும் மணி சங்கர் அய்யர் ஆகியோரின் குழுக்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலுவுக்கு சில இடங்கள் கிடைத்தது.   தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு இடம் கிடைத்தது தவறில்லை என்பவர்கள் அவர் தன் விருப்பபடி தன் குழுவுக்கு கிடைத்த இடங்களை  கொடுப்பது தவறு என்பது நகைச்சுவையாக உள்ளது.

அந்த இடங்களை யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம். அவர்கள் அப்போது காங்கிரசுகாரர் என சொல்லிக்கொண்டால் போதும் என்பது தான் நிபந்தனை. இதன்படி தான் மற்ற குழு தலைவர்கள் தொகுதி பங்கீடு செய்கிறார்கள். இது தெரியாதவன் முழு காங்கிரசு காரன் அல்ல மற்றும் காங்கிரசு பாரம்பரியத்தை பற்றி அறியாமல் காங்கிரசு பேரியக்கத்தில் இருக்கும் மடையன் அவன்.

எல்லோருக்கும் தெரியும் இங்கு காங்கிரசு வெற்றிபெறுவது கூட்டணி கட்சியினரின் தயவால் என்று இது தங்கபாலுக்கு தெரியாம இருக்குமா?  உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தமிழ்நாடு காங்கிரசு தலைவரா இருக்கற அவருக்கா தெரியாது? தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்னவென்று அவர் நன்கு அறிவார். 10% வாக்கு வங்கி, மத்தியில் அமைச்சர்கள், CBI raid என்று பூச்சாண்டி காட்டியே வேலையை முடிக்கனும் சார். (உண்மையாவே  10% வாக்கு வங்கி இருக்கான்னு கேக்காதிங்க அப்படி கேட்டால் நீங்கள் தமிழக அரசியல் பற்றி ஒன்றும் அறியாதவர் என்று பொருள்), காங்கிரசை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவிடம் 63 இடம் வாங்கறுதுன்னா சும்மாவா.(திமுக நிலையை நினைச்சா பரிதாமா தான் இருக்கு, தேன் குடிச்சவன் புறங்கையை நக்கி தானே ஆகனும்)

கிடைத்த 63 தொகுதிகளில் 13 இடங்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணைப்படி தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கபாலு தன் குழுவுக்கு ஆட்களை ஒதுக்கியதை எதிர்பவர்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணையை எதிர்க்கிறார்கள் என்று தான் பொருள்.

தமிழக குழுக்களை  பொறுத்தவரை அதிகஅளவாக வாசன் குழுவுக்கு 22 இடங்களும் . சிதம்பரம் குழுவுக்கு 12 இடங்களும்,  ராகுல் குழுவுக்கு 9 இடங்களும்  கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராசன், இளங்கோவன், பாமக நிறுவனரின் சம்பந்தி கிருசுணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. 1 இடம் மட்டுமே சொக்கத்தங்கம் அன்னை சோனியாவால் ஒதுக்கப்பட்ட இளங்கோவன் குழுவே தங்கபாலு குழு 13 இடங்களை பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவருக்கு எதிராக வேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர். கருப்பையாவின் பையன் குழுவும் இதற்கு ஒத்து ஊதவதாக  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழக காங்கிரசு தலைவராக அல்ல அல்ல காங்கிரசு காரணாக இருக்க தகுதி என்னவென்று பார்த்தால் அவன் நேரு குடும்பத்து காங்கிரசு கட்சி வாரிசுக்களின் செருப்புக்கு தன் எச்சில் போட்டு  பள பள என்று துடைப்பவனாக இருக்க வேண்டும். காந்தி பேரு வச்சி ஊரை ஏமாத்துனாலும் அவங்க நேரு குடும்பம் என்பதை நினைத்து கொண்டு அது மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


தமிழர்கள்,  ஈழ தமிழர்கள் பற்றி அவர் ஏன் அக்கறைபட வேண்டும் ( சில இடங்களில் வெற்றி பெற்றால் போதும்). அதை  தமிழின காவலர் தற்போதய முதல்வர் வெறும் வானம்  கருணாநிதி பார்த்துக்கொல்வார்.  அவரு தான் தமிழர்களுக்காக 1 மணி நேர உண்ணாவிரதம் இருப்பார், தந்தி அடிப்பார்.  இஃகி இஃகி.

மனைவிக்கு இடம் வாங்கி கொடுக்கிற மாதிரி  நடித்து இவர் இடத்தை புடிச்சிக்கிட்டார் என்பது எதிராளின் ஒரு வாதம். ஜெயந்தி தங்கபாலு காங்கிரசுகாரர், அவர் கணவர் முன்னாள் & இந்நாள் தமிழக காங்கிரசு தலைவர், இது  போதாதா? விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற குழுக்களில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் பெரிய தியாகிகளா? யாராச்சும் சொல்லுங்க. ஞானசேகரன், பீட்டர் அல்போன்சு, காயத்ரி தேவி, கே. என். அசன் அலி, அருள் அன்பரசு, யசோதா, பழனிச்சாமி ... எல்லாம் தியாகிகள் என்று அவங்க குழு தலைவரு தான் சொல்லிக்கனும், இஃகி.

இளங்கோவனுக்கு மரியாதையே அவரின் INITIAL தான் என்பதை அவர்  வேண்டுமானால் தன் வசதிக்காக மறந்திருக்கலாம், எல்லோரும் அப்படி மறக்கமுடியுமா? பெரியார், காந்தி எல்லாம் காங்கிரசே வேண்டாம் என்று சொன்னவங்க, ஆனா அவங்க பேரை சொல்லி தான் காங்கிரசுகாரனாக  இருக்கவேண்டியுள்ளது. தங்கபாலுவுக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததது ஒரு குறை தான். தலைவர் தங்கபாலுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா இடுகையின் நீளம் கருதி இது போதும் என்று நினைக்கிறேன்.

காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற துரோகங்களுக்கும் உள் அடி வேலைகளுக்கும் பயந்துவிடுவார் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.  கூட்டணி தயவால் எல்லா இடங்களிலும் அவர் குழு வெற்றி பெறுவது உறுதி. அப்புறம் இவனுங்களை பார்ப்போமில்ல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். (பல பொருள் தருவது இது ;-) )


ராஜிவ்ஜி  ஜெய்.
மறைமுக பிரதமர் சொக்கத்தங்கம் அன்னை சோனியாஜி ஜெய்.
வருங்கால பிரதமர் ராகுல்ஜி ஜெய்.

புதன், மார்ச் 16, 2011

அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லை - செயலலிதா

அதிமுக கூட்டணியில் இரண்டு பொதுவுடமை கட்சிகளும் மதிமுக-வும் இருக்குமா இருக்காதா என்ற கேள்விக்கு பொதுவுடமை கட்சிகளுகு தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று செயலலிதா உறுதிபடுத்தினார். பாவம் மதிமுகவை அவர் கண்டுக்கவே இல்லை. சரி பின்னாடி உடன்பாடு வரும் தொகுதி ஒதுக்குவாருன்னு வைகோ போன்றவர்கள் நினைச்சிருப்பாங்க. ஆனா அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளை அறிவித்ததின் மூலம் மதிமுகவுக்கான கதவை அதிமுக சாத்திவிட்டது (செயலலிதா சாத்திவிட்டார்). அண்ணா, தனி கடை கட்ட நடைய கட்டுங்க.

அதிமுக கூட்டணி


கட்சி போட்டியிடும் தொகுதிகள்
அதிமுக 160
தேமுதிக 41
CPM 12
CPI 10
மனித நேயமக்கள் கட்சி 3
புதிய தமிழகம் 2
சரத்குமார் கட்சி 2
சேதுராமன் கட்சி 1
குடியரசு கட்சி 1
கொங்கு இளைஞர் பேரவை 1
மதிமுக 00
மொத்தம் 234



மதிமுக இல்லாததால் அதிமுகவுக்கு நட்டமா? 

மதிமுகவுக்கு தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கணிசமான வாக்கு உண்டு. மேலும் வைகோ போன்ற மக்கள் அறிந்த சிறந்த உணர்வுபூர்வமான பேச்சாளரை இழந்தது அதிமுகவுக்கு பெரும் இழப்பு. வைகோவின் பேச்சு இலவசமாக செய்திதாள்களில் வரும் அத்தகைய விளம்பரத்தை இழந்தது அதிமுகவுக்கு பாதிப்பே. இந்த தேர்தலில் வாக்கு வேறுபாடு குறைவாக இருக்கும் என்பது என் கணிப்பு. வைகோவின் வெளியேற்றத்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைக்ககூடிய திமுக அனுதாபிகளான (தற்போது திமுக மேல் கோபமாக உள்ள) தமிழ் உணர்வாளர்கள் பெரும் பாலோரின் வாக்குகளை அதிமுக இழக்கப்போவது உறுதி.

மதிமுக வாக்கு குறைவாக வாங்கினாலும் அதன் தொண்டர்கள் சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்கள். தேர்தல் நேரத்தில் இவற்றை அதிமுக இழந்தது அதற்கு தான் பாதிப்பு. தேமுதிகவிற்கு வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உண்டு ஆனால் தெற்கே இல்லை. மதிமுகவிற்கு தெற்கே உண்டு ஆனால் வடக்கே இல்லை.

ஏன் அண்ணனை தங்கை ஆட்டத்துக்கு சேர்த்துக்கலை?

தங்கை இத்தேர்தலுக்கு சோ போன்றவர்களின் வழிகாட்டுதலில் நடப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இப்போது வழிகாட்டுபவர்களுக்கு வைகோவை பிடிக்காது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். மதிமுகவுக்கு மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் செல்வாக்கு உண்டு அங்கு அதிமுக பலமாக உள்ளது எனவே மதிமுக தேவையில்லை. வைகோ இல்லாமல் போனாலும் விசயகாந்த் கூட்டணியில் இருப்பதால் நாயுடு வாக்குக்கு பாதிப்பு இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு ஈடான விளம்பரம் வைகோவுக்கு கிடைப்பதில் உடன்பாடு இல்லை. மதிமுகாவால் ஏற்படும் சிறிய இழப்பை தேமுதிகவால் ஈடுசெய்யலாம். மதிமுகவை விட தேமுதிகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளது.

அதிமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காது (கிடைக்க கூடாது என்பது என் விருப்பம்). மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி அரசு வேணா அமைக்கலாம். ஜெயா தொலைக்காட்சியில் மைனாரிட்டி அரசு என்பதை அழுத்தி சொல்லலாம்.

வியாழன், பிப்ரவரி 10, 2011

கறுப்பு பணம் வைத்திருந்தவர்களில் 15 பேர் பெயர் தெரிந்தது.

வெளிநாட்டில் கோடி கோடி கணக்கில் நம் நாட்டவர் பணத்தை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதது யார் யாரெல்லாம் என்பது தான்.  நம் இந்திய அரசும் செருமனியிடம் இருந்து லீக்டன்சுடைன் நாட்டின் LGT வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை கேட்டு பெற்றுள்ளது. ஆனா கேடி வேலை பண்ணி நமக்கு அது தெரியக்கூடாது என்று மறைத்துள்ளது.
2009 மார்ச் மாதமே செருமனி இந்தியாவிடம் அந்த பட்டியலை கொடுத்துவிட்டது. ஆனா நம்ம கை சுத்தமான மண்ணு அப்பட்டியலை வெளியிடமுடியாது என்று மறுத்துவிட்டார். உச்சநீதிமன்றம் கேட்டும் இந்த பதில் தான்.  இதில் 18பேரில் உள்ள 16 பேரின் விவரங்கள் தெகல்காவிடம் சிக்கியுள்ளது. தெகல்கா அதில் 15 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.

http://tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp

1. Manoj Dhupelia - மனோஜ் துபெலியா
2. Rupal Dhupelia - ரூபல் துபெலியா
3. Mohan Dhupelia - மோகன் துபெலியா
4. Hasmukh Gandhi- காசுமுக் காந்தி
5. Chintan Gandhi- சிந்தன் காந்தி
6. Dilip Mehta- திலிப் மேத்தா
7. Arun Mehta- அருண் மேத்தா
8. Arun Kochar- அருண் கொசார்
9. Gunwanti Mehta - குன்வண்டி மேத்தா
10. Rajnikant Mehta- ரஜினிகாந்த் மேத்தா
11. Prabodh Mehta - பிரபோத் மேத்தா
12. Ashok Jaipuria- அசோக் ஜெய்புரியா

3 அறக்கட்டளைகளின் பெயர்கள்

13. Raj Foundation- ராஜ் பவுண்டேசன்
14. Urvashi Foundation- ஊர்வசி பவுண்டேசன்
15. Ambrunova Trust - அம்புருனோவா டிரசுட்
16. பெரிய நிறுவனத்தின் சேர்மன் பெயர். தற்சமயம் அவரின் பெயரை வெளியிடவில்லை. 

இவங்கலாம் என்ன மாதிரியான வணிகம் பண்றாங்க எவ்வளவு பணத்தை பதுக்கி இருக்காங்க அப்படிங்கிற விவரத்தை அவங்க தரப்பு விளக்கத்தை கேட்ட பின் தெகல்கா வெளியிட முடிவுசெய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் 26 பெயர்களை பெற்றுள்ளதாக அரசு கூறி உள்ளது. அதனால் தெகல்காவிடம் கிடைக்காதவர்களும் உண்டு.

கொச்சி பிரிமியர் லீக் அணியை ஏலம் எடுத்தவர்களும் இந்திய அரசிடம் உள்ள கறுப்பு பணம் உள்ளவர்களின் பட்டியலில் உள்ளதாக பேசப்படுகிறது.

என்ன இது மொத்தமே இவ்வளவு பேர் தான் கறுப்பு பணத்தை பதுக்குனவங்களான்னு ஆச்சரியப்படாதிங்க.  ஆயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. இது கொஞ்சமே கொஞ்சம் , இந்த கொஞ்சம் பேரை சொல்லவே அரசு முடியாதுங்குது. ஏன்னா நம்ம அரசியல் பெருந்தலைகள், அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் நபர்களும் அதில் உள்ளது தான்.

குறிப்பு:- மேலும் விரிவான செய்திகளுக்கு உண்மைத்தமிழன் வலைப்பதிவை பார்க்கவும்.