வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, அக்டோபர் 20, 2006

உள்ளாட்சி தேர்தலில் பணம்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டது. ஆனா இத்தேர்தலில் புழங்கிய பணம் என்னை மலைக்க வைத்து விட்டது. சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் புழங்கப்பட்டதை விட பல மடங்கு பணம் இத்தேர்தலில் புழங்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு 100 ரூபாய் என்பது போய் சில இடங்களில் 1000, 1500 ரூபாயெல்லாம் கொடுத்துள்ளார்கள் ( உங்களால் நம்பமுடிகிறதா? ). இவ்வளவு பணம் செலவு செய்து இவர்கள் பெற போகும் பலன் என்ன என்று தான் எனக்கு தெரியவில்லை.

ந‌க‌ராட்சி வார்டு உறுப்பின‌ர்கள், உள்ளாட்சி உறுப்பின‌ர்க‌ள் லட்சக்கணக்கில் ப‌ண‌ம் செல‌வ‌ழித்து வெற்றி பெற்றால் செல‌வு செய்த‌ ப‌ண‌த்தை எடுக்க‌ முடியுமா? அந்த அளவுக்கு உள்ளாச்சிகளில் பணம் புழங்குதா? என‌க்கு தெரியவில்லை.

இவர்கள் என்ன தான் பணம் செலவு செய்து வெற்றி பெற்றாலும் பகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் மீண்டும் அடுத்த முறை வெற்றி என்பதை நினைத்து பார்க்க முடியாது. உள்ளாட்சி அமைப்பின் பலமே இது தான்.


இதில் இந்த‌ க‌ட்சி அந்த‌ க‌ட்சி என்று இல்லாம‌ல் எல்லா க‌ட்சியின‌ரும் செல‌வு செய்துள்ள‌ன‌ர். ப‌ண‌ம் வைத்திருந்த‌வ‌ன் அள்ளி வீசி இருக்கிறான்.


எதுக்குடா இவ்வளவு ப‌ண‌ம் செல‌வு செய்ய‌றாங்க என்று ஆய்ந்து பார்த்தால் திமுக தான் சூத்திரதாரி என்பது புரிந்தது. இப்போ நகராட்சி தலைவரை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்குள் இருந்து ஒருவரை தான் தேர்ந்தெடுக்கனும் முன்னாடி நகராட்சி தலைவர் தனியாக வாக்கு பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் (அமெரிக்க குடியரசு தலைவர் மாதிரி). அதனால ஒருவர் நகரவை தலைவராக வேண்டும்மென்றால் அவர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது அவரை ஆதரிக்கக்கூடிய மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும். அதனால் தலைவர் பதவிக்கு குறி வைப்பவர்கள் மற்றவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும். பழைய முறையாக இருந்தால் எப்படியும் இவர் பணம் செலவு செய்ய வேண்டும் இப்ப அந்த பணத்தை வார்டு வேட்பாளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற வைக்க முயல்கிறார்.


ஏன் திமுக இப்புதிய முறையை கொண்டு வந்தார்கள் என்றால் இப்போ அவர்கள் ஆட்சியில் இருப்பதால் சுலபமாக உறுப்பினர்களை வாங்க முடியும் என்பதாலயே. இதுவே அதிமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு இம்முறை மூலம் பெரிய பலன் இருக்கும். எனவே இப்புதிய தேர்தல் முறையை மாநில ஆளுங்கட்சிக்கு தோதான முறை எனக் கூறலாம்.


உள்ளாட்சி முறையை இவ்வாறு அரசியல் கட்சிகள் பந்தாடுவது மக்களுக்கு நல்லதல்ல. அரசியல் சார்பற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதே உள்ளாட்சிகளுக்கு நன்மைபயக்கும்.

செவ்வாய், அக்டோபர் 17, 2006

அமெரிக்காவில் "மொய்"

தங்கத் தமிழகத்திலே மொய் எழுதும் பழக்கம் உள்ளது யாவரும் அறிந்ததே. சின்னக்கவுண்டர் படம் மூலம் இது தருமமிகு சென்னை மற்றும் பட்டணத்து வாசிகளுக்கும் தெரியவந்தது. இது ஒரு வகையான கடன், வட்டியில்லா கடன் அதாவது கைமாத்து (கை மாற்று மருவி கைமாத்தாகிவிட்டது).
திருமணம் , பூப்பு நீராட்டு, புதுமனை புகுதல், குழந்தைக்கு முதல் மொட்டை & காது குத்து, போன்ற நிகழ்ச்சிகளில் மொய் வாங்குவது வழக்கம். மொய்க்குனே ஒரு பொத்தகம் போட்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று எழுதி வைப்பார்கள். அவர்களின் மொய் வாங்கும் நிகழ்ச்சிகளில் இந்த மொய் பொத்தகத்தை பார்த்து அதே பணம் அல்லது அதை விட அதிகமாக வைப்பார்கள். அதே அளவு பணம் வைத்தால் மொய் உறவு முறிந்துவிடும், எனவே அவங்க வைத்த பணத்தை விட அதிகமாகவே வைப்பார்கள்.
மறு மொய் வைக்காவிட்டால் மானக்கேடாகிவிடும். அவன் பையன் கல்யாணத்துக்கு 100 ரூபா வச்சேன் என் பையன் கல்யாணத்துல அவன் மொய்யே வைக்கலை என்று பேசுவார்கள்.
இதன் தொல்லை காரணமாக சில பகுதிகளில் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதழ்களில் அச்சடித்து கூறினர். காலப்போக்கில் அப்பகுதிகளில் மொய் வாங்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது ( இப்பவெல்லாம் யாரும் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதல்களில் அச்சடிப்பதில்லை).

சின்னக்கவுண்டர் படத்தில் வருவது போன்ற மொய் வாங்கும் பழக்கம் தஞ்சை பேராவூரணி பகுதி மக்களிடம் உண்டு.

இப்ப அமெரிக்க வாழ் மக்களிடம் இந்த பழக்கம் பலமாக வேரூன்றி வருகிறது. அதாவது பரிசு & "Gift Card" என்ற உருவத்தில். இங்க பெரும்பாலும் பிறந்தநாள் விழாக்களை நண்பர்களை அழைத்து கொண்டாடுவர். அப்போது எல்லோரும் பரிசு அல்லது "Gift Card" உடன் வருவர், அதனால் நம்மால எதுவும் வாங்காமல் கைய வீசிக்கிட்டு போய்ட்டு வர முடியலை. நாம பரிசு அல்லது "Gift Card" கொடுத்தால் அவர்களும் நம் வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளுக்கு பரிசு அல்லது "Gift Card" கொடுக்க வேண்டும் என்ற கணக்கு வருகிறது, இது கட்டாய மொய் என்பதற்கு பதிலாக கட்டாய பரிசு என்று வந்துவிட்டது. இப்பழக்கத்தை உடைக்க வேண்டுமென்றால் விழா அல்லது நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது பரிசு எதுவும் வேண்டாம் "Your Presence is Best Present" என்று சொல்லி அழைப்பது தான்.

திங்கள், அக்டோபர் 09, 2006

தமிழ் பெயர் - உதவி வேண்டும்.

என் நண்பன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க விரும்பி சிறிய அழகான தமிழ் பெயர்களை கூறுமாறு கேட்டான். மூன்றுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை எல்லாம் வடமொழி அல்லது வடமொழியோ என்று ஐயம் உள்ள பெயர்களே. ஒரு வாரம் யோசனை செய்து ஒரு 10 பெயர்களை கூறிவிட்டேன்.

இணையத்தில் தேடியதில் நிறைய சிறிய பெயர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் பெரிய பெயர்களாகவே இருந்தன.

என் நண்பனின் நிபந்தனை:-
பெயர் 4 எழுத்துக்குள் இருக்க வேண்டும், ரொம்ப நல்ல பெயராக இருந்தால் 5 எழுத்துக்கு விதி விலக்கு உண்டு உ.தா. இலக்கியா. "ழ" இல்லாமல் இருத்தல் நலம் என்பது அவன் எண்ணம் ஏனென்றால் அமெரிக்காவில் உள்ளதால் "ழ" ஆனது "ல" ஆகி பெயரின் பொருளை மாற்றிவிடும் என்பதால். இருந்தாலும் சில பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்ததால் (யாழினி) இங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.


உங்களுக்கு தெரிந்த சிறிய பெண் குழந்தைக்கான தமிழ் பெயர்களை பின்னூட்டத்தில் கூறி என் நண்பனுக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் யாரேனும் தமிழ் பெயர் கேட்டால் இப்பட்டியலை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.

இதுவரை அவனிடம் உள்ள பெயர் பட்டியல்:-

அல்லி
அருவி
அகலி
அந்தி
அன்னம்
அனிச்சை
அரசி
அன்பரசி
அழகி
ஆதிரை

இலக்கியா
இனியா
இளமதி
இன்பா
இனிமை

உமையாள் - உமையா
உமை

எழில்
எழிலினி

ஐயை

ஒளி
ஓவியா
ஔவை

கயல்
கயல்விழி
கண்மணி
கண்ணகி
கனிமொழி
கவி
கலை
காவியா
காவேரி
காந்தள்
சிட்டு
கோதை

குழலி
குமுதம்
குமாரி
குமரி
குயிலி

கொற்றவை
கோமதி
கோமளா - தமிழா ??

சுடர்
சுருதி - தமிழா? பொன்ஸ்க்கே ஐயம் வந்துவிட்டது.
செண்பகம் - செண்பகா
செவ்வந்தி
செல்வி

தமி
தமிழ்
தமிழினி
தமிழரசி
தமிழிசை
தாமரை
தென்றல்
தேனினி
தேன்மொழி

நிலா
நிலானி
நிலாவினி
நித்திலா
நிறைமதி
நங்கை
நந்தினி - நந்தி தமிழ் என்றால் நந்தினியும் தமிழ்.
நாச்சியார்
நாமகள்

பாவை
பாவாயி
புகழினி
புனிதா - புனிதம் தமிழ் என்றால் புனிதாவும் தமிழ்.
பூவை
பூங்கோதை
பூங்குயில்
பிறை
பொன்னி
பொன்மணி

மகிளா / மகிழா ?
மகிழம்
மங்கை
மதி
மலர்
மணி மலர்
மயில்
மல்லி
மகிழினி
மஞ்சுளா - தமிழ் என்று நினைக்கிறேன் மஞ்சு விரட்டு - மஞ்சள் - மஞ்சுளா.
மாதவி
மீனா
முல்லை
முழுமதி
மின்னல்
மேகலை
மேகலா

யாழினி

வடிவு
வள்ளி
வல்லி
வசந்தி
வதனி, வதனா - வதனம் (முகம்) தமிழ் என்றால் வதனி, வதனாவும் தமிழ்.
வானதி
வான்மதி
வளர்மதி
வெண்ணிலா