வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வானூர்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானூர்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 16, 2014

மலேசியன் ஏர்லைன்சு (MH370) எங்கப்பா போயிடுச்சு?

சனிக்கிழமை (மார்ச்சு 8, 2014) காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சு பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வருது ஆனா அது எங்க இருக்குன்னு தெரியலை.

வியட்நாம் பகுதி கடல்ல விழுந்துருச்சுன்னு சொன்னாங்க, மலேசியன் ஏர்லைன்சின் எண்ணெய் கசிவு இதோ இருக்கு அப்படின்னு சொன்னாங்க.

மலேசியன் ஏர்லைன்சின் கதவு கடல்ல மிதக்குதுன்னு சொன்னாங்க.

இதுல போனங்க 2 பேர் போலி (தாய்லாந்தில் திருடப்பட்ட) கடவுச்சீட்டு பயன்படுத்தியிருக்கறதா சொல்றாங்க. கடவுச்சீட்டை தாய்லாந்தில் பறிகொடுத்தவங்க ஆசுத்திரியா & இத்தாலி நாட்டுக்காரங்க.

40க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் தேடுதுன்னு சொன்னாங்க.

சீனா 10 செய்மதிகளை கொண்டு வியட்நாம் கடல் பகுதியை சல்லடை போட்டு தேடுதுன்னு சொன்னாங்க.

வானூர்தி மேற்கு பக்கம் போயிடுச்சி அப்படினாங்க.

பயணிகள் சிலரின் செல்போன் சிக்னல் இருக்குது செல்பேசியின் மணி அடிக்குது ஆனா எடுக்கலை அப்படினாங்க.

சீன செய்மதி வானூர்தி விபத்து நடந்த இடத்தை காட்டுச்சுனாங்க.

மலாக்கா நீர்சந்தி பகுதியில் தீவிர தேடுதல் நடத்துனாங்க. மலாக்கா நீர்சந்தி அதிக கப்பல் போக்குவரத்து உடையது.

வானூர்தி ஓட்டுநர் தற்கொலை பண்ண எங்காவது முட்டியிருக்கலாம் என்கிறாங்க.

மலேசிய இராணுவம் காணாமல் போன வானூர்தி மேற்க போனதா சொல்லுது.

கடத்தப்பட்டிருக்கலாம் அப்படின்னு சொல்றாங்க.  போலி கடவுச்சீட்டை பயன்படுத்தனவங்களுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை\வாய்ப்பில்லை அப்படின்னும் சொல்றாங்க.

கடத்தப்பட்டிருக்கும் அப்படங்கிறதையும் புறந்தள்ள முடியாது அப்படிங்கிறாங்க. 

மலேசிய அரசாங்கம் மந்திரவாதிய கூப்பிட்டு தேடுனாங்க. அதனால் கோபம் கொண்ட வாசுது நிபுணர்கள் அவங்க கதைய சொல்லியிருக்காங்க.

இந்திய படை தேடுதலில் ஈடுபட்டது, அதை நிறுத்த மலேசிய அரசு சொல்லிட்டுச்சி.

அந்தமான் பக்கம் வந்துச்சினாங்க.

இந்தியப்பெருங்கடல் பக்கம் வந்துச்சினாங்க.

வானூர்தி காணாம போனாலும் அது இன்னும் சமிக்கை தருதுன்னு சொல்றாங்க.

வானூர்தி காணாமல் போன இடத்திலிருந்து 5 அல்லது 6 மணி நேரம் பறந்திச்சி அப்படின்னு அமெரிக்கா சொல்லுது.

வானூர்தி மேற்க வந்தப்ப எந்த நாட்டு (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா) இராணுவ ரேடாரும் அதை கண்டுபிடிக்கலை ஏன்னா அப்போ ரேடார்கள் தேய்ஞ்சிருமுன்னு அது செயல்படலை. (சுருளி படத்தை பார்த்து இருப்பாங்களோ?)
 
இன்னும் நிறைய சொன்னாலும் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கலை. தேடுதல் வேட்டையில் உலகின் பெரும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகள் ஈடுபடுது. தொழில்நுட்பத்தின் மீது பெரிய நம்பிக்கை வந்திருக்கனுமே?

என் ஊகம்:

வானூர்தி சுமத்திரா தீவுக்கோ, தாய்லாந்து அல்லது மியான்மாருக்கோ (பர்மா) கடத்தப்பட்டிருக்கலாம் என்பது தான்.





புதன், ஜூலை 14, 2010

வானூர்தி, வானூர்தி நிலையம் பற்றி சில தகவல்கள்

உலகில் எது வேகமாக செல்லும் வானூர்தி? எது பெரியது?  எது மிக மும்முரமாக இயங்கும் வானூர்தி நிலையம்? எது எங்கும் நிற்காமல் நெடுந்தொலைவு செல்லும் வானூர்தி? விடை தெரியுமா உங்களுக்கு?



(1). நெடுங்காலம் இயக்கத்தில் இருக்கும் வானூர்தி நிறுவனம்.


ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் 1920லிருந்து பயணிகளை சுமந்து செல்கிறது. டச்சு கேஎல்எம் (Koninklijke Luchtvaart Maatschappij voor Nederland en Koloniën - KLM) 1919 ம் ஆண்டிலிருந்து இயங்குகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சிறிது காலத்துக்கு இது இயங்கவில்லை. எனவே முதல் இடம் குவாண்டாசுக்கு இரண்டாவது இடம் கேஎல்எம் -க்கு.


(2). உயரமான வான் கட்டுப்பாட்டு கோபுரம்.


பாங்காக் சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமே மிக உயரமானது. இது 434 அடி உயரமுடையது. இந்த நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் மணிக்கு 70 வானூர்திகளை கையாளலாம்.


(3). வடகோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


நார்வே நாட்டினுடைய ஆர்ட்டிக் பகுதியில் இருக்கும் சுவால்பர்ட் நிலையமே வட கோடியில் இருப்பது. இது 78 பாகை வடக்கில் இருக்கிறது.


(4). தென்கோடியில் இருக்கும் பயணிகள் வானூர்தி நிலையம்.


அர்ஜண்டைனா நாட்டின் உஸ்ஆயிஅ நகரில் உள்ள உஸ்ஆயிஅ-மால்வினாஸ்  (Ushuaia-Malvinas) வானூர்தி நிலையமே அது. இதுவே தென்கோடியில் உள்ள நகரமும் ஆகும். அண்டார்டிக்கா செல்லுவோர் இந்நிலையத்தை அடிக்கடி பயன்படுத்துவர்.


(5). எங்கும் நிற்காமல் அதிக நேரம் பயணிக்கும் வானூர்தி?


நிவார்க்கில் (நியுயார்க் அருகிலுள்ளது) இருந்து சிங்கப்பூருக்கு இடையேயான 9,535 மைல் தொலைவை 19 மணி நேரம் எங்கும் நிற்காமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் பயணிக்கலாம். இதுவே அதிக நேரம் எங்கும் நிற்காமல் செல்லும் பயணம்.


(6). தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலையம்?


ஈஸ்டர் தீவே தொலை தூரத்தில் அமைந்திருக்கும் நிலப்பகுதியாகும். இத்தீவிலுள்ள மாடவேரி (Mataveri) பன்னார்ட்டு வானூர்தி நிலையமே தொலை தூரத்தில் அமைந்திருப்பது. 2336 மைல் தொலைவில் இருக்கும் சிலியின் சான்டியோகோவிற்கு செல்லும் பயணமே குறைந்த தொலைவு பயணமாகும்.


(7). அதிக தாமதத்தை ஏற்படுத்தும் நிலையம்?


பெய்ஜிங் தலைநகர பன்னாட்டு நிலையத்தில் இருந்து புறப்பாடு 38% மட்டுமே சரியான நேரத்துக்கு இருக்கும். 62% வானூர்திகள் சரியான நேரத்துக்கு புறப்பட முடிவதில்லை. புறப்படுறதுல சீனாக்காரன் பெயர் வாங்கிட்டான் என்ற போட்டியில் இந்தியா இறங்குவதில்(வருகை) பெயர் எடுத்துள்ளது.


புதுடெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு நிலையத்தில் இறங்குவது 45% சரியான நேரத்துக்கு இருக்கும். 55% வானூர்திகள் இறங்குவது தாமதம் தான். நம்ம போட்டிக்கு அளவே இல்லாம போச்சு.


(8). அகலமான இருக்கைகள் கொண்ட வானூர்தி.


கேத்தே பசிபிக் 747-700 & 777-300 ER, கல்ப் ஏர், துருக்கி ஏர்லைன்ஸ் 777-300 ER ஆகியவற்றின் முதல் வகுப்பு இருக்கை 36 அங்குலம் அகலமானது. டெல்டா ஏர்லைன்ஸ் சாப் 340 வானூர்தியின் இருக்கை அகலம் 16 அங்குலம். அதுல உட்கார்றதுக்கு நின்னுக்கிட்டே போகலாம்.


(9). நீண்ட பயணிகள் முனையம்.


ஜப்பானின் ஒசாகா நகரிலுள்ள கன்சாய் பன்னாட்டு நிலையத்தில் ஒரே ஒரு முனையமே உள்ளது. ஆனால் இது ஒரு மைல் தொலைவு உள்ளது.


(10). மும்முரமான வானூர்தி நிலையம்.


அட்லாண்டா நகரின் ஹார்ட்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு நிலையத்தில் 2009ல் 88 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளார்கள். புதிதாக கட்டப்படும் துபாய் வானூர்தி நிலையம் மும்முரமான வானூர்தி நிலையம் என்ற பெயரை சில ஆண்டுகள் கழித்து எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(11). வேகமான வானூர்தி.


மணிக்கு 600 மைல் வேகத்தில் பறக்கும் செஸ்னா சிட்டேசன் X பயணிகள் வானூர்தியே வேகமானது. போயிங்கின் புதிய தயாரிப்பான டிரிம்லைனர் 0.85 மேக் வேகம் செல்லக்கூடியது. 0.85 மேக் என்பது மணிக்கு 647 மைல் ஆகும்.  போயிங் டிரிம்லைனர் இன்னும்  பயன்பாட்டுக்கு வரவில்லை, எனவே இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


(12).  பெரிய வானூர்தி.


எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ஏர் பஸ் A380 என்பதே அது என்பது. இதில் 555 பயணிகள் அமரலாம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், எமிரேட்ஸ், குவாண்டாஸ், லுப்தான்சா ஆகியவற்றில் ஏர் பஸ் A380 உள்ளது.