வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், ஆகஸ்ட் 25, 2011

ஐக்கிய முன்னனி அரசின் பலம்- அலசல்

தற்போதய ஐக்கிய முன்னனி அரசு பல்வேறு பெரிய ஊழல்களில் சிக்கி தவிக்கிறது.  இவை இது வரை யாரும் கண்டிருக்காத பெரிய ஊழல்கள். இன்னும் எத்தனை வரப்போகுதோ. இத்தகைய பெரிய ஊழல்கள் மற்றும் ஆட்சி நிர்வாக குறைகளினால் பலவீனமாக உள்ளது. ஆனாலும் அடுத்த ஆட்சி தங்களுடையது என்று நம்பிக்கையோடு இருக்கிறது. அதுக்கு காரணம்  காங்கிரசுக்கு எதிரான பாசக கூட்டணி அல்லது மூன்றாம் அணி வலுவாக இல்லாததே.


பொதுவுடமை கட்சி
பொதுவுடமை கட்சியின் பலமே வங்கமும் கேரளாவும் தான். வங்கத்துல பல்பு வாங்கியாச்சு வரும் மக்களவைத்தேர்தல் வரும்முன்பு  எந்த அளவு செல்வாக்கு உயருமுன்னு தெரியலை. எல்லாம் மம்தா அக்கா கைல தான் இருக்கு. கேரளாவில் நிறைய தொகுதிகளை பிடிப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஓமன் சாண்டி மேல அதாவது காங்கிரசுகாரன் மேல அவ்வளவு நம்பிக்கை மேலும் கேரள அரசியலே அப்படிதான். இப்ப காங்கரசுன்னா அடுத்த முறை பொதுவுடமை.  இவர்களால் அதிகபட்சம் 50 க்கு மேல் வெற்றி பெற முடியாது. இதுவும் வங்கம் கை கொடுத்தால் மட்டுமே சாத்தியம். 34 ஆண்டுகளுக்கு பின் பொதுவுடமைவாதிகளிடம் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு ஆட்சி போயிருப்பதால் பொதுவுடமைவாதிகளுக்கு வரும் மக்களவைத்தேர்தலில் 25 இடங்கள் கிடைத்தாலே பெரிது. பொதுவுடமைவாதிகளின் ஆதரவு காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியான பாசகவுக்கு கிடைக்காது. வேற வழி இல்லாம இவங்க காங்கிரசுக்கு நிபந்தனை அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாகனும். அதாவது தோல்வி அடைந்தாலும் சுளையா 62 தொகுதிங்க காங்கிரசுக்கு ஆதரவு ( கேரளம் 20 + வங்கம் 42 ). இவர்கள் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறமாட்டார்கள் என கருதுவதால் மூன்றாம் அணி ஆட்சிக்கு வருவதை மறந்துவிடலாம்.

மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் மோசம் என்றாலும் சிவசேனா+பாசக பாதிக்கு மேல் வெற்றி பெறுவது கடினம். சிவசேனையின் பலமான மும்பையில் பால் தாக்ரேவின் தம்பி மகனான  ராஜ் தாக்ரேவால் பாதிப்பு இவர்களுக்கு உண்டு. அதன் பலன் காங்கிரசு+சரத்பவார் கட்சிக்கு கிடைக்கும். ராஜ் தாக்ரேவுடன் சிவசேனா+பாசக  ஏதாவது உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே பாசக கூட்டணி நிறைய இடங்களை வெல்ல முடியும். ஆதர்ஸ் ஊழல், மும்பை தீவிரவாத தாக்குதலை பாசக சிவசேனா கூட்டணி திறமையாக பயன்படுத்திக்கொள்ளுமா?

பீகார்
இங்க பாசக+ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பலமாக இருந்தாலும் லல்லு என்ன லொள்ளு பண்ணுவாருன்னு இப்ப சொல்ல முடியாது. லல்லு பஸ்வான் கூட்டணி நிதிசிடம் செல்லுபடியாகலை. தனியா போட்டியிட்டா ஒரு தொகுதி கூட காங்கிரசுக்கு கிடைக்காது. காங்கிரசோட சேர்ந்தா லல்லுவுக்கு கொஞ்சம் அதிகம் வாக்குகள் கிடைக்கும். இது பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.

2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் லல்லு காங்கிரசை கூட்டு சேர்த்துக்கலை. பாஸ்வான் கூட கூட்டு வைச்சிக்கிட்டாரு.  லல்லுவுக்கு 4 இடம் தான் கிடைச்சது, தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு 2 இடம் கிடைச்சுது.  பாஸ்வானுக்கு முட்டை. காங்கிரசு வாக்கை பிரித்ததால் லல்லு கூட்டணி 12 இடங்களுக்கு மேல் தோற்றது. மக்களவை தேர்தலில் கிடைத்த தெம்பால் 2010 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பிடித்தது. முந்தய தேர்தலில் 9 இடம். 2010 தேர்தலில் லல்லுக்கு மரண அடி. 22 இடங்களில் மட்டுமே வென்றார், முந்தய தேர்தலில் 54 இடம். பாஸ்வானுக்கு 3 இடம் தான் கிடைத்தது. முந்தய தேர்தலில் 10 இடம்.

அதனால் அடுத்து வரும் மக்களவைத்தேர்தலில் லல்லு காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.  காங்கிரசுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குறார் என்பது தான் கேள்வி.உத்திரப்பிரதேசம்
பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுக்கு அடுத்த நிலையில் பாசக இருக்கு. 2009ம் ஆண்டு நடந்த 15வது மக்களவை தேர்தலில்  சமாஜ்வாதி கட்சி 23 இடங்களையும் காங்கிரசு 21 இடங்களையும் பகுஜன் சமாஜ் 20 இடங்களையும்  பாசக 10 இடங்களையும் இராசுட்டிரிய லோக்தளம் 5 இடங்களையும் பிடித்தனர்.  பாசகவும்  இராசுட்டிரிய லோக்தளமும் கூட்டணி. உபியில் காங்கிரசை ஒரு பொருட்டாக யாரும் கருதாதவேலையில் காங்கிரசு 21 இடங்களில் வென்றது தான் அதற்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது. 80 தொகுதிகளை உடைய உபியில் காங்கிரசுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. அதனால தான் காங்கிரசின் பட்டத்து இளவரசர் இராகுல் உபியே கதி என்று சுத்துகிறார்.  அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனா இதுவரை இங்கு பாசகவின் செயல்பாடு சொல்லிக்கிற மாதிரி இல்லை. இராமர் பெயரை சொல்லி இனி இங்கு வாக்கு வாங்க முடியாது. கட்சிக்குள்ள உள் குத்து அடிதடி. பேச்சுத்திறமையும் உபியில் ஓரளவு செல்வாக்கும் உடைய உமாபாரதியை கட்சிக்குள்ள சேர்த்து கட்சிய தேர்த்தலாம் என்று பாசக கருதி அவரை திரும்ப கட்சியில் இணைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். 
ஆனால் பாசகவின் மற்ற தலைவர்கள் அவரை  வேண்டாதவராகவே பார்க்கின்றனர். இந்த வகையில் உபியில் கட்சி இருந்தால் எப்படி தேறும் என தெரியவில்லை. அஜித் சிங்கின் இராசுட்டிரிய லோக்தளத்திற்கு உபியின் மேற்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியான ஒடுக்கப்பட்டவர்களை குறி வைத்து பட்டத்து இளவரசர் இராகுல் காய் நகர்த்துகிறார். சமாஜ்வாதி கட்சியின் முசுலிம் வாக்கு வங்கி பிரிந்து விட்டது. அதில் நிறைய காங்கிரசுக்கு சென்றுவிட்டது. இந்த 2 கட்சிகளுக்கும் வாக்கு போடுபவர்களில் கணிசனமான பேர் காங்கிரசுக்கு வாக்கு போட்டதாலயே காங்கிரசு 21 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. பாசக கடுமையாக முயன்றால் மட்டுமே மற்ற 3 கட்சிகளுக்கும் ஈடுகொடுக்க முடியும். காங்கிரசால் முலாயமுக்கு தான் பாதிப்பு அதிகம். முலாயம் சரி பாதி இடங்கள் தந்தால் வேண்டுமானால் காங்கிரசு இதனுடன் கூட்டணி வைக்கலாம்.. பட்டத்து இளவரசர் தனி ஆவர்த்தனம் செய்யவே முயல்வார். ஆனால் அரசியலில் எது வேண்டுமாலும் நடக்கலாமே! அடுத்த ஆட்சி கனவில் இருக்கும் காங்கிரசுக்கும் பாசகவுக்கும் உபியில் அதிக இடங்கள் பெறுவது முக்கியம்.

ஆந்திரப்பிரதேசம்

எதிர்கட்சியான தெலுங்க தேசத்தை விட இங்கு காங்கிரசு பலமாக உள்ளது. 2009ம் ஆண்டு தேர்தலில் 33 தொகுதிகளில் காங்கிரசு வென்றது. காங்கிரசு அதிக தொகுதிகளில் வென்ற மாநிலம் இது தான். இப்ப தெலுங்கானா பிரச்சனை அதற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தெலுங்கானா உருவாக வில்லையென்றால் அங்குள்ள 17 தொகுதிகளை மறக்க வேண்டியது தான். உருவானால் சீமாந்திராவின் 25 தொகுதிகளை மறக்க வேண்டும். மேலும் இங்கு அரசியல் களம் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. சிரஞ்சீவி காங்கிரசுடன் இணைந்து விட்டார். சிரஞ்சீவியின் கட்சி கிட்டதட்ட 15% வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னால் முதல்வர் இராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து விட்டார். கடப்பா தொகுதியில் இவரை வெற்றி கொள்வது கடினம் மேலும் இவர் எந்த அளவு காங்கிரசு வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. மேலும் இவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை போட்டாயிற்று ஆளு அடங்கறாரான்னு பார்ப்போம். ஜெகன் 2 வாக்கை பிரித்தார்  என்றால் சிரஞ்சீவி 10 வாக்கை கொண்டு வருவார் என்பது காங்கிரசு கணக்கு.  கிட்டதட்ட 25 இடங்களில் சிரஞ்சீவியின் கட்சியால் தெலுங்குதேசம் கூட்டணி தோற்றது. இராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இல்லாத நிலையில் சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு பலம் கூடியுள்ளது.

தமிழ்நாடு

யாரு மேல சவாரி செய்யறாங்க என்பதை பொருத்தது.

கர்நாடகம்

2009 தேர்தலில் பாசக 19 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் 10 இடங்களாவது கிடைக்குமா? ரெட்டிகளின் சுரங்க ஊழல் , எடியூரப்பாவின் ஊழல் என்று கட்சி கலகலத்துள்ளது. இதை எந்த அளவுக்கு காங்கிரசும் தேவ கௌடா கட்சியும் பயன்படுத்தப்போகிறது என தெரியவில்லை. காங்கிரசுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மத்தியப்பிரதேசம்
காங்கிரசும் பாசகவும் சரி பலத்தில் உள்ள மாநிலம் இது. பகுஜன் சமாஜ் கட்சி வாக்கை பிரிக்க கூடியதாக இருக்கும், 2009ல் தனியாக போட்டியிட்டு 5.85% வாக்குகளை பெற்று 1 தொகுதியில் வென்றுள்ளார்கள். இவர்களால் யாருக்கு பாதிப்பு அதிகம் என்பதை பொருத்தே காங்கிரசு அல்லது பாசக இவர்கள் இருவரில் யார் அதிக தொகுதிகளை வெல்கிறார்கள் என்பது முடிவாகும்.

குஜராத்
இங்கு பாசக பலமாக இருப்பது போல் தோன்றினாலும் அவர்களால் பெரும் வெற்றி பெற முடியாது. இதுக்கு காரணம் முசுலிம்கள் பெருவாரியாக காங்கிரசுக்கு வாக்களிப்பதே. மோடி ஏதாவது மோடி மஸ்தான் வேலை செய்தால் மட்டுமே நிலைமை மாறும். பாசகவின் எதிர்கால சக்தியாக மோடி உருவெடுத்து வருகிறார் அது குஜராத்தில் அதிக தொகுதிகளை வென்றால் மட்டுமே பலப்படும்.

இராசத்தான்
இங்கு பாசக உள்கட்சி தகராறில் வெலுத்து வாங்குகிறது. காங்கிரசை இதில் இது தோற்கடித்து விடும். உள்குத்து வேலைகள் தொடர்ந்தால் பாசக இங்கு தேறுவது கடினம்.

ஒரிசா
இங்கு பிஜூ ஜனதாதளம் நிறைய தொகுதிகளில் வெல்லலாம். இங்கு போட்டியே காங்கிரசுக்கும் பிஜூ ஜனதாதளத்துக்கும் தான். பாசகக்கு 15% அளவிலான வாக்குகள் உள்ளது. அவை இல்லாதது பிஜூ ஜனதாதளக்கு இழப்பே. 2009ல் காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தது. பாசகவும் பிஜூ ஜனதாதளமும் கூட்டணி வைத்திருந்தால் காங்கிரசுக்கு கிடைத்த 4 தொகுதிகள் இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும். காங்கிரசுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கும். பாசக வாக்குகளை பிரித்தாலும் அது பிஜூ ஜனதாதளத்தின் வாக்குகளையே பிரிக்கும். அதனால் பலனடையப்போவது காங்கிரசே.

20 தொகுதிகளும் அதற்கு மேலும் உள்ள மாநிலங்கள்.
மாநிலம் தொகுதிகள் எண்ணிக்கை
உத்திரப்பிரதேசம் 80
மகாராட்டிரம் 48
ஆந்திரப்பிரதேசம் 42
மேற்கு வங்காளம் 42
பீகார் 40
தமிழ்நாடு 39
மத்தியப்பிரதேசம் 29
கர்நாடகா 28
குஜராத் 26
இராஜஸ்தான் 25
ஒரிசா 21
கேரளம் 20


கீழிருக்கும் கருத்துப்படம் நான் சொல்லியதையும் சொல்லாததையும் தெளிவா சொல்லும்.கருத்துகள் இல்லை: