வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், ஏப்ரல் 13, 2010

புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டு எந்த மாசத்துல பிறக்குது? சித்திரையில் சிலபேருக்கும் தையில் சிலபேருக்கும் பிறக்கிறது. 99% திருக்கணிதகாரங்களுக்கு (சோசியக்காரங்க) சித்திரை மாதம் தான் புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டு  தை மாதம் பிறந்தா ஒழுங்கா கணிக்கமுடியாதா?. சித்திரையில் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு சித்திரையில் பிறப்பதை ஒத்துக்கொள்ளாத மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

நான் தை மாதம் தான் ஆண்டு பிறப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் நபர். இப்ப சட்டம் போட்டதால் அல்ல முதலில் இருந்தே தை மாதத்துக்கு தான் என் ஆதரவு. சித்திரை மாதத்தை நான் கொண்டாடியதே இல்லை. தை மாசம்ன்னா அப்படியா? வெகு விமரிசையா கொண்டாடுறோம். புத்தாண்டை பொங்கல் விழா மூலம் வரவேற்கிறோம். கையில் காசு வந்தவுடன் குடியானவன் கொண்டாடுற முதல் விழா பொங்கல் தான் அதாவது புத்தாண்டு பிறப்பு.

ஒவ்வோரு மாதத்துக்கும் பழமொழிகள் இருந்தாலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்துக்கு சொல்லும் மொழிக்கு சிறப்பு உண்டு. அதாவது அறுவடை முடிந்து கைல பணம் புழங்கற மாதம் தை. கேட்பவர்களுக்கு பணம் கொடுக்க முடியும்.  வாரிசு திருமண செலவுக்கு வேண்டிய பணம் அறுவடை முடிஞ்சா தான கைக்கு வரும்.  தை, மாசி திருமண மாதங்கள். சித்திரை மாதத்தில் அவ்வளவாக திருமணம் நடப்பதில்லை. 

வானியல் படி கதிரவன் மேல் நோக்கி கடக ரேகை நோக்கி செல்லும் நாள் தை 1. ஆறு மாதம் மேல் ஆறு மாதம் கீழ். தமிழரின் ஆறு காலங்களில்  ஒன்றாகிய  இள வேனில் காலம் தொடங்குவதும் தை மாதத்தில் இருந்துதான். வெயில் காய்ச்சற காலத்திலிருந்து யாரு புத்தாண்ட தொடங்குவாங்க?

சித்திரையில் தொடங்கும் புத்தாண்டில் ஒன்று கூட தமிழ் பெயர் அல்ல. அப்புறம் எப்படி சித்திரை ஆண்டுபிறப்பை தமிழ் புத்தாண்டாக சொல்றாங்கன்னு புரியலை. சித்திரையில் தொடங்கும் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லாதீர்கள்.

திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

நானும் நட்சத்திரம் ஆயிட்டேன்

என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான்.  இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க.  இந்த வாய்ப்பை விடுவனா?  எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.

என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.

பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை  ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.

என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).

குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.

இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி.  ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).