வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், நவம்பர் 12, 2013

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?


கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.


****
புத்தகம்கள்-புத்தகங்கள்
பாடம்கள்-பாடங்கள்
இவ்வாறான சில வார்த்தைகளை பாடத்திலும் முக்கியமான சில பத்திரிகைகளிலும் படித்ததால் வந்த குழப்பம் ஐயா.
(பத்திரிக்கை -பத்திரிகை...??)

****
அதனால்தான்   ள்  என்று முடியும் பெயர்ச்சொற்கள் என்றேன். இதிலும் விதிவிலக்காக புள், முள் போன்றவை புட்கள், முட்கள் என்றாகும்  அது வேறு பாடம்.

*****
கள் மயக்கமே!வலியிட்டும் இடாமலும் எழுதுவதில் தப்பில்லை என்றார் என் ஆசிரியர்.ஒருவேளை அவர் தப்பிப்பதற்காக இருக்கலாம்.அதிகமானோர்மவவன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும் என்றே கொண்டெழுதுகின்றனர்.(முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்.......).

****
இசையின்பம் கருதிச் செய்தால் ஏற்பது இயல்பு.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 10
வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

3 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

குறும்பன்,

இந்த "கள்" பிரச்சினை பெரும்பிரச்சினையா இருக்கும் போல ,வாழ்த்துக்கள் என சொல்லலாம்னு தான் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாச்சே,

//வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.
//

இதுக்கு எதுவும் மேற்கோள் காட்ட ஆதாரம் இருக்கா?

கே.ஆர்.எஸ் என்ற பிரபலத்தமிழ்ப்பதிவர் இந்த "கள்"ஐ விட்டு கலக்கி எடுத்திருக்கார் ,படிச்சி பார்க்கவும்,

http://madhavipanthal.blogspot.in/2012/06/blog-post.html

குறும்பன் சொன்னது…

வவ்வால் அவருக்கிட்ட இதைப்பற்றி கேட்கனும். கள் போதை தரக்கூடியது அதனால் இது தொந்தரவு தரக்கூடியது இஃகி இஃகி.

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

பார்த்தேன் குறும்பன்:)
இதில் இத்தனை "மெனக்"கெடத் தேவையே இல்லை - இரண்டு வழக்கும் சரியே! எதற்கு வீணான மிகைத் திருத்தங்கள்?

கவிஞர் மகுடேஸ்வரனுக்கு வணக்கம்;
அவர் "சொல்லி" இருக்காரே தவிர "ஆதாரம்" காட்டியுள்ளாரா?:)

பலரும், சில எடுத்துக் காட்டு தருகிறார்கள்
Can Cans என்று ஒரு எடுத்துக்காட்டினால், Man Mans ஆகி விடுமா?:) Men அல்லவா?

இது போன்று ஆதாரம் இன்றிக், "கருத்தாய்"ச் சொல்பவர்கள் அனைவருக்கும் ஒரு கடமை உள்ளது - தொல்காப்பியத்தை மறுத்துக் காட்ட வேண்டும்!:)

நச்சினார்க்கினியர் "எழுத்துக்கள்" என்று எழுதும் சான்று இதோ: http://3.bp.blogspot.com/-LcjGxbf0nqo/T5YG0yI3mkI/AAAAAAAANBo/h92yo3k1-dU/s640/ezhuthukkal.JPG

இதற்கு மேல் என்ன சொல்ல?:) நன்றி!