வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், அக்டோபர் 17, 2006

அமெரிக்காவில் "மொய்"

தங்கத் தமிழகத்திலே மொய் எழுதும் பழக்கம் உள்ளது யாவரும் அறிந்ததே. சின்னக்கவுண்டர் படம் மூலம் இது தருமமிகு சென்னை மற்றும் பட்டணத்து வாசிகளுக்கும் தெரியவந்தது. இது ஒரு வகையான கடன், வட்டியில்லா கடன் அதாவது கைமாத்து (கை மாற்று மருவி கைமாத்தாகிவிட்டது).
திருமணம் , பூப்பு நீராட்டு, புதுமனை புகுதல், குழந்தைக்கு முதல் மொட்டை & காது குத்து, போன்ற நிகழ்ச்சிகளில் மொய் வாங்குவது வழக்கம். மொய்க்குனே ஒரு பொத்தகம் போட்டு யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று எழுதி வைப்பார்கள். அவர்களின் மொய் வாங்கும் நிகழ்ச்சிகளில் இந்த மொய் பொத்தகத்தை பார்த்து அதே பணம் அல்லது அதை விட அதிகமாக வைப்பார்கள். அதே அளவு பணம் வைத்தால் மொய் உறவு முறிந்துவிடும், எனவே அவங்க வைத்த பணத்தை விட அதிகமாகவே வைப்பார்கள்.
மறு மொய் வைக்காவிட்டால் மானக்கேடாகிவிடும். அவன் பையன் கல்யாணத்துக்கு 100 ரூபா வச்சேன் என் பையன் கல்யாணத்துல அவன் மொய்யே வைக்கலை என்று பேசுவார்கள்.
இதன் தொல்லை காரணமாக சில பகுதிகளில் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதழ்களில் அச்சடித்து கூறினர். காலப்போக்கில் அப்பகுதிகளில் மொய் வாங்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது ( இப்பவெல்லாம் யாரும் மொய் வாங்கப்படாது என்று அழைப்பிதல்களில் அச்சடிப்பதில்லை).

சின்னக்கவுண்டர் படத்தில் வருவது போன்ற மொய் வாங்கும் பழக்கம் தஞ்சை பேராவூரணி பகுதி மக்களிடம் உண்டு.

இப்ப அமெரிக்க வாழ் மக்களிடம் இந்த பழக்கம் பலமாக வேரூன்றி வருகிறது. அதாவது பரிசு & "Gift Card" என்ற உருவத்தில். இங்க பெரும்பாலும் பிறந்தநாள் விழாக்களை நண்பர்களை அழைத்து கொண்டாடுவர். அப்போது எல்லோரும் பரிசு அல்லது "Gift Card" உடன் வருவர், அதனால் நம்மால எதுவும் வாங்காமல் கைய வீசிக்கிட்டு போய்ட்டு வர முடியலை. நாம பரிசு அல்லது "Gift Card" கொடுத்தால் அவர்களும் நம் வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளுக்கு பரிசு அல்லது "Gift Card" கொடுக்க வேண்டும் என்ற கணக்கு வருகிறது, இது கட்டாய மொய் என்பதற்கு பதிலாக கட்டாய பரிசு என்று வந்துவிட்டது. இப்பழக்கத்தை உடைக்க வேண்டுமென்றால் விழா அல்லது நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது பரிசு எதுவும் வேண்டாம் "Your Presence is Best Present" என்று சொல்லி அழைப்பது தான்.

திங்கள், அக்டோபர் 09, 2006

தமிழ் பெயர் - உதவி வேண்டும்.

என் நண்பன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்க விரும்பி சிறிய அழகான தமிழ் பெயர்களை கூறுமாறு கேட்டான். மூன்றுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை எல்லாம் வடமொழி அல்லது வடமொழியோ என்று ஐயம் உள்ள பெயர்களே. ஒரு வாரம் யோசனை செய்து ஒரு 10 பெயர்களை கூறிவிட்டேன்.

இணையத்தில் தேடியதில் நிறைய சிறிய பெயர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் பெரிய பெயர்களாகவே இருந்தன.

என் நண்பனின் நிபந்தனை:-
பெயர் 4 எழுத்துக்குள் இருக்க வேண்டும், ரொம்ப நல்ல பெயராக இருந்தால் 5 எழுத்துக்கு விதி விலக்கு உண்டு உ.தா. இலக்கியா. "ழ" இல்லாமல் இருத்தல் நலம் என்பது அவன் எண்ணம் ஏனென்றால் அமெரிக்காவில் உள்ளதால் "ழ" ஆனது "ல" ஆகி பெயரின் பொருளை மாற்றிவிடும் என்பதால். இருந்தாலும் சில பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்ததால் (யாழினி) இங்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.


உங்களுக்கு தெரிந்த சிறிய பெண் குழந்தைக்கான தமிழ் பெயர்களை பின்னூட்டத்தில் கூறி என் நண்பனுக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் யாரேனும் தமிழ் பெயர் கேட்டால் இப்பட்டியலை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள்.

இதுவரை அவனிடம் உள்ள பெயர் பட்டியல்:-

அல்லி
அருவி
அகலி
அந்தி
அன்னம்
அனிச்சை
அரசி
அன்பரசி
அழகி
ஆதிரை

இலக்கியா
இனியா
இளமதி
இன்பா
இனிமை

உமையாள் - உமையா
உமை

எழில்
எழிலினி

ஐயை

ஒளி
ஓவியா
ஔவை

கயல்
கயல்விழி
கண்மணி
கண்ணகி
கனிமொழி
கவி
கலை
காவியா
காவேரி
காந்தள்
சிட்டு
கோதை

குழலி
குமுதம்
குமாரி
குமரி
குயிலி

கொற்றவை
கோமதி
கோமளா - தமிழா ??

சுடர்
சுருதி - தமிழா? பொன்ஸ்க்கே ஐயம் வந்துவிட்டது.
செண்பகம் - செண்பகா
செவ்வந்தி
செல்வி

தமி
தமிழ்
தமிழினி
தமிழரசி
தமிழிசை
தாமரை
தென்றல்
தேனினி
தேன்மொழி

நிலா
நிலானி
நிலாவினி
நித்திலா
நிறைமதி
நங்கை
நந்தினி - நந்தி தமிழ் என்றால் நந்தினியும் தமிழ்.
நாச்சியார்
நாமகள்

பாவை
பாவாயி
புகழினி
புனிதா - புனிதம் தமிழ் என்றால் புனிதாவும் தமிழ்.
பூவை
பூங்கோதை
பூங்குயில்
பிறை
பொன்னி
பொன்மணி

மகிளா / மகிழா ?
மகிழம்
மங்கை
மதி
மலர்
மணி மலர்
மயில்
மல்லி
மகிழினி
மஞ்சுளா - தமிழ் என்று நினைக்கிறேன் மஞ்சு விரட்டு - மஞ்சள் - மஞ்சுளா.
மாதவி
மீனா
முல்லை
முழுமதி
மின்னல்
மேகலை
மேகலா

யாழினி

வடிவு
வள்ளி
வல்லி
வசந்தி
வதனி, வதனா - வதனம் (முகம்) தமிழ் என்றால் வதனி, வதனாவும் தமிழ்.
வானதி
வான்மதி
வளர்மதி
வெண்ணிலா

செவ்வாய், செப்டம்பர் 19, 2006

கோவை ஆத்துப்பாலம்.

கோவை ஆத்துப்பாலம் பிரசித்தி பெற்ற இடம் எதனால் என்று தெரியுமா உங்களுக்கு?
நொய்யல் ஆறு செல்வதாலா? பொள்ளாச்சி, கேரளா செல்லும் வண்டிகள் இதை கடந்து செல்வதாலா? உக்கடம் அருகில் உள்ளதாலா? சில பேர் கிண்டலாக இதை வாய்க்காப்பாலம் என்பதாலா? கோவைகாரர்களுக்கு நன்றாக தெரியும்.

கோவை மாநகரானது ஆத்துபாலத்துக்கு இந்தப்பக்கமும் நன்றாக வளர்ந்துள்ளது. குனியமுத்தூர் நகராட்சி பாலத்துக்கு இப்பக்கம் உள்ளது. நிறைய மக்கள் வேலைக்கு செல்ல, துணிமணி வாங்க, பெரிய கடை வீதிக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். சுருக்கமா சொன்னா காலையில் டீ குடிக்க, பல் துலக்க, முகம் கழுவ கூட நிறைய பேர் ஆத்துப்பாலத்தை கடப்பார்கள்.

இது ஒரு சிறிய பாலம் ஆனா முக்கியமான இடத்தில் உள்ளது. இதுல என்ன பிரச்சனைன்னா இதை கடப்பதற்கு சுங்கம் (Toll) கட்ட வேண்டும். அதில் என்ன தப்பு என்று கேட்பவர்களுக்கு, தினமும் பயன் படுத்தும் உள்ளூர் மக்களும் இதற்கு சுங்கம் கட்ட வேண்டும். ஊரின் நடுவில் உள்ள இச்சிறு பாலத்தை அரசு கையகப்படுத்தி சுங்கம் வசுலிப்பதை நிறுத்த வேண்டும். ஆனா என்ன காரணத்தாலோ மாநகராட்சி / அரசு இதை செய்ய மறுக்கிறது. இப்பாலத்தில் சுங்கம் வசுலிப்பதனால் இங்கு போக்குவரத்து நெரிச்சலும் ஏற்படுகிறது. ஊருக்கு நடுவில் அவசியமற்ற நெரிச்சல்.

என்னை பொருத்தவரை இப்பாலம் கட்ட அதிகபட்சம் ரூபாய் 2 கோடி ஆகியிருக்கலாம். இந்த வாய்க்காப்பாலத்தை (ஆத்துப்பாலம்) கட்ட சென்னை நேரு அரங்க புகழ் "L&T" பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது குறிப்பிடதக்கது.

கிட்டத்தட்ட இதை கட்டி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது, போட்ட காசுக்கு மேல பல பல மடங்கு லாபம் பார்த்திருப்பார்கள் ஆனால் இன்னும் சுங்கம் வசுலிக்கிறார்கள். இப்போ இது அதிகாரபூர்வமான ஒரு பகல் கொள்ளை. சுங்கம் கட்டி பழகி விட்டதால் இதைப்பற்றி இப்ப யாரும் கண்டுக்கறதில்லையா?