வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 12, 2013

வலிமிகுதல் 11 - கள் விகுதிக்கு வலி மிகுமா ?


கள் - மது என்ற பொருளில் வந்தால் தனிச்சொல். பன்மைச் சொற்களில் கள் என்று இடம்பெறும் ஈற்று விகுதிக்குப் பன்மை விகுதி என்று பெயர். வெறும் விகுதியாய் வருவதால் அது தனிச்சொல் இல்லை.

சொல் வகைமையில் கள் விகுதியை இடைச்சொல்லில் சேர்ப்பார்கள். இடைச்சொல்லுக்கு வலி மிகாது. கிறு, கின்று, ஆநின்று - ஆகியவை கூட இடைச்சொல்தான்.

வாழ்த்துக்கிறோம் என்று வலி மிகை செய்து எழுதுவதில்லை. வாழ்த்துகிறோம் என்றே எழுதுகிறோம். அதுபோலவே வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை.

வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் என்பதால்தான் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள், பாட்டுக்கள் என்று எழுதுவதாகச் சொல்வார்கள். பரிமேலழகரே ‘எழுத்துக்கள்’ என்று எழுதியிருப்பதாக ஆதாரமும் உண்டு.

வன்தொடர்க் குற்றியலுகர வலிமிகும் விதி தன்னை அடுத்து மற்றொரு தனிச்சொல் வந்தால்தான் பொருந்துமே அன்றி கள் என்னும் இடைச்சொல்லான பன்மை விகுதிக்குப் பொருந்தாது.

கள் விகுதி வலிமிகுந்தும் மிகாமலும் குழப்பமான புழக்கத்தில் இருக்கிறது. அந்தப் பழக்கத்தால்தான் வாழ்த்துக்கள் என்கிறோம்.

1. தனி நெடிலை அடுத்தோ (ஓரெழுத்து ஒருமொழி) நெடிலில் முடியும் சொற்களை அடுத்தோ கள் விகுதிக்கு வலி மிகும்.

ஆக்கள், ஈக்கள், பாக்கள், தேனீக்கள், வெண்பாக்கள்.

ஆனால், ஐகாரத்திலும் ஔகாரத்திலும் வலி மிகாது. கைகள், பைகள், பண்டிகைகள்.

ஔகாரத்தில் ஏதும் சொற்கள் உள்ளதாகத் தெரியவில்லை.

2. உ’கரத்தில் முடியும் இரண்டு குறில் எழுத்துகள் (குறிலிணை) உள்ள சொற்களை அடுத்து கள் விகுதி வந்தால் வலிமிகும். தெருக்கள், அணுக்கள், வடுக்கள், பருக்கள்.

உ’கரத்தில் முடியும் இரண்டுக்கும் மேற்பட்ட குறில்கள் என்றாலோ அல்லது நெடிலை அடுத்த உகரக் குறில் என்றாலோ வலி மிகாது. அழகுகள், விழுதுகள், ஆடுகள், வீடுகள்.

ள்’ என்று முடியும் பெயர்ச்சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் புணர்த்தவும் கூடாது. ஏனென்றால் புணர்ச்சி விதி ஏற்க இது தனிச்சொல் இல்லை. நாள்கள், பொருள்கள், வாள்கள், தோள்கள் என்றுதான் எழுதவேண்டும். நாட்கள், பொருட்கள் என்று எழுதக் கூடாது.

கள் விகுதி சார்ந்த ஐயங்களில் முழுமையாகத் தெளிவு பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.


****
புத்தகம்கள்-புத்தகங்கள்
பாடம்கள்-பாடங்கள்
இவ்வாறான சில வார்த்தைகளை பாடத்திலும் முக்கியமான சில பத்திரிகைகளிலும் படித்ததால் வந்த குழப்பம் ஐயா.
(பத்திரிக்கை -பத்திரிகை...??)

****
அதனால்தான்   ள்  என்று முடியும் பெயர்ச்சொற்கள் என்றேன். இதிலும் விதிவிலக்காக புள், முள் போன்றவை புட்கள், முட்கள் என்றாகும்  அது வேறு பாடம்.

*****
கள் மயக்கமே!வலியிட்டும் இடாமலும் எழுதுவதில் தப்பில்லை என்றார் என் ஆசிரியர்.ஒருவேளை அவர் தப்பிப்பதற்காக இருக்கலாம்.அதிகமானோர்மவவன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வலி மிகும் என்றே கொண்டெழுதுகின்றனர்.(முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்.......).

****
இசையின்பம் கருதிச் செய்தால் ஏற்பது இயல்பு.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 10
வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

ஞாயிறு, நவம்பர் 10, 2013

வலிமிகுதல் 10


வலிமிகுதல் தொடரின் கிளைமாக்ஸ்-ஐப் படிக்கவுள்ளீர்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் புரியாமை என்னும் வில்லன் வென்றுவிடுவான் என்பதால் ஊன்றிப் படியுங்கள்.

ஒரு சொற்றொடரின் பொருள் வெவ்வேறு விதமாகவும் வேற்றுமைப்படலாம். அந்த வேற்றுமையை உணர்த்த வேற்றுமை உருபுகள் எனச் சில இருக்கின்றன. மரவேலி என்பதை எத்தனை விதமாய் விரிக்கலாம் பாருங்கள். மரத்தில் செய்த வேலி, மரத்திற்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தால் ஆகிய வேலி என்று புலமைக்கு எட்டிய வகையில் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு சொற்றொடர் இடையே துல்லியமாய்ப் பொருள் வேற்றுமை தோன்றப் புரிந்துகொள்ளத் தோன்றியதே வேற்றுமை. சொற்றொடரின் பொருள் நுணுக்கங்களில் வேற்றுமை கற்பிக்கிறது.

இந்த வேற்றுமைக்கு உருபுகள் உள்ளன. அவற்றை எண்வாரியாகப் பெயரிட்டு இனங்காட்டுகிறார்கள். ஒன்று முதல் எட்டு வரையிலான வேற்றுமைத் தொடர்கள் மற்றும் தொகைகள். தொடர் என்றால் இயல்பாய் வருவது, தொகை என்றால் தொகுத்துப் பொருள் பெறுவது என்று நமக்குத் தெரியும்.

முன்னதாக வேற்றுமை உருபுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

இப்போது விளக்கத்திற்கு வருகிறேன். இந்த வேற்றுமை
உருபுகள் ஒரு சொற்றொடரில் மறைந்திருக்க நாம் அவற்றை விரித்துத் தொகுத்துப் பொருள் காண்கிறோம். அதுவே வேற்றுமைத் தொகை. விரிவு செய்து பொருள் காண்பதற்காக சம்பந்தப்பட்ட சொற்றொடரோடு உரிய வேற்றுமை உருபை இணைத்து இயல்பான ஒரு சொற்றொடரை விளைச்சலாய்ப் பெறுவோம் அல்லவா, அந்த இயல்பான சொற்றொடர் வேற்றுமைத் தொடர்.

மற்றொரு நிலைமையும் இங்கே உண்டு. ஒரு சொற்றொடரில் வேற்றுமை உருபை மட்டும் சேர்த்து விரித்துப் பொருள்கொண்டாலும் போதாத நிலை ஏற்படும். வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ என்று பெயர். புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கே போவோம், வாருங்கள்.

முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால் இரண்டாம் வேற்றுமையிலிருந்து தொடங்குகிறேன்.

தண்ணீர் குடித்தான் – இது இரண்டாம் வேற்றுமைத் தொகை – எப்படி ? – தண்ணீரைக் குடித்தான்’ என்றே ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபை முதற்சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்கிறோம். தண்ணீர் குடித்தான்’ என்பது வேற்றுமை உருபு உள்மறைந்து தொகுத்துப் பொருள்காணும்படி இருக்கிறது. அந்த வேற்றுமை உருபு இரண்டாம் வேற்றுமை உருபு. ஆக,

தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை (தொகுக்கச் சொல்கிறது)

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொடர் (தொகுத்தபின் இயல்பாகிவிட்டது).

தண்ணீர்க்குடம் – இதை எப்படிப் பொருள் விரிப்பீர்கள் ? ‘தண்ணீரை உடைய குடம், தண்ணீரைப் பிடிக்கும் குடம்’ இப்படி இரண்டாம் வேற்றுமை உருபோடு ஒரு வினைச்சொல்லையும் சேர்த்து (அந்த வினைச்சொல் இரண்டாம் சொல்லின் – குடம் - பயனை விளக்குவதாக இருக்கும்) அர்த்தம் கண்டோம். இதுவே இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

இப்போது நாம் வழக்குக்குள் நுழைகிறோம்.

இரண்டாம் வேற்றுமை (ஐ)
--------------------------------------
தண்ணீர் குடித்தான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தண்ணீரைக் குடித்தான் – இரண்டாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்.

தண்ணீர்க் குடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

இப்படி எட்டு வேற்றுமைகளுக்கும் பார்க்கப் போகிறோம்.

மூன்றாம் வேற்றுமை (ஆல்)
---------------------------------------
கை காட்டினான் – மூன்றாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

கையால் காட்டினான் – மூன்றாம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகாது

தங்கக் கிண்ணம் - தங்கத்தால் செய்த கிண்ணம் – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

நான்காம் வேற்றுமை (கு)
------------------------------------
வள்ளித் திருமணம் – நான்காம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

வள்ளிக்குத் திருமணம் – நான்காம் வேற்றுமை உருபுடன் வந்த விரிந்த தொடர் – வலி மிகும்

கூலிப்படை – கூலிக்குக் கூடிய படை – நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலிமிகும்.

ஐந்தாம் வேற்றுமை (இன், இல்)
--------------------------------------------
தாய்மொழி கூறு – ஐந்தாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

தாய்மொழியில் கூறு – ஐந்தாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

பழச்சாறு – பழத்தில் பிழிந்த சாறு – ஐந்தாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

ஆறாம் வேற்றுமை (அது)
------------------------------------
கிளிப்பேச்சு – ஆறாம் வேற்றுமைத் தொகை – வலி மிகும்

கிளியினது பேச்சு – ஆறாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

ஆறாம் வேற்றுமைக்கு உடன் தொக்க தொகை அபூர்வம்.

ஏழாம் வேற்றுமை (கண்)
-----------------------------------
மலை திரிவோர் – ஏழாம் வேற்றுமைத் தொகை – வலி மிகாது

மலையின்கண் திரிவோர் – ஏழாம் வேற்றுமை உருபுடன் விரிந்த தொடர் – வலி மிகாது

மலைக்கோவில் – மலையின்கண் எழுந்த கோவில் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை – வலி மிகும்.

முதலாம் வேற்றுமையை இன்னும் பார்க்கவில்லை. முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. அது வேறொன்றுமில்லை. எழுவாய்த் தொடர் என்று பார்த்தோமில்லையா ? அதையே தொகையில் முதலாம் வேற்றுமைத் தொகை (எழுவாய் வேற்றுமை) என்பார்கள். எளிமையாய் இருக்கும். காற்று குளிர்ந்தது. கை சுருங்கியது. – வலி மிகாது.

இன்னொன்று - எட்டாம் வேற்றுமை, இதை விளி வேற்றுமை என்பார்கள். தொடரில் பார்த்த விளித்தொடர் போன்றதுதான் இதுவும். அண்ணா தோற்காதே – அண்ணா யாரிடம் தோற்காதே – என்பதுபோல் தொகுத்துக்கொள்ள இடமிருப்பதால். இங்கும் வலிமிகாது.

வலிமிகுதல் குறித்த பாடங்கள் ஏறத்தாழ நிறைவை எய்துகின்றன. இன்னும் எளிய விதிகள் சில இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் எழுதுவேன்.

பிறகு இவற்றில் உள்ள ஓரிரு முரண்கள், அவற்றைக் களையும் விதங்கள் பற்றிய தெளிவையும் எழுதவுள்ளேன். அத்துடன் இப்பகுதி நிறைவடையும்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.
கீழுள்ளவை அவரின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது.

*****
வள்ளி திருமணம் நான்காம் வேற்றுமை உருபன்று. வள்ளியின் திருமணமென்றே உருபேறி வரும். எனவே வலிமிகுதல் இன்றி வள்ளி திருமணம் என்றே வருமென்றே எண்ணுகிறேன். நடைமுறைத் தமிழில் வள்ளி திருமணம் சீதா சீத்தா திருமணமென்றே வலி மிகுபடாமல் வரும் எனது ஊரான  திருகோணமலையை சிலர் வலிமிகு வடிவில் திருக்கோணமலை என்றும் சொல்வார்கள். கவிநயத்துக்கு அமைவாக திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் திருகோணமாமலை அமர்ந்தாரே என்பதற்குப் பதிலாக திருக்கோணமாமலை அமர்ந்தாரே என்றுதான் வருகிறது.

எனக்கு தூய இலக்கண அறிவு இல்லை.
ஆனால் அனுபவ அறிவும் நாட்டார் நடைமுறை அறிவும்
தமிழ்வழக்கு என்பார்களே அதுவும் கொஞ்சம் உண்டு.
இதுபற்றி தங்கள் புலமைக் கருத்தை அறியும் ஆவலில் உள்ளேன்.

*****
அதனால்தான் முதலிலேயே (இரண்டாம் பத்தியில்) சொல்லியிருக்கிறேன். ஒரு சொற்றொடரைப் பலவகைப்பட்ட தொகையாகவும் இனங்காண முடியும். உதாரணத்திற்கு : பொன்மணி -
1) பொன்னலாகிய மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (கருவிப் பொருள்)
2) பொன்னாகிய மணி - பண்புத் தொகை
3) பொன்னின்கண் மணி - ஏழாம் வேற்றுமைத் தொகை
4) பொன்னோடு சேர்ந்த மணி - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (உடனிகழ்ச்சிப் பொருள்)
5) பொன்னும் மணியும் - உம்மைத் தொகை (நன்றி: முனைவர் இராச. திருமாவளவன்). ஊர்ப்பெயரோடு ‘திரு’ வந்தால் வலிமிக வேண்டும்.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்:

வலிமிகுதல் 9
வலிமிகுதல் 8
வலிமிகுதல் 7
வலிமிகுதல் 6
வலிமிகுதல் 5
வலிமிகுதல் 4
வலிமிகுதல் 3
வலிமிகுதல் 2
வலிமிகுதல் 1

வெள்ளி, நவம்பர் 08, 2013

வலிமிகுதல் 9

வினையொன்றே உயிராகப்
பண்பு காத்திருந்தேன்.

என்மொழிக்குள் உன்மொழி
அன்றிலின் அன்மொழியானது.

வேற்றுமை தீர்ந்து
உவமையாய் முன் நின்றாய்.

‘உம்மைப் பிடிக்கும்’
என்றாய்.

‘உம்மைத் தொகை பிடிக்குமா ?’
என்றேன்.

‘உம்’ என்றாள்.
‘ஏன் ?’ என்றேன்.

‘உன்னையும் என்னையும்
அதுவே சேர்க்கிறது.
நீயும் நானும்
அதனால் இணைகிறோம்’ என்றாள்.

‘உம்’ என்னும்
உன் சம்மதச் சொல் கொண்டிருப்பதால்
எனக்கும் அதுவே பிடிக்கும்’ என்றேன்.

‘எனக்குப் பிடித்ததற்கு
இன்னொரு காரணமும் உண்டு’ என்றாள்.

‘என்ன ?’ என்றேன்.

‘இணைப்பில் வலி தோன்றாது.
உணர்த்த விரும்பும் பொருள் மட்டுமே
தோன்றும் ’ என்று கண் தாழ்ந்தாள்.

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் பற்றிய முந்தைய இடுகைகள்: