வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், அக்டோபர் 16, 2014

நோபல் அமைதி பரிசு சரியானவர்களுக்கு கொடுத்தார்களா


நோபல் அமைதி பரிசு என்பது அரசியல் தொடர்புடையது. சில முறை சரியானவர்கள் பெற்றுள்ளார்கள் என்ற போதிலும் இதில் நிறைய அரசியல் உள்ளது. அதற்காக மற்ற  துறைகளில் அரசியல் இல்லை என்று கருதவேண்டாம் அங்கு மிக குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம். அண்மைய கால அமைதிப்பரிசை மட்டும் எடுத்துக்கொண்டால் ஒபாமா (இது அவருக்கே அதிர்ச்சியளிக்கும் ஒன்று), வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், பன்னாட்டு அணுசக்தி முகமையகம், ஐநா போன்றவை நிறையவே சொல்லும்.

இப்போது இந்தியாவின் கைலாசு சத்தியார்த்திக்கும் பாக்கித்தானின் மலாலா யூசப்சையி ஆகியோருக்கும் கொடுத்துள்ளார்கள்.

 கைலாசு சத்தியார்த்தி சுதந்திர இந்தியாவில் பிறந்து இந்தியராக இருந்து நோபல் பரிசு பெறும் முதல் இந்தியர். அன்னை தெரசா இந்தியர் தான் என்றாலும் அவர் ஐரோப்பாவிலுள்ள மாசிடோனிய குடியரசில் பிறந்தவர்.

மற்ற இந்தியர்கள் சுதந்திரத்துக்கு முன் நோபல் வாங்கியவர்கள் (இராமன், தாகூர்), வெளிநாடுகளில் குடியேறியவர்கள் (அவர்கள் இந்திய வம்சாவழியினர் இந்தியர் அல்ல)

இதில் கொடுமை கைலாசு சத்தியார்த்திக்கு இந்திய அரசு  இது வரை எச்சிறப்பையும் செய்யவில்லை. பத்மா விருது என்பார்களே நம்ம சின்ன கலைவாணர் விவேகிற்கு கொடுத்தார்களே அதைக்கூட தரவில்லை.

வெளிநாடுகள் நிறைய விருதுகளை இவருக்கு கொடுத்துள்ளன. இவரை பரிந்துரைத்தது கூட சில வெளிநாட்டினர் தான்.

நம் அனைத்து (அச்சு, இணைய, தொக்கா) ஊடகங்களும்  இவரைப்பற்றி இது வரை விரிவாக சொன்னதில்லை.  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகாவது இவரைப்பற்றி சொல்லியிருக்கலாம். இப்போதும் இவரைப்பற்றி பெரிய அளவு செய்தி இல்லை.  நோபல் பரிசு இந்தியருக்கு என்றவுடன் செய்திபோட்டாக வேண்டும் ஆனால் அவர்களுக்கு இவரைப்பற்றி விரிவாக செய்திபோட இயலவில்லை. மலாலாவுக்கும் கொடுத்ததால் தப்பித்தார்கள், அவரைப்பற்றி தான் நிறைய காணொளிகள் உள்ளதே. சத்தியார்த்தி பற்றி கால் பங்கு மலாலாவைப்பற்றி முக்கால் பங்கு வெளியிட்டு தப்பித்தார்கள்.

 நம் ஊடகங்களும் அரசும் எப்படி என்பது இதன் மூலம் மேலும் விளங்கும் (இவர்களைப்பற்றி தெரியும் என்றாலும்).

30 ஆண்டுகளாக குழந்தைத்தொழிலாளர் ஒழிப்புக்காக போராடி வரும் இவருக்கு நோபல் விருது கிடைத்தது மிகவும் பொருத்தம். இவரைப்பாதுக்காக்க இந்த விருது உதவும்.  எப்படியோ இவ்வளவு காலம் கொலைவெறித்தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். இவ்விருதால் இவருக்கு கிடைத்த  ஆகச்சிறந்த பயன் இதுவென்று கூறலாம். இவர் அமைப்புக்கு பணம் கிடைத்ததை விட இதுவே சிறப்புடையது. இப்ப இவர் சென்றால் இவரை தாக்க குழந்தைகளை பணிக்கு அமர்த்திய அரசியல் பணபல ஆள்பல செல்வாக்கு உடையவர்கள் அஞ்சுவார்கள், புகார் அளித்தால் காவல்துறை தட்டி கழிக்க முடியாது. இப்ப இவர் சொல்லுக்கு ஊடகத்தில் மரியாதை இருக்கும்.

மலாலாவுக்கு கொடுத்தது சரியா என்றால் இல்லை என்று கூறலாம். 

மலாலாவின் சாதனை குறைவானதா என்றால் இல்லை.  இப்போது வாங்க அவருக்கு தகுதியில்லை என்பதே உண்மை. அவர் தாலிபான்களுக்கு எதிராக தாலிபான் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்று போராடினார். அந்த அஞ்சா நெஞ்சத்தை பாராட்ட வேண்டும். பின் தாலிபான்களால் சுடப்பட்டு பாக்கித்தானில் சரியான சிகிட்சை முறை இல்லாததால் பிரித்தானியாவுக்கு சென்று மருத்துவம் பார்த்து உயிர் பிழைத்தார். இவரை தாலிபான்களுக்கு எதிரான பரப்புரைக்கு மேற்குலகம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை இசுலாம் மதத்தை சேர்ந்தே பெண்ணே எதிர்ப்பது சில முட்டாள் தீவிரவாத முசுலிம்களுக்கு செருப்படியாக இருக்கும்.

பிரித்தானியாவுக்கு வந்ததில் இருந்து அவர் பாக்கித்தானுக்கு செல்லவில்லை. சென்றால் உயிருக்கு பாதுகாப்பில்லை. பாக்கித்தான் அரசால் அப்பகுதியிலிருந்து தாலிபான்களை விரட்ட முடியவில்லை. தாலிபான்களால் பெண் குழந்தைகளின் படிப்பு பாழ் படுகிறது என்பது உண்மை ஆனால் இசுலாமாபாத்துக்கு வடபுறம் நிறைய நிலப்பரப்பு அவர்கள் கட்டுப்பாட்டில் அல்லவா உள்ளது? பரப்புரைக்கு மட்டுமே மலாலா பயன்படுத்தப்பட்டு வருகிறார். அப்போது தாலிபான்களை எதிர்த்ததுக்கா நோபல்?

நிறைய பெண்கள் தாலிபான்களை எதிர்த்து களத்தில் உயிருக்கு பயப்படாமல் இன்னும் போராடி வருகிறார்கள். அவர்களை சிறப்பிக்கலாம்.

இப்போது மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் விருது கொடுக்கப்பட்டதற்கான காரணம் (கிடைத்தது) அரசியல் தானே தவிர வேற ஒன்றும் இல்லை.

இதில் அவர் பகடைக்காய்.







ஞாயிறு, அக்டோபர் 05, 2014

சசிகலா குடும்ப கிளைப்படம் விபரம் படத்துடனும் விளக்கத்துடனும்

கருணாநிதி குடும்ப குடும்ப கிளைப்படம் தான் நமக்கு இது வரை தெரியும். அதிமுகவின் அசைக்க முடியாத செல்வாக்குள்ள சசிகலா குடும்பத்தினரின் குடும்ப கிளைப்படம் இது வரை நிறைய பேருக்கு தெரியாது. இவர்களை மன்னார்குடி மாப்ஃபியா என்றும் மக்கள் அன்போடு ( அன்போடா? வெறுப்போடா? பயத்தோடா?) அழைப்பார்கள்.


மன்னார்குடி குடும்ப வகையறா


சந்திரசேகருக்கு இரு மகன்கள் (இவர் மனைவி பெயர் தெரியவில்லை) இவர் திருத்துறைப்பூண்டியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார் இவருக்குப் பின் அக்கடையை விவேகானந்தன் கவனித்துக்கொண்டார்.

(1)விவேகானந்தன் - (கிருட்டிணவேணி )
(விவேகானந்தனுக்கு ஆறு குழந்தைகள்) இவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி

(2)மருத்துவர். கருணாகரன் -இவரது ஓரே குழந்தை (மகன்)  மருமகன் ஆர்பி. இராவணன் (மிடாசு மதுபான ஆலையின் தலைவர்) இவரின் மகள் பெயர் தெரியவில்லை. இவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் தெரியவில்லை.
(கருணாகரன் விவேகானந்தனின் இளைய சகோதரர், கருணாகரனின் மனைவி பெயரும் தெரியவில்லை. )

விவேகானந்தன் - (கிருட்டிணவேணி ) குழந்தைகள்:

1. சுந்தரவதனம் (சந்தானலட்சுமி) - இவரால் தான் இவர்கள் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள் இல்லைன்னா இவர்கள் திருத்துறைபூண்டி மாஃபியா என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். 

*மருத்துவர் வெங்கடேஷ்
*அனுராதா (முன்னாள் ஜெயா டிவி மேலாண் இயக்குனர்)
* பிரபா சிவக்குமார்

2. "வனிதாமணி" மறைவு ( விவேகானந்தன்)
*டிடிவி தினகரன்
*சுதாகரன்
*டிடிவி பாசுக்கரன்

3. சசிகலா (நடராசன்)

4. ''ஜெயராமன்'' மறைவு - (இளவரசி)

5. "வினோதகன்" மறைவு (மனைவி பெயர் தெரியவில்லை)
*டிவி மகாதேவன்
*டிவி தங்கமணி

6. திவாரன் (பாஸ் என்று அறியப்படுபவர்) (இவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா? ஆகியிருந்தால் மனைவி பெயர் தெரியவில்லை)

சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, அண்ணன் பையன் சுதாகரன் ஆகியோர் செயலலிதாவோடு சேர்த்து 4 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள். 

தஞ்சாவூரில் மருத்துவமனையை வாங்கி அதற்கு வினோதகன் பெயர் இட்டார்கள் என்று நினைக்கிறேன். 

பெயருக்கு  முன்போடும் முன்னெட்டு பற்றி முழு விபரம் தெரியவில்லை. டிடிவி என்றால் "தி"ருத்"து"றைப்பூண்டி "வி"வேகானந்தன் என்று நானாக நினைத்துக்கொண்டு உள்ளேன் எனக்கு முழு முன்னெட்டுக்கான காரணம் தெரியாது. 

வியாழன், செப்டம்பர் 18, 2014

கொலம்பிய பெண்கள் மிதிவண்டி குழுவின் தோல் நிறமுடைய உடையால் சர்ச்சை


கொலம்பிய நாட்டின் பெண்கள் மிதிவண்டி குழு இடுப்பிற்கு சற்று மேலிருந்து (அதாவது வயிற்று பகுதியிலிருந்து) தொடை வரை தோல் நிறத்தில் ஆன உடையை அணிந்திருப்பது பெரிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.

முதலில் அவர்கள் அந்த ஆடையுடன் காட்சியளித்தை போட்ட பிபிசி பிபிசியில் தான் நான் அச்செய்தியை பார்த்தேன், மற்றவர்களும் வெளியிட்டுருக்கலாம். தோல் நிறத்தில் உள்ள பகுதியை கறுப்பு கோடு கொண்டு அழித்து வெளியிட்டது.

கறுப்பு கோட்டால் மறைக்கப்பட்ட உடையுடன் பெண்கள் குழுவினர்


கொலம்பிய தலைநகர் பகோடாவில் அவ்வுடையை அணிந்து அவ்வுடையில் தவறு இல்லை என்று அக்குழுவினர் கூறினார்கள்.

இது தான்  தோல் நிறத்தை கொண்டுள்ள அவ்வுடை


அக்குழுவின் உறுப்பினரான ஆஞ்சி ரோசா இவ்வுடையை வடிவமைத்தார். தடகள மற்றும் மிதிவண்டி ஓட்டுபவரான தான் இவ்வுடையால் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை என்றார். இதுவும் மற்ற உடைகளைப்போன்றதே என்றார். 

பன்னாட்டு மிதிவண்டி சங்கத்தின் தலைவர் பிரையன் கூக்சன் இந்த உடைகள் கண்ணியமாக இல்லை என்றும் இவை அனுமதிகப்பட முடியாதவை என்றும் கூறினார்.

மறைக்கப்படாமல் முழுஉடையுன் பெண்கள் குழுவினர்


இந்த உடையை இவர்கள் அடுத்த வாரம் கொலம்பியா சார்பாக எசுப்பானியாவில் நடைபெறும் பொன்பிராடாவின் உலக வாகையாளருக்கான போட்டியில் அணிவார்களா என்று தெரியவில்லை.  இவ்வாரம் இத்தாலியில் நடந்த மிதிவண்டி போட்டியில் இவ்வுடையுனேயே கலந்து கொண்டார்கள்.

இப்போது கறுப்பு பகுதியை விலக்கிவிட்டு முழுவதுவாக அவர்கள் படத்தை பிபிசி போட்டுள்ளது. பிபிசியின் இம்மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.