பொதுவாக, என்னென்ன நிலைமைகளில் ஒரு வினா எழும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அறியாமல் கேட்பது, அறிந்துகொண்டே கேட்பது, அறிந்திருந்தாலும் அதில் மேலும் உள்ள ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளக் கேட்பது, கொடுப்பதற்காகக் கேட்பது, கொள்வதற்காகக் கேட்பது, கட்டளையிடுவதற்காகக் கேட்பது என்று அந்த வினா எழும் சூழ்நிலைகளை ஆறாகப் பகுத்திருக்கிறார்கள்.
நானும் நீங்களும் சந்தித்துக்கொள்கிறோம். என்னை உங்களுக்குத் தெரிகிறது. எனக்கு இனிதான் உங்களோடு அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். நான் உங்களை அறியாத நிலையில் அறிந்துகொள்ள வேண்டி வினவுகிறேன்.
‘உங்கள் பெயர் என்ன ?’ - அறியாத நிலையில் நான் எழுப்பும் வினா என்பதால் இது ‘அறியா வினா.’ அடிப்படையான எளிமையான வினாக்கள் எல்லாமே அறியா வினாக்கள்தாம்.
உங்களுக்கு என்னைத் தெரிகிறது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் நீங்களும் என்னிடம் கேள்வியின் வழியாகவே பேசுகிறீர்கள். ‘என் பெயர் கண்ணன். உங்கள் பெயர் என்ன ?’ - அறிந்திருந்தும் நீங்கள் வினவுகிறீர்கள். அதனால் இது ‘அறிவினா.’ அறிந்திருந்தும் வினவுவது. ஆசிரியர் கேள்வி கேட்பது, ஒருவரைத் தோற்கடிக்கக் கேள்வி எழுப்புவது எல்லாம் இவ்வகை.
நம் அறிமுகத்தை அடுத்து உரையாடல் தொடர்கிறது. நான் எதையோ எழுதுவது உங்களுக்குத் தெரிகிறது. அது கதையா, கவிதையா என்பதைக் குறித்து உங்களுக்குத் தெளிவில்லை. அதில் ஐயமிருக்கிறது. அந்த ஐயத்தை என்னிடமே தீர்த்துக்கொள்ள ஒரு வினாவை எழுப்புகிறீர்கள். ’நீங்கள் கவிதை எழுதுகிறீர்களா ? அல்லது கதைகளை எழுதுகிறீர்களா ?’ - உங்களுக்குத் தெரிந்த ஒரு பொருளில் மேலும் எழுந்த ஐயத்தின் அடிப்படையில் வினா எழுப்பினீர்கள். அதனால் இது ‘ஐய வினா.’ நடத்துநர் நிறுத்தத்தில் பயணிகளை வினவுவது (நால்ரோடு யாராவது எறங்குறீங்களா ?), நிருபர் காவல்துறையை நுணுக்கிக் கேட்பது (குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் ?) எல்லாம் இவ்வகையில் வரும்.
இப்படி நீங்கள் கேட்டுவிட்டதால் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை உங்கள் கைகளில் திணித்துவிடவேண்டும் என்று விரும்புகிறேன். ‘என் கவிதைத் தொகுப்பு எதையும் படித்திருக்கிறீர்களா ?’ என்று கேட்கிறேன். நீங்கள் ‘இல்லை. உங்களிடம் இருக்கிறதா ?’ என்கிறீர்கள். நீங்களும் என் தொகுப்பை வாங்கிப் படிக்க விரும்பியதால் அவ்வாறு கேட்டீர்கள். ஆகவே, இங்கே நம் கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. நான் கொடுப்பதற்காகக் கேட்டேன். நீங்கள் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்டீர்கள். நான் கேட்டது ‘கொடைவினா.’ நீங்கள் கேட்டது ‘கொளல்வினா.’
நாம் இருவரும் தேநீர் அருந்தக் கிளம்புகிறோம். நம் மீது ஒருவன் வந்து நிதானமில்லாமல் மோதி விடுகிறான். நீங்கள் சினந்து அந்நபரை ‘இப்படித்தான் நிதானமில்லாமல் வருவீரா ?’ என்று கேட்கிறீர்கள். அவன் நிதானமில்லாமல் வந்தான், மோதினான்... அதை அவன் திருவாயால் தெரிந்துகொள்ளவா கேட்டீர்கள் ? இல்லை. ‘நிதானமாக வா’ என்று கட்டளையிட அவ்வாறு கேட்டீர்கள். அதனால் இது ‘ஏவல் வினா.’
இவ்வாறு வினா வாக்கியங்கள் மொத்தம் ஆறு வகைப்படும் என்று நன்னூல் வகுக்கிறது.
அறி வினா
அறியா வினா
ஐய வினா
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா
இந்த வகைப்படுத்தலின் பின்னணியில் தமிழினத்தின் பண்பாட்டுப் பொதிவுகள் எல்லாமே அடங்கிவிடுகின்றனதானே ?
குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.
* மூடர்கூடம் திரைப்படத்தில் இந்த விளக்கங்களைப் பிரதிபலிப்பதுபோல் இரண்டு காட்சிகள் உள்ளன. ( குரங்கு குல்லா காட்சியில் ‘இந்த இடத்தில நீங்க ஆமான்னு சொல்லக்கூடாது சென்றாயன். ஏன்னு சொல்லனும்’ )
* ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கும் வினா வகைகள் : (1). குற்றியலுகரம் என்றால் என்ன ? - அறிவினா (2). குறும்பு செய்வாயா ? - ஏவல்வினா (3). ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவாயா ? - ஐய வினா (4). இங்க இருந்த சாக்பீஸ யாருப்பா எடுத்தது ? - கொடைவினா (5). தமிழ்ப் புத்தகம் யார் கொண்டு வந்தீங்க ? - கொளல்வினா 6). இவங்க எல்லாம் படிச்சு ஆளாகிறபோது இந்த உலகம் என்ன பாடுபடுத்தப் போகுதோ ? - அறியாவினா.
விடைகள் பற்றி நன்கு தமிழறிந்த நண்பர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளித்ததும் இங்க பகிரப்படும்.
விடை எட்டு வகைப்படும் அவை:
(1) சுட்டுவிடை
(2) மறைவிடை
(3) நேர்விடை
(4) ஏவல்விடை
(5) வினாஎதிர்வினாதல் விடை
(6) உற்றது உரைத்தல் விடை
(7) உறுவது கூறல் விடை
(8) இனமொழி விடை
(1) சுட்டுவிடை
(2) மறைவிடை
(3) நேர்விடை
(4) ஏவல்விடை
(5) வினாஎதிர்வினாதல் விடை
(6) உற்றது உரைத்தல் விடை
(7) உறுவது கூறல் விடை
(8) இனமொழி விடை