வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், அக்டோபர் 31, 2013

வலிமிகுதல் 5

இத்தொடரின் முதல் பகுதியில் உம்மைத் தொகையில் வலிமிகாது என்று பார்த்தோம், நினைவிருக்கிறதா ?

பொதுவாக இரண்டு பெயர்ச் சொற்களுக்கு இடையே வலிமிகும் வாய்ப்பிருந்தால் மிகுவித்து விடுங்கள் (அது எப்படியும் சரியாகவே இருக்கும்) என்று ஆரம்பித்த நான் ஒரே ஒரு விதிவிலக்காக உம்மைத் தொகையைக் கூறினேன்.

காடுகரை என்பது உம்மைத் தொகை. காடும் கரையும் என்று இருபெயர்களுடன் ‘உம்’ சேர்த்து விரித்துப் பொருள் கொள்வதால் அது உம்மைத் தொகை என்றும் தெரிந்துகொண்டோம்.

மேலும் உதாரணங்கள் : பட்டிதொட்டி, செடிகொடி, இட்லி தோசை, இன்பதுன்பம், வள்ளி தெய்வானை, சேர சோழ பாண்டியர். இன்னும் சிலவற்றை நீங்களும் கற்பனை செய்து கண்டுபிடிக்கலாம். (அபூர்வமாக, ‘ஏற்றத்தாழ்வு’ போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்கிறார் அ.கி.ப.)

உம்மைத் தொகையைப் போலவே மேலும் இரண்டு தொகைகளைப் பார்க்கப் போகிறோம். உவமைத் தொகை மற்றும் பண்புத் தொகை.

தாமரைக்கண், மலைத்தோள் - இவற்றைத் தாமரை போன்ற கண், மலை போன்ற தோள் என விரித்துப் பொருள் காண்போம். முதலில் வருகின்ற சொல் அடுத்து வருகின்ற சொல்லுக்கு உவமையாய் இருப்பது. அச்சொற்கள் இரண்டுக்குமிடையில் போல, போன்ற என்று உவம உருபைத் தருவித்துப் பொருள் காண்பது வழக்கம். உவமைத்தொகை என்பது இதுதான். உவமைத் தொகைக்கு வலிமிகும்.

(உவமைத்தொகையைக் கண்ணாடி முன் நிறுத்தி இடவலம் மாற்றிப் போட்டால் அதுவே உருவகம் எனப்படும். மலைத்தோள் உவமைத்தொகை என்றால் தோள்மலை உருவகம்).

அடுத்து பண்புத் தொகை. உவமைத்தொகையில் முதற்சொல் உவமையாய் அமைந்ததைப் போல பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் அடுத்துள்ள சொல்லின் பண்பைக் குறிக்கும். அது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு (இன்னும் பல) என எவ்வொரு பண்பையும் குறிக்கக் கூடியது.

உவமைத்தொகைக்குப் ‘போன்ற’ என்ற உவம உருபை இடையிட்டுப் பொருள் விரித்ததுபோல பண்புத்தொகைக்கு ‘ஆகிய’ என்ற பண்புருபை இடையிட்டுப் பொருள் காண்பர்.
பண்புத்தொகையில் வலிமிகும்.

வெள்ளைத்தாள்
பொய்ப்பேச்சு
மெய்த்தன்மை

பண்புத்தொகையில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்ற வகையும் உண்டு. அதற்கும் வலிமிகும். நாம் அந்தப் பகுதிக்கே போக வேண்டியதில்லை. ஏனென்றால், முதலில் சொன்னதுபோல, இரண்டு பெயர்கள் காணப்பட்டாலே தயங்காமல் வலிமிகுவித்து விடுவோம்.

சுருக்கம் : உவமைத் தொகையிலும் பண்புத் தொகையிலும் வலிமிகும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1


2 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

குறும்பன்,

நல்லப்பகிர்வு.

குறும்பன் சொன்னது…

நன்றி வவ்வால். கவிஞர் எழுதியதை படித்ததும் புரிந்தது, இலக்கணத்தை எளிய (நாம் புரிந்து கொள்ளும் முறையில்) முறையில் சொல்லுவதுன்னா சும்மாவா? அதனால இங்க பகிர்ந்துகொண்டேன். சந்தேகம் வரும் பொழுது புரட்ட வசதியா இருக்கும் என்பதாலும்.