வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், டிசம்பர் 01, 2009

கூம்பு நோம்பி வாழ்த்து

கூம்பு நோம்பி என்பது கார்த்திகை ஒளித் திருவிழாவைக் குறிக்கும் அதாங்க கார்த்திகை தீபம். கொங்கு நாட்டில் விழாவை நோம்பி என்று தான் அழைப்பார்கள். அன்று தெருக்களில் கோலம் போட்டு வீடுகளை அகல் விளக்கால் அலங்காரம் செய்வார்கள். அன்று ஆடம்பரம் ஏதும் இருக்காது. ஆனால் விழாக் களை இருக்கும். காசு இருந்தா தான் இதை கொண்டாட முடியும் என்றில்லை, இது அனைவராலும் கொண்டாடப்படக்கூடியது. குறிப்பா தீபாவளிக்கு செலவழிக்கும் எந்த செலவும் இதுக்கு கிடையாது. எனக்கு தெரிந்து வாழ்த்தெல்லாம் இதுக்கு சொல்லி கேட்டதில்லை. அப்புறம் ஏண்டா வாழ்த்து இடுகைன்னு கேக்கறீங்களா? இஃகி இஃகி நானும் இடுகை போடனும்முல்ல. தீபாவளிக்கு இணையானது இது. சொல்லப்போனா தமிழர்கள் கொண்டாடும் ஒளி விழா இது தான்.

எங்கள் ஊரில்:-

விவசாயிகள் தங்கள் சோளக்(த்) கருதை(தட்டை) கூம்பு வடிவில் வைத்து தீ மூட்டுவார்கள். எல்லோரும் தங்கள் சார்பாக ஒரு கட்டு தருவார்கள். இது காய்ந்த சோளத்தட்டாகும். சாமி பூசை முடிந்தவுடன் ஒரு அகல்விளக்கை கொண்டு கூம்பில் தீ மூட்டுவார்கள். எரியும் பொருள் மீது உப்பை (கல் உப்பு) எரிந்தால் அது வெடிக்கும். எனவே சிறிதளவு உப்பும் எரியப்படும். சில விளையாட்டுப் பசங்களால் ஊசி வெடியும் அதில் எரியப்படும். யார் வீசியது என்று தெரிந்தால் திட்டு விழும் என்பது தனி. சில சமயம் சிலரால் பெரிய வெடிகளும் எரியும் கூம்பில் வீசப்படும் அது யாருன்னு தெரிஞ்சா அவனுங்க கதி அதோ கதி தான். தான் பெரிய ஆளுன்னு பெண்கள் கிட்ட காட்டத்தான். ஆனா அது வெளியில் தெரிஞ்சா பெரிய ஆளு ஆக முடியாது. போக்கிரி, ரவுடி, வெளங்காதவன் என்ற பெயர் தான் கிடைக்கும்.

கூம்பு அணைந்த பிறகு எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள். அதாவது பெண்\மாப்பிளை பார்ப்பது, புது வீட்டுக்கு கடக்கால் போடுவது, வண்டி வாங்குவது, நிலம் வாங்குவது என்று. மற்ற இடங்களில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியாது.

சைவ நெறி - வைணவ நெறி

தீபாவளி வைணவ நெறி சார்ந்த விழாவாகும். கூம்பு நோம்பி சைவ நெறி சார்ந்த விழாவாகும்.

தீபாவளி - திருமாலை வைத்து கொண்டாடப்படுவது. இராமன் வனவாசம் முடிந்து இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்கு வருவதால் வீடெங்கும் தெருவெங்கும் விளக்கு வைத்து அலங்கரித்து வரவேற்பு கொடுத்தார்கள். இராசாவை வரவேற்க விளக்கு மட்டும் போதுமா அதனால வாணவேடிக்கையும் இருந்தது. புது துணி உடுத்தி மக்கள் அவரை வரவேற்றாங்க. வடநாட்டுல நடக்கும் இது தான் உண்மையான தீபாவளி.

நரகாசுரனை கொன்றார் கிரகாசுரனை கொன்றார் என்று சொல்லி நம்மூரில் தீபாவளி கொண்டாடுவது ஏமாத்து வேலை. நாமளும் பட்டாசு வெடிக்கனும் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துராங்கப்பா...

கூம்பு நோம்பி - திருவண்ணாமலையில் அண்ணாமலையானை வைத்து கொண்டாடப்படுவது. அங்க பெரிய விழாவே எடுப்பாங்களே. இது சிவனுக்கு உகந்ததா அல்ல முருகனுக்கு உகந்ததா? எனக்கு தெளிவில்லை. ஏன்னா பல கதைகள் இருக்கறதால சரியா சொல்ல முடியலை. ஆனா ஒன்னு இத எல்லோர் வீட்லயும் கொண்டாடுறாங்க.
.
.

2 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

கூம்பு (சொக்கப்பனை) நோன்பு வாழ்த்துகள். சூந்தாடலாம் வாங்க!!

குறும்பன் சொன்னது…

அழைப்புக்கு நன்றி. நான் அங்க வந்துட்டா எங்கூர்ல கூம்பு நோம்பிக்கு ஆள் கொறைஞ்சுடுமே இஃகி இஃகி.