வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 27, 2009

உண்ணா விரதமும் போர் நிறுத்தமும்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.

ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.

அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.

அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

தினமணி கருத்துப்படம்.

தமிழினக்காவலரின் ஈழ தமிழரை காக்க கோரிய மற்றொரு சீரிய முயற்சி. திணமனி கருத்துப்படம்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். "

குறளுக்கு உரை எழுதியவர் அல்லவா..

வியாழன், ஏப்ரல் 23, 2009

முழு அடைப்பின் போது டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி

ஆளும் திமுக சார்பில் ஈழ மக்கள் சிக்கல் தீர்வதற்காக தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு வெற்றிகரமாக அமைதியாக நடந்தது என்பதை முழு அடைப்புக்கு முழு ஆதரவு கொடுத்த உங்களுக்கு தெரியும். ஈழ மக்களுக்காக திமுக நடத்திய முழு அடைப்பு பிடிக்காதவர்கள் பல்வேறு குறைகளை கூறுகின்றனர். பதிவுலகிலும் அப்படிதான் உள்ளது. குறை கூறி பல இடுகைகள்.

அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகள் ஏன் திறந்திருந்தன என்பதே அவர்களில் பெரும்பான்மையோர் கேட்கும் கேள்வி.

அஞ்சா நெஞ்சனை பெற்ற அருந்தவச் செல்வரும், வாழும் வள்ளல் ரித்திசை வேட்பாளராக்கி வள்ளலுக்கெல்லாம் வள்ளலானவரும், மக்கள் நலனுக்காக யார் காலையும் பிடிக்க தயங்காதவரும் அதன் காரணமாக அன்னை சோனியாவின் காலை கையை பிடித்து கெஞ்சியவரும், அண்ணா & பெரியார் கொள்கைகளை இப்போதும் கடைபிடிக்கும் சுயமரியாதைச்சிங்கமான தானைத்தலைவர் தன்மானச்சிங்கம் தமிழினக்காவலர் கலைஞர் அவர்கள் சார்பாக நான் பதில்களை சொல்கிறேன்.

1. திமுக என்ற கட்சி தான் முழு அடைப்பு நடத்தியதே தவிர அரசு அல்ல.

2. இந்த அரசு குடிமகன்கள் நலனில் அக்கரை உள்ள அரசு.

3. குடிமகன்கள் முழுஅடைப்பின் போது தகராறு செய்திருந்தால் இந்த அரசை கலைக்க வேண்டும் இதே குள்ள நரிகள் பேசியிருக்கும். இப்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பை இந்தஅரசு கொடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் என்னனமோ பேசுகிறார்கள்.

4. அன்று மட்டும் டாஸ்மார்க் கடைகளில் வருமானம் 10,000 கோடி. இந்த 10,000 கோடி இந்த அரசுக்கு கிடைக்கக்கூடாது அதன் மூலம் இது பல மக்கள் நல செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற வஞ்சகர்களின் எண்ணம் பலிக்காததால் அவர்கள் கூச்சல் போடுகிறார்கள். அவர்களைப் பற்றி தமிழினம் நன்கு அறியும்.

5. ஈழ மக்கள் சிக்கல் தீரவேண்டும் என்று முழுஅடைப்பு, பேரணி நடத்தியது இந்த அரசுதான். கலைஞரே பல கடிதங்களை பிரதமருக்கு எழுதியுள்ளார். பல இலட்சம் தந்திகளை உடன்பிறப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இதை எதிர்கட்சிகளால் மறுக்க முடியுமா?

6. கலைஞரின் சொல்வன்மைக்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் அவர் உளருகிறார், மாற்றி மாற்றி பேசுகிறார், பல்டி அடிக்கிறார் என்கிறார்கள்.

தமிழக மக்களே மறக்காமல் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் சார்பு வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.