வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.

நான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை  உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.

இந்த சுட்டியில் 18  நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சி.




எரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.

போலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.

எல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.

பசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.

நன்றி.

சனி, ஏப்ரல் 17, 2010

மதம் நம்மை ஒன்றுபடுத்துகிறதா?

இந்து

யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.

இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.

இசுலாம்

இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.

கிருத்துவம்

உரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.

ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்....  ....

இன்னும் ஏகப்பட்டது இருக்கு.


பௌத்தம்

ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று  பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம். 

தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம். 

நாத்திகம்

நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.

திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.





எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த  பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.


தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?

நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்



.
.

வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சமூக சேவை அமைப்புகள்

நம்ம நாட்டுல உண்மையா சேவை புரியும் பல சேவை அமைப்புகள் இருக்குது.
நான் இருக்குற இரண்டு அமைப்புகளை பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கேன். இவை இரண்டும் இங்குள்ள தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

எயிம்ஸ் இந்தியா - aimsindia.net 

வாசிங்டன் பகுதியில் வசித்த சில நண்பர்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கிய பலர் அமெரிக்க வாழ்க்கை போதும் என்று  இப்ப இந்தியாவில்  வசிக்கிறாங்க.

மக்களை ஒன்று சேர்ப்போம் (மொழி பெயர்ப்பு சரியா?) (Bringing People Together) என்பது இந்த அமைப்பின் சூளுரை. இவங்க தனியாகவும் மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்கள். பலதரப்பட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். பள்ளிகளுக்கு உதவுதல் (கழிப்பறை கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுவது, பற்றாக்குறையாக உள்ள ஆசியரை நியமிப்பது (சம்பளமும் இவங்கதான்), மேசைகள் தருவது போன்றவை), கிராமபுறத்தில் மருத்துவமனை கட்டுவது, ஏரியை தூர் எடுப்பது, கிராமபுற பெண்களுக்கு வருமானம் வருவதற்கு உதவுவது, சுனாமி விழிப்புணர்வு மற்றும் நலம் பற்றி மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சொல்வது, கிராமபுற மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பது என்பது சில. இதுவல்லாமல் இவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வலைதளத்தில் விரிவாக அவற்றை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வாசிங்டன் பகுதியில் நிருவாக குழு கூடி அன்றைய மாதம் நடந்த திட்டங்களையும், நிதி நிலை அறிக்கையையும் அதை பொருத்து அடுத்து எந்த திட்டத்தை ஏற்பது என்பது பற்றியும் முடிவெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெளியிடுவது, நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடத்துவது என்று நிதி சேகரித்தார்கள். அதில் வேலை அதிகம், தன்னார்வலர்கள் அதிகம் ஆனால் நிதி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

மாரத்தான் ஓட்டத்திற்கு மாறினார்கள். இதுவே இவர்களின் தற்போதய முதன்மையான நிதி வருமானம் ஆகும். அதாவது நீங்கள் இந்த அமைப்பு சார்பாக ஓடுகின்றீர்கள் என்றால் இவ்வளவு பணம் புரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதற்கு அவர்களும் உதவுவார்கள். காசு கொண்டாற வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டுவிட மாட்டார்கள். மாரத்தான் ஓட ஆசை, அதே சமயம் சமூக அமைப்புக்கும் பணம் கொடுக்க விருப்பம் அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு அல்லவா? மாரத்தான் ஓட பயிற்சியும் கொடுக்கிறார்கள். சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட இடத்தில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி நடைபெறும்.மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை இந்த பயிற்சி இருக்கும். அக்டோபர் மாத கடைசியில் வாசிங்டன் பகுதியில் பெரிய அளவில் நடைபெறும் மெரைன் கார்ப் மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். முழு மாரத்தான் ஓட முடியாதவங்க பால்டிமோர் பகுதியில் நடைபெறும் அரை மாரத்தான் பந்தயத்தில் கலந்துக்கலாம். ஓடறது தான தேவை.

எந்த திட்டத்துக்கும் இவர்கள் முழு பணமும் தருவதில்லை. குறைந்தது 30% உள்ளூர் மக்களின் பணம், பற்றாக்குறைக்கு இவங்க உதவுவாங்க. இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை பாருங்க. நீங்க சமூக சேவை செய்துகொண்டிருந்தால் பணம் போதவில்லை என்றால் இந்த அமைப்பை அணுகலாம். 

இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வரிவிலக்கு பெற்றது. எனவே இந்த அமைப்புக்கு நன்கொடை அளித்தால் அதற்கு வரி விலக்கு பெற முடியும்.



 இந்தியா டீம் - indiateam.org 


இந்த அமைப்பு கலிபோர்னியா மாநிலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு உதவுவது தான் இவர்களின் குறிக்கோள். பல குழுக்கள் உள்ளன. மாதம் பத்து டாலர் போடனும், மாதாமாதம் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 500 டாலர் கொடுக்கப்படும் அந்த பணத்தை கொண்டு அவர் தான் தேர்ந்தெடுக்கும் பள்ளிக்கு அதை செலவு செய்யலாம். இது அவர் பணம். முதல் மாதமே அவருக்கு பணம் கிடைத்தாலும் $490ஐயும் அவர் கொடுத்தாக வேண்டும். மாதம் $10 கொடுப்பதால் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்பதே தெரியாது. 

நான் வேலை செய்யும் நிறுவனம் சமூக சேவைக்கு பணம் கொடுக்குது, பல நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் $1 போட்டா $1ஐ அவர்கள் கொடுப்பார்கள் , நான் கொஞ்சம் பணத்தை போட்டு செலவழிக்கலாம் (சமூக சேவைக்கு தான்) என்று இருக்கிறேன் அதற்கு ஏதாவது வழி உண்டா? அதற்காக FSA என்ற கணக்கு இருக்கிறது. இதில் நீங்கள் விருப்பப்படும் தொகையை போடலாம். அது உங்க கணக்கு, வேற யாரும் உங்க பணத்தை எடுத்து செலவு செய்ய முடியாது. நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்தவருக்கு பணம் கொடுக்கலாம். முதலில் நீங்க உங்க கை காச போட்டு செலவழிக்கனும் பின் எல்லா ரசீதுகளையும் கொடுத்து பணத்தை திரும்பபெறலாம்.  அமெரிக்க மக்களே உங்க கை காச போட்டு பள்ளிகளுக்கு செலவு செய்யனும் என்று நினைத்தால் டீமில் FSA கணக்கு தொடங்கி செலவழிக்கலாம். உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

இது அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்பு.