வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தலைவர் தங்கபாலு வாழ்க வாழ்க

தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலு மீது காட்டமடைய ஏதாவது காரமுண்டா? அவர் நடைமுறையில் இல்லாதது எதையும் செய்யவில்லை. எனவே இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

தங்கபாலுவுக்கு தெரியும் யாரை வேட்பாளராக்குவது என்று. காங்கிரசில் நிறைய குழுக்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு குழு தலைவரும் அவர்கள் ஆட்களுக்காக போராடி தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே இல்லாத ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மணி சங்கர் அய்யரை சேர்ந்த குழுவுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அவரும் அந்த இடத்தை தன் மனதுக்கு இனியவருக்கு கொடுத்துவிட்டார். தனக்கு பிடித்தவருக்கு தானே தர முடியும், பிடிக்காதவருக்கா தரமுடியும்?

கருப்பையா மூப்பனார் மகன் வாசன், சிவகங்கை சின்ன பையன் சிதம்பரம், பக்தவச்சலம் மகள் ஜெயந்தி நடராசன், காங்கிரசை ஒழிக்கனும் என்ற பெரியாரின் தம்பியின் பேரன் இளங்கோவன், பெரிய இடத்து பிள்ளை ராகுலின் அரவணைப்பின் கீழுள்ள புதிய குழு, பாமக நிறுவனர் ராமதாசின் சம்பந்தி கிருசுணசாமி, டெல்லியில் வாழ்ந்தாலும் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தென் மாநிலத்தை சேர்ந்தவங்க மதராசி தான்) தமிழ் நாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காகவும் காங்கிரசு மேலிடத்தொடர்பு இருப்பதாலும் மணி சங்கர் அய்யர் ஆகியோரின் குழுக்களுக்கு மத்தியில் தமிழக காங்கிரசு தலைவர் தங்கபாலுவுக்கு சில இடங்கள் கிடைத்தது.   தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு இடம் கிடைத்தது தவறில்லை என்பவர்கள் அவர் தன் விருப்பபடி தன் குழுவுக்கு கிடைத்த இடங்களை  கொடுப்பது தவறு என்பது நகைச்சுவையாக உள்ளது.

அந்த இடங்களை யாருக்கு வேண்டுமானாலும் அவர் கொடுக்கலாம். அவர்கள் அப்போது காங்கிரசுகாரர் என சொல்லிக்கொண்டால் போதும் என்பது தான் நிபந்தனை. இதன்படி தான் மற்ற குழு தலைவர்கள் தொகுதி பங்கீடு செய்கிறார்கள். இது தெரியாதவன் முழு காங்கிரசு காரன் அல்ல மற்றும் காங்கிரசு பாரம்பரியத்தை பற்றி அறியாமல் காங்கிரசு பேரியக்கத்தில் இருக்கும் மடையன் அவன்.

எல்லோருக்கும் தெரியும் இங்கு காங்கிரசு வெற்றிபெறுவது கூட்டணி கட்சியினரின் தயவால் என்று இது தங்கபாலுக்கு தெரியாம இருக்குமா?  உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தமிழ்நாடு காங்கிரசு தலைவரா இருக்கற அவருக்கா தெரியாது? தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் என்னவென்று அவர் நன்கு அறிவார். 10% வாக்கு வங்கி, மத்தியில் அமைச்சர்கள், CBI raid என்று பூச்சாண்டி காட்டியே வேலையை முடிக்கனும் சார். (உண்மையாவே  10% வாக்கு வங்கி இருக்கான்னு கேக்காதிங்க அப்படி கேட்டால் நீங்கள் தமிழக அரசியல் பற்றி ஒன்றும் அறியாதவர் என்று பொருள்), காங்கிரசை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட திமுகவிடம் 63 இடம் வாங்கறுதுன்னா சும்மாவா.(திமுக நிலையை நினைச்சா பரிதாமா தான் இருக்கு, தேன் குடிச்சவன் புறங்கையை நக்கி தானே ஆகனும்)

கிடைத்த 63 தொகுதிகளில் 13 இடங்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணைப்படி தமிழக காங்கிரசு தலைவர் குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கபாலு தன் குழுவுக்கு ஆட்களை ஒதுக்கியதை எதிர்பவர்கள் சொக்கத்தங்கம் அன்னை சோனியாவின் ஆணையை எதிர்க்கிறார்கள் என்று தான் பொருள்.

தமிழக குழுக்களை  பொறுத்தவரை அதிகஅளவாக வாசன் குழுவுக்கு 22 இடங்களும் . சிதம்பரம் குழுவுக்கு 12 இடங்களும்,  ராகுல் குழுவுக்கு 9 இடங்களும்  கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராசன், இளங்கோவன், பாமக நிறுவனரின் சம்பந்தி கிருசுணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. 1 இடம் மட்டுமே சொக்கத்தங்கம் அன்னை சோனியாவால் ஒதுக்கப்பட்ட இளங்கோவன் குழுவே தங்கபாலு குழு 13 இடங்களை பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் பொறாமையால் அவருக்கு எதிராக வேலை செய்கிறது என்பதை அனைவரும் அறிவர். கருப்பையாவின் பையன் குழுவும் இதற்கு ஒத்து ஊதவதாக  கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழக காங்கிரசு தலைவராக அல்ல அல்ல காங்கிரசு காரணாக இருக்க தகுதி என்னவென்று பார்த்தால் அவன் நேரு குடும்பத்து காங்கிரசு கட்சி வாரிசுக்களின் செருப்புக்கு தன் எச்சில் போட்டு  பள பள என்று துடைப்பவனாக இருக்க வேண்டும். காந்தி பேரு வச்சி ஊரை ஏமாத்துனாலும் அவங்க நேரு குடும்பம் என்பதை நினைத்து கொண்டு அது மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


தமிழர்கள்,  ஈழ தமிழர்கள் பற்றி அவர் ஏன் அக்கறைபட வேண்டும் ( சில இடங்களில் வெற்றி பெற்றால் போதும்). அதை  தமிழின காவலர் தற்போதய முதல்வர் வெறும் வானம்  கருணாநிதி பார்த்துக்கொல்வார்.  அவரு தான் தமிழர்களுக்காக 1 மணி நேர உண்ணாவிரதம் இருப்பார், தந்தி அடிப்பார்.  இஃகி இஃகி.

மனைவிக்கு இடம் வாங்கி கொடுக்கிற மாதிரி  நடித்து இவர் இடத்தை புடிச்சிக்கிட்டார் என்பது எதிராளின் ஒரு வாதம். ஜெயந்தி தங்கபாலு காங்கிரசுகாரர், அவர் கணவர் முன்னாள் & இந்நாள் தமிழக காங்கிரசு தலைவர், இது  போதாதா? விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மற்ற குழுக்களில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் பெரிய தியாகிகளா? யாராச்சும் சொல்லுங்க. ஞானசேகரன், பீட்டர் அல்போன்சு, காயத்ரி தேவி, கே. என். அசன் அலி, அருள் அன்பரசு, யசோதா, பழனிச்சாமி ... எல்லாம் தியாகிகள் என்று அவங்க குழு தலைவரு தான் சொல்லிக்கனும், இஃகி.

இளங்கோவனுக்கு மரியாதையே அவரின் INITIAL தான் என்பதை அவர்  வேண்டுமானால் தன் வசதிக்காக மறந்திருக்கலாம், எல்லோரும் அப்படி மறக்கமுடியுமா? பெரியார், காந்தி எல்லாம் காங்கிரசே வேண்டாம் என்று சொன்னவங்க, ஆனா அவங்க பேரை சொல்லி தான் காங்கிரசுகாரனாக  இருக்கவேண்டியுள்ளது. தங்கபாலுவுக்கு அந்த மாதிரி யாரும் இல்லாததது ஒரு குறை தான். தலைவர் தங்கபாலுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா இடுகையின் நீளம் கருதி இது போதும் என்று நினைக்கிறேன்.

காங்கிரசின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற துரோகங்களுக்கும் உள் அடி வேலைகளுக்கும் பயந்துவிடுவார் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.  கூட்டணி தயவால் எல்லா இடங்களிலும் அவர் குழு வெற்றி பெறுவது உறுதி. அப்புறம் இவனுங்களை பார்ப்போமில்ல. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். (பல பொருள் தருவது இது ;-) )


ராஜிவ்ஜி  ஜெய்.
மறைமுக பிரதமர் சொக்கத்தங்கம் அன்னை சோனியாஜி ஜெய்.
வருங்கால பிரதமர் ராகுல்ஜி ஜெய்.

5 கருத்துகள்:

ramalingam சொன்னது…

நல்ல அரசியல் பொருளாதார திகில் மர்ம நகைச்சுவை அதிரடி குடும்பக் கட்டுரை.

maruthu சொன்னது…

இது ஒரு தொ(ல்)லைநோக்கு வரலாறு .

குறும்பன் சொன்னது…

வாங்க இராமலிங்கம். இது உண்மைக் கட்டுரைங்க. நிறைய விசயங்களை சொல்லலை சொன்னால் நாவல் அளவுக்கு போயிருக்கும். இஃகி

குறும்பன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
குறும்பன் சொன்னது…

வாங்க மருது. இது சிலருக்கு தொல்லையா தான் இருக்கும் என்ன பண்றது உண்மையான நிகழ்வுகளை வரலாற்றில் பதிவேற்றுவது முக்கியமாச்சே. :-))